கிரிக்கெட்டையும் கடந்த, கிரிக்கெட் விளையாட்டு புள்ளிவிவரங்களையும் கடந்த நிலையில் அவர் புனிதப் பொருளாக மற்றப்பட்டுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் நம் மூத்த தலைகளை விடவும் அபாரமாக முரளிதரனையும், அஜந்தா மென்டிசையும் விளையாடிய சுரேஷ் ரெய்னா ஏன் இரானி கோப்பையில் இடம்பெறவில்லை?
சம்பந்தமில்லாமல் திடீரென மொகமத் கய்ஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் விளையாடிய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வர்ணனையாளர்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் எந்த ஒரு இன்னிங்சையும் கய்ஃப் ஆடிவிடவில்லை, ஆனால் அவருக்கு "வாய்ப்பு" அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கய்ஃப் விளையாடிய ஆஸ்ட்ரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் பியூஷ் சாவ்லா அபாரமாக பேட்டிங் செய்ததோடு பந்து வீச்சிலும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் அவர் இல்லை!
இலங்கை தொடர் எதிரொலிதான் சவ்ரவ் கங்கூலியை தேர்வு செய்ய விடாமல் செய்துள்ளது என்றால், சச்சினுக்கும், திராவிடிற்கும் என்ன விதி விலக்கு? குறைந்தது இவர்கள் அனைவரையுமே தேர்வு செய்யாமல் நேரடியாக ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இறக்கியிருக்கலாமே. இரானி கோப்பையில் இளம் வீரர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று ஒரு சப்பைக்கட்டை அவிழ்த்து விட்டிருக்கலாமே!
அதாவது திராவிட், லக்ஷ்மண், கும்ளே, சச்சின் ஆகியோரையும் நாங்கள் பரிசோதனை செய்த பிறகே தேர்வு செய்வோம் என்பது போன்ற ஒரு மாயையை அணித் தேர்வு குழு ஏற்படுத்தியுள்ளது. பரிசோதனைக்கு பிறகே தேர்வு என்றால் ஏன் கங்கூலி நீக்கப்படவேண்டும்? யாரை திருப்தி செய்ய இந்த நீக்கம்?
சச்சின், செளரவ், திராவிட் ஆகிய மூவருமே 2006க்குப் பிறகு எடுத்து கொண்டால் அவர்கள் இதற்கு முன் ஆடியது போல் ரன்களையும் எடுக்கவில்லை, ஆட்ட நேர்த்தியும் வெகுவாக சீரழிந்து வந்திருக்கிறது.
இதில் செளரவ் கங்கூலியாவது அணியிலிருந்து நீக்கப்பட்டு ஏகப்பட்ட பரிசோதனைகளைக் கடந்து மீண்டும் அணிக்கு வந்துள்ளார். அதனால் திராவிட், சச்சினுக்கு கிடைத்த தொடர்ச்சியான வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை என்பதையும் நாம் கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும்.
நாம் திறமையை பற்றி குறிப்பிடவில்லை, அல்லது திராவிடை விட சச்சினை விட கங்கூலி சிறந்த பேட்ஸ்மெனா என்ற விவாதத்திற்குள் செல்ல வேண்டிய அவசியமுமில்லை. அந்த உயர்மட்ட கிரிக்கெட் அரங்கில் திறன் என்பது ஒப்பு நோக்கக்கூடியதல்ல. இருந்தாலும் புள்ளி விவரங்களே கிரிக்கெட்டை ஆட்டிப்படைக்கும் இந்த சூழலில் நாமும் சிறு ஒப்பு நோக்குதலை செய்வோம்.
2000 முதல் 2006-ஆம் ஆண்டு வரை திராவிட் 72 டெஸ்ட் போட்டிகளில் 6400 ரன்களை, 61.53 என்ற சராசரியில், 17 சதங்கள், 30 அரைசதங்களுடன் பெற்றுள்ளார். இதுதான் அவரது கிரிக்கெட் வாழ்வில் உச்சத்திற்கு சென்ற காலக் கட்டம். இதில் குறிப்பாக 2003ஆம் ஆண்டு 5 டெஸ்ட்களில் 100.37 என்ற உயர்ந்தபட்ச சராசரியை வைத்திருந்தார்.
ஒப்பு நோக்குகையில் இந்த காலக்கட்டத்தில் செளரவ் கங்கூலி - அதாவது 2000-06ல் 58 டெஸ்ட் போட்டிகளில் சுமார் 3000 ரன்களையே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்பொழுது அவர் அணித் தலைவராக இருந்தார். இந்திய அணி அதிக டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தியது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
ஆனால் இதே காலக்கட்டத்தில் உலகிலேயே அதிக ரன்களை குவித்த மற்ற இரண்டு வீரர்கள் ரிக்கி பாண்டிங்கும், மொகமத் யூசுஃபும்தான். மற்ற இந்திய வீரர்களில் சச்சின் 61 டெஸ்ட்களில் 4,749 ரன்களை எடுத்துள்ளார். லக்ஷ்மண் 63 டெஸ்ட்களில் 4,238 ரன்களை எடுத்துள்ளார். சேவாகை நாம் இவர்கள் பட்டியலில் சேர்க்கமுடியாது. ஆனால் அவரும் இதே காலக்கட்டத்தில் 51 டெஸ்ட் போட்ட்களில் 4,111 ரன்களை சராசரி 50 உடன் எடுத்துள்ளார்.
இவர்களை ஒப்பு நோக்குகையில் கங்கூலி சற்று குறைவு என்பதை நாம் ஒப்புக் கொள்வோம். இதே புள்ளி விவரத்தை 2007ஆம் ஆண்டு நாம் கணக்கிட்டால் 10 போட்டிகளில் செளரவ் கங்குலி 1,106 ரன்களை 61.44 என்ற சராசரியுடன் பெற்றுள்ளார். திராவிடின் சராசரி 2007ல் இதே 10 போட்டிகளில் 35.64 மட்டுமே.
2006ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கருக்கு செளரவ் கங்கூலியைவிடவும் மோசமான ஆண்டு. 8 டெஸ்ட் போட்டிகளில் 267 ரன்களை 24.27 என்ற சராசரியில் பெற்றிருந்தார். இந்த காலக்கட்டத்தில்தான் பிரட் லீ இவரை விடவும் அதிக பேட்டிங் சராசரியை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2007ஆம் ஆண்டு மீண்டும் செளரவின் 60க்கும் மேற்பட்ட சராசரிக்கு எதிராக சச்சின் 9 டெஸ்ட் போட்டிகளில் 776 ரன்களை 55 என்ற சராசரியைப் பெற்றிருந்தார். 2008ஆம் ஆண்டு திராவிட், கங்கூலி இருவருக்குமே மோசமாக அமைய, சச்சினும் பெரிய அளவுக்கு ஒன்றும் செய்து விடவில்லை, ஆஸ்ட்ரேலிய தொடரையும் சேர்த்து 42.58 தான் இவரது சராசரி.
இப்போது இவர்களுக்கு ஆஸ்ட்ரேலிய தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என்றால் கங்கூலிக்கும் இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டியதுதான் என்று நாம் கூறலாம்.
மொத்தத்தில் அணித் தேர்வுகளில் எந்த ஒரு தர்க்கமும் அடிப்படையாக இருப்பதில்லை என்பதே நமக்கு இதன் மூலம் தெரிய வருகிறது. கங்கூலியை இவ்வாறு நடத்த வேண்டிய அவசியமில்லை. அவரை அழைத்து பேசி விடலாம். ஒரு நாள் போட்டிகளில் நன்றாக விளையாடிய போது தோனி அவரை வேண்டாம் என்றார். ஆனால் அதற்கான நியாயத்தை அவர் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறலாம்.
டெஸ்ட் போட்டியில் அணிக்கு மீண்டும் வந்த பிறகு செளரவ் தோல்வியடைந்த ஒரே தொடர் கடந்த இலங்கை தொடர் மட்டுமே. மற்ற வீரர்கள் அவ்வப்போது இது போன்ற தொடர் சரிவுகளையும் கண்டவர்களே, ஆனால் அவர்கள் ஏதோ தோல்வி காணாத வீரர்கள் போலவும், செளரவ் கங்கூலி மட்டுமே இது போன்ற சரிவிற்கு பழக்கப்பட்டவர் போலும் செய்வது நியாயமாகாது என்பதே நம் கருத்து.