பலவீனமான அணிகளுடனும் இந்தியா போராட்டம் ஏன்?
, வியாழன், 10 மார்ச் 2011 (15:49 IST)
அயர்லாந்து போட்டிக்குப் பிறகு தொடர்ந்து நேற்று ஹாலந்து அணிக்கு எதிராகவும் குறைவான இலக்கை எதிர்த்து இந்தியா போராடி வெற்றி பெற்றுள்ளது. இதற்கான காரணமாக பலரும் பலவற்றைக் கூறினாலும், சில இடங்களில் சிலவற்றை நாங்கள் பரிசோதித்துப் பார்க்கிறோம் என்று தோனி கூறியுள்ளது சமாளிப்புக்காக கூறுவது போலவே தெரிகிறது.அயர்லாந்துடன் 207 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது 100/4 என்று ஆனது. நேற்று ஹாலந்துடன் அதிரடியாகத் துவங்கி பிறகு 19 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து, பிறகு 135-வது ரன்னின் போது கம்பீரையும் இழந்து, எதிரணியினருக்கு ஒரு நம்பிக்கை அளித்த பிறகு மீண்டும் அறுவையான ஆட்டத்தை ஆடி இந்தியா வெற்றி பெற்றது.சமச்சீரான போக்குதான் கைகொடுக்கும் என்றெல்லாம் பேசிய தோனி, துவக்கத்தில் அதிரடி, இறுதியில் அறுவை என்ற போக்கிற்கு இம்மாத்ரியான காரணங்களைக் கூறுவது அவர் ஒரு திறமையான சமாளிப்பாளர் என்றே நம்மை எண்ண வைக்கிறது.நேற்று வர்ணனையில் இருந்த கங்கூலி, கடகடவென விக்கெட்டுகள் விழுந்தவுடன் கூறியதுதான் உண்மையில் ஒரு நல்ல கேப்டனின் அணுகுமுறையாகும். அதாவது ஆக்ரோஷமாக அடித்து ஆட வேண்டியதுதான், ஓரிரு பவுண்டரி, அல்லது சிக்சர்களுக்குப்பிறகு சாதாரணமான, பாதுகாப்பான, வழக்கமான கிரிக்கெட்டிற்குத் திரும்பிவிட வேண்டும், என்கிறார் கங்கூலி.மேலும் முன்பெல்லாம் திராவிட், கங்கூலி, கயீஃப், யுவ்ராஜ், ஏன் தோனியுமே கூட அது போன்று குறைந்த இலக்கை விக்கெட்டுகள் சரிவுக்குப் பிறகு நிதானமாகத் துரத்தி வெற்றிபெறச் செய்துள்ளனர். இன்று யூசுப் பத்தான், கம்பீர், விராட் கோலி எல்லோருமே தங்களது ஆக்ரோஷமான இயல்புகளை விட்டுக் கொடுக்காமல் ஆடுபவர்கள், எனவே அவர்கள் பின்னால் இருக்கையில் சேவாகும் சச்சினும் ஓரிரு அதிரடி ஷாட்களுக்குப் பிறகு தங்களக்து வழக்கமான ஆட்டத்திற்குத் திரும்பியிருக்கவேண்டும். அதுதான் ரசிகர்கள் எதிர்பார்ப்பது.ஹாலந்து போன்ற அணிகளை ஆதிக்கமாக வெற்றி பெற வேண்டும் என்பது ஒரு புறம் ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருந்தாலும் பாதுகாப்பாக எளிதாக வெற்றி பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களுக்கு இருந்து வருகிறது.ஆனால் தோனி என்ன கூறுகிரார்? எதிரணியினர் பலமாக இருக்கும்போது இவ்வாறு விளையாட வாய்ப்பில்லை அப்போது பாதுகாப்பாக, திட்டமிட்டபடி ஆடுவோம் என்று கூறுகிறார். அது எப்படி திடீரென கைகூடும்?
மேலும் கடைசியில் யுவ்ராஜ் சிங் அரைசதம் எடுக்கவேண்டும் என்பதற்காக 4 ரன்கள் இருக்கும்போது பவர் பிளேயை எடுத்து அதில் தோனி 5 பந்துகளை லொட்டு வைத்தது ரசிகர்களின் எரிச்சலைக் கிளப்பியுள்ளது. ஒரு தனி நபருக்காக எதையும் நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது என்று கூறப்பட்டு வரும் இந்தக் காலக்கட்டங்களில் யுவ்ராஜ் அரைசதம் எடுக்கவேண்டும் என்பதற்காக 5 பந்துகளை தாரை வார்ப்பது எந்த விதத்தில் பாராட்டுக்குரியது என்று புரியவில்லை.தோனியின் இன்னொரு தவறு இரண்டு போட்டிகளாக விக்கெட் எடுக்காத ஹர்பஜன் பற்றிக் கூறுகையில், ஹர்பஜனை எதிர்கொள்பவர்கள் அவரை அடிக்கவேண்டாம் என்று முடிவெடுத்தால் அது அவரது பலவீனமாகாது என்கிறார். ஷேன் வார்னையோ, முரளிதரனையோ அடித்து ஆடாமல் எவ்வளவு நேரம் ஒருவர் தடுத்தாட முடியும். அவ்வாறு ஆடினால் அது அவர்கள் வலையில் விழுவதற்குச் சமம் என்று அனைத்து பேட்ஸ்மென்களுக்கும் தெரியும். ஆனால் ஹர்பஜனை அடிக்காமலே சமாளித்து விடலாம் என்றால் அவடது பந்து வீச்சு எங்கோ சோடை போய் கொண்டிருக்கிறது என்றுதானே பொருள்?தோனியின் இன்னொரு அதிசய விளக்கம், நாக்-அவுட் கட்டத்தில் வலிய அணிகளுக்கு எதிராக அவர் சவாலாகத் திகழ்வார் என்று கூறுகிறார். அப்படியென்றால் பலவீனமான அணிகளுக்கு எதிராக அவரை உட்கார வைத்து விட்டு ரெய்னாவையோ, அஷ்வினையோ அணியில் தேர்வு செய்யவேண்டியதுதானே? அயர்லாந்து, ஹாலந்து, வங்கதேச அணிகளுடன் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தனது அளவையும், திசையையும் கண்டுபிடித்துக் கொண்டு வலிய அணிகளுடன் சவாலாகத் திகழ்வார் என்பது தர்க்க பூர்வ சிந்தனையாகத் தெரியவில்லை.பொதுவாக நம் பார்வைக்குத் தெரிவதென்ன? பலமில்லாத அணிகளின் பேட்ஸ்மென்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாத இவர் எவ்வாறு பலமான அணிகளுக்கு எதிராக சவாலாகத் திகழ முடியும்? அன்று இதேபோல் ஏமாற்றினால்? அல்லது பலமான அணிகளும் ஹர்பஜனை அடிக்காமல் ஆடினால் அப்போதும் தோனி இதே விளக்கத்தை அளிப்பாரா? ஹர்பஜன் சிங் ஒரு ஆக்ரோஷமான பந்து வீச்சாளர் என்றால் அவரை அடித்தால்தான் நாம் நம் விக்கெட்டைத் தக்கவைக்க முடியும் என்று எதிரணி பேட்ஸ்மென்கள் நினைக்கவேண்டும். அதுதான் ஆக்ரோஷ பந்து வீச்சாளருக்கான இலக்கணம்.கங்கூலி நேற்று ஆட்டம் முடிந்தவுடன் சித்து கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், நேற்றைய ஆட்டத்திலிருந்து இந்தியா என்னத்தை கற்று கொண்டிருக்க முடியும்? என்றார். இதுதான் சரியான கருத்து.