இவரை ஆல்ரவுண்டர் என்று கவாஸ்கர் வர்ணித்த போது இங்கிலாந்து அணித் தலைவர் மைக் பிரியர்லீ சற்று கேலியாக போத்தமுடன் ஒப்பிடும் அளவிற்கு இவர் ஒன்றையும் சாதிக்கவில்லை என்றார். இதனையும் உடைத்தெரிந்தார் கபில்.மேற்கிந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை 1982இல் விளையாடியபொழுது, 'டெஸ்டில் கிழித்தாகி விட்டது அடுத்து ஒரு நாள் போட்டி வேறா?' என்று மூத்த கிரிக்கெட் ரசிகர்கள் கேலி பேசினர். பெர்பைஸ் ஒரு நாள் போட்டியில் 282 ரன்களை 47 ஓவர்களில் இந்தியா குவித்தது. அதில் கபில் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் சகிதம் 72 ரன்களை விளாசினார். அன்று அணித்தலைவராக இருந்த கபில் 4ஆவது வீரராக முன் கூட்டியே களமிறங்கினார். பின்பு முதல் ஓவரில் கார்டன் கிரீனிட்ஜ் விக்கெட்டை வீழ்த்தி அந்த போட்டியை வெற்றி பெற வைத்தார் கபில்.
முதன் முறையாக, வெற்றி பெற முடியாத மேற்கிந்திய அணிக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியவர் கபில். அந்த போட்டி முடிந்தவுடன் கிளைவ் லாய்ட் தனது அணிக் கூட்டத்தில் உலகக் கோப்பைக்கு இன்னமும் சிறிது நாட்களே இருக்கும் நிலையில் இந்தியாவின் இந்த வெற்றியை நம்மை சிந்திக்க வைத்துள்ளது என்று கூறினார். மேலும் இது இனிமேல் நடக்க அனுமதிக்கக்கூடாது என்று கடிந்தும் கொண்டார்.
அதன் பிற்கு 1983 உலகக் கோப்பை வெற்றி இன்றைய வரலாறாகி விட்டது. அதன் பிறகே இந்தியாவின் கிராமப்புறங்களுக்கெல்லாம் கிரிக்கெட் பிரபலமடைந்தது.
இன்று இந்திய கிரிக்கெட் எட்டியுள்ள புதிய உயரத்த்திற்கு அடிக்கல் நாட்டியவர் கபில்தேவ். அவருக்கு இன்று 50வது பிறந்த நாள். இந்தியாவை உலக கிரிக்கெட் அரங்கில் தலை நிமிரச்செய்த இவரை நாமும் வாழ்த்துவோம்.