Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சங்கடத்தில் தேர்வுக் குழு! லக்ஷ்மண் நீக்கப்படுவாரா?

Advertiesment
சங்கடத்தில் தேர்வுக் குழு லக்ஷ்மண் நீக்கப்படுவாரா
மொஹாலி டெஸ்டில் அணி்த் தலைவர் அனில் கும்ளே காயமடைந்து அவருக்கு பதிலாக தோனி தலைமைப் பொறுப்பிற்கும், பந்து வீச்சில் அமித் மிஷ்ராவும் தேர்வு செய்யப்பட்டு இருவருமே அபாரமாக விளையாடி தங்களது இடத்தை தக்கவைத்துள்ளதால் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையிலானத் தேர்வுக் குழுவிற்கு புதிய தலைவலி எழுந்துள்ளது.

webdunia photoWD
அக்டோபர் 29ஆம் தேதி டெல்லியில் துவங்கும் 3வது டெஸ்டிற்குள் அனைவரையும் திருப்தி படுத்தும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய தர்ம சங்கடமான நிலையில் ஸ்ரீகாந்த் தலைமை தேர்வுக் குழு உள்ளது.

அமித் மிஷ்ராவை அடுத்த டெஸ்டில் நீக்கி விட்டு கும்ளேயை அணிக்குள் எடுப்பது என்று தீர்மானித்து, கும்ளே சரியாக பந்து வீச முடியாமல் போனால் தேர்வு குழு செய்த மிகப்பெரிய குற்றமாக அது பார்க்கப்படும். மேலும் அமித் மிஷ்ரா போன்ற இளம் பந்து வீச்சாளருக்கும், வெற்றி பெற்ற ஒரு டெஸ்டில் தனது பங்களிப்பு கணிசமாக இருந்தும் நீக்கப்படுவது உற்சாகத்தை அளிக்காது, மாறாக அவர் மனோ பலம் குறையக்கூடும்.

கும்ளேயை எவ்வாறு அணியில் நுழைப்பது அதுவே இன்றைய பிரச்சனை. வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரையும் நீக்க முடியாது. அது பேரழிவில் போய் முடியும். ஆஸ்ட்ரேலியாவில் யுவ்ராஜ் சிங்கை அணியில் எடுக்கும் நெருக்கடியில், ராகுல் திராவிடை துவக்க வீரராக களமிறக்கி தலை குனிவு ஏற்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது. எனவே அது போல் இப்போதும் திராவிடை துவக்க வீரராக களமிறக்கி கம்பீர் போன்ற வீரர்களை உட்காருமாறு கோருவது ஒரு சாத்தியம் என்றாலும், கம்பீர் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் தேர்வுக் குழுவின் இது போன்ற முடிவிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஹர்பஜன் சிங்கை ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக உட்காரவைப்பது சாத்தியமாகாத ஒன்று, அவரும் இரண்டாவது இன்னிங்சில் 49/0 என்று இருந்த ஆஸ்ட்ரேலியாவை 58/5 என்று வெற்றிக்கான முதல் விதையை விதைத்துள்ளார். அவரை அணியிலிருந்து நீக்குவது என்பது நிச்சயமாக மற்றுமொரு சர்ச்சையில் போய் முடியும்.

webdunia
webdunia photoWD
அமித் மிஷ்ராவும் அணியில் இருக்க வேண்டும், கும்ளேயும் அணிக்குள் நுழையவேண்டும். இதை எவ்வாறு நிகழ்த்துவது? இந்திய அணி நிர்வாகம், மூத்த வீரர்கள், பத்திரிக்கைகள் என்று அனைவரும் இது குறித்து ஏற்கனவே தங்கள் கருத்துக்களை எழுதத் துவங்கிவிட்டனர்.


ஒரு ஆரோக்கியமான சிக்கலே!

ஒரு புறம் கும்ளே ஓய்வு பெறுவது நல்லது என்று தோன்றினாலும், அதை அவர் முடிவு செய்ய விட்டுவிடுவதே நல்லது. 20 ஆண்டுகால கிரிக்கெட்டில் அவர் இந்திய வெற்றிகள் பெரும்பாலானவற்றில் பெரும்பங்கு வகித்துள்ளார். இன்னும் கூறப்போனால் அவர் இல்லாதிருந்தால் அந்த வெற்றிகளும் சாத்தியாமாகியிருக்குமா என்ற கேள்வியும் உள்ளது.

webdunia
webdunia photoWD
எனவே அவருக்கு கௌரவமான ஒரு வெளியேற்றத்தை அளிப்பது இந்திய கிரிக்கெட்டை கவுரவிப்பதாகும். தோனியிடம் தலைமைப் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டியதுதான் என்ற கருத்தை தோனி மொஹாலி டெஸ்ட் வெற்றி மூலம் உறுதி செய்துள்ளார். அவரும் தலைமை பொறுப்பிற்கு அவசரப்படுபவர் போல் இல்லை. எனவே அணித் தலைவர் யார் என்ற கேள்வி தற்போது தேவையில்லை என்றே தோன்றுகிறது.

அமித் மிஷ்ராவை நீக்கவே முடியாது எனும் பட்சத்தில் கும்ளேயை அணியில் சேர்க்க யாரை நீக்குவது. தேர்வுக் குழு கையில் ஒரே ஒரு தெரிவு மட்டுமே உள்ளது. அது லக்ஷ்மண்தான். லக்ஷ்மண் இந்த தொடரில் சரியாக விளையாடவில்லை என்று கூறமுடியாது. பெங்களூர் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் நெருக்கடியான நிலைமையில் சிறப்பாக ஆடி டிரா செய்ய உதவியுள்ளார்.

மொஹாலியில் அவர் ஆட்டமிழந்தவிதம் ஆஸ்ட்ரேலியாவின் அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். இப்படியிருக்க அமித் மிஷ்ரா, கும்ளே இருவரும் அணியில் இருக்க வேண்டுமென்றால் லக்ஷ்மண் மேல்தான் கோடரி விழ வேண்டும். இதற்கான தர்க்கமும் உள்ளது. கம்பீர், சேவாக், திராவிட், சச்சின், கங்கூலி, தோனி நன்றாக விளையாடி வருகின்றனர். ஹர்பஜன், ஜாகீர் கானும் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பு செய்யும் பட்சத்தில் லக்ஷ்மணை நீக்கி விட்டு 6 பேட்ஸ்மென்கள் 5 பந்து வீச்சாளர்கள் என்ற அணிச்சேர்க்கை மோசமாக இருக்காது என்று அணித்தேர்வுக் குழு யோசிக்கலாம்.

webdunia
webdunia photoWD
மேலும் இந்த தொடர் முடிவில் கங்கூலி ஓய்வு பெறுவதால் டெஸ்ட் தொடர் முடிவிற்கு பிறகு கங்கூலி இடத்தில் லக்ஷ்மணை மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். அப்போது பந்து வீச்சாளர்களில் யாரேனும் சிறப்பாக வீசவில்லையெனில் அந்த இடத்தில் இர்ஃபான் பத்தான் போன்ற பன்முக ஆட்டக்காரர்களை சேர்த்தால் அணிச் சேர்க்கை பலம் வாய்ந்ததாக மாறும்.

ஆனால் தேர்வுக் குழு எவ்வாறு யோசிக்கும் என்று ஊகிக்க முடியவில்லை. இப்போதைய நிலவரப்படி அமித் மிஷ்ராவிற்கு பதில் கும்ளே என்று முடிவெடுக்கப்படலாம் என்பதே பரவலான கருத்தாக உள்ளது. ஆனால் இந்த முடிவின் வெற்றி கும்ளேயின் திறமையில்தான் உள்ளது.

எது எப்படியிருந்தாலும், இந்திய கிரிகெட் அணித் தேர்வுக் குழுவிற்கு ஒரு ஆரோக்கியமான சிக்கலே எழுந்துள்ளது என்று கூறலாம்.


Share this Story:

Follow Webdunia tamil