அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒரு நாள் போட்டியின் போது தன்னை இந்திய ரசிகர்கள் இன துவேஷத்துடன் கிண்டலடித்தார்கள் என்று ஆஸ்ட்ரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் குற்றம் சாற்றியது மிக ஆழமாக கவனிக்கப்பட வேண்டிய குற்றச்சாற்றாகும். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவோ, இந்திய ரசிகர்களுக்கு எதிராகவோ இது நாள் வரை யாரும் தெரிவிக்காத ஒரு குற்றச்சாற்றை ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் தெரிவித்துள்ளதும், அதனை ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கமும், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பும் ஊதிப் பெரிதாக்கியுள்ளதும், சைமன்ட்ஸின் குற்றச்சாற்று குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கமளிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) கேட்டுக் கொண்டிருப்பதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளத் தக்கதல்ல. மைதானத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும் வீரர்களை அவர்களின் காதுபட, பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் சிலர் நகைச்சுவையுடன் ஏதாவது கூறுவது புதிதல்ல, என்றாலும் அவ்வாறு கூறப்படும் கருத்துக்கள் அல்லது கிண்டல் வார்த்தைகள் ஒரு ஆட்டக்காரரின் இனத்தைப் பற்றியதாகவோ அல்லது அவரது உடல் அமைப்பை தொடர்பு படுத்துவதாகவோ இருந்தால் அது கண்டிக்கத்தக்கதே. அகமதாபாத்தில் நடந்தது தொடர்பாக இதுவரை வெளியான செய்திகள் மற்றும் தகவல்களைக் கொண்டு பார்த்தால், ரசிகர் ஒருவர் சைமன்ட்ஸ் கவனிக்கும் போது அவரைப் பார்த்து குரங்கு சேஷ்டை என்று நாம் கூறுவோமே அப்படி முகத்தைச் சுளித்து சைகை செய்துள்ளார் என்பது தெரிகிறது. இதனை கண்டிக்கலாம். கண்டிக்கக்கூடியதே. ஆனால், இப்படிப்பட்ட சைகை எப்படி இன துவேஷம் (இன அடிப்படையில் சிறுமைபடுத்துவது) என்று கூறிட முடியும் என்பதே கேள்வி. ஆனால், இது இன துவேஷ அடிப்படையிலான சைகையாகவே ஆஸ்ட்ரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் கருதுவாரேயானால், அது எப்படி இன துவேஷம் ஆகும் என்பதை அவர்தான் முதலில் விளக்க வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் எந்தப் பகுதியில் போட்டி நடைபெற்றாலும், அதனைப் பார்க்க வரும் ரசிகர்கள் கருத்துக் கூறுவது, கேலி பேசுவது இயல்பானதுதான். இதனையும் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆஸ்ட்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஆலன் பார்டர், முன்னாள் வீரர் மார்க் வா ஆகியோர் கூறியுள்ளனர்.
ஒன்றை நாம் தெளிவாகவும், உறுதியாகவும் கூறிட முடியும். இந்திய ரசிகர்களுக்கு இன துவேஷப் பார்வை என்பது இல்லை என்பதே அது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் முழுமையான ஈடுபாடு கொண்டவர்கள் என்பது மட்டுமின்றி, மற்ற நாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடும் போது ரசிகக் கூடியவர்கள், பாராட்டக் கூடியவர்கள்.
வெற்றி, தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்பவர்கள்தான். ஆனால், வெற்றியைக் கொண்டாடுவது போல, இந்திய அணி தோல்வியடையும் போது அவர்கள் துக்கம் அனுஷ்டிப்பதில்லை. விளையாட்டில் எல்லாம் சகஜம்தான் என்பதனை யதார்த்தமாக ஏற்கும் உளப்பாங்கு கொண்டவர்கள்.
அகமதாபாத்தில் நடந்த போட்டியின் முடிவில் காலி தண்ணீர் பாட்டில்களை மைதானத்தில் வீசியது கூட, இந்திய அணியின் மோசமான ஆட்டத்தினால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் வெளிப்பாடே தவிர, தோற்றதனால் அல்ல. அடுத்த போட்டி நாக்பூரில் நடந்தது. இந்திய அணி சிறப்பாக ஆடியும் தோற்றது. யாரும் எதையும் எடுத்து மைதானத்திற்கு வீசவில்லையே. இதுதான் இந்திய ரசிகர்களின் உளப்பாங்கிற்கு எடுத்துக்காட்டாகும். எனவே, எந்த நாட்டவரும் உறுதியாக ஒன்றை நம்பலாம். இன துவேஷம் என்பது இந்தியனின் பார்வையில் ஒரு நாளும் இருந்ததில்லை. அதுவும் கிரிக்கெட் ரசிகனின் பார்வையில் அந்த சாயல் சற்றும் இருந்ததில்லை. மாறாக, இந்தக் குற்றச்சாற்றைக் கூறிய ஆஸ்ட்ரேலிய அணியினர்தான் ஜென்டில்மேன்ஸ் கேம் என்றழைக்கப்பட்ட கிரிக்கெட்டை தங்களின் ‘அபார’ நடத்தையினால் முரட்டு ஆட்டமாகவும், போர் விளையாட்டாகவும் மாற்றியவர்கள். இதற்கு அந்நாட்டு ரசிகர்களும், ஊடகங்களும் கூட பங்களித்திருக்கின்றனர் என்பது கிரிக்கெட்டை நீண்டகாலமாக கவனித்து வரும் அனைவரும் அறிவர். ஆஸி. அணியே அனைத்தையும் துவக்கியது!ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய வெள்ளை அணிகள் விளையாடும்போது தான் இந்த இனப்பிரச்சனை, இன துவேஷம், இன வெறி போன்றவையெல்லாம் கிரிக்கெட்டில் வெளிப்படுகிறது. எதிரணி வீரர்களைப் பார்த்து வசைபாடுவது (ஸ்லட்ஜிங்) என்பதை துவக்கியதே இந்த ஆஸ்ட்ரேலிய அணிதான். 1963-64 ஆம் ஆண்டில் அடிலய்ட் நகரில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில்தான் இப்படி எதிரணியினரைத் திட்டும் வழக்கம் உருவானதாக ஆஸ்ட்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் இயன் சாப்பல் கூறியுள்ளார். இந்த ஸ்லட்ஜிங் என்பதை மறைமுக நிறவெறி வசை அல்லது நிறவெறி உணர்வை வெளிப்படுத்த முடியாத தருணத்தில் பிரயோகம் செய்யும் வசை மொழி என்று கூறலாம். அப்போதிலிருந்து 30 ஆண்டுகாலமாக எதிரணி வீரர்களின் கவனத்தை திசை திருப்ப இந்த ஸ்லட்ஜிங், பந்து வீசிய பிறகு அவர்களைப் பார்த்து முறைப்பது, பெளன்ஸர் வீசி அடிப்பட்டால் ஏளனமாகப் பார்ப்பது அல்லது சிரிப்பது, அதே பெளன்ஸரை தூக்கி அடித்துவிட்டால் பேட்ஸ்மேனைப் பார்த்து முறைத்துக் கொண்டு நிற்பது, எச்சில் துப்பிவிட்டுச் செல்வது, ஒன்றாக சேர்ந்து கொண்டு பேட்ஸ்மேன்களை நக்கல் செய்வது போன்ற ‘நாகரீகமான’ நடத்தைகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய அணிதான் ஆஸ்ட்ரேலியா. இதற்காக அந்த அணியினரை அந்நாட்டு கிரிக்கெட் அமைப்பு கண்டித்ததுமில்லை, அது குறித்து ஒருபோதும் ஐ.சி.சி. விளக்கம் கேட்டதும் இல்லை. ஆஸி. நடத்தையும், கண்டுகொள்ளாத ஐ.சி.சி.யும்!
இதுமட்டுமல்ல, விதிமுறைகளுக்கு புறம்பான நடத்தை இவர்களுக்கே உரியது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஸ்டீவ் வாஹ் தலைமையில் ஆஸ்ட்ரேலிய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது (2003) பிரையன் லாரா, ராம் நரேஷ் சர்வான் ஆகியோரை நோக்கி பந்து வீச்சாளர் கிளன் மெக்ரா அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சித்ததை ஐ.சி.சி. கண்டுகொள்ளவும் இல்லை, இன்றைக்கு கூக்குரலிடும் ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கைகள் பொருட்படுத்தவும் இல்லை. மாறாக, இந்த வசையால் மனம் நொந்த ராம்நரேஷ் சர்வான் அதே மொழியில் பதிலடி கொடுக்க அது பிரச்சனையாக்கப்பட்டது. அதற்காக அவர் மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டார். எப்படியிருக்கிறது கதை.
இந்த பயணத்தின் போது ஜமைக்காவில் நடைபெற்ற 2வது டெஸ்ட்டில் மேற்கிந்திய அணி வீச்சாளர் நெஹேமியா பெர்ரியிடம் விக்கெட்டை பறிகொடுத்த ஸ்டீவ் வாஹ், நடுவர் அவுட் கொடுத்த பின்னரும் மைதானத்தை விட்டு வெளியேறாமல் நடுவர் பீட்டர் வில்லியிடம் வாதம் செய்தார். பிறகு தொலைக்காட்சி ரீப்ளே கேட்கப்பட்டு, அதில் ஸ்டீவ் வாஹ் அவுட் ஆனது உறுதியானது. அதன்பிறகே மைதானத்தை விட்டு வெளியேறிய ஸ்டீவ் வாஹ், ஆட்ட நடுவரிடம் சென்று புகார் அளித்தார். ஸ்டீவ் வாஹ் போல இந்திய வீரரோ அல்லது மேற்கிந்திய, பாகிஸ்தான், வங்கதேச வீரரோ நடந்து கொண்டிருந்தால் அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடியிருக்க முடியாது. இதுதான் ஐ.சி.சி.யின் அணுகுமுறை! உண்மையில், ஸ்டீவ் வாஹ் அன்று நடந்துகொண்ட முறைக்கு 6 போட்டிகளுக்கு அவர் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நடைபெறவில்லையே. ஆனால், இதைவிட மோசமான ஒரு சூழலில் இலங்கை அணித் தலைவர் ரனத்துங்கா ஆட்ட நடுவரிடம் அதிகாரப்பூர்வமாக புகார் ஒன்றை தெரிவித்தபோது, ஆஸ்ட்ரேலிய ரசிகர்களும், ஊடகங்களும், ஐ.சி.சி.யும் இலங்கை அணியை மோசமாக சித்தரித்தன.
இலங்கையைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனை பந்தை எறிகிறார் என்று கூறி நோ பால் கொடுத்து அவரை அவமானப்படுத்தியதோடு நில்லாமல், ஒவ்வொரு முறையும் அவர் பந்து வீச வரும்போது ஆஸ்ட்ரேலிய ரசிகர்கள் நோ பால், நோ பால் என்று கேலி செய்து குரல் எழுப்பியதற்கெல்லாம் ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் ஐ.சி.சி. விளக்கம் எதையும் கோரவில்லை. இலங்கை வீரர்களை பன்றிகள் என்று வர்ணித்தார் ஆஸ்ட்ரேலிய வீரர் லீ மேன். தென் ஆப்ரிக்க வீரர் ஹஷிம் ஆம்லாவை பயங்கரவாதி என்று வர்ணித்தார் ஆஸ்ட்ரேலிய வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ். தென் ஆப்ரிக்க வீரர்கள் ஆண்ட்ரூ நெல், மகாயா நிட்டினி, ஜஸ்டின் ஆண்டாங், கிப்ஸ் ஆகியோரை மிக இழிவாக கஃபீர்ஸ் (துரோகிகள்) என்று ஆஸ்ட்ரேலிய ரசிகர்கள் வசைபாடினர். ஐ.சி.சி. விளக்கம் கேட்டதா என்ன?
பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்ட்ரேலிய நடுவர் டேரல் ஹேர் தான்தோன்றித் தனமாக நடந்து கொண்டது. உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது குறித்து, "ஆஹா அருமையான விஷயம்... அந்த ஏமாற்றுக்காரர்கள் ஊருக்குச் செல்ல வேண்டியதுதான்" என்று நடுவர் ரூடி குயர்ட்சன் பேசியது எல்லாம் நிறவெறி அல்லாமல் என்ன அது? ஆனால், ஐ.சி.சி. கண்டுகொண்டதா?
இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான டோனி கிரெய்க் (இவரும் ஒரு நிறவெறியாளரே) 2006 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ஜோஹனஸ்பர்க் டெஸ்ட் போட்டியின் போது தென் ஆப்ரிக்க வீரர்கள் பற்றி ஆஸ்ட்ரேலிய வீரர்கள் வசைபாடியது மிக மோசமானது என்றும், அவற்றை கேட்கும் போது இப்படியெல்லாம் பேசலாமா என்று நம்ப முடியாததாகவும் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். "இதுபோன்று நான் இதுவரை கேட்டதில்லை" என்று கூறிய டோனி கிரெய்க், என்ன கூறினார்கள் என்பதை நாகரீகம் கருதி கூறவில்லையாம். இதையும் ஐ.சி.சி. கண்டுகொள்ளவில்லை.
நிறவெறி, இனவெறி, இன துவேஷம் என்பதெல்லாம் வெள்ளை மண்ணில் துவங்கியதுதான். இந்தியாவின் நாகரீகத்திற்கோ அதன் பண்பாட்டிற்கு இனவெறி அந்நியமானது. ஒரு சிலர் இருக்கலாம், பிதற்றலாம், ஆனால் உண்மையான, உணர்வுடைய இந்தியர், அதிலும் கிரிக்கெட் ரசிகர் எவருடைய மனதிலும் இன துவேஷம் என்பதோ, இன மேண்மை பாராட்டுவதோ துளியும் இல்லை என்பதே உண்மை.
இதையெல்லாம் சுட்டிக்காட்டி ஐ.சி.சி.க்கு சொரணையுடன் பதிலளிக்குமா இந்திய கிரிக்கெட் வாரியம்?