Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பதற்றமடையவேண்டிய தோல்வி அல்ல; அணித் தேர்வுக் கொள்கையில் மாற்றங்கள் தேவை

Advertiesment
கிரிக்கெட்
, புதன், 10 பிப்ரவரி 2010 (13:20 IST)
நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தோனியின் தலைமையின் கீழ் இந்தியா முதல் டெஸ்ட் தோல்வியைச் சந்தித்துள்ளது. அது இன்னிங்ஸ் தோல்வியாக அமைய ஊடகவியலாளர்கள் மத்தியில் இது இன்று ஒரு பெரிய விஷயமாக மாறியிருக்கிறது.

முதலில் 5 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே கொண்ட தொடராகத்தான் இது முடிவு செய்யப்பட்டிருந்தது. திடீரென இந்தியா தரவரிசையில் முதன் முதலாக முதலிடம் பிடித்ததையடுத்து இந்தத் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் 2 டெஸ்ட்கள், 3 ஒரு நாள் போட்டிகள் என்று மாற்றியது.

WD
வேலியில் போற ஓணான வேட்டிக்குள்ள எடுத்து விட்டுக்கிட்டு குத்துதே குடையுதே என்ற கதையாக, பலத்தை காட்ட நினைத்த இந்திய அணியின் பலவீனம் அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், ஊடகங்களும் பாகிஸ்தான் தோல்வியடையும் ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் "குற்றம்! நடந்தது என்ன?" என்கிற ரீதியில் விசாரணைக் கமிஷன், நீக்கல்கள், மிரட்டல்கள் என்று பலவிதமான முட்டாள்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

என்ன இருந்தாலும், இது இந்தியாவாயிற்றே! உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாயிற்றே! இதனால் இங்கு பாகிஸ்தான் அளவுக்கு தோல்வியைக் கண்டு ஏற்படுமவெறி/பீதி மனோ நிலைகள் வெளிப்படையாக இல்லை. ஆனால் குற்றம் என்பதற்கு பதிலாக என்ன நடந்தது? யார் மீது தவறு? என்கிற அளவில் ஊடகங்களில் இது குறித்த ஊகங்கள் வெளியிடப்படும். யார் மீதாவது மறைமுகமாக குற்றம்சாற்றப்படும்.

ஆனால் நாம் கூறவருவது என்னவெனில், பதற்றமடைய வேண்டிய தோல்வி அல்ல இது என்பதே. நம் அணியில் 3 முக்கிய வீரர்கள் இல்லை. அதுவும் திராவிட், லக்ஷ்மண், யுவராஜ் சிங் போன்ற மிகப்பெரிய வீரர்கள் இல்லாதது எந்த அணிக்கும் கையொடிந்தது போலவே.

தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்மித், காலிஸ் இல்லையெனில் என்ன ஆகும்? அது போன்ற ஒரு நிலைதான் இந்திய அணிக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்க அணி இந்தியத் தொடருக்கு வரும் முன் நிறைய திட்டமிடுதலைச் செய்தனர்.

webdunia
WD
இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கு எதிராகவும் தனித்தனியாக உத்திகளை வகுத்து, அதனை திறமையாக பயன்படுத்தி வெற்றி கண்டனர். மாறாக இந்தியாவில் ஜாகீர் கான் தவிர வேறு பந்து வீச்சாளர்களே இல்லை.

நாம் ஒன்றை சுலபமாக மறந்து விடுகிறோம், அனில் கும்ளே என்ற சுழற்பந்து மேதை ஓய்வு பெற்ற பிறகான இந்திய அணி இது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

மெல்போர்ன், சென்னை, மொகாலி என்று எந்த மைதானமாக இருந்தாலும் குறிப்பாக பந்து வீச்சிற்கு சாதகமில்லாத, முழுதும் பேட்டிங்கிற்கு சாதகமான முதல் நாள் ஆட்டக்களத்தில் இரு முறை ஆஸ்ட்ரேலியாவின் பலமான பேட்டிங்கிற்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் கும்ளே!

மெல்போர்னில் முதல் நாள் ஆட்டக்களத்தில் இதனைச் செய்தபோது அங்கேயே ஊறி வளர்ந்த ஷேன் வார்ன். தன்னால் கூட மெல்போர்னின் முதல் நாள் ஆட்டக்களத்தில் இவ்வளவு பலமான பேட்டிங் வரிசைக்கு எதிராக கும்ளே போல் வீசியிருக்க முடியாது என்றார்.

கபில்தேவ், கும்ளே போன்ற வீரர்களை ஈடுகட்டுவது சாதாரண விஷயமல்ல. ஆனால் நாம் கும்ளே இடத்தில் எளிதாக அமித் மிஷ்ராவையும், ஹர்பஜனையும் வைத்துப் பார்த்து தோல்வி கண்டு ஆத்திரமடைகிறோம்.

நாம் கும்ளே இல்லாமல் இருக்கிறோம், பிறகு ஹர்பஜன் சிங் பந்தை திருப்பும் கலையை மறந்து போயுள்ளார். அமித் மிஷ்ரா புதியவர். இஷாந்த் ஷர்மா 130 கி.மீ. வேக வீச்சு ஒன்றும் கவைக்குதவாது.

நாம் ஒரு பலவீனமான அணியாகவே களமிறங்கினோம் என்பதை முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். இது போன்ற தருணத்தில்தான் அணித் தேர்வுக் குழு சற்று கற்பனை பலத்துடன் திறமையாக செயல்பட்டிருக்க வேண்டும்.

webdunia
WD
இந்த விதத்தில் கிரேம் ஸ்மித் இந்திய அணித் தேர்வு குறித்து கூறிய கருத்து சிந்திக்கத்தக்கது.

4 பந்து வீச்சாளர்கள் 7 பேட்ஸ்மென்கள் என்று பாரம்பரிய முறையை இந்தியா கடைபிடித்திருக்கக் கூடாது. ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் ஓரளவுக்கு பேட்டிங் செய்ய முடியும் என்ற போது 5-வது பந்து வீச்சாளரை எடுத்திருக்கவேண்டும், விருத்திமான் சஹா இருந்திருக்கக் கூடாது என்று ஸ்மித் கூறிய கருத்து சிந்தனைக்குரியது.

அணித் தேர்வு குறித்து சில கேள்விகள்:

லக்ஷ்மண், ரோஹித் ஷர்மா ஆகியோர் 100% உடல் தகுதி இல்லை எனும்போது அவர்களை 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்தது ஏன்?

மேலும் ஆட்டம் துவங்கும் முன் 15 நிமிடத்திற்கு முன்புதான் ரோஹித் சர்மா விளையாட முடியாது என்று தெரியவந்ததா?

அப்படியிருந்தாலும், என்ன அடிப்படையில் தினேஷ் கார்த்திக் ஓரங்கட்டப்பட்டார்? விருத்திமான் சஹாவின் உள் நாட்டு கிரிக்கெட் பங்களிப்பு என்ன?

ஏன் திராவிட், லஷ்மண், யுவ்ராஜ் சிங் இடத்தில் விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, அதிரடி வீரர் மணீஷ் பாண்டே தேர்வு செய்யப்படவில்லை?

தோல்வி அடைந்தது விளையாடிய 11 வீரர்களால் என்றபோது, விளையடாத சுதீப் தியாகி, அபிமன்யு மிதுன் போன்றவர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து நீக்கியதன் அர்த்தம் என்ன?

கர்நாடகாவிலிருந்து வந்துள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுனை நாம் உள் நாட்டுக் கிரிக்கெட்டில் பார்த்தவரை சர்வதேச தரத்தில் வீசக்கூடிய வேகமும், நல்ல அளவிலும், திசையிலும் வீசும் திறமையும், நல்ல பவுன்சரும், அக்தர் ரக யார்க்கரையும் தன் கைவசம் வைத்திருப்பவர் என்பது தெரிந்தது.

ரவி சாஸ்திரியிடம் தேர்வுக்குழுவில் உள்ள உறுப்பினர் ஒருவர் கூறும்போது, அபிமன்யு மிதுன் எவ்வாறு வீசுகிறார் என்பதை பார்க்கவே தேர்வு செய்துள்ளோம் என்று கூறியதாக தகவல்!

webdunia
WD
ஆனால் பார்ப்பதற்கு முன்பே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஸ்ரீசாந்த் ஒரு டெஸ்ட் விளையாடுவார், மீண்டும் காயமடைவார், மீண்டும் காயத்திலிருந்து குணமடைவார், மீண்டும் தேர்வு செய்யப்படுவார். இதே வேலையாக இருந்தால் எப்படி முன்னேற முடியும்?

ஒவ்வொரு முறை காயமடைந்து திரும்பும் போதும் நேரடியாக அவர் அணியில் தேர்வு செய்யப்பட அவர் என்ன டெனிஸ் லில்லியா? ஹர்பஜன் சிங்கும் அப்படித்தான், நேரடியாகத் தேர்வுக்கு அவர் தகுதி பெற்று விடுவார். இது எப்படி? ஒரு சிலருக்கு இதுபோன்ற சிறப்புரிமைகளை வழங்குவதை முதலில் நிறுத்தவேண்டும் என்பது நம் கோரிக்கை.

ஆஸ்ட்ரேலியாவில் இவ்வாறு நடக்க வாய்ப்பேயில்லை. ஜஸ்டின் லாங்கர் ஓய்வு பெற்றவுடன் ஃபில் ஜாக்ஸ் என்ற இடது கை துவக்க வீரர் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

அவர் 11 டெஸ்ட் போட்டிகளில் 902 ரன்களை 3 சதம் 6 அரைசதங்களுடன் 47.47 என்ற சராசரியில் பெற்றிருந்த போது காயமடைந்தார். தற்போது அவர் காயத்திலிருந்து குணமடைந்து விட்டார். ஆஸ்ட்ரேலியாவும் நல்ல துவக்க விரரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பில் ஜாக்ஸ் குணமடைந்ததும் உடனே அவரை கேள்வி கேட்பாரில்லாமல் அணியில் தெர்வு செய்தனரா? இல்லை. அவர் தன் டெஸ்ட் வாழ்வே அவ்வளவுதானா என்ற ரீதியில் தற்போது உள் நாட்டு கிரிக்கெட் ஆட்டங்களில் போராடி வருகிறார்.

நாமும் அது போன்றுதான் சிந்திக்கவேண்டும். இங்கு அணித் தேர்வுகளில் இன்னும் தனி நபர் ஆளுமைதான் பெரிய கவன ஈர்ப்பு பெறுகிறதே தவிர ஆட்டத்திறன், குறிப்பிட்ட அந்த வீரரின் நடப்பு ஃபார்ம் ஆகியவை கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

வங்கதேசம் இந்தியாவை இரண்டு முறை சுருட்ட முடியாது என்று கூறினார் சேவாக். ஆனால் இப்போது தென் ஆப்பிரிக்காவை இப்போதைய இந்தியப் பந்து வீச்சாளர்களால் இருமுறை அல்ல ஒரு முறை கூட சுருட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது!

7வது வீரரை பேட்டிங் வீரராக தேர்வு செய்யாமல் ஒரு ஆல்ரவுண்டரைத் தேர்வு செய்து சில வாய்ப்புகளைக் கொடுத்து வளர்த்தெடுக்கும் முயற்சிகள் சற்றும் நம் தேர்வுக் குழுவிற்கு இல்லை.

webdunia
WD
மீண்டும் மீண்டும் காயமடைந்த வீரர்களை அணியில் தேர்வு செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தேர்வுக்குழு, ஏன் இர்ஃபான் பத்தானுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கக்கூடாது? அல்லது உள்நாட்டு கிரிக்கெட் ஆட்டம்தான் தேர்வுக்கு முக்கியம் எனும்போது, பிரவீண் குமாரை ஏன் அந்த இடத்தில் ஒரு பவுலிங் ஆல்-ரவுண்டராக நாம் பரிசீலிக்கக்கூடாது?

இவையெல்லாவற்றையும் யோசித்தால்தான் ஒரு நாட்டு கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு என்பது எதிர்காலத்திற்காக சிந்திப்பதாக பொருள், இல்லையெனில் அவ்வப்போது சிலரை திருப்தி செய்வதற்கான பயனற்ற தேர்வாகத்தான் போய் முடியும். இந்த டெஸ்ட் போட்டியிலும் இந்தக் கொள்கைதான் மோசமான தோல்வியை சந்திக்கச் செய்துள்ளது.

அணித் தலைமையின் வேலை என்ன?

இந்தத் தொடரைப் பொறுத்தவரை முதலில் தோனியின் தலைமையின் கீழ் முதல் தோல்வியே இன்னிங்ஸ் தோல்வியாக அமைந்ததுதான். இது தோனியை பெரிதும் காயமடையச் செய்திருக்கும்.

முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆனைத் தவிர்க்க முடியாவிட்டாலும் ஸ்கோரை 300 ரன்களுக்கு மேல் நகர்த்தியிருந்தால் ஸ்மித் ஃபாலோஆன் கொடுக்க யோசித்திருப்பார்.

மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் டான் பிராட்மேன் அளவுக்கு சாதனை வைத்திருக்கும் கம்பீர் இந்த டெஸ்ட் போட்டியில் மலிவான ஸ்கோருக்கு ஆட்டமிழந்தது தோல்விக்குப் பெரிய பங்களிப்பு செய்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் சேவாக் சதம் அடித்ததும், ஆட்டமிழந்தது, இரண்டாவது இன்னிங்ஸில் சச்சின் சதமடித்ததும் ஆட்டமிழந்தது ஆகியவையால் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தோம்.

தோல்வி எப்படியும் உறுதி என்று ஆகிவிட்ட பிறகு இரண்டாவது இன்னிங்சில் ஒரு 100 ரன்களையாவது முன்னிலை பெற்று தென் ஆப்பிரிக்காவின் ஒரு 5 விக்கெட்டுகளையாவது சாய்த்திருந்தோமானால் இந்த வெற்றியை தென் ஆப்பிரிக்கா இந்த அளவுக்கு கொண்டாடாது என்பதோடு, கொல்கத்தாவில் களமிறங்கும்போது தோல்வி பயத்துடன் களமிறங்க வாய்ப்பிருந்திருக்கும். இப்போது அவ்வாறில்லை.

இதை கூறும் போது ஒரு முறை இங்கிலாந்திற்கு எதிராக கபில்தேவ் தலைமையில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டி நினைவுக்கு வருகிறது.

55 பந்துகளில் 89 ரன்களை விளாசி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தார் கபில்தேவ். இந்தியா ஒரு 65 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

webdunia
WD
இங்கிலாந்து 66 ரன்களை எடுத்து வெற்றிபெற களமிறங்கியபோது, கபில்தேவ் ஒரு வெறியுடன் பந்து வீசி 10 ரன்களில் இங்கிலாந்தின் முதல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு 4-வது விக்கெட்டும் விழுந்தது. அந்த 66 ரன்களை எடுக்க இங்கிலாந்தை 23 ஓவர்கள் வரை இழுத்தார் கபில்தேவ். இந்த மனோவியல் சிகிச்சையை எப்போதும் எந்த ஒரு கேப்டனும் மனதில் கொண்டிருக்கவேண்டும்.

எம்.எஸ்.தோனி, கபில் போன்ற ஒரு வீரர்தான், அவர் ஏன் 112 பந்துகளில் தடவித் தடவி 25 ரன்கள் எடுத்து கடைசியில் ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் கடைசி தினமாக இருந்தால் சரி! இன்னும் ஒரு நாள் முழுதுமாக இருக்கும் போது தோனி என்ன இரண்டு நாள் நின்று அணியைக் காப்பாற்றுவாரா? இது நடக்க முடியாத காரியம்.

இவர் தன் அதிரடி ஆட்டத்திறனை காண்பித்து 112 பந்துகளில் 70 ரன்களை அடித்திர்ந்தால் நாம் மேலே குறிப்பிட்டது போல் 80 ரன்களையாவது முன்னிலை பெற்றிருந்து அதன் பிறகு தென் ஆப்பிரிக்காவின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் கூட போதுமானது அந்த அணியின் மனோநிலை அடுத்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கும்போது உற்சாகமாக இருந்திருக்காது.

எனவே தோல்வி அடைந்தாலும் எதிரணியினரை எப்படி நிலைகுலையச் செய்து அடுத்த டெஸ்ட் போட்டிக்கு நம்மை தயார் செய்து கொள்பவர்தான் சிறந்த கேப்டன். தோனிக்கு வெற்றி, தோல்வி என்பது மட்டும்தான் தற்போது தெரிகிறது.

சில தோல்விகளை எந்த அணியும் தவிர்க்க முடியாது. ஆனால் அந்தத் தோல்வியின் வழியாக எதிரணியினரின் ஏதோ ஒரு பலவீனத்தை நாம் கண்டுபிடித்து அதனை அவர்களின் அச்சமாக மாற்றுவதுதான் கேப்டனின் வேலை. தோனி இனிமேல்தான் இதையெல்லாம் கற்றுக் கொள்ளவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil