இளமையே வெற்றியின் ரகசியம்
, செவ்வாய், 5 ஏப்ரல் 2011 (16:20 IST)
2011
ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா அபாரமாக வென்றது. இதற்குப் பலகாரணங்களில் ஒன்று அணியின் இளம் வீரர்கள் நெருக்கடி தருணங்களில் தங்களது திறமையை வெளிப்படுத்தியது என்றால் அது மிகையாகாது.பிப்ரவரி 19ஆம் தேதியன்றே இது நிரூபணமானது. சச்சின் டெண்டுல்கர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆக, அன்று சேவாக் என்ற மூத்த வீரருடன் இணைந்தவர் வீரட் கோலி என்ற இளம் வீரர். அவரும் அன்று சதம் எடுத்ததை நம்மில் பலர் இன்று மறந்திருப்போம். ஆனால் அதுதான் இன்றைய வெர்ற்றியின் அன்றைய துவக்கம்2007
ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முதலாம் சுற்றில் வெளியேறிய பிறகு இந்திய வீரர்கள் பலர் தங்களுக்குள் உறுதி மொழி எடுத்துக் கொண்டே விளையாடினார்கள். தோனி தலைமையில் அதன் பிறகு இந்தியா பல வெற்றிகளைக் குவித்தது. அதில் குறிப்பாக ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற கடைசி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில், முதல் 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. தோனியின் துவக்கம் அன்று ஆரம்பமானது.அப்போதும் சச்சின் ஒரு முனையில் சிறப்பாக ஆட, உத்தப்பா, ரோஹித் ஷர்மா, தோனி போன்றவர்கள் சிறப்பாகச் செயல் பட்டனர். பந்து வீச்சில் இஷாந்த் ஷர்மா, பிரவீண் குமார், இர்ஃபான் பத்தான் உள்ளிட்ட எண்ணற்ற இளம் வீரர்கள் பங்களிப்புச் செய்தனர்.அதன் பிறகு நிறைய இருதரப்பு ஒருநாள் தொடர்களில் சேவாக், சச்சின் இல்லாமலேயே இளம் வீரர்களைக் கொண்டு தோனி வென்று காட்டினார். குறிப்பாக இலங்கையில் இரண்டு ஒருநாள் தொடர்களை வென்றது, மேற்கிந்திய தீவுகளில் தொடரை வென்றது. ஆசியக் கோப்பை, காம்பேக் கோப்பை என்று தோனி அணி முத்திரைப் பதிக்கத் தொடங்கியது.அந்த இளம் வீரர்களின் அடித்தளம் மூத்த வீரர்கள் என்ற அனுபவத்துடன் இணையும் போது அதுவும் தோனி என்ற தைரியமான கேப்டன் தலைமையில் இணையும் போது முடிவுகள் சாதகமாக அமைவதில் வியப்பில்லை.
உலகக் கோப்பைக்கு முன்பான தென் ஆப்பிரிக்கத் தொடரில் யூசுப் பத்தான் 70 பந்துகளில் சதம் அடித்து தனக்கான இடத்தைப் பெற்றார். அவர் இந்த உலகக் கோப்பையில் ஏமாற்றமளித்தார் என்று கூறவியலாது. ஏனெனில் அவர் களமிறங்கும்போதெல்லாம் இந்தியா வெற்றியின் தறுவாயில் இருந்தது. அல்லது 45 ஓவர்கள் முடிந்திருந்தது.இந்த உலகக் கோப்பையில் அதே போல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அந்த அணி வெற்றியை நோக்கி முன்னேறி வந்த நிலையில் அஷ்வின் தனது பந்து வீச்சின் மூலம் வெற்றியை உறுதி செய்தார். அதுவும் அவர் தன் முதல் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.அதன் பிறகு அவர் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் துவக்க ஓவர்களை வீசி ஷேன் வாட்சனை வீழ்த்தியதால் அந்த அணி சரியான துவக்கம் காணாமல் ரன் எடுப்பதில் மந்த நிலை உருவாக்கப்பட்டது.அதே காலிறுதியில் தன் முதல் போட்டியை விளையாடிய சுரேஷ் ரெய்னா எந்த வித தட்டுப்பாடும் பயமும், நெருக்கடியும் இல்லாமல் பிரட் லீ பந்தை லாங் ஆன் திசையில் அடித்து என்னையா உட்கார வைத்தாய்? என்று கூறுவது போல் சிக்சருக்கு விரட்டினார்.அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராகவும் ரெய்னா கடைசியில் எதிர்முனையில் சரியான நபர் இல்லாத போதும் ஸ்கோரை இறுதியில் உயர்த்தி வெற்றிக்கான சவாலான ஸ்கோரை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தார்.தொடர் முழுதும் முனாஃப் படேல் ஒரு சில ஸ்பெல்களை சிறப்பாகவே வீசினார். ஆனால் நெருக்கடி தருணங்களில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சொதப்பினாலும், காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டியில் அவரது முதல் ஸ்பெல் குறிப்பிடத்தகுந்த வகையில் அமைந்தது.
இறுதிப்போட்டியில் இலங்கை அணியை முதல் 15 ஓவர்களில் 58 ரன்களுக்கு மட்டுப்படுத்தியதில் இவருக்கும் பங்களிப்பு உண்டு. அரையிறுதியிலும் இந்தியா 15 ஓவர்களில் 99 ரன்களை எடுக்க பாகிஸ்தானால் 70 ரன்களே எடுக்க முடிந்தது. இந்த 29 ரன்கள் வேறுபாட்டில்தான் அன்று பாகிஸ்தான் தோல்வி தழுவியது என்பது குறிப்பிடத்த்க்கது.காலிறுதியில் 260 ரன்கள் இலக்கை இந்தியா 187/5 என்ற நிலையிலிருந்து பலமான ஆஸ்ட்ரேலிய அணியை தோற்கடித்த போதே பாண்டிங் கூறிவிட்டார், இந்த இந்திய அணியை போகப்போக வீழ்த்துவது கடினம் என்று. அதுதான் நடந்தது.காலிறுதியில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக கம்பீர், கோலி 84/2 என்ற ஸ்கோரிலிருந்து எந்த வித பதட்டமும் இல்லாமல் 143 ரன்களுக்கு ஓவருக்கு 5.5 என்ற ரன் விகிதத்தில் உயத்தியது இன்றைய இளம் தலைமுறைகளால் மட்டுமே சாத்தியம்.ஒரு காலத்தில் ராகுல் திராவிட், லஷ்மண், இருந்தபோதும், அதற்கு முன்னால் ஜடேஜா, அசாருதீன், ராபின் சிங் இருந்தபோதும் பதட்டமில்லாமல் பெரிய இலக்குகளை துரத்தும் மனோ நிலை இல்லை.மீண்டும் இறுதிப் போட்டியில் கம்பீர், கோலி இணை தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை இலங்கையின் கையில் இருந்து பிடுங்கினர். பிறகு தோனி என்ற இளம் கேப்டன் தனது அபாரமான ஆட்டத்தினால் கோப்பையை வென்றார்.உள்நாட்டு கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை, ஒருநாள் போட்டிகளிலிருந்து இத்தகைய வீரர்களை உருவாக்க முடியாது. ஐ.பி.எல். கிரிக்கெட்டின் மூலம் சில வீரர்கள் இங்கு வந்து தங்களது அச்சமற்ற போக்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.திறன் படைத்த இளம் வீரர்கள் குழுவை உருவக்குவது இதற்காகத்தான் அவசியம். அவ்வாறு இருந்திருந்தால் இர்ஃபான் பத்தானை நாம் கோட்டை விட்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதே போல் தற்போதே அடித்தளம் போட்டால் மணீஷ் பாண்டே, சௌரப் திவாரி, அம்பாட்டி ராயுடு, தமிழகத்தின் சதீஷ் பந்து வீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வீசிய அந்த இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்று இன்னும் எத்தனையோ எதிர்கால வீரர்களை உருவாக்க முடியும்.அவ்வளவுதான் என்று ஒதுக்கிவிடப்பட்ட சௌரவ் கங்கூலி பட்டறையில் உருவான பார்த்தீவ் படேலும் இன்று இளம் வீரர்தான். அவரை நமக்கு மீண்டும் கண்டுபிடித்துக் கொடுத்தது ஐ.பி.எல். கிரிக்கெட். ஐ.பி.எல். கிரிக்கெட் கிரிக்கெட்டே அல்ல என்றாலும் அது ஒரு வெறும் பொழுது போக்கு என்றாலும், நிறைய இளம் வீரர்களுக்கு அது ஒரு சிறந்த அரங்கேற்றமாக அமைகிறது.இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் யுவ்ராஜ் சிங்கின் எழுச்சியைப் பற்றி பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் மிகவும் சிறப்பாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார். அவரை அணியிலிருந்து நீக்கிய பிறகு உடல் தகுதி, பேட்டிங், பந்து வீச்சு என்று பயிற்சி மேற்கொண்டாலும் ஃபீல்டிங்கை மேம்படுத்துவதில் அவர் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார்.இது ஒரு முக்கியமான விஷயமாகும். ஏனெனில் அவர் தான் இழந்த பேக்வர்ட் பாயிண்ட் பகுதியில் மீண்டும் அபாரமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினார். விராட் கோலி, ரெய்னா என்று ஆஃப் சைடில் இறுதிப் போட்டியன்று அற்புதமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினர்.இளம் வீரர்கள் அணிக்குள் வரவர ஃபீல்டிங் மேம்படும், ஃபீல்டிங் ஒன்று அபாரமாக மாறினால் அது மோசமான பேட்டிங், மற்றும் பந்து வீச்சை சரிகட்டிவிடும்.இந்த உலகக் கோப்பை வெற்றியுடன் தங்களது லட்சியம் முடிந்துவிட்டதாக வீரர்கள் நினைக்கலாகாது. இது ஒரு துவக்கம் என்பதை மனதில் கொண்டு அடுத்த உலகக் கோப்பை முடியும் வரை உலகக் கிரிக்கெட்டை ஆஸ்ட்ரேலியா போல் இந்தியாவும் ஆதிக்கம் செலுத்துவதே குறிக்கோளாக இருப்பது அவசியம்.தோனியால் அது நிச்சயம் முடியும் என்று நம்பலாம்.