Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெர்த்: ஆதிக்கம் செலுத்தியது இந்தியா!

Advertiesment
பெர்த் ஆஸ்ட்ரேலியா இந்தியா எம்.எஸ்.தோனி ஆர்.பி. சிங் பாண்டிங் மைக்கேல் அனில் கும்ளே சேவாக்
, வியாழன், 17 ஜனவரி 2008 (18:56 IST)
பெர்த் ஆட்டக்களத்தை பற்றி கிளப்பி விடப்பட்ட அனைத்து அச்சுறுத்தல்களும் ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராகவே திரும்பியுள்ளதை இரண்டாம் நாள் ஆட்டம் முழுமையாக நிரூபித்தது.

297/6 என்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா, இன்று 400 ரன்களை எட்டி விடும் என்று அனைவரும் நம்பிக்கை வைத்திருந்த நிலையில் எம்.எஸ்.தோனி அடித்து ஆடாமல் தடுப்பாட்டம் ஆடியதால் ரன் எடுப்பது காலையில் சிரமத்திற்குள்ளானது. ஆனால் 19 ரன்கள் எடுத்து அவர் ஆடிக்கொண்டிருந்த போது முன்னால் வந்து ஒரு பந்தை கால் காப்பில் வாங்கினார், அதனை எல்.பி.டபிள்யூ என்று உடனடியாக எந்த நடுவரும் தீர்ப்பளித்திருக்க முடியாது, ஆனால் ஆசாத் ரவூஃப் அதனை அவுட் என்றார்.

இந்தியாவின் மீதமுள்ள 4 விக்கெட்டுகளும் இன்று 33 ரன்களுக்கு விழுந்தது.

330 ரன்கள்தானே என்று ஆஸ்ட்ரேலியா நம்பிக்கையுடன்தான் களமிறங்கியிருக்கும். ஆனால், இர்பான் பத்தானும், ஆர்.பி.சிங்கும் அவர்களது நம்பிக்கையை தகர்க்குமாறு வீசினர். துவக்க வீரர்கள் மற்றும் அபாயகரமான மைக் ஹஸ்ஸி ஆகியோர் வெறும் 22 ரன்கள் இருந்தபோதே வெளியேறினர்.

இதனால் பாண்டிங்கிற்கு சுமை அதிகம் ஏற்பட்டது. மேலும் இந்த டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு அரை சதம் (அவ்வளவு திருப்தி தராத அரை சதம் அது) தவிர அவர் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து வருகிறார். இன்றும் இஷாந்த் ஷர்மாவின் முதல் பந்தை ஆக்ரோஷமாக புல் ஷாட் ஆட முயன்று தோற்றார். ஆனால் அதற்கு அடுத்த பந்து சற்றே அளவுக்கு அதிகமாக எழும்பியது, அதனைக் கண்டு பாண்டிங் திகைத்து நிற்கையில் பந்து அவரது மட்டையின் விளிம்பைத் தொட்டுக்கொண்டு பறந்து திராவிடிடம் கேட்சாக அமைந்தது.

அதற்கு அடுத்த படியாக சைமன்ட்ஸிற்கு பத்தான் வீசிய பந்து மட்டையின் விளிம்பில் பட்டு சச்சினிடம் உயரே சென்றது. சரியாக கணித்து அவரும் மேலே எம்பினார், ஆனால் கேட்ச் தவற விடப்பட்டது. இந்த ஒரு தவறு தவிர இந்தியா களத்தடுப்பு முறையிலும் உத்தியிலும் எந்த வித தவறையும் செய்யவில்லை.

மைக்கேல் கிளார்க்கை இஷாந்த் ஷர்மா திகைக்க வைத்தார் என்றால் மிகையாகாது. இன்ஸ்விங்காகி உள்ளே வந்த பந்து பிறகு தாமதமாக அவுட் சுவிங்கானது. அதனை ஆடுவதா வேண்டாமா என்ற இரட்டை மனோனிலையில் இருந்த கிளார்க்கின் மட்டையை பந்து தானாக தட்டிச் சென்றது. தோனி அபாரமாக அதனை பிடித்தார்.

தோனியின் விக்கெட் கீப்பிங் இன்று அபாரமாக இருந்தது. அவர் 5 கேட்ச்களை இன்று பிடித்தார். அனைத்துமே அபாரமான கேட்ச்கள்.

ஆனால் ஆட்டத்தில் ஒரு நேரம் சைமன்ட்சும், கில்கிறிஸ்டும் எதிர்த் தாக்குதலைத் துவங்கி 17 ஓவர்களில் 129 ரன்களை குவித்தபோது இந்தியாவிடம் இருந்து ஆட்டத்தை பறித்து விட்டனர் என்றுதான் தோன்றியது.

அப்போதுதான் அனில் கும்ளே பந்து வீச வந்தார். சைமன்ட்ஸ் ஏற்கனவே கும்ளேயின் முதல் ஓவரில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்களை அடித்திருந்தார். ஆனால் எழும்பும் ஆட்டக் களமாகையால் கும்ளேயின் அந்த பந்து நல்ல அளவில் விழுந்து கூடுதலாக எழும்பியது, மட்டையின் விளிம்பில் பட்டு தோனியின் கிளவுசில் பட்டு எழும்பிச் சென்றது அதனை திராவிட் பிடித்தார். திராவிட் பிடித்த 165வது கேட்ச் அது என்பது குறிப்பிடத் தக்கது.

அதன் பிறகு கில்கிறிஸ்ட் மீது சுமை விழுந்தது. ஆர்.பி.சிங் மறு முனையில் பந்து வீச அழைக்கப்பட்டார். முதல் 3 பந்துகளை கில்கிறிஸ்ட் ஆக்ரோஷமாக அடித்து 3 பவுண்டரிகளை விளாசினார். ஆனால்... அடுத்த பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு நெருக்கமாக, கில்கிறிஸ்டின் உடம்பிற்கு நெருக்கமாக எழும்பி வந்தது, ஷாட்டை கட்டுப்படுத்த முடியாத கில்கிறிஸ்ட் அதனை தோனியிடம் கேட்ச் கொடுத்தார்.

ஆஸ்ட்ரேலியா 212 ரன்களுக்கு சுருண்டது. 2004 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக டார்வின் மைதானத்தில் 207 ரன்களுக்கு ஆஸ்ட்ரேலியா சுருண்டதையடுத்து, குறைந்த ரன் எண்ணிக்கையில் ஆஸ்ட்ரேலியாவில் அந்த அணி ஆட்டமிழப்பது இது 2 வது முறை.

2வது இன்னிங்சில் மீண்டும் சேவாக் தனது தைரியமான ஆட்டத்தால் நல்ல துவக்கத்தை கொடுத்துள்ளார். 170 ரன்கள் முன்னிலையுடன் உள்ள இந்திய அணி, 3ம் நாள் முழுதும் ஆடினால் போதுமானது. மேலும் ஒரு 200- 250 ரன்களைச் சேர்க்க முடிந்தால், ஆஸ்ட்ரேலியாவை மண்ணைக் கவ்வ வைக்கலாம் என்பதோடு, அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் உலக சாதனையான தொடர்ச்சியான 17வது டெஸ்ட் வெற்றி என்ற கனவையும் தகர்க்கலாம். ஆட்டத்தின் இந்த தருணத்தில் வெற்றி யாருக்கு என்று முன் கூட்டியே கணிப்பது கடினம்.

அனில் கும்ளே 600 விக்கெட்டுகள்!

தனது 124வது டெஸ்டை ஆடி வரும் கும்ளே இன்று சைமன்ட்ஸ் விக்கெட்டை எடுத்து ஆட்டத்திற்கு திருப்பு முனையாக இருந்ததோடு, தனது 600வது விக்கெட்டையும் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

இந்த தொடரில் அபாரமாக வீசி வருவதோடு, ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி கடந்த டெஸ்டில் சாதனை புரிந்தார், அதனோடு இன்று 600வது விக்கெட்டை ஆஸ்ட்ரேலிய மண்ணில் வீழ்த்தினார் என்பது அவருக்கு பெருமை சேர்ப்பதாகும்.

தனது 105வது டெஸ்டில் 500வது விக்கெட்டை வீழ்த்திய கும்ளே 19 டெஸ்ட்களில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி 600 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்!

ஷேன் வார்ன் தனது 600வது விக்கெட்டை 126வது டெஸ்டில் வீழ்த்தியுள்ளார். கும்ளேயும் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த 20 டெஸ்ட்களை அவர் ஆடினால் போதுமானது 700 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை எட்டலாம். அவரால் எதுவும் முடியும் என்பதை அவரது இத்தனையாண்டு கால ஆட்டம் நமக்கு நிரூபித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil