பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தனது டுவிட்டர் இணையப் பக்கத்தில் தனது நீக்கம் குறித்து கடும் வசைச்சொல்லைப் பிரயோகித்ததால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
"இந்த சீசன் முடிந்து விட்டது. உலக இருபதுக்கு 20 தொடர் நாயகன் இருபது ஓவர் அணியிலிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்." என்று கூறி அதற்கு அடுத்ததாக ஒரு கெட்ட வார்த்தையை பயன்படுத்தியுள்ளார் கெவின் பீட்டர்சன்.
ஆனால் இந்த டுவிட்டர் பதிவை அவர் நீக்குவதற்கு முன்பு பல வாசகர்கள் அதனை பல்வேறு நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பார்வைக்கும் இது வந்துள்ளது.
இது குறித்து கூறிய இங்கிலாந்து அணித் தேர்வாளர் ஜெஃப் மில்லர், "அது போன்ற ஒரு மொழிப் பிரயோகம் எனக்கு பிடிக்காதது, நான் அது போன்ற ஒரு மொழியை வெறுக்கிறேன், மேலும் நான் இந்த டுவிட்டர் போன்ற விஷயங்களை அவ்வளவாக நம்புவதில்லை. நான் இங்கிலாந்துக்காக எனது சக தேர்வாளர்களுடன் அணியை தேர்வு செய்கிறேன், இதில் தனிநபர்களுக்கு முக்கியத்துவம் இல்லை. இங்கிலாந்துக்காக நாங்கள் மரியாதையுடனும், கௌரவத்துடனும் அணியை தேர்வு செய்கிறோம் இதில் பிரச்சனைக்கு இடமில்லை." என்று கூறியுள்ளார்.
கெவின் பீட்டர்சன் தற்போது விளையாடி வரும் கவுண்டி அணியிலிருந்து சர்ரே அணிக்கு மாற்றமடைந்துள்ளார். தடுமாறி வரும் கெவின் பீட்டர்சனின் கிரிக்கெட் ஃபார்மை மீட்டுக் கொடுக்குமாறு சர்ரே கிரிக்கெட் சங்கத்திடம் இங்கிலாந்து தேர்வாளர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் சர்ரே அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையும் தனது டுவிட்டரில் கேலி செய்துள்ளார் பீட்டர்சன்.
"சர்ரே என்னை ஒப்பந்தம் செய்துள்ளது, ஏனெனில் நான் காலியாகிவிட்டேன்" என்ற தொனியில் அவர் கேலி செய்துள்ளார்.
சிறிது காலமாகவே இங்கிலாந்தில் பிரிட்டன் வீரர்கள் அதிகம் இடம்பெறாமல் தென் ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட வெளிநாட்டு அதாவது ஆங்கிலேயரல்லாத வீரர்கள் இடம்பெறுவது குறித்து சர்ச்சை கிளம்பிவருகிறது.
கெவின் பீட்டர்சனும், ஜொனாதன் டிராட்டும் அணியில் இருப்பது பெரிய சுமையே என்ற ரீதியில் ஜெஃப் பாய்காட் ஒரு முறை கூறினார். தற்போது ஆஸ்ட்ரேலிய ஊடகங்களும் வீரர்களும் இங்கிலாந்து அணியில் இங்கிலாந்து இல்லை என்று கேலி செய்துள்ளனர்.
பன்மைக் கலாச்சாரத்தை சிறப்பாகப் பேணி வரும் அந்த நாட்டில் தற்போது இது போன்ற குரல்களும் ஆதங்களும் எழுந்து வருகின்றன.
கெவின் பீட்டர்சன் உண்மையில் அவரது மோசமான ஃபாருக்காக நீக்கப்பட்டு, அவர் தன் ஃபார்மில் மீண்டும் சிறப்பாக வந்து அணியில் எடுக்கும் எண்ணத்துடன் அவரை நீக்கம் செய்திருந்தால் அது வரவேற்கத்தக்கது.
மாறாக அவர் தென் ஆப்பிரிக்கா நாட்டுக்காரர், என்பதற்காகவோ அல்லது இங்கிலாந்து பொதுப் பிரக்ஞையில் தற்போது எழுந்து வரும் ஆங்கிலேய எண்ணத்தை திருப்தி செய்வதற்காகவோ அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டால் அது மிக மோசமான முன்னுதராணமாக அமையும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை.