செத்த களங்களும், உடன்படிக்கை கிரிக்கெட் தொடரும்
, புதன், 25 நவம்பர் 2009 (14:49 IST)
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடர்களுக்குப் போடப்பட்டுள்ள ஆட்டக்களங்கள் நெடுஞ்சாலையை விடச் சிறப்பாக உள்ளது. அதாவது சாலையாவது ஓரிரண்டு இடங்களில் குண்டும் குழியுமாக போய்விடும். ஆனால் இந்த கிரிக்கெட் ஆட்டக்களங்கள் எதுவும் ஆவதில்லை. 5 நாட்களும் எந்த பகுதியும் உடையாமல் ரன்களை வாரி வழங்கும் வள்ளல் களங்களாக உள்ளன.அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் 5 நாட்களில் சுமார் 1,400 ரன்களுக்கும் மேல் குவிக்கப்பட்டன. ஆனால் விழுந்த விக்ககெட்டுகள் 21 மட்டுமே. அதாவது இரு அணிகளில் ஒரு அணிதான் ஒரு இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.உலகிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரன். கட்டாந்தரையிலும் பந்துகளை திரும்பச்செய்யும் முரளிதரனால் அகமதாபாத் பிட்சில் கடைசி நாளில் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை என்றால் ஆட்டக்களத்தின் லட்சணத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.இந்திய அணி எடுத்த ரன் எண்ணிக்கையைக் காட்டிலும் 200 ரன்கள் முன்னிலை வைத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதுதான் எந்த அணியும் மேற்கொள்ளும் ஒரு அணுகுமுறை. ஆனால் சங்கக்காரா இன்னிங்சை இழு இழுவென்று இழுத்து, இந்திய பந்து வீச்சாளர்களே ஒரு சமயத்தில் போட்டுக்கொடுக்க துவங்கிவிட்டனர் என்று நினைக்கத் தூண்டுவது போல் இன்னிங்ஸை வளர்த்தார். ஒரு முறை 955 ரன்கள் வரை அபத்தமாக டெஸ்ட் போட்டியை இழுத்தனரே அந்த நினைவு அனைவருக்கும் வந்து போனது.இரண்டாவதாக பேட் செய்யும் எந்த அணியும் 150 ஓவர்களுக்கு மேல் விளையாடினால் அந்த ஆட்டம் சிறப்பாக இருக்காது. முன்பெல்லாம் 150 ஓவர்கள் விளையாடினால் ஒரு அணி 450 ரன்கள் எடுக்கும் அல்லது 425 ரன்கள் எடுக்கும். தற்போது செத்த ஆட்டக்களங்களாக இருப்பதாலும், இருபதுக்கு 20 கிரிக்கெட்டின் வருகையாலும் அதிரடி முறையை வீரர்கள் கடைபிடிப்பதால் 130 ஓவரக்ளிலேயெ ஸ்கோர்
520 ரன்களை எட்டிவிடுகிறது. அதன் பிறகு 30 ஓவர்கள் விளையாடினல் மேலும் 140 ரன்களைச் சேர்த்து டிக்ளேர் செய்வதுதான் அழகு. இதுவே மிகவும் அதிகம். 600 ரன்களே மிகவும் அதிகம் என்று கூறுபவர்களும் உள்ளனர்.ஆனால் சங்கக்காரா 760 ரன்கள் வரை இழுத்திருக்கிறார் என்றால் அது கிரிக்கெட்டைத் தாண்டிய வேறு ஒன்றின் விளைவோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.கிரிக்கெட் கூட அயலுறவுக் கொள்கையோடு தொடர்புடையதா?பாகிஸ்தானுடன் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக பி.சி.சி.ஐ. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் கிரிக்கெட் உறவுகளை முறித்துக் கொண்டுள்ளது.எப்போதும் மகாராஜாக்களுக்கு ஒரு உறவு முறிந்தால் மற்றொரு உறவு தேவைப்படுமே. அது போல் இந்தியாவிற்கு இலங்கைக்கும் தற்போது ஏற்பட்டுவரும் புதிய அரசியல் உறவுகள் காரணமாக, பி.சி.சி.ஐ. (இதுவும் ஒரு மினி அரசாங்கம்தான்!) சிறிலங்க கிரிக்கெட் வாரியத்தை தன் செல்லப்பிள்ளையாக தத்தெடுத்துக் கொண்டுள்ளது.சிறிலங்க கிரிக்கெட் வாரியத்தின் பொருளாதார சிக்கல்களும் பி.சி.சி.ஐ.-யின் கவர்ச்சிப் பணத்திற்கு முன் கைகட்டி சேவகம் புரிய முன் வந்துள்ளது. எப்படி சிறிலங்க அரசின் வன்கொடுமைகளை இந்திய அரசு பல்வேறு விதங்களில் பூசி மெழுகி சர்வதேச நாடுகள் அரங்கில் இனப்படுகொலை சிறிலங்க அரசிற்கு (Genocide Sri Lanka) கெட்ட பெயர் வராமல் பார்த்துக் கொள்கிறதோ, அதே போல் தன் புதிய செல்லப் பிள்ளையான சிறிலங்க கிரிக்கெட் வாரியத்திற்கு எந்த ஒரு தோல்வியும் ஏற்படாமல் இருக்க பி.சி.சி.ஐ. பார்த்துக் கொள்கிறது.அதனால்தான், 'இரு அணிகளும் விளையாடுவோம், பெரிய சவால்களை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. ரன்குவிப்பு நெடுஞ்சாலை களங்களை உருவாக்குவோம், இரு அணிகளின் பேட்ஸ்மென்களும் ரன்களைக் குவித்துத் தள்ளட்டும், பார்வையாளர்களும் தங்கள் ஹீரோக்கள் சதங்களை குவிப்பதையே விரும்புகின்றனர். அணி வெற்றி பெறுவது ஒன்றும் அவ்வளவு முக்கியமல்ல. தொடரின் முடிவில் இரு அணிகளுக்கும் சேதம் எதுவும் ஏற்பட வேண்டிய தேவை எதுவும் இல்லை. நாம் நட்பு முறை கிரிக்கெட்டை விளையாடுவோம்' என்ற எழுதபடாத உடன்படிக்கை இரு வாரியங்களுக்கும் இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாடு எழுகிறது.
இந்த சந்தேகத்திற்கான காரணங்கள் இல்லாமலில்லை. ஐ.சி.சி. தயாரிக்கும் எதிர்கால கிரிக்கெட் பயண விவரத்தில் நடப்பு தொடர் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டதில்லை. இது திடீரென ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது.இந்தியாவில் வந்து விளையாடினாலும், இந்தியா வெளி நாடு சென்று விளையாடினாலும் ஏகப்பட்ட பணம் குவிகிறது. எனவே இந்தியாவிற்கு கிரிக்கெட்டில் தோல்வி ஏற்படாதவாறு நாம் தொடரை 'வெற்றி'கரமாக முடிக்கவேண்டும். அதற்கு ஆட்டக்களத்தையும் இவ்வாறு சாலை போல் தயாரித்து விட்டால் பிரச்சனை இருக்காது. என்ற ரீதியில் சிந்தனை இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.அதனால்தான் சங்கக்காரா 760 ரன்கள் வரை இன்னிங்ஸை இழுத்தடிக்கிறார். அப்போது இந்தியாவிறு 135 ஓவர்கள் இருந்ததே என்று யாராவது அப்பாவித் தனமாக கேட்கலாம். ஆனால் என்ன பயன்? இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து முதல் இரண்டு ஓவர்களில் ஸ்லிப் திசையில் சுலபமான கேட்ச்கள் கோட்டை விடப்பட்டன என்பதையும் நாம் இந்த நோக்கில் பார்க்கவேண்டியிருக்கிறது.5
ஆம் நாள் ஆட்டத்தில் இரவுக் காவலனாக களமிறங்கிய பந்து வீச்சாளர் அமித் மிஷ்ராவிற்கு டீப் ச்கொயர் லெக், டீப் மிட் விக்கெட், டீப் லாங் ஆன், லாங் ஆஃப், ஸ்வீப்பர் கவர் என்று ஏதோ விவியன் ரிச்சர்ட்ஸோ, ஆடம் கில்கிறிஸ்டோ களத்தில் இருப்பது போன்று சங்கக்காரா வியூகம் அமைத்தார்!கடைசியில் அமித் மிஷ்ரா பார்த்தார், அருகில் நின்று கொண்டிருந்த ஒரே வீரர் தில்ஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.அதன் பிறகு லக்ஷ்மண், சச்சின் ஆகியோருக்கு நெருக்கடி எதையும் கொடுக்க சங்கக்காரா விரும்பவில்லை. இருவரும் சுலபமாக தட்டி விட்டு சிங்கிள்களை எடுத்துக் கொண்டிருந்தனர். கடைசியில் டெஸ்ட் போட்டி இரு கிரிக்கெட் வாரியங்களின் விருப்பத்திற்கு இணங்க டிரா ஆனது.
இப்போது கான்பூர் பிட்சும் இதே போன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அகமதாபாதிலாவது முதல் அரை மணி நேரத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஹா! போட்டியில் முடிவு தெரிந்து விடும் என்ற ஒரு விறுவிறுப்பு ஏற்பட்டது. கான்பூர் ஒரு சிறந்த தார்ச்சாலை பிட்ச். முதல் நாளே இந்தியா 417 ரன்கள் எடுத்து அதிக பட்ச ரன்களைக் குவித்த சாதனைப் படைத்தது.இந்த போட்டியும் கடந்த டெஸ்ட் போட்டி போல் 'விரும்பத்தக்க' முடிவை நோக்கி நகரும் என்பதில் ஐயமில்லை. இந்தியா 700 ரன்கள் எடுக்கலாம். இலங்கை அணி இந்த சொத்தை பிட்சில் ஏதாவது மோசமான அணுகு முறையில் விளையாடினால் தவிர ஒரு இன்னிங்ஸில் ஆல் அவுட்டாகும் சாத்தியம் கூட இல்லை.சங்கக்காரா கடந்த டெஸ்ட் போட்டியில் செய்த சேவைக்கு இந்தியா 'நன்றி உணர்வு' காட்ட நல்ல சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. எனவே டிரா, டிரா, டிரா. இதுதான் இந்த 3 டெஸ்ட் போட்டிகளின் முடிவும், இந்த முன்னேற்பாட்டில் ஏதாவது குழப்பம் நேர்ந்தால் அது எந்த ஒரு அணியின் மோசமான ஆட்டத்தினால் மட்டுமே இருக்க முடியுமே தவிர, ஆட்டக்களமோ, கேப்டன்களின் ஆக்ரோஷமோ காரணமாக இருக்க முடியாது.வங்கதேசத்திற்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா பயணம் மேற்கொள்கிறது. அப்பயணத்தில் முத்தரப்பு தொடர் ஒன்று உள்ளது. அதில் இலங்கை, வங்கதேசம், இந்தியா விளையாடுகிறது.பொதுவாக இஸ்லாமிய நாடான வங்கதேசத்தில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றால் கூட்டம் நெரியும். ஆனால் இப்போதுதான் பாகிஸ்தானை அழைத்தால் நாங்கள் வர மாட்டோம் என்ற புதிய நெருக்கடியை இந்தியா கொடுத்து வருகிறதே. அதனால் இலங்கையை அவர்களே அழைத்து விட்டனர்.இவ்வாறாக இந்தியா தன் செல்லப்பிள்ளையான இலங்கையை ஊட்டி வளர்க்கிறது. இதில் நாம் நல்ல கிரிக்கெட்டை, சவாலான, நெருக்கடியான டெஸ்ட் கிரிக்கெட்டை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்தான்.டெஸ்ட் கிரிக்கெட்டை ஒரு புறம் வளர்க்கவேண்டும் என்று கூறுவது, ஆனால் செத்த ஆட்டக் களங்களைக் கொண்டு அதனை மூச்சுத் திணறடித்து சாகடிக்கச் செய்வது, இதுதான் சிறிலங்காவுடன் இணைந்து பி.சி.சி.ஐ. திறம்படச் செய்து வருகிறது. ‘டெஸ்டெல்லாம் வேஸ்ட்யா... ஒன் டே தான் சரி’ என்று ரசிகர்கள் வாயால் சொல்லவைத்து டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு சாவு மணி அடிக்கும் சதிதான் இந்த டெஸ்ட் தொடர் என்று குறுகிய எதிர்காலத்தில் புரியும்.