பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஆஸ்ட்ரேலியாவின் ஜெஃப் லாசன், அந்த அணியின் வீரர்கள் மிரட்டப்படுகின்றனர். அதனால் சூதாட்டம் என்பது ஏதோ பணம் தொடர்பான விவகாரம் அல்ல என்று சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற பத்திரிக்கையில் எழுதியுள்ள பத்தியில் எழுதியுள்ளார்.
சட்டவிரோத சூதாட்டக்காரர்கள் வீரர்களை மிரட்டி இவ்வாறு செய் அவ்வாறு செய்யவில்லையெனில் குடும்பத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவோம் என்று மிரட்டும் சாத்தியம் உள்ளது என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதிய பத்தியில்:
"நான் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்த போது அந்த நாடு நடந்து கொண்டிருக்கும் விதமும் அந்த அணி எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் பற்றியும் திடுக்கிடும் விவரங்கள் எனக்குத் தெரியவந்தன. ஒரு நாள் ஒரு போட்டிக்கு முன் பாகிஸ்தான் அணித் தலைவர் என்னை அவரது அறைக்கு அழைத்த நாளை என்னால் மறக்க முடியாது.
போட்டிக்கு தேர்வு செய்யப்படாத ஒரு வீரர் என்னிடம் வந்து நான் நாளைய போட்டியில் விளையாடுகிறேன்" என்று என்னிடம் கூறினார். நான் அதற்கு 'இல்லை யாரோ உங்களுக்குத் தவறான தகவலை அளித்துள்ளனர்' என்றேன்.
அதன் பிறகுதான் அணியின் கேப்டன் என்னை அவரது அறைக்கு அழைத்தார். அங்கு அவருடன் அணித் தேர்வாளரும் இருந்தார். அப்போது தேர்வாளர் இவ்வாறு கூறினார்: 'நாம் அந்த வீரரை அணியில் தேர்வு செய்துதான் ஆகவேண்டும், அவரைத் தேர்வு செய்யுமாறு எனக்கு உத்தரவு, இதனை நான் செய்யத் தவறினால் எனது மகளை கடத்திச் செல்வார்கள் அல்லது நான் அவளை மீண்டும் பார்க்கவியலாது' என்றார்.
அவர் இதுபோன்று கூறும்போது நாங்கள் முதலில் சிரித்தோம் ஆனால் பிறகுதான் அவர் கூறுவது உண்மை என்பதை உணர்ந்தோம். உடனே வாரியத் தலைவர் அதிபர் பர்வேஸ் முஷாரப்பிற்கு தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். அவர் இந்த அச்சுறுத்தலுக்கு பின்னணியில் இருந்த நபர்களிடம் பேசி விஷயம் சுமுகமாகத் தீர்ந்தது.
நாம் இவர்களை நம் நாட்டின் உள்ள சூழ்நிலை போல் நினைத்துக் கொண்டு தவறாக மதிப்பிடுகிறோம் ஆனால் அங்கு விவகாரம் முற்றிலும் வேறு விதமானது.
மொகமது ஆமீரை நான் சந்தித்தபோது அவருக்கு வயது 16. ஸ்வாட் பள்ளத்தாக்கின் சிறு கிராமத்திலிருந்து அவர் வந்துள்ளார். தாலிபன்கள் நெடுஞ்சாலையை அடைத்திருந்ததால் அவர் பயிற்சிக்கு வரும்போது 3 மணி நேரம் காலதாமதமாகும். ஆனால் அவரிடம் நான் கண்டு வியந்தது அந்த புன்முறுவலும், கிரிக்கெட் மீதான அவரது தொடர்ந்த ஆர்வமும்தான்.
எந்த வித கிரிக்கெட் ஊழலையும் மன்னிக்க நான் கூறவில்லை ஆனால் ஒரு வீரர் தனது சொந்த நலனுக்காக அல்லாமல் அந்தப்பணத்தின் மூலம் ஒரு மின்சார ஜெனரேட்டரை வாங்க பயன்படுத்தியிருக்கலாம் ஏனெனில் அங்கெல்லாம் மின்சாரம் இல்லை என்ற ஒரு விஷயத்தையும் நாம் பரிசீலிக்கவேண்டும்.
மொகமது ஆசிப்பையும் நான் நன்றாக அறிவேன், அவர் பயிற்சியை எப்போதும் துறக்க நேரிடும் ஏனெனில் அவர் எப்போதும் நோயாளியான தன் தாயுடன் நேரம் செலவிட வேண்டியுள்ளது. மேலும் தன் குடும்பத்தின் நலனுக்காக அவர் நிறைய பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.
ஆனால் சல்மான் பட் சூதாட்டத்தில் சிக்கியிருப்பாரேயானால் நான் அதிர்ச்சியடைவேன் ஏனெனில் அவர் கூர்மதியுடையவர் மிகவும் அமைதியானவர்.
நான் பயிற்சியாளராக இருந்த போது ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்த ஒரு கணம் கூட எனக்கு நினைவில்லை.
ஆமிர் பொன்ற சிறந்த இளம் வீரர்கள் இது போன்று ஆவது மிகவும் வருத்தத்திற்குரியது. பாகிஸ்தான் கிரிக்கெ வாரியத் தலைவர் இஜாஜ் பட் ஒரு நல்ல தலைவர் அல்ல. அவர் அந்தப் பதவியில் நீடிக்கக்கூடாது."
இவ்வாறு தன் பத்தியில் கூறியுள்ளார் ஜெஃப் லாசன்.