Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திராவிட் துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவதால்...

Advertiesment
துவக்க ஆட்டக்காரர் ராகு‌ல் திராவிட் ஆஸ்ட்ரேலியா இந்திய அணி
, வெள்ளி, 28 டிசம்பர் 2007 (20:52 IST)
webdunia photoFILE
ஆஸ்ட்ரேலியா சென்றுள்ள இந்திய அணி முதல் பயிற்சி ஆட்டத்தை மெல்போர்னில் ஆடிவருகிறது. இந்த ஆட்டத்திற்கு சேவாக் தேர்வு செய்யப்படாதது பெரும் தவறு என்றால், ராகுல் திராவிடை துவக்க ஆட்டக்காரராக களமிறக்கியது மாபெரும் தவறாகும்.

திராவிடும் முதல் நாள் ஆட்டம் முடிந்தவுடன் நெற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "என்னைத் துவக்க வீரராக களமிறக்கினால், அதை மகிழ்ச்சியுடன் செய்வேன்" என்று கூறியுள்ளார். இந்த கூற்றின் மூலம் அணி நிர்வாகத்தை அவர் குழப்பிவிடுகிறார் என்பதோடு, சேவாகின் தன்னம்பிக்கையையும் அழித்துள்ளார்.

தான் அணித் தலைவராக இருந்த போது சேவாகின் இடத்தை போராடி தக்க வைத்த ராகுல் திராவிட் தற்போது இது போன்று கூறுவது முரண்பாடாக உள்ளது.

திராவிட் எப்போதுமே ஒரு அணியின் தேவைகளுக்கேற்ப தன்னை மாற்றி கொள்பவர்தான். 2003 உலகக் கோப்பை உள்ளிட்ட பல போட்டிகளில் ராகுல் திராவிட் விக்கெட் கீப்பிங் செய்தார். இதற்கு அவர் ஒப்புக் கொண்டதால் மற்றொரு புதிய பேட்ஸ்மேனை நாம் அணியில் எடுக்க முடிந்தது, இதனால் கணிசமான வெற்றிகளை இந்தியா பெற்றது என்பதும் உண்மை.

அதேபோல் சேவாக் நன்றாக ஆடிக் கொண்டிருந்தபோது இன்னொரு முனைக்கு ஆளில்லாத சமயத்தில் துவக்க வீரராக களமிறங்கியுள்ளார் திராவிட். அதில் 2 சதங்களை பாகிஸ்தானுக்கு எதிராக மட்டையடிக்குச் சாதமான ஆட்டக்களத்தில் பெற்றார் என்பதும் உண்மை. சேவாகுடன் இணைந்து வினுமன்காட்-பங்கஜ்ராய் துவக்க விக்கெட் சாதனையான 413 ரன்களுக்கு அடுத்த சாதனையை புரிந்தார் என்பதும் உண்மை.

ஆனால் இன்றைய நிலைமை வேறு. கடந்த சில டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ராகுல் திராவிட் ரன் எடுக்க திணறி வருகிறார். இந்த நிலையில் பிரட் லீ, ஷான் டெய்ட், ஸ்டூவர்ட் கிளார்க் உள்ளிட்ட வேகப்பந்து
webdunia
webdunia photoFILE
வீச்சாளர்களுக்கு எதிராக பந்துகள் நன்கு எழும்பும் ஆட்டக்களங்களில் துவக்க வீரராக களமிறங்க ஆசைப்படுகிறார் என்றால் அது விவேகத்தினால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஏற்கனவே தற்காப்பு உத்தியுடன் ஆடும் வாசிம் ஜாஃபர் துவக்கத்தில் களமிறங்குகிறார். ஜாஃபர் கிட்டத்தட்ட திராவிடைப் போல உத்திகளுடன் ஆடுபவர்தான்.

இரு முனையிலும் ஒரே மாதிரியான உத்திகள் கொண்ட வீரர்கள் ஆடுவது, ஆஸ்ட்ரேலியர்களுக்கு இனிப்பு வழங்குவது போன்றது. தற்போது ஆடப்பட்டு வரும் 3 நாள் பயிற்சி ஆட்டத்தையே எடுத்துக் கொள்வோம். 147 பந்துகளை சந்தித்து வெறும் 2 பவுண்டரிகளுடன் 38 ரன்களையே திராவிட் எடுத்துள்ளார். அந்த அளவுக்கு அங்கு பந்து வீச்சாளர்கள் இருந்தார்களா என்று பார்த்தால் கிடையாது.

ஆஸ்ட்ரேலிய உள்ளூர் கிரிக்கெட்டிலேயே அதிகம் தேர்வு செய்யப்படாத இடது கை வேகப்பந்து வீச்சாளர் வைஸ், பீட்டர் சிட்டில், ஹேஸ்டிங்ஸ் மற்றும் சிட்னி டெஸ்டில் தேர்வு செய்யலாம் என்று கூறப்படும் மெக்கெய்ன் என்ற லெக்-ஸ்பின்னர். இதில் வைஸ்தான் புரா கோப்பை போட்டிகளில் அதிகம் விளையாடதவர்.

இவர்களிடம் 147 பந்துகளைச் சந்தித்து 38 ரன்கள் எடுத்தால் அது ஒரு போதும் வேலைக்காகாது. ஆஸ்ட்ரேலியாவின் பந்து வீச்சை அடித்து நொறுக்குவது அவசியம் என்றாலும், பந்து வீச்சிற்குத் தக்கவாறு தடுப்பாட்டத்தில் ஈடுபடுவதும், சிங்கிள்களை எடுத்து மறுமுனையில் ஆடும் பேட்ஸ்மேனுக்கு ஆடும் வாய்ப்பை ஏற்படுத்துவதும் அவசியமானதாகும். அவ்வாறு செய்யாமல் கடுமையான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டால், மறுமுனையில் விக்கெட்டுகள் சரியும் நிலை உருவாவது மட்டுமின்றி, அது ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளர்களுக்கு சாதமான ஆட்டச் சூழலையும் உருவாக்கிவிடும்.

webdunia
webdunia photoFILE
மேலும் தற்போது 5ம் நிலையில் களமிறங்கும் லக்ஷ்மணை நாம் முதல் நிலையில் (ஒன் டவுன்) களமிறக்கவேண்டிவரும். அவர் அந்த நிலையில் களமிறங்கி நீண்ட நாட்களாகி விட்டது. முதல் விக்கெட்டை விரைவில் நாம் இழக்கிறோம் என்றால், பந்து வீச்சாளர்கள் அதிக உத்வேகத்துடன் வீசுவார்கள். லக்ஷ்மண் கடும் நெருக்கடிகளுக்கும் சோதனைகளுக்கும் ஆளாவார். இதில் அவர் ஆட்டமிழக்க நேரிட்டால், அடுத்ததாக சச்சின் வந்து தடுப்பாடத்தில் ஈடுபட்டு நம்மை பாடாய்ப்படுத்தி விடுவார்!

சச்சின் தனக்குத் தானே இட்டுக் கொள்ளும் பாதுகாப்பு வளையம் நன்மையிலும் முடியலாம், அல்லது அவரது விக்கெட்டை இழப்பதிலும் முடியலாம்.

பிறகு நாம் கங்குலி, யுவ்ராஜ் மற்றும் தோனிக்காக காத்திருக்க வேண்டி வரும். இவர்கள் மூவரில் யுவ்ராஜ், தோனி ஆஸ்ட்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புதியவர்கள். எனவே என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற ஒரு நிச்சயமின்மை ஏற்படும்.

ஆகவே, திராவிட் துவக்க வீர்ராக களமிறங்கினால் (களமிறக்கப்பட்டால்), பிரச்சனைகள் சங்கிலித் தொடராக வந்து சேரும். இவையனைத்தும் ஆஸ்ட்ரேலிய பலங்களை அதிகரிப்பதோடு, நம்மை 0-4 என்ற படுதோல்விக்கு இட்டுச் செல்லலாம்.

சேவாக்தான் நமது துருப்புச் சீட்டு. அவர் ஓரிரு இன்னிங்ஸ்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்ததாக ஓரிரு இன்னிங்ஸ்களில் மிகப்பெரிய ரன் எண்ணிக்கைகளை எட்டக்கூடிய திறன் படைத்தவர். இதன் மூலம் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

திராவிட் அப்படி ஒன்றும் துவக்க வீரராக பெரிதாக சாதித்து விடவில்லை 8 போட்டிகளில் 369 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 33.55.

webdunia
webdunia photoWD
துவக்கத்தில் நமக்கு தேவை : சேவாகிடமிருந்து 45 ரன்கள், ஜாஃபர் ஒரு 20- 25 ரன்களை எடுத்தாலே போதுமானது. உணவு இடைவேளை வரை 65- 70 ரன்களை விக்கெட் இழப்பின்றி அல்லது ஒரேயொரு விக்கெட்டை இழந்த நிலையில் இருந்தால் போதும், அதன் பிறகு ஆஸ்ட்ரேலியாவை ஒவ்வொரு விக்கெட்டுக்கும் அழ வைக்கலாம்.

இந்த 45 ரன் வகையறாவில் திராவிட் ஏன் தன்னை இணைத்துக் கொள்ளவேண்டும். அவர் ஒழுங்காக 3ம் நிலையில் களமிறங்கி, ஒரு நல்ல துவக்கத்தை பயன்படுத்தி கடந்த முறை 600 ரன்களை குவித்தது போல், இம்முறையும் ரன் குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டியதுதானே?

எனவே "நான் துவக்க வீரராக களமிறங்குவதில் எந்த வித ஆட்சேபணையும் இல்லை" என்று அவர் கூறுவது பொறுப்பற்றதாகவே படுகிறது.

இவ்வளவு தொடர்களில் யுவ்ராஜை தேர்வு செய்யத் தவறிவிட்டு, முக்கியமான இந்த தொடரில் சேவாகை பலி கொடுப்பது மிகப்பெரிய தவறாகும். யுவ்ராஜ் இந்த டெஸ்ட் தொடரில் 2 டெஸ்ட்களில் விளையாடினால் போதுமானது.

உதாரணமாக ஜாஃபர் ரன் எடுக்க தவறி விடுகிறார் என்றால் சேவாக் ஒரு முனையிலும் திராவிட் ஒரு முனையிலும் களமிறங்கலாம், யுவ்ராஜ் விளையாட வாய்ப்பு இருக்கும்.

அணி நிர்வாகம் திராவிடை துவக்க வீரராக களமிறங்க கேட்டுக் கொண்டாலும் ஒரு மூத்த வீரராக, முன்னாள் கேப்டனாக, அது தவறு, நம்மிடம் துவக்க வீரர்கள் இருக்கின்றனர் அவர்களை இறக்குவதே நல்லது என்று அறிவுரை கூறவேண்டும். அதனை விடுத்து தனது சொந்த இடத்திற்காக எது சொன்னாலும் செய்வேன் என்று கூறுவது தவறு. ஏன் ரன் எடுக்க தவறும் வீரர்கள், “நான் இனிமேல் 7ம் நிலையிலோ 8ம் நிலையிலோ களமிறங்கத் தயார” என்று கூறுவதில்லை? அப்படிச் செய்து பார்க்கலாமே, நாம் ஜாஃபருடன் இர்பான் பத்தானை களமிறக்கி பார்க்கலாமே?

அனைத்திற்கும் மேலாக, சேவாக்கை எதற்காக தேர்வு செய்தோம், அழைத்துச் சென்று மற்றவர்கள் சொதப்புவதை வேடிக்கைப் பார்க்கவா? அவரை தேர்வே செய்திருக்க வேண்டாமே. இன்னொரு பந்து வீச்சாளரை தேர்வு செய்திருக்கலாமே!

எனவே திராவிட் தன்னுடைய இந்த துவக்க வீரர் முடிவை அணியின் நன்மைக்காக மறு பரிசீலனை செய்வது நல்லது. அவருடைய இந்த விருப்பத்தை மட்டும் அணி நிர்வாகம் நிராகரிப்பதும் நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil