ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக அக்டோபர் 1ஆம் தேதி துவங்கவுள்ள டெஸ்ட் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாம் எதிர்பார்த்தபடியே எந்த வித அதிர்ச்சியும் இல்லை. ஒரேயொரு மாற்றம் தவிர. யுவ்ராஜ் சிங்கிற்கு பதிலாக சௌராஷ்டிரா அணியின் வலது கை பேட்ஸ்மென் செடேஷ்வர் புஜாரா சேர்க்கபட்டுள்ளது வரவேற்கத்தக்க முடிவாகும்.மற்றபடி இந்த அணித் தேர்வில் ஸ்ரீசாந்த் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருப்பது தேவையற்ற பரிசோதனை முயற்சியாகும். ஏனெனில் அவர் இன்னமும் நோ-பால் பிரச்சனையிலிருந்தே வெளிவர முடியவில்லை. பந்துவீச்சில் திசை மற்றும் அளவு குறித்தும் அவரது வீச்சில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.அவருக்குப் பதிலாக புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்து துவக்கத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் பிரவீண் குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கவேண்டும். பிரவீண் குமார் தேர்வு செய்யப்படாதது துரதிர்ஷ்டவசமானது.சௌராஷ்டிராவைச் சேர்ந்த செடேஷ்வர் புஜாரா உள்நாட்டு கிரிக்கெட்டில் வைத்துள்ள சராசரி 60 ரன்களாகும். ஒரு நாள் போட்டிகளில் இவரது சராசரி 57 என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்தியா ஏ அணிக்காக இவர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இங்கிலாந்து லயன்ஸ், மேற்கிந்திய ஏ அணிக்கு எதிராக பந்துகள் ஸ்விங் ஆகும் சூழ்நிலையில் ஒருநாள் மற்றும் 4 நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதிக ரன்களைக் குவித்ததே அவரது இன்றைய தேர்வுக்குக் காரணமாகும். குறிப்பாக மேற்கிந்திய ஏ அணிக்கு எதிராக இவர் எடுத்த 208 ரன்கள் கிரிக்கெட் வ்ல்லுனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே இவர் ரஞ்சி போட்டியில் முச்சதம் எடுத்துள்ளது இவரது பொறுமைக்கும் நிதானத்திற்கும், திறமைக்கும் ஒரு எடுத்துக்காட்டு.இங்கிலாந்து தொடரில் இவர் இந்திய ஏ அணியின் கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவர் ஒரு எதிர்கால கேப்டனும் கூட. இவரைக் கடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது மிகப்பெரிய தவறு என்று முன்னாள் இலங்கை பயிற்சியாளர் டேவ் வாட்மோர் குறிப்பிட்டதும் இந்தத் தருணத்தில் நினைவு கூறத்தக்கது.பலமான, சவாலான பந்து வீச்சு வரிசை கொண்ட ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக இவர் களமிறக்கப்படும் 11 வீரர்களில் ஒருவராக வாய்ப்பளிக்கப்படவேண்டும் என்பதே நம் கோரிக்கை. அவரது தன்னம்பிக்கை வளர்ச்சிக்கு இது அவசியமான முடிவாகும். தோனி செய்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.மேலும் திராவிட், லஷ்மண் ஆகியோரது டெஸ்ட் வாழ்வு இன்னும் சொல்லப்போனால் அதிக பட்சம் 2 ஆண்டுகள் நீடிக்கலாம். இந்த நிலையில் ரெய்னா, புஜாரா அணியில் நிலைபெறுவதும் அவசியம்.சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு பற்றி கடவுளும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தோனியுடன் தான் அவர் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது. என்ன செய்வது கடுமையான ஃபார்மில் இருந்து வருகிறாரே! எனவே அவரது ஓய்வு பற்றி நாம் எதுவும் கூறுவது முறையாகாது.யுவ்ராஜ் சிங் நீக்கம் சரியே!2003-04
ஆம் ஆண்டில் மொகாலியில் நியூசீலாந்து அணிக்கு எதிராக தன் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய யுவ்ராஜ் சிங், சௌரவ் கங்கூலி ஓய்வு பெற்ற பிறகே அணியில் நிரந்தர இடம்பெற்றார்.ஆனால் அதன் பிறகும் கூட சில குறிப்பிடத்தகுந்த இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய யுவ்ராஜ் சிங், தனது இடத்தை டெஸ்ட் போட்டியில் நிரந்தரப்படுத்தும் வகையில் சிறப்பாக விளையாடவில்லை என்பதே அவர் மீதிருக்கும் குறைபாடு.
அவரது ஆட்டத்திறன் மீது இப்போதும் ஒருவரும் சந்தேகம் கொள்ள முடியாது. ஆனால் அவரது அணுகுமுறை மீது சந்தேகம் எழுந்துள்ளது. சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் அதில் ஒன்று.
ஒருநாள் போட்டியிலாகட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டிலாகட்டும் அணுகுமுறை என்பது ஒரு வீரருக்கு அவசியம். உடல் எடை கூடி ஃபீல்டிங்கில் தடுமாற்றம் காணத்துவங்கினார். அவர் வழக்கமாக நிற்கும் பாயிண்ட் திசையில் அவரது இடம் போய் வேறு ஃபீல்டர் நிற்க வைக்கப்பட்டார். ஒரு சில போட்டிகளில் இவர் செய்த ஃபீல்டிங் கோளாறுகளினால் தோனிக்கு இவரை எங்கு நிறுத்துவது என்ற நெருக்கடி கூட ஏற்பட்டது.
யுவ்ராஜுக்கு வயது 28தான் ஆகிறது. எனவே அடுத்த ஓராண்டு இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி மீண்டும் தனது பழைய ஆட்டத்தையும், ஃபீல்டிங்கையும் கொண்டு வந்தால் அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை சுமார் ரூ.9 கோடி இவர் சம்பாதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இனிமேலும் பணம் செய்யும் ஐ.பி.எல். கிரிக்கெட்டை சற்றே தள்ளி வைத்து விட்டு டெஸ்ட் அணியில் மீண்டும் சிறப்பாக விளையாடி முன்னேற வேண்டும் என்ற லட்சியத்தை அவர் வளர்த்துக் கொள்வது அவசியம்.
எப்படி சேவாக், சச்சின், திராவிட், லஷ்மண், கங்கூலி ஒரு பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்தனரோ, ரெய்னா, யுவ்ராஜ், புஜாரா, ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் கம்பீருடன் சேர்ந்து எதிர்காலத்தில் கலக்கவேண்டும்.
சூதாட்டச் சர்ச்சைகளுக்குப் பிறகு ஒரு தொடர்
சூதாட்டச் சர்ச்சைகள் கிரிக்கெட் உலகை பேய் போல் ஆட்டி வரும் இந்தச் சூழலில் இந்திய-ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடர் மீண்டும் கிரிக்கெட் ஆட்டத்திற்கு புத்துணர்வு ஊட்டும் என்று நம்புவோம்.
5 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே கொண்டதாக இருந்த இந்தத் தொடரை, இந்தியா தனது டெஸ்ட் தரவரிசை முதலிடத்தைத் தக்கவைக்கவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடராக மாற்றிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலும், அதற்கு பாண்டிங் உள்ளிட்ட ஆஸ்ட்ரேலிய வீரர்களும், கிர்க்கெட் ஆஸ்ட்ரேலியாவும் ஒத்துழைப்பு நல்கியதும் ஆரோக்கியமான ஒரு போக்கின் துவக்கமாக நாம் பார்க்கலாம்.
அடுத்தபடியாக ஆஷஸ் தொடரை எதிர்கொள்ளும் ஆஸ்ட்ரேலியாவுக்கு இந்திய பிட்ச்கள் பெருமளவு தயாரிப்பளவில் உதவிபுரியாவிட்டாலும், சவாலான கிரிக்கெட்டை வழங்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கதுதான்.