Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாடம் கற்க வேண்டிய தோல்வி

Advertiesment
பாடம் கற்க வேண்டிய தோல்வி
, வியாழன், 1 அக்டோபர் 2009 (16:56 IST)
webdunia photo
WD
இந்தியாவும், மேற்கிந்திய அணியும் ஐ.சி.சி. சாம்பியன் கோப்பை இறுதி லீக் போட்டியை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கண்களும், மனமும், பாகிஸ்தான், ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பு போட்டியின் மீது இருந்தது. இது போன்ற ஒரு நிலையை இதற்கு முன்னால் இந்திய அணியும், கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்கொண்டதில்லை என்றே கூறிவிடலாம்.

காரணம் என்ன? பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில், அதுவும் மேற்கிந்திய அணி அதற்கு முந்தைய போட்டியில் 133 ரன்கள் இலக்கை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தானை திணறச் செய்து, வெற்றிக்குப் போராட வைத்தது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானை மிகவும் சுதந்திரமாக ரன்களைக் குவிக்க அனுமதித்தது.

மோசமான பந்து வீச்சு, மோசமான கள வியூகம், மோசமான ஃபீல்டிங் ஆகியவற்றால் பாகிஸ்தானை வெற்றி பெற அனுமதித்ததாலும், ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிரான போட்டி எதிர்பாராத விதமாக மழை காரணமாக தடை பட்டு இந்தியாவிற்கு ஒரு புள்ளி கிடைத்ததாலும், ஆஸ்ட்ரேலிய-பாகிஸ்தான் போட்டி மீது இந்திய ரசிகர்களின் கவனம் குவிந்திருந்தது. ஏனென்றால் ஆஸ்ட்ரேலியா தோற்று அதனால் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிட்டாதா என்ற இந்திய ரசிகர்கள் ஏங்கினர்.

ஆனால் உண்மையில் அரையிறுதிக்கு தகுதி பெற உகந்த அணி ஆஸ்ட்ரேலியாதான் என்பதை நாம் நன்றாக உணரவேண்டும். இந்தியா பெயரளவில் இருந்தாலே போதும், அரையிறுதிக்கு வந்து விட வேண்டும், கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்றெல்லாம் நாம் கற்பனையில் மிதக்க முடியாது. மைதானத்தில் விளையாடவேண்டும், தரமான, திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்த வேண்டும். இத்தனையும் செய்து இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் போனால்தான் ரசிகர்கள் வருத்தப்படுவதில் நியாயமுள்ளது.

சேவாக், ஜாகீர் கான், யுவ்ராஜ் ஆகியோர் இல்லாத கையொடிந்த அணியை கூட்டிச் சென்று அரைகுரையான பந்து வீச்சு, பேட்டிங்கிலும் நிச்சயமின்மை, என்ற நிலையில் சென்றுள்ள இந்திய அணி, கணக்கீட்டு அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழைந்து விட வேண்டும் என்று நாம் நினைப்பது கிரிக்கெட்டிற்கு அப்பாற்பட்ட தேசப்பற்று அல்லது ஒரு குறிப்பிட்ட நட்சத்திர வீரர்களை நாம் பார்த்துக் கொண்டேயிருக்கவேண்டும் என்ற நாயக வழிபாடு என்றோதான் கூறவேண்டும்.

அதற்காக இந்திய அணியை ஒரேயடியாக திட்டித் தீர்ப்பது, வசைமழை பொழிவது என்ற போக்கும் தேவையில்லை. இந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3 போட்டிகளை விளையாடிய இந்திய அணி ஒன்றில் தோற்று, ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது என்ற அளவில் யோசித்தாலே போதுமானது.

அதனால் பெரிய அழுகையும், கோபமும் தேவையில்லை, அதற்காக செய்த தவறுகளை சுட்டிக்காட்டாமல் போனால் போகிறது என்று விட்டு விடவும் தேவையில்லை.

ஐ.சி.சி. ஒரு நாள் தர வரிசையில் கடைசி 18 அல்லது 19 மாதங்களாக உழைத்து முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணியும், தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும் அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறுகிறது என்றால் அதற்கு இந்த சாம்பியன்ஸ் கோப்பை நடத்தப்படும் விதமும் ஒரு காரணம்.


ஒரே தவறு. ஒரு தவறு போதும் ஒரு நல்ல அணி வெளியேற என்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த சாம்பியன் கோப்பை கிரிக்கெட். உதாரணமாக 2 போட்டிகளில் ஓரளவிற்கு நல்ல கிரிக்கெட்டை ஆடிய ஆஸ்ட்ரேலியா திடீரென ஒரு 4 ஓவர்களில் ஏற்பட்ட தடுமாற்றத்தினால் அரையிறுதி வாய்ப்பை இழந்திருக்கும். இந்தியா வெளியேறியதற்காக நாம் அழுதால், ஆஸ்ட்ரேலியா அந்த நிலையில் தோற்றிருந்தால் அந்த நாட்டு ரசிகர்கள் எப்படி அழுவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

எனவே இது போன்ற ஒரு வடிவத்தில் நடத்தப்படும் ஒரு போட்டித் தொடரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எந்த அணியும் களமிறங்க முடியாது. இதனாலேயே வெளியேறிய அணியை நாம் வெளியேறியதை காரணம் காட்டி குற்றம் சாட்ட முடியாது.

ஆனால் ஒரு நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் 'சொத்தை'யாக விளையாடி தோல்வி தழுவுவது ஏன் என்ற கேள்வியை நாம் எப்போதும் எழுப்ப வேண்டும்.

webdunia
webdunia photo
WD
இந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன் நியூஸீலாந்து அடைந்த தோல்விகளும், இங்கிலாந்து வாங்கிய தோல்விகளும் அந்த இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று யாரேனும் நைத்திருப்பார்களா? இந்தியாவை விட்டு விடுவோம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் வெளியேறும் என்று எதிர்பார்த்திருப்போமா?

எனவே இந்தக் கூறுகளையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு இந்திய அணியின் ஆட்டத்தை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.

மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணி சென்றது, மோசமாக பந்து வீசியது, ஃபீல்டிங் செய்தது, ஆனால் தொடரை வென்றது. இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரிலும் இதே கதைதான் ஆனால் கோப்பையை வென்றது. காரணம் பேட்ஸ்மென்கள், பந்து வீச்சாளர்கள் வாரி வழங்க சற்றே அதிகமாக ரன்களை அடித்தனர் என்பது தான் இந்த வெற்றிகளுக்கு காரணமாக இருந்ததே தவிர.

2003 உலகக் கோப்பை போட்டியில் இருந்தது போலவோ, அல்லது ஆஸ்ட்ரேலியாவில் முத்தரப்பு ஒரு நாள் தொடரை தோனியின் தலைமையில் வென்ற பிறகு இந்திய அணி பெற்ற ஒரு நாள் தொடர், டெஸ்ட் தொடர் வெற்றிகளில் இருந்தது போலவோ ஒரு அணியாக இந்தியா சில மாதங்களாக இல்லை. சிறந்த ஒரு நாள் அணி என்று வெற்றியை வைத்துத்தான் கூற முடிந்ததே தவிர ஒரு அணியாக திரண்டு எழுந்ததனால் என்று கூற முடியுமா?

கடைசி 10 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 4 முறை எதிரணியினரை 300 ரன்களையும் அதற்கு சற்று கூடுதலாகவும் எடுக்க அனுமதித்துள்ளது. ஆஸ்ட்ரேலியாவும் அன்று 300 ரன்களை எட்டியிருக்கும். இன்னும் 8 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் அந்த அணி 234 ரன்களை ஏற்கனவே எட்டியிருந்தது. காரணம் என்ன பந்து வீச்சின் தரமின்மை. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக பேட்ஸ்மென்கள் சிலரின் தவறுகளினால் இலக்கை வெற்றிகரமாக துரத்தும் நிலையிலிருந்தும் முடியாமல் போனது.

ஆஷிஷ் நெஹ்ரா நீங்கலாக, ஆர்.பி.சிங், இஷாந்த் ஷர்மா, ஹர்பஜன் சிங் ஆகிய முன்னணி வீச்சாளர்கள், இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கும் பந்து வீச்சாளர்கள் மூளையை பயன்படுத்தாமல் பந்தை பூவாக நினைத்து பேட்ஸ்மென்கள் மீது அர்ச்சனை செய்வதுபோல் வீசியதுதான் பிரச்சனை.

பாகிஸ்தானுக்கு எதிராக அருமையாக வீசிய இஷாந்த் திடீரென இங்கும், அங்கும் வீசத் துவங்கினார், கட்டுப்பாடு இழந்தார். ஷோயப் மாலிக் போன்ற அவ்வளவு ஒன்றும் அச்சுறுத்தல் இல்லாத பேட்ஸ்மென் இஷாந்த் ஷர்மா போட்டுக் கொடுத்த 3 அதிர்ச்சிகரமான ஷாட் பிட்ச் பந்துகளினால் 3 பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தில் உறுதி பெற்றார்.

ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக 8 ஓவர்களில் 23/1 என்று திணறிக் கொண்டிருந்த தருணத்தில் இஷாந்த் வந்தார், கொடுத்தார் 2 பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும். 9 ஓவர்கள் முடிவி்ல் 39 ரன்களை எட்டியது ஆஸ்ட்ரேலியா. அதன் பிறகு ரன் விகிதம் ஏறிக்கொண்டுதான் இருந்ததே தவிர, இறங்கவேயில்லை.


இதே இஷாந்த் ஷர்மா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரிக்கி பாண்டிங்கை ஒரு சாதாரண பேட்ஸ்மென் என்று கூற வைத்தார். மேத்யூ ஹெய்டனை பிரச்சனைக்குள்ளாக்கினார். மைக்கேல் கிளார்க்கின் தாடைக்கு பந்து வீசினார். ஆனால் இப்போது... என்னவாயிற்று அவருக்கு? ஒரு பந்து வீச்சாளர் ஏன் தன்னம்பிக்கை இழக்கிறார் என்ன காரணம் என்பதை கண்டு பிடித்து நிவர்த்தி செய்யத்தான் அவ்வளவு பெரிய தொகைக்கு பயிற்சியாளரை நியமிக்கிறார்கள். ஆனால் அவர் என்ன செய்து கொன்டிருந்தார். தன்னம்பிக்கை இல்லாஅத பந்து வீச்சாளரை ஏன் அணியில் தேர்வு செய்ய வேண்டும்? இர்ஃபான் பத்தானையே நாம் அணியில் சேர்த்திருக்கலமாஏ? அல்லது முனாஃப் படேலை அழைத்துச் சென்றிருக்கலாமே? கேரி கர்ஸ்டனின் பணி இதுதான் அவர் இதனை ஒழுங்காக செய்கிறாரா என்பதைக் கவனிக்க வேண்டியது அணித் தேர்வுக் குழுவின் பொறுப்பாகும். ஸ்ரீகாந்த் என்ன செய்கிறார்?

இவராவது இளம் வயது என்று வாய்ப்பு கொடுக்கலாம். ஹர்பஜன் சிங் பாகிஸ்தானுக்கும், ஆஸ்ட்ரேலியாவுக்கும் எதிராக பந்து வீசிய விதம் மன்னிக்க முடியாதது. இந்த 2 போட்டிகளிலும் அவரது பந்து வீச்சு ஒன்றுமேயில்லை. பந்துகள் திரும்பவில்லை, ஃபிளைட் இல்லை. ஆர்க் இல்லை. தூஸ்ரா ஷாட் பிட்சாக முடிந்து போனது. இதனால் இந்தியாவுடன் மட்டுமே ரன்கள் எடுக்கும் யூசுஃபும், ஷோயப் மாலிக்கும் நன்றாக உறுதியடைந்தனர்.

webdunia
webdunia photo
WD
இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் ஹர்பஜன் சிங் பந்து வீசி இந்திய அணியை வெல்லச் செய்வார் என்ற நம்பிக்கை அவர் மீது வர மறுக்கிறது. சீரற்ற ஒரு பந்து வீச்சாளராக இருக்கிறார். ஒன்று ஒரேயடியாக நன்றாக வீசுவது. இல்லையேல் படு சொத்தையாக வீசுவது. இந்த இரண்டு தீவிர நிலைதான் அவரிடம் உள்ளது.

இதற்காகத்தான் மாற்று வீரராக பிராக்யான் ஓஜாவை தேர்வு செய்திருக்கவேண்டும். ஹர்பஜன் சிங் பாகிஸ்தானுக்கு எதிராக வீசிய முறைக்காக அவர் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக அணியில் இடம்பெற்றிருக்கக் கூடாது.

இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் இப்படித்தான் யோசிக்கும். ஆனால் இங்கு நாம் பாதுகாப்பு அளிக்கிறோம்.

ரெய்னா ஷாட் பிட்ச் பந்துகளுக்கு திணறுகிறார் என்றால் அவரைத்தான் 3ஆம் நிலையில் களமிறக்கி அந்த பந்துகளை எதிர்கொள்ள அவரைத் தயார் படுத்த வேண்டும். அப்படியல்லாமல் திராவிடை களமிறக்கி ரெய்னாவை பின்னால் தள்ளுவது ரெய்னாவை பாதுகாப்பதாகும் இதனால் அவரது கிரிக்கெட் திறன் ஒரு போதும் மேம்படாது.

அதே போல் ஹர்பஜன் சரியாக வீசவில்லையா உடனே அவரை நீக்க வேண்டும். இதுபொன்று செய்தால் இடம் பறி போகும் என்ற பயத்திலாவது விட்டேத்தியாக வீசுவதை நிறுத்துவார். அல்லது உண்மையைலேயே பந்து வீச்சில் பிரச்சனையிருந்தால் அவரே பயிற்சி செய்ய கிளம்பிவிடுவார். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? பாதுகாக்கிறோம். எப்படி முன்னேற்றம் வரும்?

பயந்து கொண்டிருக்கும் ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மென்களெல்லாம் ஹர்பஜன் பந்துகளை மிகவும் எளிதாக ரன்களுக்கு விரட்டினர். காரணம் பந்து வீச்சில் ஒன்றுமேயில்லை என்பதால்தான்.

சமீபத்தில் பந்து வீச வந்த சயீத் அஜ்மல், இங்கிலாந்தின் கிரகாம் ஸ்வான் ஆகிய ஆஃப் - ஸ்பின்னர்கள் கடினமாக பந்து வீசி வரும் நிலையில் நன்கு அனுபவம் பெற்ற, முத்தையா முரளிதரனுக்கு பிறகு சிறந்த ஆஃப் ஸ்பின்னரான, ஹர்பஜன் சிங் தன் திறமைக்கேற்ப பந்து வீசவில்லையெனில் அவருக்கு தண்டனை அணியிலிருந்து நீக்கப்படுவது தவிர வேறு வழியில்லை.

ஒவ்வொரு முறையும் பேட்டிங் நன்றாக அமையும் என்று கூற முடியாது. பந்து வீச்சு உறுதியாக அமைந்து எதிரணியினரை 250- 260 ரன்களுக்கு மட்டுப்படுத்தினால்தான் பேட்ஸ்மென்கள் இலக்கை துரத்துவது சாத்தியம். 5 போட்டிகளில் 3 போட்டிகள் 300 ரன்களுக்கும் மேல் வாரி வழங்கினால் பேட்ஸ்மென்கள் எப்படி ஈடுகட்ட முடியும்?

இந்த ஐ.சி.சி. சாம்பியன் கோப்பை போட்டிகளிலிருந்து இந்தியா வெளியேறியது பெரிய அளவிற்கு ஏமாற்றம் அளிக்கவில்லை என்றாலும். கிரிக்கெட்டின் தரத்தை இழந்து விளையாடக்கூடாது என்ற பாடத்தை இந்திய அணி கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.

பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன், கேப்டன் தோனி ஆகியோரது தேனிலவு காலக் கட்டம் முடிவுக்கு வந்து விட்டது. இனிமேல்தான் இவர்கள் இருவருக்கும் வேலை அதிகம்.



Share this Story:

Follow Webdunia tamil