பி.சி.சி.ஐ-யின் தொடரும் அற்பத்தனம்!
, வெள்ளி, 27 பிப்ரவரி 2009 (19:23 IST)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது செல்வ, செல்லக் குழந்தையான ஐ.பி.எல். கிரிக்கெட்டை பாலும் தேனும் ஊட்டி வளர்க்கட்டும், ஆனால் மற்றொரு கிரிக்கெட் லீக்கான ஐ.சி.எல். கிரிக்கெட் என்ற மாற்றாந்தாய் குழந்தைக்கு செய்யும் துரோகங்களும் அற்பத்தனங்களும் வயிற்றை குமட்டுவதாய் உள்ளது.
நியூஸீலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியிலிருந்து சச்சின் டெண்டுல்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோரை அங்கு நடைபெறும் நல நிதி திரட்டும் காட்சிப் போட்டி கிரிக்கெட்டில் விளையாட நியூஸீலாந்து தொழில் பூர்வ கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.நியூஸீலாந்து கிரிக்கெட் வீரர்கள் அமைப்பிற்கும் ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர்கள் அமைப்பிற்கும் இடையே இன்று அந்த இருபதுக்கு 20 போட்டி நடைபெறுகிறது. இதில் பங்குபெறவே சச்சினுக்கும், கார்த்திக்கிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.உடனே நம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதில் மூக்கை நுழைத்தது, அதாவது அந்த நியூஸீலாந்து அணியில் ஐ.சி.எல். கிரிக்கெட் வீரர் ஹேமிஸ் மார்ஷல் இருக்கிறார், எனவே சச்சினும், கார்த்திக்கும் அந்த ஆட்டத்தில் பங்கேற்கலாகாது என்று உத்தரவிட்டுள்ளது.பி.சி.சி.ஐ.யின் இந்த அற்பத்தனமான, அராஜக தலையீட்டினால் அதிர்ச்சியடைந்துள்ள நியூஸீலாந்து கிரிக்கெட் வீரர்கள் அமைப்பின் தலைமை அதிகாரி மில்ஸ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த உத்தரவு முட்டாள்தனமானது என்று கடுமையாக சாடியுள்ளார்.அவரது கடுமையான சாடலுக்கு காரணம் சம்பந்தப்பட்ட ஹாமிஷ் மார்ஷல் ஐ.சி.எல். கிரிக்கெட்டுடன் ஏற்கனவே தொடர்பை துண்டித்துக் கொண்டு விட்டார் என்பதே.அவர் பி.சி.சி.ஐ-யின் இந்த அற்ப முடிவைக் கண்டு நகைப்பதோடு, ஐ.சி.எல். குறித்த பி.சி.சி.ஐ.-யின் நிலைப்பாடுகளையும் கடுமையாக கேள்விக்குட்படுத்தினார்.அதாவது ஐ.சி.எல். கிரிக்கெட்டில் இன்னமும் முகம் தெரியாத பல சிறந்த வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை தேசிய கிரிக்கெட்டிற்கு பயன்படுத்த முடியாமல் இந்த பி.சி.சி.ஐ.யின் அற்ப தடை உத்தரவுகள் தடுத்து வருகின்றன. இதனால் கிரிக்கெட்டிற்குத்தான் நஷ்டம் என்று கூறியுள்ளார் மில்ஸ்.சுமார் 150 வீரர்கள் ஐ.சி.எல். கிரிக்கெட்டில் தங்களது எதிர்காலம் பற்றிய கவலைகளுடன் இருந்து வருகின்றனர்.
கிரிக்கெட்டை வளர்ப்பதாய் மார்தட்டும் பி.சி.சி.ஐ-யும் அதன் கார்ப்பரேட் பண எந்திர சூத்திரதாரி லலித் மோடியும் உண்மையில் கிரிக்கெட்டையா வளர்க்கிறார்கள்? இன்னொரு அமைப்பை அடக்கி ஒடுக்கி அந்த வீரர்களை பல வழிகளிலும் பழி வாங்கி வரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் போக்கினை ஐ.சி.சி. கடுமையாக கண்டித்து, ஐ.சி.எல். வீரர்களை உடனடியாக அங்கிக்கரிக்க வழி வகை செய்யவேண்டும்.
ஐ.சி.எல். வீரர்கள் எந்த ஒரு நாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட்டை விளையாட முடியாது. அவர்கள் ஐ.சி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பதையும் அந்த வீரர்கள் பணி புரியும் நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து அவர்களுக்கு போட்டி தினத்தன்று விடுப்பை மறுக்குமாறும், ஐ.சி.எல். கிரிக்கெட்டிலிருந்து வெளியேறுமாறும் ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் குற்றம் சாட்டப்பட லலித் மோடி கும்பல் நிர்பந்தித்து வருகிறது.
