கங்கூலி இங்கிலாந்தின் விக்டோரியா ஒழுக்கத்தை தகர்த்தெறிந்து தன் சட்டையை கழற்றி வீசினார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. பிறகு கங்கூலி கூறினார், பிளின்டாஃப் இந்தியாவில் தொடரை டிரா செய்ததற்கே மரியாதையில்லாமல் மைதானத்தில் சட்டையைக் கழற்றினார், நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம், லார்ட்ஸ் மைதானமாக இருந்தால் என்ன சட்டையைக் கழற்றகூடாதா என்று காட்டமாக பதில் அளித்தார்.
இது மட்டுமல்ல, ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து போன்ற வெள்ளைக்கார அணிகள் தொடருக்கு முன்பு எதிரணி வீரர்களை மனோபலமிழக்கச் செய்யும் விதமாக பேசி வந்தனர். அதற்கு பதிலடியாக கங்கூலி முதன் முறையாக செய்தியாளர்கள் கூட்டத்தில் எதிரணித் தலைவர்கள், அதன் முக்கிய வீரர்கள் பற்றி மனோ பலம் இழக்கச் செய்யும் கருத்துக்களை கூறத் துவங்கி புதிய அத்தியாயத்தை துவங்கி வைத்தார். இதெல்லாம் ஆதிக்க வெள்ளை மனோபாவங்களிடம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. ஆம்! மெக்ராத் இல்லாமல் பிரட் லீ ஒன்றும் இல்லை. ஷேன் வார்ன் இல்லாமல் ஆஸ்ட்ரேலியா சப்பை, ஸ்டீவ் வாஹ் வெற்றியுடன் ஓய்வு பெற முடியாது. அவரது ஆசை நிறைவேறாது என்றெல்லாம் அவர் கூறினார். நாசர் ஹுஸ்ஸைனுக்கு எதிராகவும், ஃபிளின்டாஃபிற்கு எதிராகவும் இது போன்ற அதிர்ச்சிக் கூற்றுக்களை கூறியுள்ளார் கங்கூலி. கிரிக்கெட் மூலம் மட்டுமல்லாமல், வரிக்கு வரியும் அவர்களை எதிர்கொண்டு ஆட்கொள்ள முடியும் என்ற புதிய வழக்கத்தை அவர் அன்று உருவாக்கினார்.
அப்போது இந்திய அணி ஒரு மிகப்பெரிய அணியாக உருவாகும் அமைப்பில் இருந்தது. 2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போது இந்திய அணி மீதும் கங்கூலி மீதும் பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது.
முதல் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவுடன் தோல்வியடைந்த போது இந்தியாவில் கங்கூலி வீடு உட்பட அனைவரது வீட்டிலும் கல் எறியப்பட்டது. அப்போதும் அவர் ரசிகர்களை வசை பாடாமல் அமைதி காக்குமாறு கோரினார். அதன் பிறகு ஒரே வெற்றி மயம், அதுவும் இங்கிலாந்தையும், பாகிஸ்தானையும் வெற்றி பெற்ற விதம் அப்போதைய ஆஸ்ட்ரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கை அச்சப்பட வைத்தது. இறுதிப் போட்டிக்கு முன் அவர் கூறும்போது, இந்திய அணித் தலைவர் கங்கூலி தங்கள் அணியை சுலபத்தில் கோப்பையை கைப்பற்ற விடமாட்டார் என்றார்.
ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் துவங்கிய தலைமைப் பொறுப்பு, பல்வேறு மாற்றங்கள், பரிசோதனைகளுக்கு பிறகு யுவ்ராஜ் சிங், கயீஃப், சேவாக், ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா என்று இளம் உத்வேகங்களை அணிக்குள் புகுத்தி மூத்த வீரகளின் மனோபலத்தை தட்டி எழுப்பி பல மாற்றங்களை செய்து உலக அளவில் பேசக்கூடிய ஒரு தலைமையாக, வழிகாட்டியாக உருமாறியது.
அதன் பிறகு 2004 ஆஸ்ட்ரேலிய பயணம், 2001 தோல்விக்கு பழி தீர்க்க காத்திருந்த ஸ்டீவ் வாஹிற்கு தன் தலைமைப் பொறுப்பின் மூலம் பாடம் கற்பித்தார்.
தொடரை ஏறக்குறைய வென்று ஸ்டீவ்வாகின் கடைசி டெஸ்ட் தொடரில் அவருக்கு பெருமை பெற்றுச் செல்லாமல் தடுத்தார். இதனால் கங்கூலி எப்போதுமே ஆஸ்ட்ரேலியர்கள் வெறுக்கும் ஒரு அணித் தலைவராகவே மாறியிருந்தார்.
அந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆஸ்ட்ரேலிய தொடருக்கு பிறகு பாகிஸ்தானில் முதன் முறையாக அந்த அணியை 2- 0 என்று வெற்றி பெற்று அதுவரை இந்தியா பாகிஸ்தானில் செய்ய முடியாததை சாதித்துக் காட்டினார்.
49 டெஸ்ட்களில் 21 வெற்றிகளை பெற்று, அயல் நாடுகளில் இந்தியா இனி சோடை போகாது என்பதை கங்கூலி-ஜான் ரைட் கூட்டணி உறுதி செய்தது. ஒரு நாள் போட்டிகளிலும் 146 போட்டிகளில் 76 போட்டிகளை வெற்றி பெற்றுத் தந்துள்ளார் கங்கூலி.
இந்தியாவின் ஈடு இணையற்ற ஒரு வீரர், அணித் தலைவர், வழிகாட்டியாக திகழ்ந்தார் கங்கூலி.
நாக்பூர் டெஸ்ட் போட்டியின் இறுதி கட்டங்களில் அணித் தலைவர் தோனி, கங்கூலியை அழைத்து அவரது கையில் பந்தைக் கொடுத்து தலைமைப் பொறுப்பை அவரிடம் அளிக்கச் செய்தது கங்கூலிக்கு மட்டுமல்லாது, அணி இன்று அடைந்துள்ள இந்த உயர்ந்த நிலைக்கு அடித்தளமிட்ட சிறந்த வழிகாட்டி என்ற வகையில் இந்திய கிரிக்கெட்டிற்கு செய்த மாபெரும் கௌரவமாகக் கருதலாம்.
ஆனால் இந்திய கிரிக்கெட்டின் அணுகுமுறையிலும், வீரர்கள் மனோ நிலையிலும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கும் (அதன் தற்போதைய செல்வ வளர்ச்சிக்கும்!) இந்திய கிரிக்கெட் அணி உலக அரங்கில் இன்று மதிக்கப்படுவதற்கான காரணமாக திகழ்ந்தவருமான சௌரவ் சண்டிதாஸ் கங்கூலியை கடைசி ஒரு 3 ஆண்டுகளாக கிரிக்கெட் வாரியம் நடத்திய விதம் மிக மோசமானது. அவருக்கு கிடைத்தைவிட பன் மடங்கு மரியாதைக்கும் மதிப்பிற்கும் தகுதியானவர்தான் கங்கூலி என்பதை நாம் மறுக்க முடியாது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவரை மறைக்கவும் முடியாது.