Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ன கூற வருகிறார் வெங்கடேச பிரசாத்?

Advertiesment
கிரிக்கெட்
, வெள்ளி, 23 அக்டோபர் 2009 (18:12 IST)
2007ஆம் ஆண்டு கிரெக் சாப்பல் பயிற்சிக் காலத்திற்குப் பிறகு இந்தியாவின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட வெங்கடேச பிரசாத் சமீபமாக நீக்கப்பட்டுள்ளார். அவரிடம் விவாதிக்காமல், அவர் ஏதோ செய்தித் தாளை படித்து இந்த நீக்கல் விஷயத்தை தெரிந்து கொள்ளவேண்டியதாயிற்று என்பது தவிர அந்த நீக்கம் நியாயமானதுதான் என்று தோன்றுகிறது.

ஆனால் தன்னை நீக்கியது பற்றி பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை நகைச்சுவையாக உள்ளது.

FILE
"என்னுடைய மனசாட்சியின் படி கூறுகிறேன், நான் 100% என்னை அர்பணித்தேன், எனது முயற்சியிலும், கடமையிலும் நான் தவறியதில்லை. ஆனால் நாம் ஒன்றைத் தெரிந்து கோள்ளவேண்டும். எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டேயிருக்க முடியாது. நாம் ஒவ்வொரு தோல்விக்கும் பந்துவீச்சாளர்களையும், ஃபீல்டர்களையும் குறை கூறிக் கொண்டே இருக்க முடியாது. கிரிக்கெட் என்பது ஒரு அணியாக திரண்டு விளையாடுவதுதான்" என்று கூறியுள்ளார்.

இந்த கூற்றில், முதல் பாதி எல்லாரும் பொதுவாக அழுவது. அதாவது நான் அர்ப்பணித்தேன், நான் பங்களித்தேன், என்னை இது போன்று நடத்தி விட்டார்கள் என்று பயிற்சிப் போறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் பொதுவாக அழுவதுதான். அதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.

ஆனால் கூற்றின் பிற்பகுதி தமாஷாயுள்ளது. தோல்வி பற்றி கேரி கர்ஸ்டனிடம் கேட்டால், பேட்ஸ்மென்களை நாம் குறை கூற முடியாது. என்பார். வெங்கடேச பிரசாத்தை கேட்டால் பந்து வீச்சாளர்களை குறை கூற முடியாது, பிட்ச் சரியில்லை, இரண்டாவதாக பந்து வீசியிருந்தால் நன்றாக வீசியிருப்போம், கிரிக்கெட் என்பது ஒரு அணியாக திரண்டு விளையாடுவது என்றெல்லாம் கூறுவார். ராபின் சிங்கைக் கேட்டால், ஃபீல்டிங் ஒரு பிரச்சனைதான், ஆனால் ஒரு போட்டியை தோற்கச்செய்யும் அளவிற்கு அதற்கு வலுவில்லை என்பார்.

ஆக, பேட்டிங், பந்து வீச்சு, ஃபீல்டிங் ஆகிய கிரிக்கெட் ஆட்டத்தின் 3 இன்றியமையாதவையின் குறைபாடுகளை நாம் சுட்டிக் காட்டக்கூடாது. பேட்டிங், பந்து வீச்சு, ஃபீல்டிங் எதையுமே தவறு என்று கூறக் கூடாது என்றால், எது காரணம் என்று வெஙடேச பிரசாத் கூற வருகிறார்?

இந்திய அணி விமானத்தில் ஏறிய நேரம் சரியில்லை. அப்போது எமகண்டம், போட்டி பகலிரவு ஆட்டமாக நடந்தது, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அன்றைய தினம் நம் அணி விளையாடியிருக்கக் கூடாது. டாஸ் போடச் சென்ற போது நல்ல ஹோரை இல்லை, டாஸில் தோற்றோம், பேட்டிங் களமிறங்கும் போது சரியான ராகு காலம்.

webdunia
FILE
இஷாந்த் ஷர்மா ஓடி வந்து வீசிய திசையில் அன்றைய தினம் சூலம். ஹர்பஜன் சிங் தங்கியிருந்த விடுதி அறை வாஸ்துப்படி சரியாக இல்லை. கேப்டன் தோனி விக்கெட் கீப்பிங் செய்த இடம் சரியாக கூற வேண்டுமென்றால் மைதானத்தின் ஈசான மூலை. அங்கு பேடு கட்டி நின்றதால் எதுவும் விளங்காமல் போய்விட்டது.

ரவி சாஸ்திரி, பெயரிலேயே சாஸ்திரியை வைத்து கொண்டு களமிறங்கும்போதே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்று வாயை வைத்தார்.

யூனிஸ் கானின் ஜாதக விசேஷப்படி அவருக்கு சுக்ர தசை நடைபெற்றது. 8ஆம் இடத்திலிருந்த சூரியனை குரு அழகாகப் பார்த்தார். இதனால் அவரது வெற்றியை ஒருவராலும் ஒன்றும் செய்து விட முடியாது.

தொடக்கத்திலேயே இடது கை வீரர் கம்பீரும், இடகு கை பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் பேட்டையும் பந்தையும் கையிலெடுக்கின்றனர். துவக்கத்திலேயே இடது கை... இது ஒரு அபசகுனம்.

விடுதியிலிருந்து போட்டிக்கு கிளம்பும்போது பூனை குறுக்காக வந்து விட்டது. ஆகிய காரணங்களைத்தான் தோல்விக்கு முக்கிய காரணங்களாகக் கூறவேண்டும் என்று கூற வருகிறாரா வெங்கடேச பிரசாத்?

பந்து வீச்சாளர் தடுமாறுகிறார், அதுவும் கடந்த ஓராண்டு காலமாக இந்திய பந்து வீச்சின் முன்னணியாகத் திகழ்ந்த இஷாந்த் ஷர்மா திணறுகிறார். அவருக்கு எந்த வித உதவியும் பயிற்சிப் போறுப்பிலிருக்கும் வெங்கடேச பிரசாத் மூலம் வரவில்லை. ஃபீல்டிங் தொடர்ந்து எப்பவும் ஒரு பிரச்சனையாக இருந்து கொண்டிருப்பது நமக்கு தெரியும். ஆனால் யுவ்ராஜ் சிங், ரெய்னா, கோலி போன்ற நல்ல ஃபீல்டர்களும் சோம்பேறியாக நகர்வதும், கேட்சை கோட்டை விடுவதுமாக இருந்து வந்துள்ளனர். ஆனால் பயிற்சியாளர்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்துள்ளனர்.

தோல்வி ஏன் என்று கேட்டால் நியாயமான எந்த ஒரு காரணத்தையும் இவர்களால் கூற முடியாது. பேட்ஸ்மென், பந்து வீச்சாளர், ஃபீல்டர் என்று எந்த ஒரு துறையைச் சேர்ந்தவர்களையும் விமர்சிக்கக் கூடாது. ஆனால் கிரிக்கெட் ஒரு அணியாக திரண்டு விளையாடப்படும் ஆட்டம் என்று கூறப்படும். பேட்ஸ்மென், பவுலர், ஃபீல்டர் ஆகியோர் இல்லாத வேறு ஏதாவது அணி உள்ளதா என்ன?

மேலும் எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். கிரிக்கெட் ரசிகர்கள், குறிப்பாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆட்டத்தின் நுணுக்கம் தெரிந்தவர்கள்தான். தோற்கும் விதம்தான் பிரச்சனை. ஒரு அணி 325 ரன்களையோ அல்லது 360 ரன்களையோ அடிக்கிறது. ஆனால் நாம் 170 ரன்களை மட்டுமே திருப்பி அடிக்கிறோம்.

அதே போல் நாம் 270 ரன்களை அடிக்கிறோம், எதிரணியினர் அதனை 44 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து சுலபமாக எட்டி வெற்றி பெறுகின்றனர். கடைசி வரை போராடும் குணம் எங்கே போயிற்று? மிக எளிதாக ஒரு போட்டியை சவாலின்றி தோற்று விட்டு, அல்லது எதிரணியிடம் சரணடைந்து விட்டு, பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் ஆகியவற்றை குறை கூறக் கூடாது என்றும், அனைத்து போட்டிகளையும் வெல்ல முடியாது என்றும் கூறி வருவது தவறானதாகும்.

ஆகவே நீக்கி விட்டாரகளே என்று அங்கலாய்ப்பதை விட, புலம்புவதை விட, தான் என்ன தவறுகளைச் செய்தோம் என்பதை பிரசாத் போன்றவர்கள் நேர்மையாக பரிசீலிக்கவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil