ஐ.சி.சி. எந்த ஒரு விவகாரத்தை பெரிதுபடுத்தி கடுமையான முடிவுகளை எடுத்தாலும் அதன் அடிப்படைகளை சிதைத்து, தான் முன்பு எடுத்த முடிவுக்கு நேர் விரோதமான அல்லது எதற்காக ஒரு சர்ச்சை எழுந்ததோ அந்த சர்ச்சையே இல்லை என்ற விதமான அந்தர்பல்டிகளை அடித்து வருவது சமீப காலமாக அடிக்கடி நிகழ்ந்து வரும் ஒன்றுதான்.அப்படித்தான் டேரல் ஹேர் திரும்ப அழைக்கப்பட்டதும் என்று நாம் முடிவுக்கு வர முடிந்தாலும், இதன் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் ஒளிந்திருக்கிறது என்றே நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது.
2006 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் 4ஆவது இறுதி டெஸ்ட் போட்டியை ஆடியபோது 4ஆம் நாள் ஆட்டத்தில் நடுவர் டேரல் நடத்திய அருவருக்கத்தக்க நாடகங்கள்தான் சர்ச்சையை கிளப்பியது.
பாகிஸ்தான் அணியினர் பந்தை சேதம் செய்ததை டேரல் ஹேர் அறிந்துவிட்டது போல் அபராதமாக சில ரன்களை இங்கிலாந்திற்கு வழங்கினார். ரன்கள் வழங்கியது ஒரு பிரச்சனையல்ல. குற்றச்சாட்டு பலமானது. பந்தை சேதம் செய்கிறார்கள் என்று ஆதாரமில்லாத ஒன்றைக் கூறி, அதற்கு அவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து இதனை பிரச்சனைக்குட்படுத்த வேன்டும் என்று தீவிர நிலைப்பாட்டிற்கு சென்றபோது, மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாகிஸ்தான் களமிறங்க மறுத்ததால் அந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றதாக அறிவித்தார்.
இதனையெல்லாம் 'ஆட்ட நடுவர் திலகம்' ஐ.சி.சி. "நேர்மையாளர்" மைக் புரோக்டரும் வாய் மூடிய மௌனியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு டேரல் ஹேரின் குற்றச்சாட்டை அவரால் நிரூபிக்க முடியவில்லை. இதனால் இவர் மீது நடவடிக்கை எடுத்த ஐ.சி.சி குழு, முக்கிய சர்வதேச போட்டிகளில் ஹேர் நடுவர் பொறுப்பு வகிப்பதை தடை செய்ததோடு, 6 மாதகால சீரமைப்பிற்காக ஐ.சி.சி.யின் பிற போட்டிகளில் நடுவர் பொறுப்பு ஏற்கப் பணிக்கப்பட்டார்.
ஆனால் இடையே ஐ.சி.சி. தன் மீது நிறவெறி பாகுபாட்டுடன் நடந்து கொண்டுள்ளது என்று கூறி லண்டன் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து, ஏகப்பட்ட தொகைகளை இழப்பீடாகவும் கேட்டிருந்தார். 6 நாட்கள் வழக்கு நடந்தாலும் எந்த ஒரு முடிவையும் இதில் எட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதானால் மறுசீரமைப்பு காலத்தை ஹேர் ஏற்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இப்போது மறுசீரமைப்பு காலம் முடிந்துவிட்டது. டேரல் ஹேர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவர் பொறுப்பை வகிக்கும் தகுதியைப் பெற்றுவிட்டார் என்று ஐ.சி.சி. திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மறு சீரமைப்பு அல்லது மறு வாழ்வு என்பது என்ன? கடுமையான போதைப் பழக்கத்திற்கு அடிமையானாலோ அல்லது மன நிலை சரியில்லாத நிலையிலிருந்தால் மட்டுமே மறுவாழ்வு என்ற சிகிச்சை (ஆம் அது சிகிச்சைதான்) அளிக்கப்பட முடியும்.
ஆனால் ஐ.சி.சி. நடத்திய, பிற சொத்தை போட்டிகளில் டேரல் ஹேர் நடுவராக இருந்ததுதான் மறுவாழ்வு என்கிறது ஐ.சி.சி. நிர்வாகம். இது எப்படி இருக்கிறது?
அதில் என்ன மறு வாழ்வு பெற்றுவிட்டார்? அதற்கான சான்றிதழை யார் அளித்தார்கள்? இந்த நடைமுறையே முதலில் சட்டபூர்வமானதுதானா? இவர் 2- 3 போட்டிகளில் ஒப்புக்கு சப்பாணி நடுவராக பணியாற்றிவிட்டு மீதி காலங்களில் ஆஸ்ட்ரேலியாவில் தனது இல்லத்தில் மனைவி அமந்தாவுடன் மகிழ்ச்சியாக காலத்தை கழித்திருக்கிறார். எங்கிருந்து வந்தது மறுவாழ்வு? யார் காதில் பூ சுற்றுகிறது ஐ.சி.சி.? இது உண்மையில் மறு சீரமைப்பு பெற்ற மறு வாழ்வா அல்லது ஐ.சி.சி ஹேருக்கு அளிக்கும் "மறுவாழ்வா"?
வழக்கு இழுத்துக் கொண்டே சென்றால் ஐ.சி.சி நிர்வாகிகளை டேரல் ஹேரின் வாதத் திறமை வாய்ந்த வழக்கறிஞர் கிரிஃபித்ஸ் குடைந்து எடுப்பார். வழக்கில் ஐ.சி.சி. தோல்வியைத் தழுவினால் அதை விட வேறு அசிங்கம் இருக்க முடியாது என்று திரைமறைவில் பேரம் நடத்தப்பட்டு ஹேரின் நிறவெறிக் குற்றச்சாட்டை வாபஸ் பெற வைத்து வழக்கை சாமர்த்தியமாக முடித்து வைத்து விட்டு, அவரை சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் நுழைக்கும் அசிங்கத்தை ஐ.சி.சி. நடத்திக் காட்டியுள்ளது.
இது போன்ற அந்தர் பல்டிகள் ஐ.சி.சி-க்கு சர்வ சாதாரணமாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்திருப்பது நியாயமே. அவர்கள் ஐ.சி.சி-யின் இந்த முடிவை எதிர்ப்பதும் நியாயமே.
1995ஆம் ஆண்டு முரளிதரன் விவகாரம், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஸ்டூவர்ட், இலங்கை அணித் தலைவர் அர்ஜுனா ரணதுங்காவை "ஒரு கிரிக்கெட் வீரராக நீ இழிவானன்" என்று வசை பாடியது உள்ளிட்ட, 2006 ஏப்ரல் ஓவல் கிரிக்கெட் போட்டி சர்ச்சைகள் வரை டேரல் ஹேர் யார் பக்கம் சாய்ந்திருக்கிறார், யாரை இழிவு படுத்தியிருக்கிறார் என்பதெல்லாம் பதிவு செய்யப்பட்டவை.
இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டு, தவறு செய்திருக்கிறார் என்று நிரூபணமான பிறகு, 6 மாத மறுவாழ்வு என்று ஒரு கண்ணாமூச்சி விளையாட்டையும் விளையாடி மீண்டும் கள்ளத்தனமாக அவரை ஐ.சி.சி.க்குள் நுழைக்கப்படுகிறார் என்றால் இதன் பின்னணியில் செயல்படும் காரணிகள் என்னவாக இருக்கும் என்ற மர்மம் ஐ.சி.சி. அந்தர்பல்டி வரலாற்றில் மற்றுமொரு கறைபடிந்த அத்தியாயமே.
இதனை முறியடிக்கும் வண்ணம் ஆசிய நாடுகள் டேரல் ஹேர் நடுவராக நியமிக்கப்படும் போட்டிகளில் விளையாட மறுப்பு தெரிவிக்கவேண்டும். டேரல் ஹேர் போன்ற நடுவர்களை (இல்லை... இல்லை... நடு நிலை அல்லாதவர்களை) ஒருக்காலும் ஊக்குவிக்க அனுமதிக்கக்கூடாது என்பதே நம் கோரிக்கை.
இந்த முடிவின் பின்னணியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உள் கை இருக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் சமீபகாலமாக இந்தியாவிற்கு சாதகமாக ஐ.சி.சி. நடந்து கொண்டுள்ளது. ஆனால் அதில் சாதகம் எதுவும் இல்லை. ஹர்பஜன் மீது சுமத்தப்பட்டதெல்லாம் பொய்க் குற்றச்சாட்டுகள் என்று ஐ.சி.சி. தீர்ப்பு கூறுவதற்கு முன்னரே மக்களுக்கு தெரிந்த விஷயங்கள்தான். இருப்பினும் ஐ.பி.எல் பணச் சந்தைக்கு ஏதும் நெருக்கடி ஏற்படாமல் இருக்க ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியத்தை தாஜா பிடிக்கவும், ஐ.சி.சி. அங்கீகாரத்தை ஐ.பி.எல்-ற்கு பெற்றுத் தரவும் டேரல் ஹேர் முடிவிற்கு ஐ.சி.சி-யில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகளும் தலையாட்டியிருக்கலாம். ஏனெனில் ஐ.பி.எல்-ஐ ஐ.சி.சி. அங்கீகரிப்பதாக இன்று வெளிவந்த செய்தியும், டேரல் ஹேர் மீண்டும் வருகிறார் என்ற செய்தியும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நிகழ்கிறது.
ஐ.சி.சி. உண்மையில் டேரல் ஹேரின் மிரட்டலுக்கு அடி பணிந்திருந்தால் எதிர்காலத்தில் அவர் மீண்டும் முறைகேடுகளைச் செய்யும்போது நடவடிக்கை எடுக்க முடியாமல் போகும். இதனால் மேலும் சர்ச்சைகள் அதிகரிக்கும். ஏற்கனவே உள்ள சர்ச்சைகளை ஐ.சி.சி. தீருக்கும் லட்சணத்தை நாம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே.
ஐ.சி.சி-யின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து மறு பரிசீலனைக்கு அழைப்பு விடுக்கவேண்டும்.