தென் ஆப்ரிக்காவில் நடைபெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கோப்பை போட்டிகளுக்கும், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடருக்கும் அணிகளை தேர்வு செய்வதில் இம்முறையும் கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு தனது கோமாளித்தனத்தை காட்டியுள்ளது!
டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்த வீரேந்திர சேவாக், தொடர்ந்து சரியாக விளையாடாததால் இங்கிலாந்து பயணத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை.
அதன்பிறகு, உள்ளூர் போட்டிகளிலும், சில சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிய வீரேந்திர சேவாக், எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. ஆனால், இருபதுக்கு20 அணியில் சேவாக்கை தேர்வு செய்துள்ளது தேர்வுக் குழு.
இருபதுக்கு20 போட்டிகளில் சேவாக் மிகச் சிறப்பாக ஆடியுள்ளார் என்று கூறுவதற்கு ஏதுமில்லை. ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதைவிட அதிகமான கவனக்கூர்மையும், அதிரடி ஆட்டத் திறனும் இருபதுக்கு20 போட்டிகளுக்குத் தேவை.
ஆனால், பிசிசிஐ தேர்வுக் குழு இருபதுக்கு20 போட்டிகளுக்கான அணியில் சேவாக்கை தேர்வு செய்துவிட்டு, ஒரு நாள் அணியில் அவரை சேர்க்காமல் புறக்கணித்துள்ளது.
இருபதுக்கு20 போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்று சேவாக்கை மதிப்பிட்ட தேர்வுக் குழு, எந்த அடிப்படையில் ஒரு நாள் போட்டிக்கு உகந்த ஆட்டத்திறனை அவர் எட்டவில்லை என்று முடிவு செய்தது என்று தெரியவில்லை.
இதேபோல, ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசும் ஹர்பஜனை இருபதுக்கு20 போட்டிகளுக்கு மட்டும் தேர்வு செய்துள்ளது.
அணித் தேர்வில் என்ன அடிப்படையை கிரிக்கெட் வாரியம் கடைபிடிக்கிறது என்பது இன்று வரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
அஜீத் அகார்கரை இருபதுக்கு20 அணியில் சேர்த்துள்ளது. சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த பயிற்சிப் போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசிய மேற்கு வங்கத்தின் ரனதீப் போஸ் கண்டுகொள்ளப்படவில்லை. ரஞ்சிக் கோப்பை போட்டிகளிலும், வாய்ப்பு கிடைத்த சர்வதேசப் போட்டிகள் அனைத்திலும் மிகச் சிறப்பாக பந்து வீசிய ரனதீப் போஸிற்கு வாய்ப்பளிக்காமல், இவரை எப்பொழுதுதான் தூக்குவார்களோ என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அஜீத் அகார்கரை மீண்டும் தேர்வு செய்து ரசிகர்களை கடுப்படித்துள்ளது தேர்வுக் குழு. ஒரு நாள் போட்டிகளுக்கான எதிர்கால அணியை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துவோம் என்று கிரிக்கெட் வாரியத்தின் தலைமை பொறுப்பை ஏற்றபோது சரத் பவார் பெரிதாக முழங்கினார். ஆனால், தமிழ்நாட்டி யோ மகேஷ் உட்பட பல திறமை வாய்ந்த இளம் வீரர்களை உத்தேச அணியில் சேர்த்து பயிற்சி முகாமிற்கு அழைத்துச் செல்வதைத் தவிர, அணியில் சேர்ப்பதில்லை.
சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்கூலி, ராகுல் திராவிட் ஆகிய மூவரையும் ஒரு நாள் போட்டிகளுக்காவது கட்டாய ஓய்வளித்து திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாமே? இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களான ஹார்மிசன், ஹோக்கார்ட், ஆண்ட்ரூ ·பிளிண்டா·ப் ஆகியோர் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ஆட முடியாத நிலை ஏற்பட்டபோது, புதிதாக இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வாய்ப்பு கிடைத்ததுமே (முதல் டெஸ்ட்டில்) இந்திய அணியை திணறடித்தனரே. வாய்ப்பு கிடைத்ததால்தான் அவர்கள் திறன் வெளிப்பட்டது.
அதேபோல, தொடர்ந்து 20 வருடமாக விளையாடிக் கொண்டிருக்கும் இந்த மும்மூர்த்திகளுக்கும் ஓய்வு கொடுத்து ஓரத்தில் உட்கார வைத்துவிட்டு இங்கிலாந்து போன்ற ஒரு பலம் வாய்ந்த அணிக்கு எதிராக இளம் வீரர்களைக் கொண்ட புதிய அணியை களமிறக்குவது நல்லதல்லவா? இதையெல்லாம் கிரிக்கெட் வாரியம் சிந்திக்குமா என்ன?
அடுத்தது என்ன போட்டி நடத்தலாம்? எத்தனை கோடிகளுக்கு ஸ்பான்சர்களை பிடிக்கலாம்? என்பதுதானே அதன் சிந்தனை! அதன் பெயர்தானே கிரிக்கெட் நிர்வாகம்! கிரிக்கெட் வாரியம் என்பது கிரிக்கெட்டை வளர்க்கவா? அல்ல.. அல்ல... கிரிக்கெட்டை விற்கவே! என்று எல்லோரும் கருதும் நிலைதான் தொடர்கிறது!