இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி பெற்று வரும் படு மோசமான தோல்விகளுக்கு மூத்த வீரர்கள் முதல் ஊடகங்கள் தொடங்கி சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் வரை காரணங்களைத் தேடி அலைகின்றனர். இதில் பெரும்பாலோனோர் கருத்து அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதால் களைப்படைந்த அணியாக இது உள்ளது என்பதே.இந்த வாதத்தில் முற்றிலும் உண்மை இல்லை என்றாலும் இந்த வாதத்தை வேறொரு கோணத்தில் அணுகினால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பணவெறி, வீரர்களின், குறிப்பாக புகழ் பெற்ற வீரர்களின், விளம்பர ஒப்பந்தங்கள், இந்திய அணி ஒரு நாட்டில் விளையாடுகிறது என்றால் சுமார் 70- 80 நாடுகளின் நேரடி ஒளிபரப்பு உரிமை அதற்கான விளம்பர வருவாய் இன்ன பிற... இன்ன பிற... விடயங்கள் வெளிச்சத்திற்கு வரும்.மேற்கிந்திய தொடரில் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு, ஆனால் இங்கிலாந்தில் அதே களைப்படைந்த மூத்த வீரர்கள் அணியில் நுழைகின்றனர். அவர்கள் உண்மையில் உடற்தகுதியுடன் இருக்கிறார்களா என்பதை நிரூபிக்க உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர்கள் விளையாடுவதில்லை. நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர். இது இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறது.இதற்குக் காரணம் என்ன? ஏன் இந்தியா அதிகப் போட்டிகளில் விளையாடுகிறது? ஏன் இந்திய அணியை அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் விரும்புகின்றன? இந்தக் கேள்விக்கான விடை நட்சத்திர பிராண்டுகளை விளம்பரப்படுத்தும் நட்சத்திர வீரர்களாக நம் வீரர்கள் இருப்பதே காரணம், எனவேதான் இந்திய அணி நம்பர் 1 அணியல்ல நம்பர் 1 பிராண்ட் என்று கூறுகிறோம். பி.சி.சி.ஐ. இந்த நம்பர் 1 பிராண்டை விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனம்.கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்றவர்கள் கிரிக்கெட்டின் நுணுக்கங்களை வர்ணிக்கும் வர்ணனையாளர்கள் அல்ல. அவர்கள் பி.சி.சி.ஐ. என்ற வர்த்தக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்கள். பி.சி.சி.ஐ. என்ற அமைப்புக்கு குரல் கிடையாது, எனவே ரவி சாஸ்திரி, கவாஸ்கர் அதன் இரட்டைக் குரலாகச் செயல்படுகின்றனர்.மேற்கிந்திய தொடருக்குச் சென்றால் அது கவர்ச்சியற்ற அணி எனவே விளம்பர வருவாய் என்று பெரிதாக எதையும் பார்த்து விட முடியாது. அதனால் அதற்கு இளம் வீரர்கள் அல்லது அனுபவமற்ற வீரர்கள் கொண்ட அணியை அனுப்புவது. ஆனால் இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா என்றால் அது பெரிய விளம்பர வருவாயைத் தருவது. இந்திய வாரியத்திற்கு மட்டுமல்ல, மேற்கூறிய அனைத்து வாரியங்களுக்கும்தான். எனவே, இதற்கு உடற்தகுதி இல்லாவிட்டாலும் நட்சத்திர பிராண்ட் வீரர்களை அனுப்புவது. அவர்களின் கிரிக்கெட் ஆட்டம் அப்போது எந்த நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளாத வெறும் பிராண்ட் தேர்வு மட்டுமே நடைபெறுகிறது.ஒருநாள் போட்டிகளுக்கு மீண்டும் ராகுல் திராவிட்! கேட்டால் ஆட்டக்களத்திற்கேற்ப அணியைத் தேர்வு செய்கிறோம் என்ற சாதுரியப் பேச்சு. ஆட்டக்களத்திற்கேற்ப என்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு ஏன் சுனில் கவாஸ்கரைத் தேர்வு செய்யவில்லை?
எந்த ஒரு வாரியமும் இந்தியாவுடன் தொடரை ஒப்பந்தம் செய்யும் போது 4 டெஸ்ட் போட்டிகள், 7 ஒருநாள் 2 இருபதுக்கு 20 போட்டிகள் என்று ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. ஆஸ்ட்ரேலியாவில் கடைசியாக நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா வென்றது. அத்துடன் முத்தரப்பு ஒருநாள் தொடரே வேண்டாம் என்று ஆஸ்ட்ரேலியா முடிவு கட்டியது, காரணம் ஆஸ்ட்ரேலியா அல்லாத அணிகள் விளையாடும்போது ஸ்பான்சரகள் வருவதில்லை, வருவாய் பாதிப்பு என்று காரணம் கூறியது.ஆனால் தற்போது இந்தியா அங்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்ட்ரேலியா முத்தரப்பு தொடர் மீண்டும் விளையாடப்படுகிறது. ஏன் இலங்கையை அழைக்க வேண்டும், ஏன் நியூசீலாந்து இல்லை அல்லது மேற்கிந்திய தீவுகள் இல்லை, ஏன் பிற அணிகள் இல்லை என்று யாரும் கேட்டுவிடக்கூடாது. இந்தியா விளையாடினால் ஒளிபரப்பு உரிமைகள் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான டாலர்கள் தொகையை குறிவைத்து மீண்டும் முத்தரப்பு தொடரை ஆஸ்ட்ரேலியா நடத்துகிறது.ஐ.சி.சி.யின் எதிர்கால கிரிக்கெட் பயணத் திட்டத்தில் இந்தியா, ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதில் தலையாய ஆதிக்கம் இந்தியாவினுடையது என்ற குற்றச்சாற்றுக்கள் தற்போது பரவலாக எழுந்துள்ளன.எனவே நம்பர் 1 பிராண்ட் ஆன இந்திய அணி அதிகம் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடுகிறது என்பது இந்த அணியின் கிரிக்கெட் ஆட்டத் திறன்களுக்காக அல்ல மாறாக பிராண்ட் இமேஜ். வருடம் முழுதும் எங்காவது விளையாடிக் கொண்டிருப்பது கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டும்தான் நடைபெறுகிறது. கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி, அதிகம் பணம் கொழிக்கும் என்.பி.ஏ. கூடைப்பந்து ஆகியவையெல்லாம் ஒரு சீசனில் மட்டுமே நடைபெறுகிறது. அதனால் அங்கு களைப்பு என்ற பேச்சு எழுவதில்லை.இத்தனைக்கும் கால்பந்து கிளப் மட்ட போட்டிகளே அதிக பிரபலம், அதிகம் விளையாடப்படுவதும் கூட. அதற்கான பயிற்சிகள் மிகவும் கடுமையானது என்பதையும் நாம் இங்கு கூர்ந்து கவனிக்கவேண்டும். அதனை ஒப்பிடும்போது கிரிக்கெட் ஆட்டத்தை விளையாட்டு என்பதில் சேர்க்க முடியாது என்றே கூறப்படுகிறது..
இந்த நிலையில் வீரர்கள் எளிதாக களைப்பைக் காரணமாகக் கூறுவது அபத்தம்தான். ஏனெனில் வீரர்களின் புகழ், அவர்கள் பிரதிநித்துவம் செய்யும் வணிகப்பொருட்கள், அந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் மறைமுக நிர்பந்தங்கள் ஆகியவையே இவர்கள் அதிக நேரம் சர்வதேச கிரிக்கெட்டில் மைதானங்களில் விளையாட வேண்டிய 'வணிக' கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் உண்மை. இதனால் களைப்பு, அதிக தொடர்கள் என்று தோனி கூறினால் அதில் அவரது பங்கும் இருக்கிறது என்றே பொருள்.
ஆனால் இவ்வளவு தூரம் களைப்பைப் பற்றி பேசும் நம் மூத்த வீரர்களாகட்டும், அவர்களது கருத்துக்களை எதிரொலிக்கும் ஊடகங்களாகட்டும் ஐ.பி.எல். கிரிக்கெட்டை குறை கூற முன்வருவதில்லை. இது ஒரு பெரிய மர்மம்தான். கவாஸ்கரும், சாஸ்த்ரியும் நடப்பு இங்கிலாந்து தொடரிலும் கூட பி.சி.சி.ஐ.யின் ஒலிபெருக்கி போல் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் புகழ்பாடி வருகின்றனர்!
ஆனால் எந்த ஒரு நிறுவனமும் தனது முன்னணி பிராண்டைப் போற்றிப் பாதுகாக்கும். அந்த பிராண்டை எக்காரணம் முன்னிட்டும் அழியவிடாது. அப்படி அழிய விடாமல் காக்கவே அவர்கள் முன்னணி நட்சத்திரங்களை விளம்பர மாடல்களாகச் செய்து பிராண்ட் இமேஜைக் காப்பாற்றுகின்றனர்.
ஆனால் இங்கு இந்திய கிரிக்கெட் அணியின் பிராண்ட் இமேஜைப் பாதுகாக்கும் ஒரு சீரிய வணிக நிறுவனத்தின் செயல் முறையைக் கூட பி.சி.சி.ஐ. என்ற வணிக நிறுவனம் கடைபிடிப்பதில்லை.
பிராண்டை வைத்து அதிகபட்ச பணம் குவித்து அந்த பிராண்டைக் கழற்றி விட்டுவிடுவது என்ற ஒரு விசித்திர வர்த்தகக் கொள்(ளை?)கையை பி.சி.சி.ஐ. கடைபிடிக்கிறது.
பி.சி.சி.ஐ.யில் இருக்கும் வர்த்தக நிர்வாகிகளுக்கு புத்தி கூர்மை போதாது. என்னதான் இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன் போன்றோர் இருந்தாலும் அவர்களால் ஒரு அம்பானி போலவோ, டாடா போலவோ, ஒரு மல்லையா போலவோ செயல் பட முடியாது. எனவே ஒரு சீரிய வர்த்த நிறுவனமாகவும் பி.சி.சி.ஐ. செயல்படவில்லை. கிரிக்கெட்டை நடத்தும் விளையாட்டின் காப்பாளர்களாகவும் செயல்படவில்லை. ஒன்று பிராண்டைக் காப்பற்றட்டும் அல்லது கிரிக்கெட்டைக் காப்பாற்றட்டும்.
பிராண்டா? கிரிக்கெட்டா? இதில் எதற்கு முக்கியத்துவம் தருவது என்பதை முடிவு செய்ய முதல்படியாக கிரிக்கெட் வாரியத்திலிருந்து தொழிலதிபர்களையும் அரசியல்வாதிகளையும் தூக்கி எறிந்து விட்டு கிரிக்கெட்டை அதன் அனைத்து அம்சங்களுடன் விளையாடிய, கிரிக்கெட் ஆட்டத்தை நேசிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களையே நியமிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.
இங்கிலாந்தில் வாங்கிய தோல்வி போதாது என்று அடுத்ததாக ஆஸ்ட்ரேலியாவுக்கு நாங்கள் தயார் என்று தோனி உள்ளிட்டவர்கள் 'பாச்சா' காட்டுவது ஒரு பெரிய தமாஷ் என்பது ஒருபுறமிருக்க, இந்தத் தோல்விகளினால் பிராண்ட் இந்தியாவை மட்டமாக எடைபோட்டு விளம்பரதாரர்கள் பின்வாங்கவேண்டாம், என்று வர்த்தக நிறுவனங்களுக்கும் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு உரிமையாளரகளுக்கும் தோனி உள்ளிட்டவர்கள் விடுக்கும் அறிவிப்பு இது என்பதையும் நாம் மறந்து விடவேண்டாம்