ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்துள்ள நிலையில் நவ.22ம் தேதி துவங்கவுள்ள டெஸ்ட் தொடர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.ஒரு நாள் போட்டித் தொடரில் தோல்வி தழுவிய பாகிஸ்தான் அணியின் தலைவர் ஷோயப் மாலிக், இறுதி ஒரு நாள் போட்டியை வென்றவுடன் கருத்து ஒன்றை உதிர்த்துள்ளார். அதாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பலவீனமான மனோ நிலையில் உள்ளது என்பதாக தொனிக்கும் ஒரு கருத்தை கூறியுள்ளார்.சமீப காலங்களாக போட்டிகள் துவங்கும் சில காலத்திற்கு முன்பிருந்தே ஒரு அணி மற்ற அணியைப் பற்றி அபத்தமாக ஏதாவது கருத்து கூறுவது என்பது நிகழ்ந்து வருகிறது. ஆஸ்ட்ரேலியாவில் ஆரம்பித்த இந்த வியாதி தற்பொழுது எங்கும் பரவிவிட்டது. இவையெல்லாம் ஊடகங்களால் தூண்டப்படுபவை. களத்தில் நடைபெறும் உண்மையான கிரிக்கெட் ஆட்டத்திற்கும், இந்த அபத்தக் கருத்துகளுக்கும் எந்த வித தொடர்புமில்லை என்பது பல முறை ஐயத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளது.டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 90 ஓவர்கள், அதேபோன்று 5 நாட்களுக்கு. இதில் எந்த அணி சிறப்பான திறமையை அயராது வெளிப்படுத்துகிறதோ அந்த அணி வெற்றி பெறுவது உறுதி.
இந்திய டெஸ்ட் ஆட்டக்களங்களைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சிற்குத்தான் அதிக சாதகமாக இதுவரை இருந்திருக்கிறது, இந்த தொடரிலும் அதே "மரபு" பின் பற்றப்படும் என்பதில் ஐயமில்லை.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் புதிய கேப்டன் அனில் கும்ப்ளே முதன் முதலில் தலைமை பொறுப்பேற்று விளையாடுகிறார். இத்தனையாண்டுக் காலமாக கும்ப்ளே ஆடி வரும் கிரிக்கெட்டின் கறார் தன்மை நாம் அறிந்ததே. ஒரு பந்து வீச்சாளராக உலகம் முழுதும் அவர் விளையாடியுள்ள அனுபவம் தலைமைப்பொறுப்பிலும் அவருக்கு கை கொடுக்கும். மேலும் கும்ப்ளேயின் கிரிக்கெட் அணுகுமுறை ஆக்ரோஷத் தன்மை வாய்ந்தது. பந்து வீச்சாளர் என்றால் விக்கெட் எடுக்கவேண்டும், பேட்ஸ்மென் என்றால் ரன் எடுப்பது அவசியம் என்பதனை நன்கு உணர்ந்தவர் அவர். ஆட்ட உத்திகளைப் பொறுத்தவரை கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி பெறும் மனோ பலம் மிக்கவர் கும்ப்ளே.
சமீபமாக இங்கிலாந்து மண்ணில் 21 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டித் தொடரைக் கைப்பற்றிய மனோபலத்துடன் இந்தியா களமிறங்கும். ஆனால் தென் ஆப்பிரிக்காவுடன் சொந்த மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை இழந்து, இந்தியாவிலும் தற்போது ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.
இந்திய அணிக்குள் இளைஞர்களிடையே கடும் போட்டி நிலவுவதால், வாசிம் ஜாஃபர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்கள் திறமையை மீண்டும் நிரூபிக்கும் கவனத்துடன் களமிறங்குவர். அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் தனது இடத்தை தக்க வைக்க, அணியின் வெற்றிக்கு தங்களது திறமையை பங்களிக்க ராகுல் டிராவிட், லக்ஷ்மண் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள் மேலும் சச்சின் மற்றும் கங்கூலி சமீபமாக அபாரமாக விளையாடி வருகின்றனர். தோனி பயனுள்ள பங்களிப்பை செய்து வருகிறார். இதனால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஒரு திட்டமிட்ட குறிக்கோளுடனும் பலமான உத்திகளுடன் பந்து வீசினால் மட்டுமே இந்த அணியை 5 நாட்களில் இரண்டு முறை ஆட்டமிழக்கச்செய்து வெற்றியை பறிக்க முடியும். அதற்கு அந்த அணியின் ஃபீல்டிங் கைகொடுக்க வேண்டும். இது மிக முக்கியமானது. பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சில் அக்தர், உமர் குல் மற்றும் மொஹமத் சாமி ஆகிய அனுபவமிக்க திறமைகள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கை பொறுத்த வரை துவக்க வீரர்களாக சல்மான் பட் தவிர இன்னொரு முனையில் பலவீனமே நிலவுகிறது. எனவே யூசுஃப் மற்றும் யூனுஸ் கான் ஆகிய இருவரை நம்பியே பாக். பேட்டிங் இருக்கிறது. இவர்களால் அனைத்து போட்டிகளிலும் ரன் எடுக்க முடிந்தாலும், மறு முனையில் ஆதரவு இல்லாமல் உள்ளது. ஷோயப் மாலிக்கின் டெஸ்ட் பேட்டிங் அவ்வளவு சிறப்பானதாக இதுவரை இருந்ததில்லை. சமீபமாக விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மலின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் சரிந்து வருவதால் பாகிஸ்தான் அணிக்கு கவலைகள் அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது.மேலும் மொஹமது யூசுஃப் சமீப காலங்களில் சீராக ரன்களை எடுத்து வந்தாலும், ஒராண்டில் அதிக ரன்களை எடுப்பதில் விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை முறியடித்தாலும், விவியன் ரிச்சர்ட்ஸ் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது போல் யூசுஃப் ஒரு போதும் இருந்ததில்லை. அவரது ஆட்டத்தில் ரமீஸ் ராஜா கூறுவது போல் ஒரு சுய நலம் இருக்கவே செய்கிறது.இந்திய அணியின் பந்து வீச்சு ஜாகிர் கான், ஸ்ரீசாந்த், ஆர்.பி.சிங் மற்றும் கும்ப்ளே ஆகியோருடன் பலமாகவே உள்ளது. மேலும் இந்திய ஆட்டக்களங்களில் கும்ப்ளேயை விளையாடுவதில் மிகப்பெரிய தலைகளெல்லாம் தடுமாறி மண்ணைக்கவ்வியிருப்பது வரலாறு.கடந்த முறை இன்சமாம் தலைமையில் பாகிஸ்தான் அணி இந்தியா வந்திருந்த போது மொஹாலியில் கடைசி நாள் அன்று அப்துல் ரசாக், கம்ரன் அக்மல் ஆகியோர் போராடி தோல்வியை தவிர்த்தனர். ஆனால் கொல்கத்தாவில் தோல்வியைத் தழுவினர். அப்போது ஹர்பஜன், கும்ப்ளேயிடம் பாக். சரிந்தது.3
வது டெஸ்ட் பெங்களூரில் நடைபெற்றது. அப்போது இன்சமாம் எடுத்த அபாரமான சதம் வெற்றி வாய்ப்பை பெற்றுத் தந்தது. ஆனால் 2வது இன்னிங்சில் இந்திய அணி தேனீர் இடைவேளைக்கு பிறகு 7 விக்கெட்டுகளை இழந்து எதிர்பாராத தோல்வி தழுவியது. தொடர் சமன் ஆனது.அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு விரேந்திர சேவாக் பெரும் தலை வலியாக இருந்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 90 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ள சேவாக் இந்த முறை அணியில் இடம்பெறாதது மட்டுமே பாகிஸ்தானுக்கு ஒரு நற்செய்தி.போன சுற்றுப் பயணத்தில் இடம்பெறாத ஒரு மைதானம் இந்த முறை இடம்பெற்றிருப்பது டெல்லி மைதானம் மட்டுமே. 2வது மற்றும் 3வது போட்டிகள் கடந்த முறை போலவே கொல்கத்தா, பெங்களூரில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய ஆட்டக் களங்களில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிகம் அனுபவம் இல்லாத ஷோயப் மாலிக்கிற்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.
ஆனால் ஒட்டு மொத்த டெஸ்ட் போட்டி புள்ளி விவரங்கள் பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளது. 1952 முதல் 2006ம் ஆண்டு வரை இரு அணிகளும் தங்களிடையே 56 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளது. இதில் இந்தியா 8 டெஸ்ட் போட்டிகளிலும், பாகிஸ்தான் 12 போட்டிகளிலும் வென்றுள்ளன. 36 போட்டிகள் எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளது.
புள்ளி விவரங்கள் அன்றைய போட்டிக்கு எந்த விதத்ததிலும் உத்தவாதம் தரமுடியாது. இரு அணிகளில் எந்த அணி தனது முழுத் திறனையும் முழுமையாக வெளிப்படுத்துகிறதோ அந்த அணிக்குத்தான் வெற்றி நிச்சயம்.