தன் சொந்த மண்ணில் மொஹாலியில் அடித்த சதத்தின் பலத்துடன் களமிறங்கிய இந்திய எதிர்கால நட்சத்திரம் என்று வர்ணிக்கப்படும் கம்பீர் தொடர்ந்து ஆஸ்ட்ரேலிய வீரர்களின் மைதான வசைகளையும் மீறி சதத்தின் மூலம் தன் மனோபலத்தை அவர்களுக்கு நிரூபித்ததோடு இந்திய அணியையும் பலமான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
கவாஸ்கர்-பார்டர் கோப்பையைக் கைப்பற்றும் திடமான மனோ நிலையில் டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 3-வது டெஸ்டில் இந்தியா களமிறங்கியது.
மொஹாலியில் பெற்ற மிகப்பெரிய தோல்வியின் பின்னணியில் ஆஸ்ட்ரேலியர்கள் புதிய உத்திகளை வகுத்துள்ளதாக நாள்தோறும் கூறி வந்தனர். ஆனால் புதிய உத்திகளை எதுவும் வகுத்ததாக தெரியவில்லை. குறிப்பாக பூவா தலையா தோற்று முதலில் பந்து வீச வேண்டுமென்றால், என்ன மாதிரியான உத்திகளைக் கடைபிடிப்பது என்பது பற்றி ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் தெளிவாக இல்லை என்பதையே இன்றைய அவரது களத்தடுப்பு உத்திகள் காண்பித்தன.
உணவு இடைவேளையின் போது தன்னம்பிக்கையுடன் சென்ற ஆஸ்ட்ரேலியா உணவு இடைவேளை முடிந்து கம்பீரின் பொறுமையினாலும், டெண்டுல்கரின் பேட்டிங் திறமையாலும் செய்வதறியாது திகைத்தனர்.
தேனீர் இடைவேளைக்கு முன் டெண்டுல்கர் ஆட்டமிழந்தது அவர்கள் அதிர்ஷ்டம் என்றால் மிகையாகாது.
இதற்கிடையே இரண்டு சம்பவங்கள் இன்றைய தினத்தை ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தையும் கம்பீருக்கு மனோபலத்தையும் அளித்துள்ளது.
முதலில் ஷேன் வாட்சன் தொடர்ந்து பந்து வீசிவிட்டு கம்பீருக்கு அருகில் சென்று ஏதாவது வசையை உதிர்த்து அவரை உசுப்பி வந்தார். கம்பீர் மேலேறி வந்து அடிக்கிறார் என்றால் அது அவரது தன்னம்பிக்கை சார்ந்த விஷயம். அதற்காக ஆத்திரப்பட்டு அவரை வசைபாடுவது ஐ.சி.சி.யின் ஒழுக்க விதிகளை மீறுவதாகும்.
கம்பீரும் வசையை எதிர்வசையாலும், அதிரடி ஆட்டத்தாலும் எதிர்கொண்டு வந்தார். ஆனால் சுற்றி நிற்கும் ஆஸ்ட்ரேலிய வீரர்கள் அவரை தொடர்ந்து வெறுப்பேற்றியபடி வந்தனர்.
வெறுப்பின் முத்தாய்ப்பாக கம்பீர் 99 ரன்களில் இருந்த போது ஷேன் வாட்சனின் பந்தை 3, 4 அடி மேலேறி வந்து லாங் ஆன் திசையில் தூக்கி சிக்சருக்கு அடித்து சதத்தை எட்டினார்.ஆஸ்ட்ரேலிய வீரர்கள் லேசாக சீண்டுவார்கள், அதற்கு எதிரணியினர் ஆக்ரோஷமாக வினையாற்றுவார்கள். ஆனால் இதனால் எதிரணியினர் ஒன்று விக்கெட்டுகளை இழப்பார்கள் அல்லது ஐ.சி.சி. விதிகளின் படி அபராதமாக பணத்தை இழப்பார்கள். இதுதான் நடந்து வருகிறது. மொஹாலியில் ஜாகீர் கானுக்கும் இதுதான் நடந்தது.தூண்டுபவர்களை விடுத்து தூண்டுதலுக்கு பலியாகுபவர்களுக்கு அபராதம் விதிப்பதையே ஐ.சி.சி. தன் வழக்கமாக கொண்டுள்ளது.
மற்றொரு சம்பவத்தில், சைமன் கேடிச் வேண்டுமென்றே ரன்னர் முனையில் இருந்த கம்பீரை ஓட விடாமல் குறுக்காக வந்து நின்றார். இது பல முறை நடந்தது. ஆனால் கடைசி முறை அவரது செய்கையால் லக்ஷ்மண் ரன் அவுட் ஆகத்தெரிந்தவுடன் கம்பீர் சில சொற்களை கேடிச்சிடம் பயன்படுத்தினார். அவரும் பதிலுக்கு ஆக்ரோஷமாக ஏதோ கூறினார். நடுவர் தலையிட்டதால் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.
ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர்கள் பொதுவாக தங்களது அணி வீரர்களை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு அவர்களின் மோசமாக நடந்துகொள்ள தூண்டி விடுகின்றனர். வீரர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக அணித் தலைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டால்தான் இந்த இழிவிலிருந்து கிரிக்கெட் விடுபடும்.
கிரிக்கெட்டை ஆக்ரோஷமாக, போட்டி மனப்பான்மையுடன் திறமையாக விளையாடுவது என்பதில் இன்னொரு வீரரை வசை பாடுவது என்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வசைபாடும் மனோ நிலை மைதானத்தில் கணத்தில் தோன்றி மறையும் சாதாரண நிகழ்வு அல்ல. பிறரின் மீது எப்போதும் இருந்து வரும் கட்டற்ற துவேஷத்தின் வெளிப்பாடு என்பதாக புரிந்து கொள்ளப்பட்டால் "ஸ்லெட்ஜிங்" என்பதை முற்றிலும் ஒழிக்க முடியும்.
இன்று கம்பீர் ஆஸ்டேலிய வீரர்களின் அனைத்து தூண்டுதல்களுக்கும் செவி சாய்க்காமல் ஆக்ரோஷமாக கிரிக்கெட் ஆட்டத்தை ஆடியதுதான் ஆஸ்ட்ரேலியாவின் இத்தகைய போக்கிற்கு விழுந்த பெரிய அடியாகும். ஆனால் ஆட்ட நடுவர்களுக்கென்று பணி இருக்கிறது. அதனை அவர்கள் நடு நிலையுடன் செய்வதே முறை.