Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இருபதுக்கு 20 வெற்றி- ஆஸி. ஊடகங்களின் எரிச்சல்!

Advertiesment
இருபதுக்கு 20 வெற்றி- ஆஸி. ஊடகங்களின் எரிச்சல்!

Webdunia

, செவ்வாய், 23 அக்டோபர் 2007 (14:23 IST)
ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவை இந்திய அணி அடித்து நொறுக்கியது. இச்செய்தியை வெளியிட்ட ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள், தங்களது எரிச்சலை பல்வேறு விதமாக வெளிப்படுத்தியுள்ளன.

உதாரணத்திற்கு சிலவற்றை நாம் பார்ப்போம்:

ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளம் (இது ஸ்டார் தொலைக்காட்சிக் குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத் தக்கது). இதில் இருபதுக்கு 20 போட்டியை பற்றி எழுதியவர் ஒரு இந்தியர். இவர் செய்தியின் முன் பகுதிகளில் போட்டியை நடு நிலையுடன் வர்ணிக்கிறார். ஆனால் திடீரென மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் எவரும் அடி வாங்காதது போல ஸ்ரீசாந்தை ஆஸ்ட்ரேலிய வீரர்கள் புரட்டி எடுத்ததற்கு புளகாங்கிதம் அடைந்துள்ளார் (he was flogged by the australian batsmen all round the park) என்று எழுதியுள்ளார்.

webdunia photoWD
ஆனால், உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்... ஆஸ்ட்ரேலியா செல்லும்போது இந்தியாவை நசுக்கப்போகும் பிரட் லீ, 3.1 ஓவரில் 35 ரன்கள் கொடுத்து உத்தப்பா, யுவராஜ், தோனியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை எழுதவில்லை... அதன் பிறகு இந்திய அணியின் கொண்டாட்டங்களை பற்றி ஒரு கேலியான பார்வை. இது ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்திய விதம்.

சிட்னி மார்னிங் ஹெரால்ட், ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் என்றால் அதிக உணர்ச்சி வசப்படும் ஒரு பத்திரிக்கை... அதில் அலெக்ஸ் பிரவுன் என்பவர் எழுதுகிறார்: "Australia won the toss and elected to bash...." பூவா-தலையா வென்ற ஆஸி. அணியினர் விளாசலைத் தேர்ந்தெடுத்தனர் என்று எழுதுகிறார்.

இவர் மேலும் எழுதுகிறார்... "...ஆட்ட நாயகன் கவுதம் காம்பீர் அடித்த 63 ரன்களுக்கு கார் பரிசு, அவர் சதம் எடுத்திருந்தால் கற்பனை செய்து பாருங்கள்... மேலும் இருபதுக்கு 20 போட்டியில் நுழைந்த ஆர்பாட்டத்திலும், நாடகத்திலும் சிந்தனையை இழந்து விட்டனர்..." மேலும்... "இந்திய
சந்தைக்கு ஏற்ற வடிவம் இந்த இருபதுக்கு 20" என்று அரிய கண்டுபிடிப்பை வேறு உதிர்க்கிறார்.

இப்படி எழுதும் இவர்கள் ஆஸ்ட்ரேலிய சந்தையில் பணம் வந்தால் வெறுத்து ஒதுக்கி விடுவார்களாக்கும்?

"மட்டையின் பல இடங்களிலிருந்து பட்டு பந்து செல்லும்போது மட்டை சுழலுவதுதான் தெரிகிறது, கைவினைஞர்கள் இல்லை... கோடாரி வீரர்கள்" என்று எழுதியுள்ளார். அதாவது நமது வீர்ர்கள் ஆடுவது இவருக்கு மட்டயால் ஆடுவதாகத் தெரியவில்லையாம்.. கோடாரியால் வெட்டுவது போல் உள்ளதாம்.

மேத்யூ ஹைடனும், கில்கிறிஸ்டும் அடித்தால் கைவினைஞர்கள். இந்திய வீரர்கள் அடித்தால் கோடரி அடிதடி வீரர்கள்... எப்படி இருக்கிறது இந்த வயிற்றெரிச்சல் சித்திரம்.

மேலும் ஆட்டத்தை விட்டு விட்டார்கள். பிரபோர்ன் மைதானத்தில் ஸ்கோர் போர்டு இல்லையாம்... ரொம்ப முக்கியம்...அடுத்து பர்கர் கிடைக்கவில்லை... இத்தாலிய பாஸ்தாவில் உப்பு கொஞ்சம் அதிகம்... என்றெல்லாம் எழுதுவார்கள் போலிருக்கிறது. ஆஸ்ட்ரேலியா அடி வாங்கும்போதுதான் மற்ற விஷயங்கள் கூட தெரியும் போல் இருக்கிறது.

webdunia
webdunia photoWD
இந்தியாவின் வெற்றி கொண்டாட்டங்களை எரிச்சலுடன் எழுதாத பத்திரிக்கைகளே இல்லை. காருக்கு மேல் அமர்ந்து செல்வதை அசிங்கமாக இருக்கிறது என்று துவக்கத்திலிருந்தே எழுதி வருகின்றன. அதாவது போட்டி முடிந்த செய்தியாளர்கள் கூட்டம் நடந்த இடத்தில் பேனர் ஒன்று
வைக்கப்பட்டிருந்ததாம்... அதில் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் மும்பை கொண்டாட்டங்கள் பற்றிய "பைத்தியக்கார காட்சிகள்" இடம்பெற்றிருந்ததாம். ஆனால் சானல் 9 தொலைக்காட்சியில் டான் பிராட்மேன் கட்டியிருந்த வாட்ச், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் சொத்தையான இங்கிலாந்து அணியை வென்ற வீரர்களின் புகைப்படத் தொகுப்புகள்... மற்றும் ஆலன் பார்டர் உபயோகித்த கிளவுஸ்... இவற்றை ஏலம் விடப்படுவதை நாம் எப்படி பார்ப்பது?

இவையெல்லாம் இருக்கட்டும் இந்த பத்திரிக்கை இன்னும் சற்று மேலே போய் சிறு பிள்ளைத் தனமாக ஸ்ரீசாந்த் பந்தில் ஹெய்டன் அடித்த சிக்சரை வர்ணித்து அந்த பந்து மைதான மேற்கூரையை தாக்கவில்லை என்றால் சவ்பாத்தி கடற்கரைக்கு சென்றிருக்கும் என்று எழுதியுள்ளது. படு தோல்வியில் ஏற்பட்ட ஆறாத புண்ணை எவ்வாறெல்லாம் சொறிந்து விட்டுக் கொள்கிறது பாருங்கள் ஆஸி. ஊடகங்கள்.

தி டெய்லி டெலிகிராப் பத்திரிக்கை... இதன் செய்தி சற்று சுமார் ரகம். ஆனால் படித்து கொண்டே வந்தால் இதன் வயிற்றெரிச்சலையும் நாம் காணலாம்...

அதாவது ஒரு நாள் தொடரில் "4- 2 என்று இந்தியா தழுவிய தோல்வி தற்போது தொலைதூர நினைவு மட்டுமே..." அதன் பிறகு சைமன்ட்சிடம் மன்னிப்பு கோரும் விதமாக காண்பிக்கப்பட்ட ஓரிரு பேனர்கள் பக்கம் இந்த செய்தி செல்கிறது. பிறகு நமது ரசிகர்கள் திருந்தி விட்டார்கள் என்று எழுதுகிறது...

ஆனால் அனைத்து பத்திரிகையும் இருபதுக்கு 20 போட்டி குறித்த ரிக்கி பாண்டிங்கின் எதிர்மறையான கருத்தை குறிப்பிடத் தவறவில்லை. அதாவது இந்த 20- 20 என்ற "ஜன்க் ஃபுட்" என்று பாண்டிங் கூறியுள்ளார். இந்த கிரிக்கெட் "நிபுணரின்" கருத்து ஏதோ உலக மகா தத்துவம் போல் அனைத்து பத்திரிக்கைகளிலும் எதிரொலித்துள்ளன. ஜெயித்தால் இப்படி கூறுவார்களா? எதற்காக இந்த ஜங்க் ஃபுட் ஆட்டத்தை ஆடுகிறார்களாம்? காசு கிடைத்தால் எதையும் செய்வோம் என்பதுதானே பாண்டிங் கூறுவதன் அர்த்தம்?

தி ஆஸ்ட்ரேலியன்...இது, "பாலிவுட் என்ட் டு டூர்..." என்று தலைப்பிட்டுள்ளது. அதாவது, இருபதுக்கு 20 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டங்களின் சப்தங்கள் தங்களது காதில் ஒலிக்க இந்தியா வந்த ஆஸ்ட்ரேலிய அணி... என்று எல்லாமே சினிமாத்தனமாக இருந்தது என்று எழுதியுள்ளது.
இது எப்படி இருக்கிறது. இந்திய வெற்றியும், கொண்டாட்டங்களும் அவர்களுக்கு ஏதோ சினிமா கொண்டாட்டங்கள் போல் தெரிகிறது. இது இந்திய வெற்றியையும் கிரிக்கெட் மீது நம் ரசிகர்களின் ஈடுபாட்டையும் கொச்சை படுத்துவது போல் உள்ளது.

ஆஸ்ட்ரேலிய மண்ணில் கொண்டாட்டங்கள் இருந்தால் அந்த பாணியில் அவர்களும் கொண்டாட வேண்டியதுதானே?

பிரச்சனை அதுவல்ல... தங்கள் அணி தோல்வி தழுவினால் அவர்களது விமர்சனம் நமது பண்பாட்டின் மீது திரும்பும்... இதுவே இன வெறியாளர்களின் அடிப்படை உணர்வு.

இதை வைத்து இந்திய பண்பாடு ஒட்டுமொத்தமும் இதுபோன்ற பைத்தியக்கார கொண்டாட்டங்கள் நிறைந்தது என்ற நிலையான பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன...

விழாக்களும் விளையாட்டுகளும் மனிதர்கள் களித்து இன்புறும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் எந்த ஒரு பூர்வீக சமூகத்திற்கும் உரிமையானதுதான். சில சமூகங்கள் தொழில் நுட்ப கலாச்சாரம் வளர்ந்து விட்ட மாயையில் அதுபோன்ற கொண்டாட்டங்களை "பைத்தியக்காரத் தனம்" என்று நினைக்கின்றன. ஒரு சில பண்பாடுகள் அந்த பூர்விகப் பண்பாடுகளின் தொடர்ச்சியை தக்கவைத்துக் கொள்கின்றன. இதில் என்ன அருவருப்பு உள்ளது? இதில் அருவருப்பு தோன்றுகிறது என்றால் அவர்களின் மன ஆரோக்கியத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்றுதானே பொருள்?

Share this Story:

Follow Webdunia tamil