Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனோஜ் பிரபாகர் போன்ற வீச்சாளர் பிரவீண்குமார்

Advertiesment
கிரிக்கெட்
, புதன், 22 ஜூன் 2011 (13:23 IST)
FILE
ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்ட்ரேலியாவில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இரண்டு போட்டிகளிலும் அதிரடி மன்னன் ஆடம் கில்கிறிஸ்டை வீழ்த்தியதோடு மிகவும் சிக்கனமாக வீசி வரும் பிரவீண் குமார் தற்பொது டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளராக உயர்வு பெற்றுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சபைனா பார்க் மைதானத்தில் நேற்று அவர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணி முன்னிலைபெற்றதில் பெரும்பங்கு வகித்தார்.

இவர் இஷாந்த் ஷர்மா, ஸ்ரீசாந்த் போன்று வேகமாக ஓடி வந்து பேட்ஸ்மெனைத் தாண்டி விஸ்கென்று பந்துகளைக் கடந்து செய்யச் செல்வதில் வல்லவரல்ல. மாறாக மெதுவாக ஓடி வந்து நல்ல அளவில் நல்ல திசையில் பந்துகளை வீசி இருபுறமும் ஸ்விங் செய்பவர்.

இந்தியாவில் இதுபோன்ற பந்து வீச்சாளர்கள்தான் அதிகம் ஒருகாலத்தில் வந்தனர். மதன்லால், அபிட் அலி, மொகீந்தர் அமர்நாத் ஆகியோரைக் குறிப்பிடலாம். ஆனால் மனோஜ் பிராபகர் என்ற திறமையான பந்து வீசாளரை இந்தியா ஒருகாலத்தில் மிகவும் நம்பி இருந்தது. கபில்தேவே ஒருமுறை 40 ஓவர்கள் பழசான பந்தை எப்படி ஸ்விங் செய்வது என்பதை நான் மனோஜிடமிருந்து கற்றேன் என்றார்.

webdunia
FILE
மனோஜ் ஒரு மிகப்பெரிய இன்ஸ்விங் பந்து வீச்சாளர். அவரது இன்ஸ்விங்கரை விட அவர் திடீரென அதே பந்து வீச்சு முறையில் ஒருபந்தை வெளியே எடுத்துச் செல்வார் அது மிகவும் அபாயமான பந்தாகும். 1992 உலகக் கோப்பையில் சலீம் மாலிக்கை அவர் இழுத்துக் கொண்டு சென்று எட்ஜ் செய்ய வைத்தது மறக்க முடியாத ஒரு பந்தாகும்.

அதேபோல் பழைய பந்தில் இன்ஸ்விங்கரை அபாரமாக வீசுவார். பாகிஸ்தானுக்கு எதிராக 1989ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் தலைமையில் இந்திய அணி சென்றபோது இவரது அபாரமான ஸ்விங் பந்து வீச்சை அனுபவமிக்க பாகிஸ்தான் வீரர்களும் எதிகொள்வதில் சிரமம் கண்டனர். அந்த டெஸ்ட் தொடர் டிரா ஆனதற்கு பிராபகர் ஒரு காரணம்.

அந்தத் தொடரில்தான் பாகிஸ்தான் ரிவர்ஸ் ஸ்விங் மேதையான சர்ஃபராஸ் நவாஸ் "கடைசியில் இந்திய பந்து வீசாளர்களும் இந்தக் கலையைக் கற்றுக் கொண்டு விட்டனர்" என்றார்.

அதே தொடரில்தான் கபில்தேவ் ஒரு மிகப்பெரிய இன்ஸ்விங்கரை வீசி சலீம் மாலிக்கை பவுல்டு செய்தார். பந்து கிட்டத்தட்ட பிட்சிற்கு வெளிப்புற விளிம்பிற்கு அருகே பிட்ச் ஆனது மாலிக் அதனை ஆடாமல் விட்டார் பந்து உள்ளே வந்து ஆஃப் ஸ்டம்பைத் தாக்கியது.

ஆனால் பிரவீண் குமாரிடம் நாம் அது போன்ற பந்து வீச்சை எதிர்பார்க்க முடியாது என்றாலும், அவர் பழைய பந்திலும் ரிவர்ஸ் ஸ்விங் செய்ததை நேற்று பார்க்க முடிந்தது.

எனவே ஜெயதேவ் உனட்கட் போன்ற வீச்சாளர்கள், கர்நாடகாவின் அபிமன்யூ மிதுன் ஆகியோரெல்லாம் டெஸ்ட் போட்டியில் பிரவீணுக்கு முன்னால் ஆடியது பிரவீணின் துரதிர்ஷ்டமே.

ஆனால் இப்போதும் அவருக்கு ஒன்றும் குறைவில்லை. அவர் இன்னும் நிறைய டெஸ்ட் போட்டிகளை விளையாட முடியும் என்ற அளவில்தான் திறமையுடன் வீசி வருகிறார்.

நேற்று அட்ரியன் பரத், டேரன் பிராவோ ஆகியோருக்கு அவர் வீசிய பந்துகள் அப்படியே மனோஜ் பிரபாகரை நினைவூட்டுவது போல் இருந்தது.

அவரை ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே லாயக்கனாவர், அவரிடம் வேகம் இல்லை, பந்து பழசானால் இவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாது என்றெல்லாம் விமர்சகர்கள் கூறி டெஸ்ட் போட்டிக்கு அவர் வர முடியாது என்றனர்.

ஆனால் அப்போதே ரஞ்சி போட்டிகளில் அவர் ஏராளமான 5 விக்கெட்டுகள் ஸ்பெல்லை வீசியிருந்தார். அப்போது கூட அவர் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என்றார் ஆனால் ஒருவரும் வாய்ப்பளிக்க முன்வரவில்லை. இப்போது கூட ஸ்ரீசாந்த், ஜாகீர் கான் இருந்திருந்தால் இவர் அணியில் இருப்பதே சந்தேகம்.

இது பிரவீண் குமாருக்கு மறைமுகமான ஆசீர்வாதமானது. அவர் பழைய பந்திலும் ஸ்விங் செய்ய முடிந்ததை நேற்று பார்த்தோம். நேற்று அவர் பந்து வீசியதைப் பார்க்கும்போது முதல் டெஸ்ட் போட்டியில் வீசுபவர் போல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைப்பற்றி மனோஜ் பிரபாகர் குறிப்பிட்டதையே நாம் நினைவு கூறலாம், "பிரவீண் குமார் ஒரு மெஜீஷியன், அதாவது அவர் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டி அதே சமயத்தில் ஸ்விங்கை இழக்காமல் இருந்தால் உலகில் எந்த பேட்ஸ்மெனும் அவரை சுலபத்தில் விளையாட முடியாது" என்றார்.

இருப்பினும் இரண்டாம்தர மேற்கிந்திய அணிக்கு எதிரான ஒரு பந்து வீச்சை வைத்து நாம் அவரைப் பற்றி அதிகம் ஊகிக்க முடியாது. இருந்தாலும் விக்கெட்டுகள் எடுக்கும் லாவகம் இருக்கும் வரை இவர் பிழைத்துக் கொள்வார் என்றே தோன்றுகிறது.

மேலும் இங்கிலாந்து போன்ற ஸ்விங் நிலைமைகளில் இவரது பந்து வீச்சு கைகொடுக்கும் என்றே தோன்றுகிறது. எனினும் நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரவீண் குமார் மெஜீஷியனா அல்லது ஒரு சாதாரண பந்து வீச்சாளரா என்பதை காலமும், பிரவீண்குமாரும்தான் தீர்மானிக்கவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil