Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்றைய மேதைகள் முன்னாள் மேதைகள் வழியை பின் பற்ற வேண்டும்!

Advertiesment
சச்சின்
, புதன், 11 ஜனவரி 2012 (14:01 IST)
FILE
இன்றைய இந்திய பேட்டிங் மேதைகளான டிராவிட், சச்சின், லஷ்மண், சேவாக் ஆகியோர், முந்தைய பேட்டிங் மேதைகளான சுனில் கவாஸ்கர், மொஹீந்தர் அமர்நாத், திலிப் வெங்சர்க்கார், மற்றும் சந்தீப் பாட்டீல் ஆகியோரின் பாதையைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது.

பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு பவுன்ஸ் ஆட்டக்களம் தயாராக உள்ளது. இதில் ஆஸ்ட்ரேலிய வீரர்கள் சீரற்ற இந்திய பந்து வீச்சை எதிர்கொள்வதில் அதிக சிரமத்தை எதிர்கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் 4 வேகப்பந்து வீச்சாளர்களை ஆஸ்ட்ரேலியா வைத்துக் கொள்ள முடிவு செய்தால் இந்திய பேட்டிங் மேதைகளுக்கு துர்சொப்பனம் காத்திருக்கிறது.

இந்த நிலையில் முந்தைய இந்திய பேட்டிங் மேதைகள் கடைபிடித்த வழிவகைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். எப்போதும் பவுன்ஸ் ஆட்டக்களத்தில் சிறந்த வேகப்பந்தை எதிர்கொள்ளும் போது தாக்குதல் ஆட்டமே சிறந்த தடுப்பு உத்தியாகும் என்பது கிரிக்கெட் முதுமொழியாகும்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளைக் கண்டு இந்தியா திரும்பியுள்ள முன்னாள் வேகப்பந்து பேட்டிங் மேதை மொகீந்தர் அமர்நாத், இரண்டு முக்கியமான தொடர்களில் அதுவும் அயல்நாட்டில், இப்போது இந்தியா எதிர்கொள்ளும் வேகப்பந்தை விடவும் மோசமான வீச்சாளர்களை எதிர்கொண்டார்.

1980- 82 ஆம் ஆண்டுகளில் அமர்நாத் பாகிஸ்தான், மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்க்கு எதிராக தொடர்ச்சியாக ஒரு 11 டெஸ்ட் போட்டிகளை விளையாடினார். பாகிஸ்தானுடன் அந்தத் தொடரில் இந்தியா 0- 3 என்று மண்ணைக்கவ்வியது. சுனில் கவாஸ்கர் கேப்டன் பொறுப்பைத் துறந்தார். அந்தத் தொடரில் இம்ரான் கான், சர்ஃபராஸ் நவாஸ், சிகந்தர் பக்த் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களையும் அவர்களுக்குத் தோதான பாகிஸ்தான் மோசடி நடுவர்களையும் எதிர்கொண்டு அமர்நாத் 3 சதங்களுடன் 6 டெஸ்ட் போட்டிகளில் 581 ரன்களை விளாசினார்.

பிறகு கபில்தேவ் கேப்டன் ஆனார். அப்போது மேற்கிந்திய தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டோம். மேற்கிந்திய தீவுகளில் அப்போது அச்சமூட்டும் வேகப்பந்து நால்வரான ராபர்ட்ஸ், ஹோல்டிங், மார்ஷல், கார்னர் கூட்டணி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

அந்த 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 0- 2 என்று தோல்வி தழுவியது ஆனால் மொஹீந்தர் அமர்நாத் 2 சதங்கள் மற்றும் நிறைய அரைசதங்களுடன் 598 ரன்களை விளாசினார்.

மிகவும் அச்சமூட்டும் விரோதமான சூழ்நிலைமைகளில் 11 டெஸ்ட் போட்டிகளில் சுமார் 1,200 ரன்களை மொஹீந்தர் அமர்நாத் குவித்துக் காட்டினார்.

குறிப்பாக பார்படாஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா 209 மற்றும் 277 ரன்களையே எடுத்தது. இதில் அமர்நாத் ஒரு 91 மற்றும் 80 ரன்களை எடுத்தார். இது வேகப்பந்து வீச்சிற்கு எதிராக ஆகச் சிறந்த இன்னிங்ஸ்கள் என்று கிளைவ் லாய்ட், ரிச்சர்ட்ஸ், சோபர்ஸ் போன்றோர்களே பாராட்ட்ம் அளவுக்கு சிறந்த இன்னிங்ஸ் ஆகும். அதாவது இந்த இன்னிங்ஸ்களுக்கு உலக கிரிக்கெட்டில் ஈடு இணையில்லை என்பதே அப்போதைய நிபுணர்களின் கருத்தாக இருந்தது.

இதில் இரண்டாவது இன்னிங்ஸில் அமர்நாத்திற்கு மார்ஷல் ஒரு பவுன்சரை வீச அது அவரது வாயைப் பதம் பார்த்தது. ரத்தம் கொட்டியது. ஆனால் தையல் போட்டுக் கொண்டு வந்த அமர்நாத் 3 டவரிங் சிக்சர்களுடன் 80 ரன்களை எடுத்த பிறகே ஆட்டமிழந்தார்.

அதே தொடரில் சுனில் கவாஸ்கரும் கடுமையாகத் திணறினார். ஆனாலும் அவர் ஒரு டெஸ்ட் போட்டியிலும் பிறகு ஒரு நாள் போட்டி ஒன்றிலும் மைக்கேல் ஹோல்டிங்கை தனியாகக் கவனித்தார். முதல் 4 ஓவர்களில் சுனில் கவாஸ்கர் ஹோல்டிங்கை 28 ரன்கள் வரை விளாசி சதம் கண்டார்.

webdunia
FILE
கான்பூரில் அதேபோல் மார்ஷல் பந்து ஒன்று கவாஸ்கரின் மட்டையை கையிலிருந்து பறித்து தூக்கி எறிந்தது. அப்போது கவாஸ்கர் 24 சதங்களையே எடுத்திருந்தார். பேட் பறந்து விட்டது அவர் கிரிக்கெட் திறன் அவ்வளவுதான் என்றுதான் அனைவரும் அப்போது எழுதி வைத்தனர். ஆனால் டெல்லியில் அதற்கு அடுத்த போட்டியில் ஹோல்டிங், மார்ஷல், ஆகியோரை கவாஸ்கர் கடுமையாக ஹூக் செய்தார்.

முதல் 5 ஓவர்களிலேயே கவாஸ்கர் 2 பவுண்டரி ஒரு சிக்சரை அடித்திருந்தார். எல்லாம் ஹுக் ஷாட். 95 பந்துகளில் சதம் எடுத்தார் கவாஸ்கர். அமர்நாத் பிராமாதமாக ஆடிய பாகிஸ்தான் தொடரிலும் கவாஸ்கர் 3 சதங்களை எடுத்தார். அதில் துவக்கத்தில் களமிறங்கி கடைசி வரை நாட் அவுட்டாக 127 ரன்களை எடுத்தார் கவாஸ்கர்.

அதேபோல் அமர்நாத் 1977- 78 ஆஸ்ட்ரேலிய தொடரிலும் படு ஆக்ரோஷமாகவே பேட்டிங் செய்து தாம்சன், கிளார்க் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டார். ஒரு 87 ரன்களையும் ஒரு 78 ரன்களையும் அவர் அதிவேகமாக எடுத்தது இன்றும் நினைவில் உள்ளது.

திலிப் வெங்சர்க்கார் அது போலவே 1982, 83, 84ஆம் தொடர்களில் மார்ஷல், இயன் பிஷப், வால்ஷ் உள்ளிட்ட அச்சமூட்டும் பந்து வீச்சாளர்களைச் சந்தித்தபோதும் சில ஆட்டம்காணும் மோசமான இன்னிங்ஸ்களை ஆடினாலும், திடீரென ஒரு தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 93 ரன்கள் எடுத்தது இன்றும் மறக்க முடியாதது. அதேபோல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒரு 159 ரன்களையும் ஒரு 135 பந்து 100 ரன்களையும் வெங்சர்க்கார் எடுத்துள்ளார்.

1981ஆம் ஆண்டு உதித்த பெருமளவில் எதிர்பார்க்கப்படு துரதிர்ஷ்டவசமாக சொந்த வாழ்வுப் பிரச்சனை காரணமாக கிரிக்கெட்டில் பெரிய அளவுக்கு வர முடியாத ஆனால் பலத்த திறமை படைத்த சந்தீப் பாட்டீல் மற்றொரு உதாரணமாவார்.

இவர் 1981 ஆம் ஆண்டு லில்லி, பாஸ்கோ, ஹாக் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள நேர்ட்ட போது அடிலெய்டில் அவர் அடித்த 174 ரன்களை இன்று வரை ஆஸ்ட்ரேலியாவில் இந்தியர் ஆடிய மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று இயன் சாப்பல் வர்ணித்துள்ளார். அதை விட பாஸ்கோவின் ஒரு பந்தில் தாவாங்கட்டையில் அடி வாங்கி பிறகு களமிறங்கி அவர் எடுத்த 62 ரன்களும் சிறப்பாகப் பேசப்பட்டது.

அதன் பிறகு இவர் இங்கிலாந்து வேகப்புயல் பாப் வில்லிசை ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்ததும் உலகப் புகழ் பெற்றதே.

இவர்களிடமெல்லாம் என்ன சிறப்பென்றால் ஷாட் பிட்ச், பவுன்சர் என்றால் உடனே பந்து ஹூக் அல்லது புல் செய்யப்பட்டு விடும். இப்போது போல் அந்தப் பந்துகளை வீடு விட்டு வேடிக்கைப் பார்க்த்துக் கொண்டு ஃபுல் ஆக விழும் பந்துகளை ஆடச் சென்று எட்ஜ் செய்யும் வழக்கம் இவர்களிடம் இல்லை.

webdunia
FILE
சச்சின் டெண்டுல்கர் இப்போதெல்லாம் ஹூக், புல் ஆடுவதில்லை. ஆனாலும் அவர் வேறு ஒரு ஷாட்டை கண்டுபிடித்துக் கொண்டார். இருப்பினும் ஹூக், புல் ஷாட்கள் ஒரு காலத்தில் அவருக்கு நிறைய ரன்களைப் பெற்றுத் தந்துள்ளது.

பேக்ஃபுட்டில் ஆடுவது இவர்களுக்கு பிரச்சனை இருந்தது. ஆனால் முன்னங்காலில் வந்து ஆடுவது பழக்கமானதுதான். ஆனால் இப்போது ஆஸ்ட்ரேலியாவிலும், முன்பு இங்கிலாந்திலும் இந்த முன்னங்காலை முன் நகர்த்தி ஆடுவதில்தான் ஆட்டமிழந்தனர். அதாவது இன்றைய மேதைகள் அவர்களது பலத்தில் ஆட்டமிழக்கின்றனர். ஆனால் முந்தைய மேதைகள் ஷாட் பிட்ச், பவுன்சரை ரன் எடுக்கும் வாய்ப்பாகா மாற்றினர்.

எனவே மட்டையை படுக்கை வசமாக வைத்து ஆடும் கட், புல், ஹூக் ஷாட்களே பெர்த்தில் கை கொடுக்கும், அதனை நாங்கள் ஆடமாடோம், "மடி" யாக நாங்கள் அதனை விட்டு விடுவோம் என்பதெல்லாம் பேட்டிங் உத்தியேயல்ல.

சேவாக், சச்சின், திராவிட், லஷ்மண் போன்றோர்கள் ஹூக், புல்ஷாட்களை அதிகாரமாக பயன்படுத்தினால்தான் கோலி, கம்பீர், ஏன் தோனியே கூட தைரியமாகப் பயன்படுத்துவார்கள். ஆஸ்ட்ரேலியாவில் ரன் வரும் பந்துகள் என்பது ஷாட் பிட்ச் பந்துகள்தான், அதனை ஆடாமல் விடுத்து நாம் டிரவ் ஆடுவதில் ஜாம்பவான்கள் என்று ஃபுல் ஆக விழும் ஸ்விங் பந்துகளை காலைப் போட்டு டிரைவ் ஆடினால் பந்து இந்தியாவாக இருந்தால் கவர் திசையில் செல்லும், ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் பந்து நேராக ஸ்லிப், கல்லி திசையில் செல்லும், எனவே அங்கு ஃபுல் ஆக ஸ்விங் ஆகும் பந்துகளில் ரன் இல்லை என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.

இந்த நுணுக்கம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அல்லது ஆட்டத்தை மாற்றிக் கொள்ள முடியாததாலோதான் வாசிம் ஜாஃபர், மொகமட் கயீஃப், தேவங் காந்தி, தினேஷ் கார்த்திக், இன்ன பிற எண்ணாற்ற வீரர்கள் தேசிய கிரிக்கெட்டில் பெரிய அளவுக்கு முன்னுக்கு வர முடியவில்லை.

ஆஸ்ட்ரேலியர்கள் சிம்பிளாக என்ன செய்கிறார்கள் டிராவிட், கம்பீர், சச்சின், லஷ்மண் ஆகியோருக்கு நிறைய ஷாட் பிட்ச் பந்துகளை வீசுகின்றனர். இவர்கள் இதனை ஆடாமல் விட்டு விடுவதால் ரன்கள் மந்தமடைகின்றன. உடனே கவலை வந்து விடுகிறது அடுத்ததாக ஒரு ஃபுல் பந்தை குட் லெந்தில் வீசுகின்றனர். ஆஹா என்று ஆடச் செல்கின்றனர் பந்து விளிம்பைத் தட்டி கேட்ச் ஆகிறது அல்லது இன்ஸ்விங்கராக இருந்தால் மட்டையின் உள்விளிம்பில் பட்டு குச்சியைப் பெயர்க்கிறது.

பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் எந்தப் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை அவர் என்னவிதமான ஆலோசனைகளை வழங்குகிறார் என்பது இன்று வரை பெரிய மர்மமாக உள்ளது.

பெர்த் மைதானத்தில் கவாஸ்கர், அமர்நாத், வெங்சர்க்கார், சந்தீப் பாட்டீல், கபில்தேவ் ஆகியோரது வழிமுறைகளை பின்பற்றினால்
இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகம் ஏனெனில் இப்போது பந்து வீச்சில் ஓரளவுக்கு வெற்றி வாய்ப்பு தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil