2011
ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி தோல்விகளை எளிதில் கணிக்க முடியத ஒரு அணி உள்ளது என்றால் அது பாகிஸ்தான் அணியாக மட்டுமே இருக்க முடியும்.1996
ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுந்த கிரிக்கெட் ஆட்ட நிர்ணய மோசடி, கிரிக்கெட் ஊழல்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியே.1999
ஆம் ஆண்டு ஹேன்சி குரோனியே சூதாட்டத்தில் ஈடுபட்டது வெளியே வர அடுத்தடுத்து பாகிஸ்தானின் சலீம் மாலிக், இந்தியாவின் அஜாருதீன், நிகில் சோப்ரா, நயன் மோங்கியா, அஜய் ஜடேஜா என்று பெயர்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன.ஆனால் அதன் பிறகு தென் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் சேதாரமில்லாமல் சிறந்த அணியாக உருவெடுக்க, பாகிஸ்தான் அதன் கிரிக்கெட் வாரிய முறைகேடுகள், மோசமான நிர்வாகம், சூதாட்டக்காரர்களுடன் வாரியத்திற்கே தொடர்பிருப்பதான செய்திகள் ஆமீர், பட், ஆசிப் விவகாரம், ஹைதர் என்ற விக்கெட் கீப்பர் சூதாட்டக்காரர்களின் மிரட்டலுக்கு பயந்து கிரிக்கெட்டை விட்டே ஒதுங்கியது என்று நிறைய நெருக்கடிகளைச் சந்தித்து இன்னமும் மீள முடியாமல் தத்தளித்து வருகிறது.வீரர்கள் சிலரின் நேர்மையின்மை, அக்தர், ஆசிப் போன்ற அனுபவ வீரர்களின் ஒழுக்கமின்மை ஆகியவற்றால் அந்த அணி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.இந்த நிலையில்தான் பாகிஸ்தான் அரசியல் நிலமை காரணமாகவும், பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவும் இந்த உலகக் கோப்பையை சேர்ந்து நடத்தும் வாய்ப்பையும் இழந்தது. இருப்பினும் ஒரு அணியாக அந்த அணி திரண்டு எழுந்து விளையாடும் போர்க்குணம் கொண்டதால் இந்த உலக கோப்பை போட்டிகளிலும் அந்த அணியின் வாய்ப்புகளை நாம் சாதாரணமாக எடை போட முடியாது.கடந்த உலகக் கோப்பைகள்:1975
ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் 56 உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களில் 30 போட்டிகளில் வென்று 24 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. 2 ஆட்டங்கள் மழையால் ஆடப்படவில்லை.1992
ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இம்ரான் உள்ளிட்ட சில வீரர்கள் விலக 1996ஆம் ஆண்டு வயதான ஜாவேத் மியாண்டடை அணியில் வைத்துக் கொண்டு பாகிஸ்தான் களமிறங்கியது. காலிறுதியில் வாசிம் அக்ரம் விளையாட முடியாமல் போனது பற்றி பல்ருக்கும் சந்தேகம் எழுந்தது. அது சூதாட்டமாக இருக்குமோ என்று. அக்ரம் வீட்டில் கல்லடி விழுந்து அவரது குடும்பத்தினருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க நேரிட்டது. ஜடேஜாவின் அபார அதிரடி அரைசதத்தினால் காலிறுதியில் அந்த அணி தோற்க நேரிட்டது.
மேலும் பேட்டிங்கில் அன்வரும், அமிர் சொகைலும் அன்று அடித்த அதிரடி இந்திய ரசிகர்களுக்கு இன்றும் அச்சமூட்டுவதாகும். ஆனால் சொகைல் வெங்கடேஷ் பிரசாத்தை நோக்கி 'நீ எங்கு போட்டாலும் உன் பந்துகளை கொல்வேன்' என்பது போல் செய்கை செய்ய, சாதுவான பிரசாத் வெகுண்டு எழுந்தார். அடுத்த பந்தே சொகைல் பவுல்டு. அடுத்தடுத்து பிரசாத் விக்கெட்டுகளைக் கைப்பற்ற பாகிஸ்தான் தோல்வி தழுவி அதிர்ச்சிகரமாக வெளியேறியது.
1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி வாசிம் அக்ரம் தலைமையில் நன்றாக விளையாடி வந்து சூப்பர் சிக்சில் நுழைந்து முதல் ஆட்டத்தில் பலமான தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி தழுவியது. தென் ஆப்பிரிக்காவின் பயங்கரமான ஃபீல்டிங்கிற்கு இன்சமாம், மொயின் கான், யுகானா ஆகியோர் ரன் அவுட்டாக 220 ரன்களையே எடுத்தது.
மீண்டும் வந்து பந்து வீசிய அக்தர், அக்ரமின் ஓவர்களில் தீப்பொறி பறந்தது.கிப்ஸ், கர்ஸ்டன், கல்லினன், ரோட்ஸ், குரோனியே சொற்பமாக வெளியேற தென் ஆப்பிரிக்கா 58/5 என்று ஆனது. ஆனால் போலாக்கும் காலிஸும் இணைந்து ஸ்கோரை 135 ரன்களுக்கு உயர்த்த போலாக் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். காலிஸ் அபாரமான 54 ரன்களுடன் வெளியேற 45-வது ஓவரில் 177/6 என்று ஆனது. 34 பந்துகளில் 44 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆட்டம் பரபரப்பாக இருந்தபோது அதிரடி மன்னன் லான்ஸ் குளூஸ்னர் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஒரு ஓவர் முன்னதாகவே முடித்து வைத்தார்.
அடுத்த சூப்பர் சிக்ஸ் போட்டி இந்தியாவுடன். பாகிஸ்தான் இருந்த ஃபார்முக்கு அதனை சுலபமாக வென்றிருக்கவேண்டும். ஆனால் பேட்ஸ்மென்கள் சொதப்பியதால் இந்தியாவிடமும் தோல்வி தழுவியது. இந்தியா 227 ரன்கள் எடுக்க இலக்கைத் துரத்திய பாகிஸ்தான், ஸ்ரீநாத், பிரசாத், கும்ளே வீச்சுக்கு 180 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி தழுவியது. பிரசாத் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மீண்டும் பாகிஸ்தானை பழி தீர்த்தார். இந்தியாவுக்கு உலகக் கோப்பை வெற்றியை விட பாகிஸ்தானை வீழ்த்தியது ஒன்றே போதும் என்ற கொண்டாட்டம்.
இரண்டு தோல்விகள் ஏற்பட்டாலும் முதல் சுற்றில் பெற்ற புள்ளிகளுடன் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்று நியூசீலாந்தை எதிர்கொண்டது. அரையிறுதியில் நியூஸீலாந்து 241 ரன்கள் எடுக்க, இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி சயீத் அன்வரின் அபாரமான சதம், வாஸ்தி என்பவரது 84 ரன்களுடன் 1 விக்கெட்டை மட்டுமே பறிகொடுத்து வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது.
இறுதியில் ஆஸ்ட்ரேலியாவை எதிகொள்ள முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 132 ரன்களுக்குச் சுருண்டது. வார்ன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மெக்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலக்கை ஆஸ்ட்ரேலியா 20 ஓவர்களில் முடித்தது. கில்கிறிஸ்ட் பின்னி எடுத்தார். அக்தரின் 4 ஓவர்கள் 54 ரன்கள் போனது.
2003ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் போட்டியில் அதிரடி ஆஸ்ட்ரேலிய அணியிடம் தோல்வி தழுவி பிறகு சச்சின் சேவாக், அதிரடியில் இந்தியாவிடமும் தோற்று இங்கிலாந்திடமும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சிற்கு சுருண்டு தோல்வி தழுவி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது.
2007ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்னமும் மோசமாக பின்னடைந்து அயர்லாந்திடம் தோல்வி தழுவி அடுத்த சுற்றுகுத் தகுதி பெறாமல் அதிர்ச்சி வெளியேற்றம் கண்டது பாகிஸ்தான்.
ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகள் சில புள்ளி விவரங்கள்:
1973ஆம் ஆண்டு முதல் 2011 வரை 733 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள பாகிஸ்தான் 390 ஆட்டங்களில் வெற்றி பெற்று 321 ஆட்டங்களில் தோல்வி தழுவியுள்ளது.
வெற்றி பெற்ற இந்த 390 ஆட்டங்களில் இந்தியா, நியூஸீலாந்து இலங்கை ஆகிய அணிகளுடன் முறையே 69, 51, 70 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. 390 வெற்றிகளில் இதுவே 190 ஆட்டங்கள் கணக்கு வந்து விடுகிறது. வங்கதேசத்துடன் 25 போட்டிகள், ஜிம்பாவேயுடன் 36 போட்டிகள், ஸ்காட்லாந்துடன் 2, யு.ஏ.இ.யிடம் 2, ஹாங்காங் 2, கனடா 1, கென்யா 5, நமீபியா 1, ஹாலந்து 3. மொத்தம் 267 போட்டிகளை இந்த அணிகளுடன் பெற்றிருக்கிறது.
மீதமுள்ள 123 வெற்றிகளில் அது மேற்கிந்திய அணியுடன் 48 வெற்றிகளையும் ஆஸ்ட்ரேலியாவுடன் 29 வெற்றிகளையும் இங்கிலாந்துடன் 28 வெற்றிகளையும் தென் ஆபிரிக்காவுடன் 18 வெற்றிகளையும் பெற்றுள்ளது. சரிவு கண்ட மேற்கிந்திய அணிக்கு எதிராகவே பாகிஸ்தான் 64 தோல்விகளைச் சந்தித்துள்ளது.
இந்தியாவிலும், இலங்கையிலும் வெற்றிகள் அதிகம் தோல்விகள் குறைவு. பொதுவாக ஆசிய நாடுகளில் 417 ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் 256 போட்டிகளை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2010/11 ஆம் ஆண்டு 23 ஒருநாள் போட்டிகளில் 8-இல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது பாகிஸ்தான், 14 ஆட்டங்களில் தோல்வி.
இம்ரான் கான் (1982- 1992), இன்சமாம் உல் ஹக் (2002- 2007), வாசிம் அக்ரம் (1993- 2000) வக்கார் யூனிஸ் (1993- 2003) ஆகியோர்களே அதிக போட்டிகளில் அணித் தலைமை பொறுப்பேற்றுள்ளனர். இவர்கள் தலமையில் பாகிஸ்தான் அதிக போட்டிகளை வென்றுள்ளது. குறிப்பாக இம்ரானின் தலைமையில் 139 போட்டிகளில் 74-இல் வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான். அடுத்ததாக வாசிம் அக்ரம் 109 போட்டிகளில் 66 போட்டிகளை வென்றுள்ளார். இன்ஜமாம் 87 போட்டிகளில் 51-இல் வெற்றி கண்டுள்ளார்.
தற்போது கேப்டனாக இருக்கும் ஷாகித் அஃப்ரீடி 20 போட்டிகளில் 9-இல் வென்று 10-இல் தோற்றுள்ளார்.
2011 உலகக் கோப்பை வாய்ப்புகள்:
இந்த முறை எந்த உலக கோப்பையைக் காட்டிலும் கணிக்க முடியாத அணி என்ற நிலவரத்தில் உச்சத்தை எட்டியுள்ளது பாகிஸ்தான்.
ஏனெனில் நினைத்துப்பார்க்க முடியாத இடத்திலிருந்து வெற்றி பெறுவதும் அதேபோல் தோல்வியே இனி சாத்தியமில்லை என்ற நிலையிலிருந்து தோல்வி தழுவுவதும் பாகிஸ்தான் அணிக்கு சகஜமாகிவிட்டது என்பதாலேயே கணிப்பு கடினமாகி விடுகிறது.
பந்து வீச்சு அபாயகரமாக உள்ளது. ஷோயப் அக்தர், உமரு குல், வஹாப் ரியாஸ், அப்துல் ரசாக், ஷாகித் அஃப்ரீடி என்று உலகத் தரமான பந்து வீச்சு உள்ளது.
பேட்டிங்கில் ஹஃபீஸ் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஷேஜாத் ஒரு புதுமுகம், யூனிஸ் கான் மட்டுமே அனுபவ வீரர். உமர் அக்மல் ஒரு கறுப்புக் குதிரை அவர் மட்டும் மனது வைத்தால் தனி ஆளாகவே வெற்றி பெற வைக்க முடியும். ஆனால் சமீபமாக அவரது ஆட்டம் திறமைக்கேற்ப இல்லை.
அஃப்ரீடி ஆட்டம் சூடு பிடித்தால் எந்த ஒரு பந்துவீச்சும் அன்று சுண்ணாம்புதான். அதே போல் அப்துல் ரசாக். இவர் போட்டியை எந்த சரிவிலிருந்தும் வெற்றியாக மற்றக்கூடிய திறமை படைத்த அதிரடிப் புலி. இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சமீபமாக துபாயில் அடித்த அதிரடி 10 சிக்சர்கள் கொண்ட சதம் ஸ்மித்தின் துர்கனவாக இன்றும் இருக்கும் என்று நம்பலாம்.
அனைத்தையும் மீறி இந்த வீரர்கள் ஒருநாளில் படு மோசமாக சோடை போகலாம், மறு நாளில் பயங்கரமாக எழுச்சியுறலாம். ஒருவரும் கணிக்க முடியாது.
எழுச்சியுறும் ஆட்டம் காலிறுதியாக இருந்தால் அன்று வெளியேறும் அணி துரதிர்ஷ்டம் வாய்க்கபெற்றது என்று கூறுவது தவிர வேறு வழியில்லை.
நியூஸீலாந்தை இந்த அணி வீழ்த்த வாய்ப்புகள் அதிகம் ஆனால் ஆஸ்ட்ரேலியா, இலங்கையுடன் போராட வேண்டி வரும். இவர்கள் பிரிவில் ஜிம்பாப்வே வேறு உள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
இவையெல்லாவற்றையும் மீறி, பி.சி.சி.ஐ. பாகிஸ்தான் கிரிக்கெட்டை மறைமுகமாக அழிக்கச் செய்து வரும் சூழ்ச்சிகளும், ஐ.சி.சி. அதற்கு துணை போவதும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இந்த பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தாலே அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முகத்தில் கரியை பூசுவதாக அமையும்.
சூதாட்டம் மற்றும் சூழ்ச்சிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எந்த அணியை விடவும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட வேன்டிய கடும் தேவையும் நெருக்கடியும் உள்ள அணி பாகிஸ்தான் என்றால் அது மிகையாகாது.
பாகிஸ்தான் அணி: அப்ரீடி, மிஸ்பா உல் ஹக், அப்துல் ரசாக், அப்துல் ரஹ்மான், அகமட் ஷேஜாத், ஆசாத் ஷஃபீக், கம்ரன் அக்மல், மொகமட் ஹஃபீஸ், சயீத் அஜ்மல், ஷோயப் அக்தர், சொகைல் தன்வீர், உமர் அக்மல், உமர் குல், வஹாப் ரியாஸ், யூனிஸ் கான்.