இந்தியன் பிரீமியர் லீக் ஆட்சிமன்றக் குழுவிலிருந்து சுனில் கவாஸ்கரை நீக்கியது பற்றி சுனில் கவாஸ்கருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை.கவாஸ்கர் இது பற்றி கூறுகையில், "பிசிசிஐ-யிலிருந்து ஒருவரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இது எனக்கு ஒரு செய்தியே, அதுவும் பல்வேறு தொலைக்காட்சி சானல்கள் மூலம் நான் இதனைத் தெரிந்து கொள்ள வேண்டியதாயிற்று, என்ன நடந்தது என்பது கூட எனக்குத் தெரியாது" என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.மேலும் ஆட்சிமன்றக் குழுவில் பணியாற்ற தான் ரூ.5 கோடி கேட்பதாக அவதூறுகளும் பரப்பப்பட்டு வருகிறது, இது மிகவும் வேதனையளிக்கிறது என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்."
என் மீது அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது மிகவும் அநியாயமானது, இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக எந்த ஒரு அளவிலும் பணியாற்றுவதை நான் கௌரவமாகவே கருதி வருகிறேன், இதற்காக நான் காசு வாங்கியது கிடையாது என்பதை அனைவரும் அறிவர். மேலும் பி.சி.சி.ஐ-யில் நான் வகித்த பல்வேறு பணிகளுக்கும் நான் இதுவரை காசு என்று எதனையும் வாங்கியதில்லை" என்ற உண்மையை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.கவாஸ்கர் நீக்கத்திற்கான எந்த ஒரு காரணத்தையும் இதுவரை வெளியிடாமல் பி.சி.சி.ஐ. தந்திராபூர்வமான மௌனம் சாதித்து வருகிறது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷஷான்க் மனோகரிடம் கவாஸ்கர் கோடிகளைக் கேட்டார் என்று கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு "இதை நீங்கள் கவாஸ்கரிடம் கேளுங்கள்" என்று அராஜகமாக பதில் கூறியுள்ளார்.ஆனால் கவாஸ்கர் பணம் கேட்கிறார் என்ற அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பி வரும் கும்பல் எதுவென்று தெரியவில்லை. பி.சி.சி.ஐ-யும் இது குறித்து அசாத்திய மௌனம் சாதித்து வருகிறது.
பி.சி.சி.ஐ-யின் செயல்பாடுகள்முன்பு ஜக்மோகன் டால்மியாவுக்குப் பிறகு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குள் அடியெடுத்து வைத்த ஷரத் பவாரும் அவரது ஆதரவாளர்களும் (லலித் மோடி உட்பட) அதற்கு முன்னால் இருந்த பல்வேறு பி.சி.சி.ஐ. பொறுப்பாளர்கள் மீது கண்டபடி வழக்குகளை தொடர்ந்தனர். காரணம் 2004ஆம் ஆண்டு டால்மியா அளித்த வாக்கினால் ரன்பீர் சிங் மகேந்திராவிடம் ஷரத் பவார் தோல்வி தழுவ நேரிட்டது. அன்றிலிருந்தே கறுவிக்கொண்டிருந்த ஷரத் பவார், பதவிக்கு வந்த பிறகு தனது அரசியல்வாதிக்குரிய குணத்தைக் காண்பிக்கத் துவங்கினார்.டால்மியா மீது 2006ஆம் ஆண்டு நிதிமுறைகேடு வழக்கு தொடரப்பட்டது. 2008ஆம் ஆண்டு பி.சி.சி.ஐ. நிதியில் முறைகேடு செய்ததாக அவர் கைதும் செய்யப்பட்டார்.ஆனால் நேற்று டால்மியா மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றதோடு, அவர் மீது விதித்திருந்த 4 ஆண்டுகள் தடையையும் வாபஸ் பெற்றது. இதனால் டால்மியா மீண்டும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்குள் வருவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.இப்போது நம் கேள்வி என்னவெனில், டால்மியா மீது போடப்பட்டது வெறும் பழிதீர்ப்பு வழக்கா அல்லது அவர் நிதி முறைகேடுகள் செய்ததற்கு சாட்சியங்கள் உள்ளதா? இப்போது வழக்கை வாபஸ் பெறப்பட்டதை யோசித்துப் பார்க்கையில் அவர் மீது போடப்பட்டது பழிதீர்ப்பு வழக்குதானோ என்ற ஐயத்தை நம்மிடையே எழுப்புகிறது.இப்போது லலித் மோடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. எனவே டால்மியா வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது. மேலும் லலித் மோடியை திறம்பட சமாளிக்க டால்மியாவின் ராஜதந்திரம் தங்களுக்கு உதவலாம் என்றும் கூட நினைத்து பி.சி.சி.ஐ. அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றிருக்கலாம்.மொத்தத்தில் கிரிக்கெட் ஆட்டங்களை நிர்வாகம் செய்து வளர்க்க வேண்டிய ஒரு அமைப்பு அதிகார வர்க்கத்தின் பதவிவெறிகளைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு ராஜதந்திர இடமாக மாறியுள்ளது என்பதையே பி.சி.சி.ஐ.-யின் செயல்பாடுகள் நிரூபிக்கின்றன.ஐ.பி.எல். கிரிக்கெட் வெற்றிபெறுவதற்காக ஐ.சி.எல். கிரிக்கெட்டை ஒழித்துக்கட்டி, அதன் வீரர்களுக்கு தண்டனை அளித்து கடைசியில் அவர்களை ஏதோ குற்றவாளிகள் போல் பாவித்து ஏகப்ப்பட்ட நிபந்தனைகளுடன் இந்திய கிரிக்கெட் அமைப்புக்குள் அந்த வீரர்கள் கொண்டு வரப்பட்டனர்.கபில்தேவ் போன்ற வீரர்களும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஏகப்பட்ட அவமானங்களைச் சந்தித்துள்ளார்.
கவாஸ்கர் விவகாரம்...
இந்த நிலையில் மோடிக்குப் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட் அமைப்பில் பல அதிரடி மாற்றங்களைச் செய்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கவாஸ்கரை ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழுவிலிருந்து காரணங்களை வெளியிடாமலேயே நீக்கியுள்ளது.
கபில்தேவ், கவாஸ்கர் போன்ற வீரர்களை அவமானப்படுத்துவதற்கு இந்த அமைப்பாளர்கள் யார்?
கவாஸ்கர், கபில் போன்ற இந்திய கிரிக்கெட்டிற்கு நீங்காப் பெருமை சேர்த்த வீரர்களையே இந்த அதிகார வெறியர்கள் அவமானம் செய்யமுடிகிறது என்றால், அவதூறுகளை அள்ளிவிடமுடிகிறது என்றால், சாதாரண வீரர்களின் எதிர்காலம் என்னவாகும்?
இந்த அதிகார நபர்கள் செய்வது என்ன மாநில அளவில் மாவட்ட கிரிக்கெட் அமைப்புகளின் செல்வாக்கினை ஈட்டுவது அதாவது மாநில கிரிக்கெட் சங்கத் தேர்தல்களில் வாக்கு உரிமையுள்ள சங்கங்களின் செல்வாக்கினைப்பெறுவது, பிறகு மாநில கிரிக்கெட் சங்கத்தில் துணைத் தலைமைப்பொறுப்பு, அங்கிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஏதாவது உயர்பொறுப்பு அதன் பிறகு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைமை பொறுப்பு அங்கிருந்து நேராக ஐ.சி.சி. தலைமைப் பொறுப்பு... இதுதான் இவர்களது குறிக்கோள்.
மற்றபடி கிரிக்கெட் விளையாட்டையோ, கிராமத்தில் திறமையுள்ளவர்களை வளர்த்து இந்திய அளவில் உயர்த்துவதோ இவர்களுக்கு இரண்டாம் பட்சமே. சரி! இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் கவாஸ்கர், கபில் போன்றவர்களை அவமானப்படுத்தும் உரிமைகளை இவர்களுக்கு வழங்கியது யார்?
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகள் இதே நிலையில் தான்தோன்றித்தனமாக தொடருமானால், அதனை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
விளையாட்டோடு தொடர்பற்ற தொழிலதிபர்களும், கார்பரேட்டுகளும் இன்றைக்கு இந்திய விளையாட்டு அமைப்புகளை கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி, விளையாட்டு நலனை விட அவர்களின் வணிக நலன்களே முன்னெடுக்கின்றன. விளையாட்டு அவர்களின் நலனைப் பேணும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலை மாற வேண்டும் எனில், கவாஸ்கர், கபில்தேவ் போன்ற தலை சிறந்த வீரர்களின் வழிகாட்டுதலின் கீழ் கிரிக்கெட் கொண்டுவரப்பட வேண்டும். அதனைச் செய்யவில்லையெனில் இந்தியக் கிரிக்கெட்டும் காமன்வெல்த் ஏற்பாடுகளைப் போல ஒரு காலத்தில் நாறிவிடும்.