சேவாக் அணியிலிருந்து நீக்கப்படலாம்!
, சனி, 5 ஜனவரி 2013 (14:29 IST)
நாளை டெல்லியில் நடைபெறும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கே சேவாக் இருப்பாரா என்று சந்தேகம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதுவல்ல விஷயம், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரிலிருந்தே சேவாக் நீக்கப்படலாம் என்பதே தற்போது கிரிக்கெட் வட்டார பரபரப்பு! தொடர்ந்து மோசமான ஆட்டத்தை அலட்சியமாக ஆடுவதன் மூலம் வெளிப்படுத்தி வரும் சேவாகின் மன அணுகுமுறை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது என்று அணி மேலாண்மை கருதுவதாக தெரிகிறது.இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்பது உறுதியானால் டெஸ்ட் போட்டிகளிலும் அவரது இடம் கேள்விக்குறியே. ஆஸ்ட்ரேலியா இங்கு வரும்போது பார்ம் இல்லாத சேவாக் அணிக்கு ஒரு பெரும் சுமை என்றே தோனியும், அணித் தேர்வுக்குழுவும் கருதுவதாக தெரிகிறது.சேவாக் மட்டுமல்ல, ஜடேஜா, ரோஹித் சர்மா, யுவ்ராஜ் சிங் ஏன் கோலியின் ஆட்டத்தின் மீது கூட அணித் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனால் ரஹானே, காயத்திலிருந்து மீண்டால் மனோஜ் திவாரி, புஜாரா, அம்பாட்டி ராயுடு போன்றோரை அணியில் தேர்வு செய்ய முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.கவுதம் கம்பீர் மிகவும் சுயநலவாதியாகி விட்டார். அவர் தான் எப்போது நன்றாக ஆட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வீரராக மாறிவிட்டார். இது மிகவும் மோசமான மனோநிலையாகும். புதிய துவக்க வீரர்களை உருவாக்க தேர்வுக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.இதனால் உன்முக்த்த் சந் என்ற இளையோர் உலகக் கோப்பை நாயகன் விரைவில் அஜின்கியா ரஹானேயுடன் துவக்கத்தில் களமிறங்க அதிக வாய்ப்பிருக்கிறது. கம்பீரை முதலில் நீக்கி அவருக்கு அதிர்ச்சி மருத்துவம் அளிக்கவேண்டும். ஒரு முறை அணியிலிருந்து நீக்கப்பட்ட அனுபவத்தினால் மிகவும் சுயநலவாதியாக அவர் மாறியுள்ளார்.
அணியின் தேவைக்கு அவர் உதவுவதில்லை. ஒரு காலத்தில் அஜய் ஜடேஜா என்ற ஒரு வீரர் இருந்தார். அவர் 50 அடிப்பார், 40 அடிப்பார் ஆனால் அணிக்கு அதனால் எந்த விதப்பயனும் இருக்காது. கம்பீர் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் எடுத்த அனைத்து அரைசதங்களும் இந்த ரகத்தை சேர்ந்தவை, பயனற்ற இன்னிங்ஸ்கள்.இந்திய அணியில் தலை கீழ் மாற்றங்கள் தேவை. யுவ்ராஜ் சிங் இடத்தில் மெனாரியா என்ற வீரரை கொண்டு வரவேண்டும், அல்லது தமிழக வீரர் முரளி விஜய்க்கு நடுக்களத்தில் ஆட வாய்ப்பு வழங்கி பார்க்கலாம். பவர் பிளே ஓவர்களில் விளையாடும் திறமையை வளர்த்துக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தலாம்.எது எப்படியோ கடைசியில் அணித் தேர்வுக்குழுவினர் நட்சத்திர அந்தஸ்தை பரமாரிக்காமல் கேள்விக்குட்படுத்தி சேவாகாயிருந்தாலும், கம்பீராயிருந்தாலும் ஏன் கோலியேயாக கூட இருந்தாலும் சரியாக ஆடவில்லையெனில் காயம் என்ற காரணத்தை கூறி உட்கார வைக்காமல் ஆட்டம் சரியாக இல்லை அவருக்கு இதனால் பிரேக் கொடுத்துள்ளோம் என்று மனம் திறந்து அணித் தேர்வு குழுவும் தோனியும் பேச பழகவேண்டும்.உலகில் எந்த ஒரு கிரிக்கெட் அணியிலும் ஆட்டம் சரியாக விளையாடாமல் உட்கார வைக்கப்படும் வீரரை காயம் என்று கூறுவதில்லை, இந்தியாவில் மட்டும்தான் இந்த நிலை பராமரிக்கப்பட்டு வருகிறது.எனவே சேவாக் நிலையை அடையாமல் கோலி, கம்பீர், உள்ளிட்டோர் விழ்த்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.முதலில் பயிற்சியாளர் டன்கன் பிளெட்சரை ஊருக்கு அனுப்பவேண்டும். அதுவே ஒரு சிறந்த துவக்கமாக அமையும். கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு ஆட்டத்தை பார்ப்பதைத் தவிர அவர் பெரிதாக எதுவும் செய்ததாக தெரியவில்லை.