அனைத்தையும் சந்தைதான் தீர்மானிக்கிறது. சந்தையே முக்கியம், பணமே கடவுள் என்று முடிவெடுத்து விட்ட பிறகு சந்தைப் பொருளாதாரத்தில் ஐ.சி.எல். கிரிக்கெட்டின் சவால்களையும் சந்திக்க வேண்டியதுதானே? தாராளவாத உலகப் பொருளாதார காலக் கட்டத்தில் மற்றொரு அமைப்பை எந்த அதிகாரத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்துள்ளது?இன்றைய பொருளாதார வீழ்ச்சி காலக்கட்டத்திலும் பல நிறுவனங்கள் பெரிய அளவில் ஆட் குறைப்பு செய்தாலும், அதனை அவர்கள் எளிதாக, எதிர்ப்பின்றி, அரசின் தலையீடின்றி செயல்படுத்த முடியவில்லை.இந்த நிலையில் தனிப்பட்ட ஒரு கிரிக்கெட் அமைப்பு தனக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என்ற இறுமாப்பில் உலக கிரிக்கெட் நாடுகளை தன் பண பலத்தால் மிரட்டி தனது எதேச்சதிகார முடிவுகளை பிற அமைப்புகள் மீது திணித்து வருகிறது.பி.சி.சி.ஐ.-யின் இந்த ஜனநாயக மறுப்பு எதேச்சதிகார போக்கினை இந்திய அரசும், இந்திய நீதித் துறையும் முடக்க வேண்டும்.குறைந்தது ஐ.சி.எல். மீதான தடையை நீக்க வேண்டும். அந்த வீரர்களின் சுதந்திர முடிவிற்கு வழி வகை செய்ய வேண்டும்.இரண்டு முறை ஐ.சி.எல். பேச்சுவார்த்தைக்கு வந்த போதும் பி.சி.சி.ஐ. தனது நிலைப்பாட்டில் எந்த வித மாற்றத்தையும் கொள்ளாமல் அந்த கிரிக்கெட் வீரர்களைப் பற்றியும் கவலைப்படாமல் தடாலடியாக எந்த கோரிக்கையையும் ஏற்க மறுத்துள்ளது.
தற்போது சச்சின் டெண்டுல்கரும் தினேஷ் கார்த்திக்கும் இந்த காட்சிப் போட்டியில் பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தியிருப்பது பி.சி.சி.ஐ-யின் உச்சகட்ட அற்பத்தனமாகும்.
ஐ.சி.எல். கேட்பது ஒரு சாதாரண அங்கீகாரம்தான். அதாவது ஹாங்காங்கில் நடைபெறும் அணிக்கு 6 பேர் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் போன்று அனுமதிக்கப்பட்ட, ஆனால் அதிகாரபூர்வமற்ற கிரிக்கெட் என்ற அங்கீகாரத்தைத் தான் கேட்கிறது ஐ.சி.எல்.
இந்த சாதாரண கோரிக்கைக்கு கூட பி.சி.சி.ஐ. கீழிறங்க மறுத்து தன்னை கடவுள் பொறுப்பில் வைத்துக் கொண்டு ஐ.சி.எல். கிரிக்கெட்டை கலை அல்லது தடை என்ற கரும்புள்ளியுடன் தொடர்ந்து நடத்து என்று சூசகமாக நிர்பந்தித்து வருகிறது.
சுதந்திர நாட்டில் குறிப்பிட்ட சட்ட திட்டங்களின் கீழ் எவரும் எந்தவித கிரிக்கெட் போட்டிகளையும் நடத்த அனுமதி இல்லாத நிலையையே பி.சி.சி.ஐ.-யின் ஐ.சி.எல். நிலைப்பாடு பறை சாற்றுகிறது.
இந்த போக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம். கிரிக்கெட் நாடுகளின் வீரர்கள் அமைப்பு அனைத்து வீரர்களையும் ஒன்று திரட்டி ஐ.சி.எல். மீதான தடையை நீக்கினால் மட்டுமே இந்தியாவுடன் கிரிக்கெட் என்ற தீவிர நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
இந்தியாவுடன் விளையாடினால்தான் பணம், ஆனால் இந்திய கிரிகெட் வாரியத்திற்கும் இந்திய வீரர்கள் விளையாடினால்தான் பணம்.
எனவே உலக கிரிக்கெட் வாரியங்கள், ஐ.சி.சி. உலகக் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஆகியவை ஒன்று சேர்ந்து பி.சி.சி.ஐ.க்கு நெருக்கடி கொடுத்தால்தான் அதன் அராஜகம் ஓழியும்.
இதனை செய்ய முன்வருவருமா மற்ற வாரியங்கள்? கஷ்டம்தான்... எல்லாம் பணம் படுத்தும் பாடு...