Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சச்சின் டென்டுல்கரைத் தூக்கிப் பிடிக்கும் ஊடகங்கள்!

Advertiesment
சச்சின் டென்டுல்ர்

Webdunia

, சனி, 11 ஆகஸ்ட் 2007 (17:42 IST)
webdunia photoWD
1989ல் பாகிஸ்தானில் சென்று பள்ளிச் சிறுவனாக இந்திய கிரிக்கெட் வாழ்விற்குள் நுழைந்த சச்சின், வக்கார் யூனிஸ் பந்தில் மூக்கில் அடிபட்ட பின் அடுத்த 3 பந்தை பவுண்டரிக்கு விரட்டிய நாள் முதல் இன்று வரை அவர் ஒரு சூப்பர் ஸ்டாராகவே அவரை நீக்கமற, ஏறத்தாழ அனைத்து ஊடகங்களும் தொடர்ந்து ஆராதனை செய்து வருகின்றன.

ஆனால், சமீப காலங்களில் அவரது ஆட்டம் மோசமானதிலிருந்து மிக மோசமான கட்டத்திற்கு பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது என்பதை ஓவலில் அவர் விளையாடிய விதம் எடுத்துரைப்பதாயுள்ளது.

ஜாபர், கார்த்திக், மற்றும் டிராவிட் ஆகியோர் ஆடிய போது ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 4.3 என்பதாக இருந்தது. டிராவிட் ஆட்டமிழந்தவுடன் மைதானத்தில் உள்ள அனைத்து ரசிகர்களின் ஏகபோக கரகோஷத்திற்கிடையே சச்சின் களமிறங்கினார். ஆனால் சிறிது நேரத்திற்கு எல்லாம் ரசிகர்களின் முகத்தில் ஈயாடவில்லை.

காரணம் சச்சின் முதல் 37 பந்துகளில் வெறும் 5 ரன்களையே அடித்தது மட்டுமல்லாமல் ஏறத்தாழ 37 பந்துகளில் 20க்கும் அதிகமான பந்துகளை உடம்பிலும், கால்காப்பிலும் தாறுமாறாக விளையாடியதே.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 25,000த்திற்கும் அதிகமாக ரன்களை குவித்த, பெருமளவு ஊடகங்களால் இன்னமும் "இந்தியாவின் டான் பிராட்மேன்" என்றும் அழைக்கப்படும் ஒரு உலகின் தலை சிறந்த வீரர் கையில் மட்டை இருப்பதே தடுக்கி விழாமல் இருக்க ஒரு ஊன்று கோல் என்பது போல் உடல் மற்றும் பேடுகளைப் பயன் படுத்தி ஆடியது பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.

இவ்வளவு ஆண்டு கால அயராத கிரிக்கெட்டில் தற்காப்பு ஆட்டம் அல்லது தடுப்பு ஆட்டத்தை கூட உத்தி பூர்வமாக ஆட முடியாமல் மட்டை என்று ஒன்று கையில் இருப்பதையே மறந்து ஆடும் எந்த ஒரு முன்னணி வீரரையும் இதற்கு முன்பு கிரிக்கெட் வரலாற்றில் யாரும் கண்டிருக்க மாட்டார்கள்.

இந்திய வெற்றிக்கு ஒரு போதும் உதவாதவர் என்றும், தனது சொந்த லாபங்களுக்காக ஆடியவர் என்றும் வர்ணிக்கப்பட்ட சுனில் காவஸ்கர் கூட இந்த அளவிற்கு பந்துகளை உடலில் வாங்கியதில்லை. இத்தனைக்கும் காவஸ்கர் எதிர்கொண்ட பந்து வீச்சாளர்கள் பட்டியலை பார்த்தோமானால் பயந்து விடுவோம் நாம்.

1971ல் வெஸ்லி ஹால், கிரிபித் என்று துவங்கி அதன் பிறகு மேற்கிந்திய தீவுகளின் முடி சூடா மன்னர்களாக திகழ்ந்த அதி வேகப்பந்து வீச்சாளர்களான ராபர்ட்ஸ், ஹோல்டிங், ஹோல்டர், டேனியல், பாய்ஸ், மார்ஷல், கார்னர், ஆம்ரோஸ், வால்ஷ் வரையிலும் டெனிஸ் லில்லி, தாம்ப்சன், இங்கிலாந்தில் ஜான் ஸ்னோ, கிறிஸ் ஓல்ட், ஜான் லீவர் ஆகியோரையும் பாகிஸ்தானில் இம்ரான் முதல் வாசிம் அக்ரம் வரையிலும் பார்த்தவர் சுனில் காவஸ்கர். ஆனால் அவர் இதுபோன்று ஒரு இன்னிங்சை டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை.

webdunia
webdunia photoWD
இதில் என்ன வேடிக்கையென்றால், ஜேம்ஸ் ஆன்டர்சன் வீசுகிறார்.. அவரை கார்த்திக், ஜாபர், டிராவிட் அடித்து நொறுக்கி 7 ஓவர்களில் 41 ரன்கள் என்று மண்ணைக் கவ்வ வைத்தனர். 130 கி.மீ வேகத்தில் வீச நாக்குத் தள்ளும் அவருடைய பந்தை சச்சின் உடம்பைத் தவிர வேறு எதாலும் ஆட முடியாது என்று சத்தியம் செய்தது போல் ஆடியது வடிவேலு நகைச்சுவையை நினைவு படுத்துவதாக அமைகிறது..."எவ்வளவு நேரந்தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கறது..."

இம்மாதிரியான ஒரு இன்னிங்சை பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் சச்சினை பெரிது படுத்தியே வணிகம் செய்து வரும் நமது ஊடகங்கள், இந் த ஆட்டத்தையும் காணக்கிடைக்காத பொக்கிஷ இன்னிங்சாக வர்ணித்திருப்பது, சச்சினே ஒரு முறை இவர்களை பற்றி கூறியது போல் "கிரிக்கெட் தெரியாதவர்கள்" என்றுதான் கூற வைக்கிறது. ன

நட்சத்திர நடுக்கள ஆட்டக்கரர்களை கொண்ட இந்திய அணியில் இத்தொடர் முழுதும் ஒருவர் கூட சதம் எடுக்க முடியாமல் அனில் கும்ப்ளே சதம் எடுத்திருப்பது அனில் கும்ப்ளேயின் அயராத உழைப்பையே எடுத்துக் காட்டுகிறது. எப்போதும் போட்டித் திறனை மழுங்கடித்துக் கொள்ளாத அவரது நீண்ட நெடும் கிரிக்கெட் வாழ்விற்கு கிடைத்த பரிசாக இந்த சதத்தை நாம் வர்ணித்தால் அது மிகையாகாது...

நாம் சச்சினுக்கு திரும்புவோம்... நேற்று 2ம் நாள் ஆட்டம் துவங்கியவுடன் 20 ரன்களிலிருந்த லக்ஷ்மண் அரை மணி நேரத்தில் அரைசதம் எடுத்தார். ஆனால் சச்சினோ அந்த அரை மணி நேரத்தில் 48 ரன்களிலிருந்து 51 ரன்களுக்கு ஆமை போல் ஊர்ந்து வந்தார். லக்ஷ்மணும் அதே பந்து வீச்சைத்தான் சந்தித்தார். சச்சின் மட்டும் ஏன் அப்படி ஆட வேண்டும் என்பது புரியாத புதிராக உள்ளது.

இணைய தளங்களில் பார்த்த போது ஏறக்குறைய அனைத்து இணையதளங்கள் குறிப்பாக விளையாட்டு தொடர்பான இணையதளங்கள் சச்சினின் நேற்றைய அறுவை ஆட்டத்தை "வாட்ச் ஃபுல் இன்னிங்ஸ்" என்றும் சச்சின் செட் ஃபார் எ பிக் இன்னிங்ஸ் என்றும், ஓவராக பில்ட் அப் கொடுத்து எழுதுகின்றனர்.

இது எந்த விதத்திலும் கிரிக்கெட் ஆட்டத்திற்கோ அல்லது அதனை ஆர்வத்துடன் காணும் ரசிகர்களுக்கோ நியாயம் செய்வதாக இல்லை. மாறாக கிரிக்கெட் ஆட்டத்தையே ஒரு மனிதரை ஆராதனை செய்வதற்கான கருவியாகவே மாற்றுவது வருத்தத்தை அளிக்கிறது.

அபாரமாக ஆடி சதம் எடுத்து மேலும் சென்றிருக்க வேண்டிய தினேஷ் கார்த்திக், சச்சின் எதிர் முனையில் செய்த சேஷ்டைகளில் பதட்டமடைந்து ஆட்டமிழந்ததை ஸ்டார் கிரிக்கெட்டில் வருணனை மேற்கொண்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இளைஞர்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டிய இந்திய டெமி-காட் சச்சின் இளைஞர்கள் மத்தியில் எதிர்மறை அலைகளை எழுப்பி வருவதை இந்திய கிரிக்கெட் வாரியம் எத்தனை நாளைக்கு ஊக்குவிக்கப்போகிறதோ தெரியவில்லை.

சரி அவ்வளவு "பொறுமையாக" ஆடிய சச்சின் சதம் எடுக்க முடிந்ததா? இல்லை. ஏனெனில் அவர் மனம் சதத்தையே குறிகொண்டு இயங்குகிறது. களத்தில் நிற்பதுதான் முக்கியம் என்பதில் தனது ஆட்டத் திறனையே மழுங்கடித்துக் கொள்ளும் ஒரு வீரரை இப்போதுதான் கிரிக்கெட் உலகம் காண்கிறது. இந்த "பொறுமை" ஏன் நாம் வெற்றி பெற்ற டெஸ்டின் 2வது இன்னிங்சில் இல்லை? அன்றும் இதே கதைதான் ஹெல்மெட்டிலும் உடம்பிலும் கால்காப்பிலும் ஆடி 15 பந்துகளில் 1 ரன் எடுத்து கேவலமாக லெக் ஸ்லிப்பில் டெய்ல் என்டர் போல் ஆட்டமிழந்து பரிதாபமாக பெவிலியன் திரும்பினார். இன்னமும் நாம் ஏன் அவரை தூக்கி பிடித்துக் கொண்டாட வேண்டும்.

மற்ற வீரர்களின் திறமையால்... குறிப்பாக பந்து வீச்சாளர்களின் திறமையால் இந்தியா வெற்றி பெற்று வருகிறது. இந்த மற்ற வீரர்களின் திறமையிலும் அவர்கள் எடுக்கும் வேகமான ரன் எண்ணிக்கையிலும் தனது இருப்பிற்கு ஜீவித நியாயம் கற்பிக்க முயல்கிறார் சச்சின். இது போன்ற அவரது குறிக்கோளை ஊடகங்கள் "சச்சினின் பொறுப்பான ஆட்டம்" என்றும் அந்த சமயத்தில் அவர் ஆட்டமிழந்திருந்தால் இந்தியா மடிந்திருக்கும் என்றெல்லாம் ஏன் எழுத வேண்டும் கும்ப்ளே களமிறங்கி வேகமாக ரன் குவிக்க கூடிய ஒரு களத்தில் 192 பந்துகளை சந்தித்து 82 ரன்களை எடுத்திருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும். நேற்று சச்சின் ஆட்டமிழந்த பிறகு 247 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. அதுவும் 57 ஓவர்களில்.

சச்சின் சதம் எடுக்கலாம், அல்லது எடுக்காமல் போகலாம் ஆனால் இதை வைத்துக் கொண்டு நேற்று கார்த்திக்கின் கவனம் சிதறுமாறு ஆடிய ஆட்டத்திற்கு எந்த விதத்திலும் நியாயம் கற்பிக்க முனைவது தவறு... தவறு.

இந்த சச்சின் மாயை ஒழிய வேண்டும். உண்மையான திறனுடன் சிறப்பாக ஆடும் வீரர்களை அடையாளம் காட்ட வேண்டும் அதுவே நியாயம் தர்மம்.

Share this Story:

Follow Webdunia tamil