Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா-பாகிஸ்தான் தொடர் ஒரு அலசல்

Advertiesment
இந்தியா-பாகிஸ்தான் தொடர் ஒரு அலசல்

Webdunia

, வியாழன், 1 நவம்பர் 2007 (15:16 IST)
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3- 2 என்று ஒரு நாள் தொடரிலும் 1- 0 என்று டெஸ்ட் தொடரிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் இந்தியாவில் பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

இந்த பயணத்தில் 5 ஒரு நாள் போட்டிகளிலும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் விளையாடுகிறது.

webdunia photoWD
வ‌‌ம்ப‌ர் 2ம் தேதி டெல்லி அணியுடன் ஒரே ஒரு பயிற்சி ஆட்டம். அதன் பிறகு நவ.5, 8,11,15 மற்றும் 18ம் தேதிகளில் 5 ஒரு நாள் போட்டிகள். நவ 22- 26 முதல் டெஸ்ட் டெல்லியிலும், நவ.30-டிச.4 2வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டனிலும், டிச.8- 12 3வது டெஸ்ட் பெங்களூரிலும் நடைபெறுகிறது.

உலகக் கோப்பை 2007ல் இரு அணிகளும் வெளியேறிய பிறகு, இந்தியாவிற்கு வங்கதேசம், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்கள் திருப்திகரமாக அமைந்தது. தென் ஆப்பிரிக்காவை 2- 1 என்று அயர்லாந்தில் வீழ்த்தினோம். பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1- 0 என்று கைப்பற்றினோம். மிகவும் சவாலாக அமைந்த ஒரு நாள் தொடரில் சிறு சிறு தவறுகள் காரணமாக 3- 4 என்று தோல்வி தழுவினோம்.

பாகிஸ்தான் அணியும் இலங்கையை வீழ்த்தியது. அதன் பிறகு இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிகளில் அபாரமாக ஆடி இறுதிக்குள் நுழைந்தது. இறுதியில் இந்திய அணியும் நுழைந்து விட மற்ற அணியினர் எதிர்பாராதவிதமாக இந்திய-பாகிஸ்தான் கனவு இறுதிப் போட்டி நடைபெற்றது. வழக்கம்போல் இதயத் துடிப்பை நிறுத்தி விடும் போன்ற ஆட்டத்தில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. மொத்தத்தில் அந்த சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு அபாரமானதாக அமைந்தது.

அதன் பிறகு ஆஸ்ட்ரேலிய அணி இங்கு 7 ஒரு நாள் போட்டிகளை விளையாடியது. இதில் இந்திய அணி 4- 2 என்று தோற்றாலும், நிறைய அம்சங்கள் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. 320 ரன்களை துரத்தி 299 வரை வந்து ஆஸ்ட்ரேலிய அணியை அச்சுறுத்தியது. மும்பை கடைசி ஒரு நாள் போட்டியில் 64/6 என்ற நிலையிலிருந்து உத்தப்பாவின் அபார ஆட்டமும், அணியின் பின் கள வீரர்களின் தைரியமும் இணைய 193 ரன்கள் இலக்கை எட்டி வெற்றியை சாதித்தது. சமீப காலத்தில் ஆஸ்ட்ரேலிய அணியிடம் எந்த ஒரு கிரிக்கெட் அணியும் 6 விக்கெட்டுகளை இழந்த பிறகு வெற்றியை நினைத்து பார்த்ததில்லை.

webdunia
webdunia photoWD
அதன் பிறகு ஆஸ்ட்ரேலிய அணியின் எரிச்சலை பன்மடங்காக்கிய இருபதுக்கு இருபது போட்டியில் எளிதான வெற்றி என்று இந்திய அணியின் தன்னம்பிக்கை உயர்வதற்கான கூறுகள் நடந்து முடிந்த ஆஸ்ட்ரேலிய தொடரில் இருக்கத்தான் செய்தன.

மாறாக பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாடிய இரண்டு டெஸ்ட் தொடரில் 1- 0 என்ற தோல்வியையும், ஒரு நாள் போட்டிகளில் 3- 2 என்றும் தோல்வியை தழுவியுள்ளன.

webdunia
webdunia photoWD
ஆனால் பாகிஸ்தான் மற்ற எந்த நாட்டிற்கு எதிராக ஆடித் தழுவும் தோல்விகளை நாம் நமக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் எப்போதுமே இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் என்பது சவால்களும், திடீர் திருப்பங்களும், மாறும் அதிர்ஷ்டங்களும் நிரம்பியது.

ஒரு நாள் தொடரைப் பொறுத்த வரை இந்தியா சற்று பலமான அணியாகவே உள்ளது. அனுபவமும், இளமையின் வீரியமும் சரி விகித அளவில் கலந்துள்ளது. சரியான அணிச் சேர்க்கையை தோனி தேர்வு செய்வாரேயானால் ஒரு நாள் தொடரை கைப்பற்றுவது இந்திய அணிக்கு எளிதாகவே உள்ளது.

பாகிஸ்தானில் ஷோயப் அக்தரின் வரவு இந்திய அணிக்கு சற்றே கவலையளித்தாலும், இந்திய அணிக்கு எதிராக மிகப்பெரிய அச்சுறுத்தும் பந்து வீச்சுகளை அவர் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொஹமது ஆசிஃப் சமீபகாலமாக அவ்வளவு சிறப்பாக வீசுவதில்லை என்பதும் பாகிஸ்தான் அணிக்கு பலவீனமே. மற்ற படி உமர் குல், அஃப்ரீடி ஆகியோர் அனுபவம் மிக்கவர்கள். இப்திகார் அஞ்சும், அப்துர் ரெஹ்மான், சொகைல் தன்வீர் போன்ற இளம் வீச்சாளர்கள் சச்சின், சவ்ரவ், யுவ்ராஜ், உத்தப்பா, சேவாக், மற்றும் தோனி என்ற அதிரடி பேட்டிங் வரிசைக்கு முன் சீராக வீசுவது சற்று கடினம்தான்.

அணித் தலைமையை பொறுத்தவரை, ஷோயப் மாலிக் 100 சதவீதம் தன்னை அர்ப்பணிக்கிறார் என்றால் மிகையாகாது. ஆனால் வெற்றி பெற வெறும் அர்ப்பணிப்பு மட்டும் போதாது. களத் தடுப்பு உத்திகள், பந்து வீச்சு மாற்றம் செய்யும் உத்தி, சரியான அணியை தேர்வு செய்வது என்று நிறைய மூளைக்கும் வேலை இருக்கிறது. அந்த வகையில் அவருக்கு மொகமது யூசுப், யூனுஸ் கான் உதவுவார்கள். பயிற்சியாளர் ஜெஃப் லாசன் வேறு உள்ளார்.

தோனி ஏற்கனவே பலமான சோதனைகளை சந்தித்து வந்துள்ளார். ஆஸ்ட்ரேலியாவுடன் 7 போட்டிகளை ஆடுவது என்றால் அது எளிதான விஷயமல்ல. அனுபவ வீரர்களின் உதவி என்று பார்த்தாலும் தோனியின் கையே ஓங்கியிருக்கிறது. சச்சின், சவ்ரவ், யுவ்ராஜ், சேவாக் போன்றவர்கள் களத் தடுப்பு உத்தி, பந்து வீச்சு மாற்றம் மட்டும் நெருக்கடி சமயத்தில் தேவையான உடனடி சாதுர்யங்கள் ஆகியவற்றிற்கான அறிவுரைகளை வழங்குவார்கள்.

பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலவீனம் என்னவெனில், அதாவது இந்த தொடரில் அவர்கள் தோல்வியை தழுவினால் அதற்கு இந்தக் காரணமே முதன்மையாக விளங்கும். அதாவது சரியான துவக்க வீரர்கள் பாகிஸ்தானில் இல்லை என்பதே அது.

சமீப காலங்களில் வெவ்வேறு துவக்க வீரர்களை களமிறக்கியுள்ளனர். சல்மான் பட், கம்ரன் அக்மல், இம்ரான் நசீர், அஃப்ரீடி, யாசிர் ஹமீது... என்று தடுமாறி வருகின்றனர். இது ஒரு மிகப்பெரிய பின்னடைவே. சிறந்த துவக்க ஆட்டக்காரரும், நல்ல ஃபீல்டருமான இம்ரான் ஃபராத்தை அணிக்குள் கொண்டு வரும் முயற்சியை பாக் தேர்வுக் குழு யோசிக்கவேண்டும்.

இந்திய அணியின் பந்து வீச்சு வரிசையில் தற்போது ஜாகீர் கான் ஒரு முழுமையான வேகப்பந்து வீச்சாளராக, பந்து வீச்சுப்பிரிவை தலைமையேற்று நடத்தும் ஒரு ஆளுமையுடன் வளர்ந்துள்ளார். அவரிடம் கிரேம் ஸ்மித், அலிஸ்டைர் குக், ஆன்ரூ ஸ்ட்ராஸ், கில்கிறிஸ்ட் மற்றும் சில துவக்க வீரர்கள் சமீப காலமாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இப்படியிருக்க, அனுபவமும் திறமையும் உள்ள துவக்க வீரர்கள் பாக் அணியில் இல்லாதது ஒரு மிகப்பெரிய பலவீனமே. இதனை இந்திய அணியினர் நன்றாக பயன்படுத்திக்கொள்வார்கள்.

அதேபோல் பின் களத்தில் வந்து விளாசும் மற்றும் பந்து வீச்சில் சிக்கனமாக வீசி திடீரென விக்கெட்டுகளை எடுக்கும் அப்துல் ரசாக் போன்ற பன்முக வீரர் இல்லாதது அந்த அணியின் மற்றொரு பலவீனம்.

அவர்கள் பேட்டிங் மொகமது யூசுப், யூனுஸ் கான், மற்றும் ஷோயப் மாலிக் கைகளில் அடங்கியுள்ளது. இந்திய அனி 300 ரன்களுக்கும் மேல் குவித்து பெரிய இலக்கை நிர்ணயித்தால், பலவீனமான துவக்க வீரர்களை வைத்துக் கொண்டு பாகிஸ்தான் வெற்றிக்கு ஆடுவது சற்று கடினமே.


கடந்த முறை 2005ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி மொஹாலி டெஸ்டில் பெரிய தோல்வியை தழுவவதிலிருந்து அப்துல் ரசாக் பாக் அணியை காப்பாற்றினார். அந்த போட்டி டிரா ஆனதினால்தான், கொல்கத்தாவில் தோல்வி தழுவினாலும், பெங்களூரில் இன்சமாம் உல் ஹக்கின் அபாரமான சதம் டெஸ்ட் வெற்றியை பெற்றுத் தந்து தொடரும் சமம் ஆனது. இந்த வெற்றி கொடுத்த தன்னமிபிக்கையில் 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை எதிர் கொண்ட பாகிஸ்தான் முதல் 2 போட்டிகளில் படு தோல்வியடைந்து பின்னடைந்த நிலையிலிருந்து அடுத்த 5 போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றியது.

அந்த ஒரு நாள் தொடருக்கு பின் இந்திய அணி பாகிஸ்தான் சென்று அதே போல் 5 ஒரு நாள் போட்டிகளில் முதல் ஒரு நாள் போட்டியை தோற்று அதன் பிறகு 4 ஒரு நாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது.

எனவே பாகிஸ்தான்-இந்தியா போட்டிகளில் முடிவுகளை நாம் அனுமானிக்க முடியாது.

webdunia
webdunia photoWD
ஒட்டு மொத்த வெற்றி தோல்விகள் விகிதம் பாகிஸ்தானுக்கு சாதகமாக உள்ளது. 1952 முதல் 2006 ஆம் ஆண்டு வரை இரு அணிகளும் விளையாடியுள்ள 56 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் 12ஐ வென்றுள்ளது. இந்தியா 8 போட்டிகளை வென்றுள்ளது. 36 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளது.

1978 முதல் 2006 வரை விளையாடிய 108 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் 64 போட்டிகளிலும் இந்தியா 40 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால் ஒட்டு மொத்த சாதனை ஒரு வரலாறுதானே தவிர, அன்றைய தினத்தில் ஆடப்படும் ஆட்டத்தின் தீவிரத் தன்மையைப் பொறுத்தே வெற்றி தோல்விகள் தீமானிக்கப்படுகின்றன.

சாதனைகள், வரலாறுகள் எப்படியிருந்தாலும் ஒரு சுவாரசியாமன கிரிக்கெட் விருந்து வரும் 5ம் தேதி முதல் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக கூறமுடியும்.

Share this Story:

Follow Webdunia tamil