இந்தியாவுக்கு விளையாடாத உள்நாட்டு வீரர்களுக்கு குறைவான தொகை கொடுக்கும் ஐ.பி.எல்?
, செவ்வாய், 11 ஜனவரி 2011 (16:41 IST)
இந்திய அணிக்காக ஓரிரு போட்டிகளில் இடம்பெற்றிருந்தாலும் அவர்களுக்கு ஐ.பி.எல். உரிமையாளரகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து ஒப்பந்தம் செய்கிறார்கள். ஆனால் அதே இந்திய தேசிய அணிக்கு இன்னும் விளையாடாத ஆனால் திறமையான மாநில அளவிலான வீரர்களை 'ஜுஜுபி' தொகைக்க்கு ஒப்பந்தம் செய்வதால் அந்த வீரர்கள் சிலர் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் சதம் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை புரிந்த மணீஷ் பாண்டே தனக்கு வழங்கப்படும் தொகை போதாமை காரணமாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கையெழுத்திடவில்லை என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவுக்கு விளையாடும் வீரர்களை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒப்பந்தம் செய்யும் ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் அவர்களுக்கு அதிக அளவில் ஒப்பந்தத் தொகை வழங்குகின்றனர். அவர்களை ஒப்புநோக்கும்போது மணீஷ் பாண்டே, அஸ்னோட்கர் போன்றவர்கள் பெறும் தொகை பொட்டுக் கடலைக்குச் சமம் என்றே கருதப்படுகிறது.ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் இந்திய அணிக்கு விளையாடிய வீரர்களான உமேஷ் யாதவ், சௌரப் திவாரி ஆகியோருக்கு இவர்கள் ஓரிரு போட்டிகளையே இந்தியாவுக்கு விளையாடி இருந்தாலும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுக்க முன்வருகின்றனர்.மாறாக பன் மடங்கு திறமையை வெளிப்படுத்தி வரும் மணீஷ் பாண்டே போன்ற இன்னமும் இந்திய அணிக்கு விளையாடாத வீரர்களுக்கு மிகவும் குறைந்த தொகையினை ஒப்பந்தத் தொகையாக அளிக்கின்றனர்.
இந்தியாவுக்கு விளையாடாத உள்நாட்டு வீரர்களை இப்படி நடத்துகின்ற ஐ.பி.எல். உரிமையாளர்கள் ஆஸ்ட்ரேலிய முன்னாள் வீரர் ஜெஃப் மார்ஷின் மகன் மிட்செல் மார்ஷை அதிர்ச்சிகரமான அதிகத்தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அவரும் இன்னும் ஆஸ்ட்ரேலியாவுக்கு விளையாடதவர்தானே? இப்படியிருக்கையில் இந்தியாவுக்கு விளையாடாத திறமையான இந்திய உள்நாட்டு வீரர்களை மட்டம் தட்டும் விதமாக வெளிநாட்டில் உள்நாட்டு கிரிக்கெட் மட்டுமே விளையாடிய வீரருக்கு அதிகத் தொகை கொடுக்க முன்வருகிறார்கள் ஐ.பி.எல். உரிமையாளர்கள்.
இந்தப் போக்கினால் இந்தியாவிற்கு விளையாடும் வாய்ப்பை எதிர்நோக்கி அபாரமாக விளையாடி வரும் திறமையான வீரர்கள் பலர் ஐ.பி.எல். கிரிக்கெட் மீது வெறுப்படைந்து வருகிறார்கள் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் தொடரில் விளையாடிய பழனி அமர்நாத் உள்ளிட்ட வீரர்களின் நிலவரம் என்னவென்றே தெரியவில்லை.