ஆஸ்ட்ரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்சை நோக்கி வதோதரா, நாக்பூர், மும்பை ரசிகர்கள் குரங்கு போல் செய்கைகளை செய்தது இந்திய ரசிகர்களின் "நிறவெறி" என்பதாக மீண்டும் மீண்டும் கூப்பாடு போடும் ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள், அதனை உறுதியாக நம்பவைக்க திட்டமிட்டு பெரிதாக்கி, இந்திய ரசிகர்கள் நிறவெறியாளர்களே என்ற உருவகத்தை கட்டமைக்க தீவரமாக முயன்று வருகின்றன.
மும்பையில் நேற்று நடைபெற்ற 7வது இறுதி ஒரு நாள் போட்டியில் ஆன்ட்ரூ சைமண்ட்ஸ் களமிறங்கிய போதும், பிறகு அவர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியபோதும் மும்பை ரசிகர்களில் ஒரு பகுதியினர் அவரை நோக்கி குரங்கு சேஷ்டைகளை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது பற்றி ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கையாளர் ஒருவர் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனால் இப்பிரச்சனை சூடு பிடித்துள்ளது. அதன் பிறகு 4 பேரை மும்பை காவல் துறையினர் மைதானத்திலிருந்து வெளியேற்றினர். ஆனால் அவர்களின் நடத்தையை நிறவெறி என்று காவல்துறையினர் கூறவில்லை. அவர்கள் நடத்தை பொது இடத்திற்கு ஏற்றதாக இல்லை, எனவேதான் வெளியேற்றினோம் என்றுதான் கூறியுள்ளனர்.
உண்மை இவ்வாறிருக்க சிட்னி மார்னிங் ஹெரால்ட், ஏஏபி, ஹெரால்ட் சன், தி ஆஸ்ட்ரேலியன் ஆகிய செய்தி ஊடகங்கள் தொடர்ந்து "இந்திய நிறவெறி" என்று ஒரு (இல்லாத) மாயையை கட்டமைக்க படாத பாடுபட்டு வருகின்றன.
உதாரணத்திற்கு ஓரிரு மேற்கோள்களை சுட்டுவோம் :
ஹெரால்ட் சன் : மும்பை தனது அசிங்கமான பகுதியை நேற்று காட்டி விட்டது. சைமன்ட்சை நோக்கி நிறவெறி செய்கைகளையும், தனி நபர் வசையிலும் ஈடுபட்டது.
சைமண்ட்ஸ் களமிறங்கும்போது 40,000 மும்பை ரசிகர்களும் எழுச்சி பெற்றனராம். எழுந்து நின்ற ஒவ்வொரு தலையையும் எண்ணி முடித்து விட்டார் போலும். இந்த "நிறவெறி" வசையால் நிலை குலைந்து போன சைமன்ட்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து விட்டாராம் என்று விசனத்துடன் எழுதியுள்ளது.
"பார்வையாளர்கள் பலர் கொரில்லா போல் மேலும் கீழும் குதித்தனர் மிருகங்கள் போல் சப்தமெழுப்பினர்...." ( இதுதான் உண்மையில் இந்திய ரசிகர்களின் மீதான நிறவெறிப் பாய்ச்சல் என்று நாமும் கூறலாமே)
சிட்னி மார்னிங் ஹெரால்ட்: "...இப்போது நிறவெறி இல்லை என்று மறுக்க முடியாது"... "இந்தியாவிலேயே பகைமையும், திராவகம் வீசுதல் போன்ற துவேஷமும் உடையவர்கள் மும்பை ரசிகர்கள்". "சைமண்ட்சை வில்லன் போல் சித்தரிக்கிறது இந்திய செய்தி ஊடகங்கள்" (எவ்வளவு பெரிய கட்டுக்கதை) "தொடரின் இறுதிப்பகுதியில் நிறவெறி இழை நெய்யப்பட்டுள்ளது, இனியும் பிசிசிஐ அதன் தலைகளை மண்ணில் புதைக்க நினைத்தால் ஐசிசியின் கோபத்திற்கு ஆளாகவேண்டி நேரிடலாம்" (ஐசிசி என்ன பெரிய கொம்பா?)
தி ஆஸ்ட்ரேலியன் : "ரசிகர்களின் தொடர்ந்த குரங்கு சேஷ்டைகளால் அதிர்ந்து போன சைமன்ட்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்..." "இந்திய கிரிக்கெட் வாரியம் நிறவெறி வசையை மறுத்த அடுத்த தினமே இது நடந்திருக்கிறது"
ஆக ஒட்டு மொத்த ஆஸி. ஊடகமுமே ரசிகர்களில் ஒரு சிலரின் வினோதமான நடத்தையை இந்திய ரசிகர்களின் நிறவெறி என்பதாகவும், சற்று மேலே போய் இந்திய நிறவெறி என்றும் கூட கதை கட்டி விட்டுள்ளன.
மிகக் குறைந்த மக்கள் தொகைக்கு செய்திகளை அளித்து வரும் சிறிய ஆஸ்ட்ரேலிய ஊடகங்களுக்கே இத்தனை முடியுமென்றால். 100கோடி மக்களுக்கு செய்திகளை அளித்து வரும் நமது ஊடகங்கள் என்னவெல்லாம் செய்ய முடியும்?
சைமண்ட்சை இந்திய ஊடகங்கள் வில்லனாக காண்பிக்கிறது என்று சிட்னி மார்னிங் ஹெரால்ட் கூறுகிறது. ஆனால் ஸ்ரீசாந்த்-சைமன்ட்ஸ் இடையே நடந்த மோதலின்போது என்ன எழுதியது "ஸ்ரிசாந் மூக்கு உடைந்திருக்கும்... சைமன்ட்ஸ் மதச் சார்பற்றவர் அமைதியானவர். எனவே பேசாமல் சென்று விட்டார்..." இது இந்திய வீரர் அல்லது இந்திய ரசிகர்கள் அல்லது இந்தியாவே மதவெறி பிடித்த நாடு என்று கூறுவதாகாதா? இப்போது ஸ்ரீசாந்தை அது வில்லனாக சித்தரிக்கவில்லையா?
உண்மையில் இந்த தொடரில் சைமன்ட்சை ஏன் இலக்காக கொள்ளவேண்டும்? இதற்கு "நிறவெறி" என்ற அபாண்டக் குற்றச் சாட்டு தேவைதானா?
கறுப்பர் இனத்தை சேர்ந்தவராக இருப்பினும் அவர் ஆஸ்ட்ரேலிய வெள்ளையர் இனத்திற்கு இணையாக வளர்ந்து விட்டவர்தான். அவரிடமும் ஒரு வெள்ளை மேட்டிமை இருக்கிறது. இதற்கு உதாரணமாக ஒன்றை குறிப்பிடலாம். இருபதுக்கு20 உலகக் கோப்பை வெற்றியை கொண்டாட துவங்கியதிலிருந்தே, இந்திய வீரர்களை இழிவாக சைமன்ட்ஸ் பேசி வந்துள்ளார். மேலும் தொலைக்காட்சிகளில் இந்திய வீரர்களை பார்ப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது என்று கூறி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதற்கு வெள்ளை மேட்டுக்குடிகள் கறுப்பர் இன மக்கள் மீது பயன்படுத்தும் நிறவெறி வசைக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. எவ்வளவோ ஆப்பிரிக்க வீரர்களும், மேற்கிந்திய வீரர்களும் வந்து காலங்காலமாக இங்கு விளையாடி வந்துள்ளனர். அவர்கள் இது போன்ற புகார்களை எழுப்பியதில்லையே.
இன்னொரு சுவாரஸ்யமான சமாச்சாரம் ஒன்றையும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது. நாக்பூர் ஒரு நாள் போட்டியில் ரசிகர்களின் சைமன்ட்சை நோக்கிய செய்கைகளை ஒரு ஆஸ்ட்ரேலிய புகைப்படக்காரர் படம் பிடித்து விட்டாராம். ஆனால் அந்த படங்கள் திடீரென மாயமாய் மறைந்து விட்டதாம்.
கஸ் வொர்லேன்ட் என்ற ஆவணப்பட தயாரிப்பாளரின் உதவியாளர் மேட் வெய்ஸ் என்பவர் தான் அது போன்ற எந்த வித புகைப்படங்களையும் தான் எடுக்க வில்லை என்று கூறியதாகவும், ஆனால் வொர்லேன்ட் நாக்பூர் ரசிகர்களில் ஒருவரிடம் பேசியது தன்னுடைய கேமிராவில் உள்ளது என்றும் கூறியுள்ளார். சரி இதனால் என்ன என்கிறீர்களா... இந்த வொர்லேன்ட் என்பவர்தான் ரசிகர்களை குரங்கு சேஷ்டைக்கு தூண்டினார் என்பதே அது. இதனையும் சிட்னி மர்னிங் ஹெரால்ட் கூறியுள்ளது. இந்தப் படம் தற்போது ஹாங்காங் வழியாக ஆஸ்ட்ரேலியாவிற்கு கூரியர் மூலம் சென்று விட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
ஓஹொ! சைமண்ட்ஸ் மீதான நிறவெறியைத் தூண்டியதே ஒரு ஆஸ்ட்ரேலியர்தான் என்று நாம் முடிவுக்கு வரலாமா!
மொத்தத்தில் இந்திய வீரர்கள் குறித்து சைமன்ட்ஸ் கூறிய கருத்து இந்திய ரசிகர்களின் கோபத்தை கிளறியுள்ளது. அவரை வாயை அடக்கிக் கொள்ளுமாறு அறிவுரை செய்ய அங்கு ஆளில்லை. ஆனால் ஸ்ரீசாந்த தடை செய்யவேண்டும் என்று எழுதுகிறது. பிற நாட்டிற்கு வந்தால் அங்குள்ள பண்பாட்டை புரிந்து கொண்டு நடந்து கொள்வதுதான் அரசு தூதர் அளவிற்கு கருதப்படும் ஒரு வீரருக்கு அழகு.
இந்திய ரசிகர்கள் அயல் நாட்டு விளையாட்டு வீரர்களை காழ்ப்புணர்ச்சியுடன் பார்த்ததாக எவரொருவரும் இதுவரை கூறியதில்லை. ஏனெனில் அவர்களுக்கு ரசிப்புத்தன்மை, வேறு எந்த நாட்டவரையும் விட, அதிகமானது, ஆழமானது. தங்கள் நாட்டு அணி ஜெயிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்தான், ஆனால் வெற்றி வெறி கொண்டவர்களோ அல்லது அதை ஒரு கெளரவப் பிரச்சனையாகவோ எடுத்துக்கொள்வதில்லை.
ஆனால், ஆஸி. ஊடகங்களுக்கு... உண்மை ஒரு பொருட்டல்ல!