பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிகளிலிருந்து ராகுல் திராவிட் நீக்கப்பட்டுள்ளார். ஊடகங்களுக்கும் கிடைத்தது மெல்வதற்கு அவல். அவர் நீக்கப்பட்டவுடன் முன்னாள் வீரர்களான மதன்லால், கிர்மானி உள்ளிட்ட பல வீரர்களை தொடர்பு கொண்டு, குறிப்பாக இந்திய கிரிக்கெட் அதிருப்தியாளர்களை தொடர்பு கொண்டு, கருத்துகள் கேட்கப்படுகின்றன.இதுபோன்ற போக்குகளுக்கு காரணம் என்னவெனில், நமது அணித் தேர்வாளர்கள் முக்கியஸ்தர் தகுதிக்கு உயர்ந்துவிட்ட ஒரு வீரரை நீக்குவதற்கு பயன்படுத்தும் வார்த்தையே. அதாவது அவருக்கு "ஓய்வு" அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. “அவர் ஒரு மிகப்பெரிய வீரர், மீண்டும் அணியில் இடம்பெறுவார்” போன்ற சர்க்கரை தடவிய வார்த்தைகளை தேர்வாளர்கள் மிகவும் அசட்டுத்தனமாக பயன்படுத்துகின்றனர்.ஆனால் எந்த பத்திரிகையிலாவது "திராவிடிற்கு ஓய்வு" என்று வருகிறதா? இல்லை. அனைத்து பத்திரிக்கைகளும் திராவிட் நீக்கம் என்றுதான் தலைப்பிட்டுள்ளன. கிரிக்கெட் தேர்வுக் குழுவின் அசட்டுத்தனம் இவ்வளவு அம்பலமாகும்போதும் அவர்கள் மாறாமல் பழைய பல்லவியையே திரும்பத் திரும்ப பாடுவது வேடிக்கையாக இருப்பதோடு, வெங்சர்க்கார் உள்ளிட்ட தேர்வுக் குழு உறுப்பினர்கள் சிறந்த “காமெடியன்”கள் என்ற சித்திரத்தைத் தான் தோற்றுவிக்கிறது.
முன்பு கிரண் மோர் அணித் தேர்வாளராக இருந்தபோது கங்குலி அணியிலிருந்து நீக்கப்பட்டபோது, கங்குலி நீக்கம் என்றுதான் கூறினார். ஓய்வு என்று கூறவில்லை. இது ஒரு புறம் இருக்கட்டும்...
எதிர்கால இந்திய அணியை கட்டமைப்பது குறித்த சிந்தனையில் அணித் தேர்வுகள் நடந்தால் அப்போது திராவிடை மட்டும் நீக்கமுடியாது... எதிர்காலம் எல்லாம் ஒன்றும் இல்லை. இப்போது நடக்க இருக்கும் தொடர்தான் முக்கியம் என்றால் திராவிடின் சமீபத்திய ஆட்டங்கள் ஒன்றுக்கும் உதவாத ஆட்டங்களே. கடைசி 10 போட்டிகளில் அவரது சராசரி 10 ரன்களுக்கும் கீழ். எனவே எப்படி பார்த்தாலும் திராவிடை நீக்கியது சரியான முடிவே. ஆனால் அவர் மீண்டும் அணிக்குள் வரமுடியும் என்றால் இந்த 2 ஒரு நாள் போட்டிகளில் உட்காரவைப்பதும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே.
முன்னாள் வீரர்கள் கூறுவதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. திராவிடிற்கு "ஓய்வு" அளிப்பது போல், சச்சின் மற்றும் கங்குலிக்கு ஏன் "ஓய்வு" அளிக்கப்படவில்லை என்பதே அது.
இளம் வீரர்களுக்கு வழி விடாமல் அடைத்துக் கொண்டு நிற்கும் இந்த மும்மூர்த்திகள் விவகாரத்தை தீர்க்க வழி இருக்கிறது. ஆனால் மனம்தான் இல்லை.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்கள் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, வெங்கட்ராகவன், பேடி மற்றும் சிலரை அழைத்து "மும்மூர்த்திகளிடம்" பேச வைக்கவேண்டும். ஒரு விவாதத்தை ஏற்பாடு செய்யவேண்டும். மூத்த, பொறுப்பான பத்திரிகையாளர்கள் சிலரை அழைக்கலாம்.
"அதாவது நீங்கள் இந்திய கிரிக்கெட்டிற்கு நிறைய பங்களித்துள்ளீர்கள்... உங்கள் பங்களிப்பு இல்லையென்றால் இன்றைய இந்திய கிரிக்கெட் இப்போதைய உயர்வை எட்டியிருக்க முடியாது... எனவே உங்கள் மூவருக்கும் அடுத்த 15 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும்... அதற்குள் நீங்கள் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை தயவு கூர்ந்து அறிவிக்கவேண்டும்.... இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து நாங்கள் ஒரு சில பயனுள்ள திட்டங்களை நடைமுறை படுத்தவுள்ளோம்...அதில் 2011 உலகக் கோப்பையும் ஒரு இலக்கு.
எனவே அதற்காக பேட்டிங், பவுலிங் முக்கியமாக ஃபீல்டிங் ஆகிய துறைகளில் புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது... எங்களது இந்த முடிவு தவிர்க்கமுடியாதது... தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் பந்து வீச்சு அகாடமிகளிலிருந்து நிறைய இளம் திறமைகள் வந்தவண்ணம் உள்ளன... அவர்கள் பலமான நிலையில் உள்ளபோதே சர்வதேச கிரிக்கெட்டிற்கு அவர்களை தயார் படுத்தவேண்டும்...எனவே இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நீங்கள் வழி விடுவது அவசியம். உங்கள் அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கிறோம்..." என்று அவர்களிடம் நயமாக கூறிவிடவேண்டியதுதான்.
(கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா இப்படிப்பட்ட அணுகுமுறையைத்தான் கையாள்கிறது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த லீ மேன், மார்ட்டின் இப்படித்தான் நீக்கப்பட்டார்கள்)
இதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ள தயாராயில்லையெனில், "அப்படியென்றால் உங்களை அணியிலிருந்து நீக்குவது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" என்று கூறிவிட வேண்டியதுதான்...
இதனை கூறுவதோடு, இந்த விவாதத்தின் முழு பகுதியையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரவேண்டும். ஏனெனில் அரசியல் தந்திரம் மிக்க இவர்கள் அரசியல்வாதிகளை போலவே தங்களை அணியிலிருந்து நீக்கியதற்காக கிரிக்கெட் ரசிகர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடவைக்கலாம். தங்கள் ஆதரவு ஊடகங்களை வைத்து தங்களுக்கு சாதகமாக எழுத வைக்கலாம். ஏனெனில் இவர்களிடம்தான் விளம்பர நிறுவனங்கள் விழுந்து கிடக்கின்றனவே.
அணித்தேர்வு குறித்து ரசிகர்கள் உட்பட அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ளும் வண்ணம் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதை செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கவேண்டும். “அணியிக்கு தேர்வாவது என் கைகளில் இல்லை” என்று அவரே கூறிடும் நிலை உருவாக இடம் தரக் கூடாது.
ஓய்வு போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். எதிலும் வெளிப்படையான அணுகுமுறையை கடைப்பிடிக்கவேண்டும்.