அதன் பிறகு அடிலெய்ட் டெஸ்டில் முதல் இன்னிக்ஸில் அதிரடி 63 ரன்களை எடுத்த சேவாக் இரண்டாவது இன்னிங்சில் 151 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆட்டத்தை தோல்வியிலில்ருந்து காத்தார். தனது அதிரடி இயல்பை கட்டுப்படுத்தி கொண்டு இரண்டு மணி நேர ஆட்டத்தில் பவுண்டரிகள் எதையும் அடிக்காமல் விக்கெட்டை பாதுகாத்தார் சேவாக்.
அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி இங்கு வந்தது. சென்னையில் சேவாக் அன்று ஆடிய ஆட்டத்தை உலக கிரிக்கெட்டில் வேறு எந்த முதல் தர வீரரும் ஆடியிருக்க முடியாது என்று அடித்துக் கூறலாம். உலகின் அதிவேக முச்சதத்தை விளாசினார் சேவாக். நிடினி, ஸ்டெய்ன், காலிஸ் உள்ளிட்ட அபார பந்து வீச்சாளர்களின் பந்துகள் மைதானத்தின் நாலா பக்கமும் சிதறின. 304 பந்துகளில் 42 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் சகிதம் 319 ரன்களில் கடைசியாக ஆட்டமிழந்தார். சுமார் 200 ரன்களை பவுண்டரிகளாகவே அடித்த ஒரு பேட்ஸ்மெனை இனிமேல் உலகம் காணாது.
அதன் பிறகு இலங்கை சென்ற இந்திய அணி அஜந்தா மென்டிஸ் என்ற புரியாத புதிர் வீச்சாளரிடமும் முரளிதரனிடமும் திக்கித் திணறியபோது இரண்டாவ்து டெஸ்டில் அவர் துவக்கத்தில் களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 201 ரன்களை எடுத்தது, கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த சதங்களுல் முதனமை பெறும் என்றால் அது மிகையாகாது. இதிலும் 22 பவுண்டரிகளையும் 4 சிக்சர்களையும் அடித்து மொத்தம் 231 பந்துகளையே அவர் சந்தித்தார். ஒரு முனையில் பேட்ஸ்மென்கள் திக்கி திணறியதையும் மறு முனையில் இவர் எல்லா பந்துகளயும் அடித்து நொறுக்கியதும் வியப்பை அளித்தது. ஒரே ஆட்டக் களத்தில் எப்படி இரு வேறு வகையான ஆட்டங்கள் சாத்தியம்? சாத்தியம் என்றார் சேவாக். இரண்டாவது இன்னிங்சிலும் அதிரடி அரை சதம் எட்டினார் சேவாக் இந்தியா அந்த டெஸ்டை வெற்றி பெற்றது.
அந்த 201, 50 ரன்களுக்குப் பிறகு சேவாக் எடுத்த ரன் விவரங்கள் இன்னிங்ஸ் வாரியாக இதோ: 21, 34, 45, 6, 35, 90, 1, 16, 66, 92, 9, 83.
ஒரு நாள் போட்டிகளில் கடைசி 10 இன்னிங்ஸ்களில் சேவாக்: 78, 119, 49, 42, 60, 85, 1, 68, 69, 91.
கடைசியாக அவர் சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய 83 ரன்களை பிறருடன் ஒப்பிடுவது கடினம். 387 ரன்கள் இலக்கை இந்தியா எந்த காலத்தில் துரத்தியுள்ளது? கடந்த 25 ஆண்டுகளில் இல்லை என்று கூறிவிடலாம். அவரது இடத்தில் ஜாஃபரோ, தினேஷ் கார்த்திக்கோ இருந்திருந்தால் குறைந்தது நாம் டிரா செய்திருப்போம். இவர் களமிறங்கி நடுவர் "பிளே" என்று கூறியவுடன் ஆரம்பித்த அதிரடி 83 ரன்கள் வரை ஓயவில்லை. டெஸ்ட் போட்டியில் 50 ரன்களை 5 ஆவது ஓவரில் எட்டியது இதுவே முதல் முறை என்றும் நாம் கருத இடமுண்டு.
சென்னை டெஸ்ட் போட்டியை சேவாகின் அந்த மேதைமையான துவக்கம் இல்லையெனில் நாம் வென்றிருக்க முடியாது என்று உறுதிபடக் கூறலாம். இனிமேல் இந்திய அணிக்கு சேவாக் இருக்கும் வரையில் 4வது இன்னிங்ஸில் இலக்கு நிர்ணயிக்க முயலும் கிரிக்கெட் அணிகள் சேவாக் எடுக்கப்போகும் 100 ரன்களை கணக்கில் கூடுதலாக சேர்த்து இலக்கை நிர்ணயிக்கவேண்டும். அதாவது 300 ரன்கள் இந்தியாவிற்கு போதும். ஆனால் சேவாக் இருந்தால் 400 ரன்கள் வேண்டும்... எதிரணிக்கு.
இயன் சாப்பல் ஒரு முறை, "இன்னமும் சிறிது காலத்திற்கு சேவாகும், கம்பீரும் இது போன்ற அதிரடி முறையைக் கையாண்டு உலகப் பந்து வீச்சாளர்கள் அனைவரையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப் போகிறார்கள், இது இந்திய அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தரும்" என்றார்.
இது போன்று பந்து வீச்சாளரின் பெயர், அவரது சாதனை, அவர் எவ்வளவு வேகம் வீசுகிறார், சுழற்பந்து வீச்சாளாயிருந்தால் அவர் எவ்வளவு தூரம் பந்துகளை திருப்புவார் என்று கிரிக்கெட்டின் அடிப்படைகளை உடைத்தெறிந்து பந்து விழும் இடம் அடி என்று உள் மனது கூறினால் அடிப்பது இதுவே சேவாகின் எளிமையான ஆனால் பயங்கரமான உத்தி.
2008ஆம் ஆண்டில் இன்னமும் ஒரு டெஸ்ட் போட்டி மீதமுள்ள நிலையில் அவர் 13 டெஸ்ட் போட்டிகளில் 60.20 என்ற சராசரியுடன் எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் இந்த ஆண்டில் 18 போட்டிகளில் 893 ரன்களை 50 ரன்களுக்கு சற்று குறைவான சாராசரியுடன் எடுத்துள்ளார்.
இந்த ஆண்டு விஸ்டன் கிரிக்கெட் சிறந்த வீரர் விருதும், ஐ.சி.சி. சிறந்த பேட்ஸ்மென் விருதும் சேவாகிற்கு வழங்கப்படுவதே நியாயம். அவர் பெறப்போவதும் நிச்சயம்.