Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பலமான ஆஸ்ட்ரேலியாவுடன் தடுமாறும் இந்திய அணி மோதுகிறது

Advertiesment
பலமான ஆஸ்ட்ரேலியாவுடன் தடுமாறும் இந்திய அணி மோதுகிறது
, வியாழன், 22 அக்டோபர் 2009 (14:10 IST)
webdunia photo
WD
வரும் ஞாயிறன்று மேலதிகமாக விளம்பரத்தப்பட்டு வரும் இந்திய-ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையிலான 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் பகல் நேர ஆட்டத்துடன் துவங்குகிறது.

இருதரப்பு ஒரு நாள் தொடர்களில் இந்தியா சமீப காலமாக பல தொடர்களை கைப்பற்றி வந்தாலும், இருபதுக்கு 20 உலகக் கோப்பை தொடரில் வெளியேற்றம், சாம்பியன் கோப்பையில் வெளியேற்றம் ஆகியவற்றால் இந்திய அணி சற்றே சந்தேகத்திற்குரிய அணியாக தோற்றமளிக்கிறது.

மாறாக தொடர்ச்சியான கிரிக்கெட் போட்டிகளால் கடந்த 12 மாதங்களாக களைப்படைந்துள்ள ஆஸ்ட்ரேலிய அணி, சாம்பியன் கோப்பையை வென்ற மனோ திடத்தில் இங்கு வந்திறங்கியுள்ளது.

இந்திய அணிக்கும் ஆஸ்ட்ரேலிய அணிக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமாக பலர் பல நுணுக்கங்களை சுட்டிக் காட்டினாலும், அடிப்படையில் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

ஆஸ்ட்ரேலிய அணி எப்போதும் வெற்றியை கருத்தில் கொண்டே தங்கள் கிரிக்கெட் ஆட்டத்தை ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர்கள். ஆனால் இந்திய அணியில் சமீப காலங்களாக தோல்வி அடைவது என்பது ஒரு பிரச்சனையாக இல்லாமல், மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

சாம்பியன் கோப்பையில் அணி தோல்வி தழுவியது பற்றி அணியில் உள்ள இளம் வீரர்கள் வருந்துவதில்லை, அவர்களுக்கு தோல்வி கவலையளிப்பதாயில்லை என்று மூத்த வீரர் ஒருவ்ர் தன்னிடம் கூறி வருந்தியதாய் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி சமீபத்தில் தெரிவித்திருந்தது நாம் கூர்ந்து கவனிக்கத்தக்கது.

சேவாக் வந்து விட்டார், யுவ்ராஜ் வந்து விட்டார் எனவே வெற்றி நமதே என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது வெற்றியை அடைய ஒரு அணி என்னவாக இருக்கவேண்டும் என்ற நுணுக்கங்களை அறியாத ஒரு ரசிக மனோ நிலைதான்.

திராவிட் ரசிகர்களுக்கு...

webdunia
webdunia photo
WD
திராவிட் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் ஓரளவிற்கு சுமாராகவே ஆடினார், சாம்பியன் கோப்பையில் அவரை மட்டும் தனியாக பிரித்து நாம் விமர்சனம் செய்ய முடியாது போன்ற காரணங்கள் இருந்தாலும், நாம் உண்மையில் திராவிடை அணியில் வைத்திருப்பதன் மூலம் 2011 உலகக் கோப்பைக்கான ஒரு திறமை மிகுந்த அணியை உருவாக்க முடியுமா என்ற கேள்வியை நேர்மையாக கேட்டுப்பார்ப்பது நல்லது.


webdunia
webdunia photo
WD
திராவிட் போன்ற வீரர்களின் ஆட்ட முறை பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே பொருத்தமானது. ஏனெனில் அவர் நின்று ரன்களை சேர்ப்பவர். ஆனால் இன்றைய ஒரு தின ஆட்டங்களோ ஒரு முனையில் ஒரு வீரர் அதிரடியைக் காண்பிக்கவேண்டும் என்பதாக மாற்றமடைந்துள்ளது. சேவாக் ஆட்டமிழந்து விட்டால், திராவிடை எதிரணியினர் சுலபமாக கட்டிப் போட்டு விடுகின்றனர். அவர் ஒன்று, இரண்டு என்று ரன்களை எடுக்கக் கூட திணறுகிறார்.

மேலும் ஒரு வீரர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அவரை ஒதுக்கிய ஒரு கிரிக்கெட் வடிவத்திற்கு மீண்டும் வரும் போது "பிக் பேங்" என்று கூறுவார்களே அது போன்ற ஒரு பழி தீர்க்கும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கவேண்டும், ஆனால் அவரோ, தன் பழைய ஆட்டத்திற்காகத்தான் தன்னை அணியில் மீண்டும் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பது போல் விளையாடினார்.

கங்கூலியை அணியிலிருந்து நீக்கி விட்டு மீண்டும் தேர்ந்தெடுத்தனர். ஆனால் கங்கூலி 'என்னையா அணியிலிருந்து நீக்கினீர்கள்' என்பது போல் ஒரு பழி தீர்க்கும் விதமாக ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்தினார். அத்தகைய மனோ நிலை திராவிடிடம் இல்லை.

அது மட்டுமல்லாது ஒரு நாள் போட்டிகளில் அவர் என்றுமே இந்திய அணிக்கு ஒரு சுமையாக மட்டுமே இருந்திருக்கிறார். கங்கூலி அவரை அணியிலிருந்து தூக்க மனம் வராமல்தான் அவரை விக்கெட் கீப்பராக பணியாற்றச் செய்து இன்னொரு பேட்ஸ்மெனை கூடுதலாக உள்ளே நுழைத்தார். அது கங்கூலியின் உத்தியும் திறமையும் சார்ந்தது.

இப்போது தோனி அவரை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியாமல் திணறுகிறார். ஸ்லிப்பில் நின்று கேட்சை கோட்டை விடுகிறார் திராவிட்.

இதே வாதத்தை ஏன் சச்சினுக்கு வைப்பதில்லை என்று கேட்கலாம். சச்சின் டெண்டுல்கர் மீது நமக்கிருக்கும் விமர்சனமெல்லாம் அவர் பல சமயங்களில் தன் திறமைக்கேற்ப விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து செல்லாமல் கைவிட்டு விடுகிறார் என்பதே. உதாரணமாக 2003 உலகக் கோப்பை இறுதி போட்டி.

ஆனால் ஒவ்வொரு முறை சச்சின் மீதும் காரமான விமர்சனங்கள் எழும் போதும் அவர் தன்னை நிரூபித்து பதிலடி கொடுத்துள்ளார். கடைசியாக இலங்கையில் நடைபெற்ற ஒரு நாள் இறுதிப் போட்டியில் அவர் எடுத்த அதிரடி 138 ரன்களே இதற்கு சாட்சி.

மேலும் இந்த வயதிலும் அவர் டீப் மிட்விக்கெட், டீப் தேர்ட்மேன் என்று எல்லைக்கோட்டருகே ஃபீல்ட் செய்து தன் பலமான த்ரோவினால் எதிரணியினரின் இரண்டாவது ரன் முயற்சியை முறியடித்துள்ளார். அவர் ஒரு பாதுகாப்பான ஃபீல்டர். சமீபத்தில் ஒரேயொரு கேட்சை டீப் திசையில் கோட்டை விட்டார். ஆனால் அதற்காக அவர் பேரிதும் வருந்தினார். எனவே சச்சின் உலக கிரிக்கெட்டில் ஒரு விதி விலக்கு, திராவிடிற்கு வைக்கப்படும் அளவு கோல்கள் சச்சினுக்கு ஒரு நாளும் பொருந்தாது.

எனவே திராவிட் ரசிகர்கள் அவரை அணியிலிருந்து நீக்கியது நன்மைக்கே என்பதை புரிந்து கொள்ள்வேண்டும். அணியின் நன்மை மட்டுமல்ல, திராவிட்ற்கும் இது நன்மைதான்.

அணிகளின் பலமும் பலவீனமும்

இந்திய அணியில் மீண்டும் சேவாக், யுவ்ராஜ் வந்திருப்பது பெரிய அளவில் பலம்தான் என்றாலும், சுரேஷ் ரெய்னாவின் சந்தேகத்திடமான ஃபார்மை பதிலீடு செய்யும் வேறு பேட்ஸ்மென்கள் இல்லாதது ஒரு பெரிய குறை. ரோஹித் ஷர்மாவை அணியில் வைத்திருக்கவேண்டும். இயன் சாப்பல் சமீபத்தில் சாம்பியன் கோப்பை கிரிக்கெட்டில் வர்ணனை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ரோஹித் ஷர்மா அணியில் இல்லாதது தனக்கு ஆச்சரியமாக உள்ளது என்றார். அவரது திறமை அபாரமானது என்று புகழ்ந்தார்.

ஆனால் இஷாந்த் ஷர்மா சரியாக வீசவில்லை எனில் முனாஃப், பிரவீண், சுதீப் தியாகி என்று மாற்று வீச்சாளர்கள் அணியில் இருப்பது நல்ல சிந்தனை.

webdunia
webdunia photo
WD
தோனியின் தலைமை அணுகு முறையில் மாற்றங்கள் தேவைப்படுகிறது. சாம்பியன் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 54/3 என்று திணறி கொண்டிருந்த பாகிஸ்தான் அணியை ஹர்பஜன் சிங் காப்பாற்றினார். தொடர்ந்து தேர்ட் மேன் திசையில் பவுண்டரிகளாக சென்று கொண்டிருக்கிறது. பந்து வீச்சில் வழக்கமான ஃபிளைட், பைட், திருப்பம் எதுவும் இல்லாமல் நேர் நேராக வீசிக் கொண்டிருக்கிறார் ஹர்பஜன், ஆனால் தோனி ஒரு இடையீடு கூட செய்யாமல் தொடர்ந்து பந்தை அவர் கையில் கொடுத்தார்.

கங்கூலியாய் இருந்திருந்தால், "இதோ பார், தேர்ட் மேன் திசையில் அடுத்த ரன் கொடுக்கப்பட்டால் நீ உன் இடத்தை இழப்பாய்" என்று எச்சரித்திருப்பார்.


webdunia
webdunia photo
WD
கும்ளே போனவுடன் இந்திய அணியின் பந்து வீச்சை வழி நடத்திச் செல்பவர் என்றெல்லாம் நாம் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி விட்டோம். இதனால் அவருக்கு ஒரு 'செக்' இல்லாமல் போய் விட்டது. வெங்கடேஷ் பிரசாத் ஒரு பந்து வீச்சு பயிற்சியாளராக இங்குதான் தோல்வி கண்டார், இஷாந்த் ஷமா பந்தில் வேகமும் இல்லை, ஸ்விங்கும் இல்லை, திசையும் இல்லை அளவும் இல்லை ஆனால் இவர் பார்த்துக் கொண்டிருந்தார். அதனால்தான் தன் பதவியை இழந்துள்ளார்.

எனவே ஹர்பஜன் சிங்கை அவ்வப்போது உன் இடம் போய்விடும் என்ற ரீதியில் லேசான மிரட்டலுடன் வைத்திருப்பது நல்லது. ஏனெனில் பாண்டிங், மைக் ஹஸ்ஸி, ஷான் மார்ஷ், ஜேம்ஸ் ஹோப்ஸ், கேமரூன் ஒயிட் போன்ற நடு வரிசை வீரர்களை நாம் ஹர்பஜன் சிங்கை வைத்துத்தான் வீழ்த்தவேண்டும். எனவே இவர் சொதப்பினால் எந்த ஒரு இலக்கையும் ஆஸ்ட்ரேலிய அணி எட்டி வெற்றி பெற்று விடும்.

தோனி நிறைய தவறுகளை செய்கிறார். சமீபத்தில் நடந்த சாலஞ்சர் உள் நாட்டு கிரிக்கெட் தொடரில் ஹர்பஜன் சிங்கை பேட்டிங்கில் 3-வதாக களமிறக்கினார். இது மிகவும் தவறு. அவர் தன்னை ஆல்ரவுண்டராக மயங்கத் தொடங்கியதுதான் அவரது பந்து வீச்சு சோபிக்காமல் போவதற்கு ஒரு காரணம். நீ ஒரு பந்து வீச்சாளர் உன் கடமை விக்கெட்டுகளை வீழ்த்துவது என்று யாராவது அவரிடம் அறிவுறுத்த வேண்டியுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் பலவீனமே பந்து வீச்சுதான். அதே போல் தோனி, பேட்டிங்கில் ராகுல் திராவிட், சுனில் கவாஸ்கர், அஞ்சுமன் கெய்க்வாட் போன்று ஆடுவதை விடுத்து ஆக்ரோஷமாக அடித்து விளையாடவேண்டும். ஏனெனில் ஆஸ்ட்ரேலியாவின் பலவீனமே அந்த அணியின் சுழற்பந்து வீச்சுதான் நேதன் ஹாரிட்சை நாம் பொளக்காவிட்டால் 240 ரன்களுக்கு திணற வேண்டும். அது பாண்டிங்கிற்கே போதாது.

ஆஸ்ட்ரேலிய அணியின் பலவீனம் பல உள்ளது. மிட்செல் ஜான்சன் சீராக வீசுவதில்லை. பிரட் லீ வேகமாக வீசுவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் பீட்டர் சிடில், டக் போலிஞ்சர், ஹில்ஃபென்ஹாஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையே பாண்டிங் நம்பியுள்ளார்.

பேட்டிங்கில் ஷேன் வாட்சன் அபாரமாக விளையாடி வருகிறார். நாம் இந்த தொடரில் வெற்றி பெறவேண்டுமென்றால் ஷேன் வாட்சனை ரன் எடுக்க விடக்கூடாது. ஷான் மார்ஷ் போன்ற வீரர்கள் இந்திய மண்ணில் ஆடி அனுபவம் பெற்றவர்கள், ஹஸ்ஸியும் நல்ல பேட்டிங் நிலையில் உள்ளார்.

அனைத்திறும் மேலாக அந்த அணியின் ஃபீல்டிங். இது ஒரு மிகப்பெரிய வேறுபாடு. ஃபீல்டிங்கில் ஒரு 20 அல்லது 25 ரன்களை அவர்கள் இந்திய அணிக்கு குறைத்து விடுவார்கள். மாறாக இந்திய அணி சமீபமாக மிகவும் மோசமாக ஃபீல்ட் செய்து வருகிறது.

தொடக்கம் முதலே ஆக்ரோஷமான கிரிக்கெட்டை ஆடினால் மட்டுமே தோனி இந்த தொடரைக் கைப்பற்ற முடியும், தொய்வாக ஆடினால் ஆஸ்ட்ரேலியர்கள் இந்திய அணியின் மீது ஏறி சவாரி செய்து விடுவார்கள்.

webdunia
webdunia photo
WD
எனவே "எனக்கு வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான், ஒரு 25 ரன்கள் அதிகம் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம், துவக்க வேகப்பந்து வீச்சாளர்கள் முதலில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால் வெற்றி பெற்றிருப்போம், ஃபீல்டிங் சரியில்லை அதனால் தோல்வி, பேட்ஸ்மென்கள் பொறுப்பை உணர்ந்து ஆட வெண்டும், டாஸ் எல்லாவற்றையும் தீர்மானித்து விட்டது. விளக்கொளியில் இலக்கை துரத்துவது கடினம்" போன்ற வழக்கமான தடை வாசகங்களை தோனி தன் மனதிலிருந்து நீக்கினால் இந்திய அணி ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்த முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil