கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் படு தோல்வியடைந்த இந்திய அணி சற்றேறக்குறைய நிலைகுலைந்து போயுள்ளது என்று கூறலாம். இந்த நிலையில் நாளை செயின்ட் லூசியாவில் மேற்கிந்திய அணியை 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா எதிர்கொள்ளவிருக்கிறது.தோனி, யுவ்ராஜ் சிங் விளையாடிய இரண்டு அபாரமான இன்னிங்ஸ்கள் தவிர, முதல் போட்டியில் பெற்ற வெற்றியும் முழு ஆதிக்கம் செலுத்திய வெற்றி என்று கூற முடியாது.ஆனால் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய அணி இந்திய அணியை முழு ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றுள்ளதால், நாளைய போட்டியில் இந்தியா வெல்வதற்கு முற்றிலும் வேறு விதமான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் முடியும்.குறைந்தது, நாளைய போட்டியை எப்படியாவது வென்று ஒரு நாள் தொடரை இழப்பதிலிருந்து தப்பிக்கலாம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு எளிதில் வீழ்த்த முடியாத அணியாகத் திகழ்ந்த தோனி தலைமை இந்திய அணி இருபதுக்கு 20 உலகக் கோப்பை தோல்விகளுக்கு பிறகு எதிர்பாராத அளவில் பெரிய நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.
சச்சின் டெண்டுல்கர், சேவாக், பந்து வீச்சில் ஜாகீர் கான், ஆகியோர் இல்லாத இந்திய அணி, இளம் வீரர்களை நம்பி களமிறங்குகிறது.
ஆனால் நம் ஊடகங்களும், ரசிகர்களும் இந்த இளம் திறமைகளிடம் எதார்த்தங்களை மீறி எதிர்பார்க்கின்றனர். இதுவே அவர்களை பெரிய சுமையாக அழுத்துகிறது. ரோஹித் ஷர்மா, கம்பீர், யூசுஃப் பத்தான், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களிடம் நாம் அதிகமான சுமைகளை ஏற்றுகிறோம், அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கிறோம். இந்த அழுத்தத்தினால் சாதாரணமாக அவர்கள் செய்யும் வெற்றிக்கான பயனுள்ள பங்களிப்பைக் கூட செய்ய முடியவில்லை என்பதே இந்திய அணியின் இன்றைய தோல்விகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அதே போல் இஷாந்த் ஷர்மா. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இவரை அணியில் தேர்வு செய்து, முதலில் பந்து வீச முடிவு செய்திருந்தால் இவ்வளவு மோசமாக தோற்றிருக்க மாட்டோம் என்பதோடு வெற்றி பெறவும் வாய்ப்பு உருவாகியிருக்கும்.
பந்து வீச்சில் இஷாந்த் ஷர்மாவிற்கு 3 ஓவர்கள் கொடுப்பது, ஆர்.பி.சிங்கிற்கு 5 ஓவர்கள் கொடுத்து நிறுத்துவது போன்ற விசித்திர உத்திகளை தோனி மீண்டும் கையாண்டால் நாம் இந்த இரண்டு பந்து வீச்சாளர்களின் எதிர் கால பங்களிப்பையும் கூட இழந்து விடுவோம் என்பது உறுதி.
இவர்கள் இருவரும் 4 போட்டிகளில் மொத்தம் 20 ஓவர்களே வீசுகிறார் என்றால், அடுத்த பயணத்தின் போது ஸ்ரீகாந்த் தலைமை தேர்வுக் குழு இவர்களை அணியில் தேர்வு செய்யாது. இதனால் '2011 உலககோப்பைக்காக இந்திய அணியை தயார் செய்து வருகிறோம்' என்று கூறிவருவதும் பொய்த்து விடும். இந்த இளம் வீச்சாளர்களும் தன்னம்பிக்கை இழந்து விடுவார்கள்.
அதே போல் பேட்டிங்கில் புதிய, இளம் வீரர்களை முதலில் களமிறக்குவதை தவிர்த்து, கம்பீர், கார்த்திக்கிற்கு பிறகு தோனி களமிறங்கவேண்டும், அதன் பிறகு யுவ்ராஜ், அதன் பிறகு யூசுஃப், பிறகு ரோஹித் ஷர்மா, என்று இருக்கவேண்டும். அல்லது பத்ரிநாத் போன்ற முறையான ஷாட்களை விளையாடும் பேட்ஸ்மெனை அணியில் எடுத்து அவரை முதல் நிலையில் களமிறங்கச் செய்யவேண்டும்.
பந்து வீச்சில் ஆர்.பி.சிங், இஷாந்த் ஷர்மா, ஹர்பஜன் சிங், பிராக்யன் ஓஜா, பிரவீண் குமார் ஆகியோர் 50 ஓவர்களை வீச வேண்டும். இடையில் ஒரு மாற்றத்திற்காக யுவ்ராஜ் போன்றவரகளை வீச அழைக்கலாம்.
ரவி ராம்பால் அன்று வீசிய பந்து வீச்சை விட கவுதம் கம்பீர், யுவ்ராஜ், தோனி, ஏன் யூசுஃப் கூட மேலும் சிக்கலைக் கொடுக்கும் பந்து வீச்சை சந்தித்தவர்கள்தான்.
முதலில் தற்காப்பு உத்தி மறைந்து தாக்குதல் உத்தியை கடைபிடிக்கவேண்டும். ராம்பால் பந்து வீச்சை அடித்து நொறுக்கி அவரை முதல் 4 ஓவர்களில் பந்து வீச்சை விட்டே தூக்கவைக்க வேண்டும். இப்போதைய மேற்கிந்திய பந்து வீச்சாளர்கள் பலவீனமானவர்கள் என்பதை உணரவேண்டும்.
ராம் பால் பந்துகளை எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்று தோனி கூறுகிறார், ஆனால் இது தவறு, வெறும் எச்சரிக்கை மட்டும் போதாது தாக்குதல் நடத்த வேண்டும். தாக்குதலே சிறந்த தற்காப்பு என்ற சேவாக் பாணியை ஒவ்வொருவரும் கடைபிடிக்கவேண்டும்.
முற்றிலும் வேறு விதமான ஆக்ரோஷத்துடன் நாளை களமிறங்கி முழு ஆதிக்கம் செலுத்தினால் தவிர இந்தியாவிற்கு இந்த தொடரில் வெற்றி இல்லை.
நாளைய போட்டிக்கு இந்திய அணி இவ்வாறு இருந்தால் சிறப்பாக இருக்கும்:
கம்பீர், பத்ரிநாத், தோனி, யுவ்ராஜ், ரோஹித் ஷர்மா, யூசுஃப் பத்தான், இஷாந்த் ஷர்மா, பிரவீண்குமார், ஆர்.பி.சிங், ஹர்பஜன், ஓஜா.
இந்திய அணி அணுகுமுறையை மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.