Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிரிக்கெட்டை கேலிக்கூத்தாக்கும் எல்.பி.டபிள்யூ. தீர்ப்புகள்

Advertiesment
எல்.பி.டபிள்யூ. தீர்ப்புகள்

Webdunia

அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளில் எல்.பி.டபிள்யூ., கேட்ச் ஆகியவற்றை துல்லியமாக அறிய தொலைக்காட்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்போவதில்லை என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது!

கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தும் அறிவிப்பு இது.

சமீப காலங்களில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நடுவர்கள் வழங்கிய நேரடித் தீர்ப்புகள் பல சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. நடுவர்கள் மனிதர்களுக்கே உரித்தான "தவறும் தன்மையினால்" கிரிக்கெட் ஆட்டம் மிகவும் தடுமாறியது. பல சிறந்த ஆட்டக்காரர்கள் நடுவர்களின் தவறான முடிவுகளால் வெறுத்துப்போய் மட்டையை மைதானத்தில் ஓங்கி அடித்து தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்திவிட்டு தொங்கிய முகத்துடன் பெவிலியன் திரும்பியதை நாம் கண்டு வருகிறோம்.

குறிப்பாக எல்.பி.டபிள்யூ. முடிவுகளை அளித்ததில் அனுபவ - வித்தியாச வேறுபாடின்றி எல்லா நடுவர்களுமே தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில், 64 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணிபுரிந்து அனுபவம் வாய்ந்த டேவிட் ஷெப்பர்டும், 15 டெஸ்ட் போட்டிகளில் பணிபுரிந்த அசோகா டி சில்வாவும் அளித்த எல்.பி.டபிள்யூ. தீர்ப்புகள் ஆட்டத்தின் போக்கையே பாதிப்பதாக அமைந்ததை யாராலும் மறுக்க முடியாது.

உதாரணத்திற்கு, கொல்கட்டாவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸுகளிலும் இந்தியாவின் தூண் என்று கருதப்படும் ராகுல் திராவிட் எல்.பி.டபிள்யூ. அளிக்கப்பட்டு முறையே 14 ரன்களுக்கும், 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்.

ஸ்டெம்பை நோக்கி வந்த பந்தை ராகுல் திராவிட் தடுத்தாடியபோது மட்டையின் உள் விளிம்பில் பட்டு திசை மாறி பேடைத் தாக்கியது தொலைக்காட்சிப் பதிவுகளில் தெளிவாக தெரிந்தது. ஆனால், பேட்ஸ்மேன் ஆடிக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து 20 யார்ட்டு தூரத்தில் நின்றுக்கொண்டிருக்கும் நடுவர் கண்ணில் அது எவ்வாறு தெரியாமல் போனது என்ற கேள்வி அனைவர் உள்ளத்திலும் எழுந்தது. ஒரு முறை டேவிட் ஷெப்பர்ட் தவறான தீர்ப்பளித்தார். மற்றொரு முறை அசோகா டி சில்வா தவறான தீர்ப்பை அளித்து ராகுல் திராவிடை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

இதேபோல, இந்திய அணித் தலைவர் சௌரவ் கங்குலியும் நடுவர்களின் தவறான எல்.பி.டபிள்யூ. தீர்ப்புகளினால் பலமுறை ஆட்டமிழந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆன பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் போக்குடையதாக இருந்தது தொலைக்காட்சிப் பதிவில் நன்றாக தெரிந்தது. ஆனால் அது நடுவர்களுக்கு எவ்வாறு புலப்படாமல் போனது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் நடந்த டெஸ்ட் தொடரிலும், இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரிலும், தற்பொழுது நடந்து முடிந்த டெஸ்ட் தொடரிலும் சேர்த்து 10 முறைகளுக்கும் மேலாக தவறான முடிவுகளுக்கு ஆளாகி பெவிலியன் திரும்பிய கங்குலிக்காக நொந்து போகாத ரசிகர் உள்ளங்களே இல்லை என்று கூறலாம். உன் குத்தமா. . . என் குத்தமா. . . யாரை நானும் குத்தம் சொல்ல. . . என்று ரசிகர்கள் நொந்து பாடும் அளவிற்கு கங்குலியின் நிலை இருந்து வருகிறது.

மனிதத் தவறு இயற்கையே. . . இதனைப் பெரிதுபடுத்தக் கூடாது என்று பொதுவாக கூறப்படுவது உண்டு. அப்படியானால் அனுபவத்திற்கும், துல்லியமாக எழுதப்பட்டுள்ள கிரிக்கெட் விதிகளுக்கும் என்ன மதிப்பு இருக்க முடியும்?

இவர்கள் இருவர் மட்டுமே இப்படிப்பட்ட தவறான தீர்ப்புகளை அளித்து வருகிறார்கள் என்று நாம் கூறவில்லை. டேவிட் ஆர்ச்சர்ட், ரசல் டிஃபின் ஆகியோரும் பல தவறான தீர்ப்புகளை வழங்கி பேட்ஸ்மேன்களின், ரசிகர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எல்.பி.டபிள்யூ.வைப் பொருத்தவரை கிரிக்கெட் விதி தெளிவாக உள்ளது. எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நடுவர் உறுதியாக உணர்ந்தால் மட்டுமே எல்.பி.டபிள்யூ. தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டு விதிகளிலேயே எல்.பி.டபிள்யூ. குறித்த விதிதான் நீளமானது. ஆழ்ந்த பொருட் செரிவுடையது.

அவ்வாறு இருந்தும் தவறான முடிவுகள் அளிக்கப்படுவதை தவிர்க்க, எல்.பி.டபிள்யூ. மற்றும் கேட்ச் ஆகியவற்றிற்கும் தொலைக்காட்சிப் பதிவுகளை பயன்படுத்தி மூன்றாவது நடுவர் வாயிலாக தீர்ப்பு வழங்கும் முறை சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.சி.சி. சாம்பியன் கோப்பை போட்டியில் பயன்படுத்தப்பட்டு நல்ல பலனை தந்தது.

ஆனால் அதனை உலகக் கோப்பையில் கடைபிடிக்கப் போவதில்லை என்று ஐ.சி.சி. அறிவித்திருப்பது கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

தொலைக்காட்சி தொழில்நுட்பத்தை உலகக் கோப்பைப் போட்டிகளில் பயன்படுத்தப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை அதற்கு கூறியுள்ள காரணம் தான் வினோதமாக உள்ளது.

ஐ.சி.சி. நடுவர்களாக உள்ள 8 நடுவர்களைத் தவிர, சர்வதேச நடுவர்களாக உள்ள மேலும் 12 நடுவர்கள் உலகக் கோப்பை போட்டிகளில் பணியாற்றப் போகிறார்கள் என்றும், அவர்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்கின்ற அனுபவம் இல்லை என்று கூறியுள்ளது. மேலும் அவர்களுக்கு அதன் பயன்பாட்டை விளக்க போதுமான நேரமும் இல்லை என்று ஐ.சி.சி.யின் பொது மேலாளர் டேவிட் ரிச்சர்ட்ஸன் கூறியுள்ளார்.

கேட்பதற்கே வியப்பாக உள்ளது. தொலைக்காட்சித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பெரிய அனுபவம் தேவையா என்ன? அப்படியே அவசியம் என்றாலும், அந்த 12 நடுவர்களுக்கும் தற்பொழுது நடைபெற்றுவரும் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலேயே அந்த பயிற்சியை அளிக்கலாமே?

நமக்கு இருக்கும் இந்த ஞானம் ஐ.சி.சி.க்கு இருக்காதா என்ன? விஷயம் வேறாக இருக்கலாம். அது என்னவென்பது உலகக் கோப்பை நடைபெறும்போதோ அல்லது அது முடிந்த பின்னரோ வெளிச்சத்திற்கு வரும்.

ஆனால் அதற்குள் பாதிப்பிற்குள்ளாகப் போவது கிரிக்கெட் ஆட்டம்தான்.

Share this Story:

Follow Webdunia tamil