Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய அணியின் தோல்விக்கு ஐபிஎல் பாதிப்பே காரணம்

Advertiesment
இருபதுக்கு20 உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 இந்திய கிரிக்கெட் அணி ஐபிஎல் மகேந்திர சிங் தோனி
, வியாழன், 13 மே 2010 (14:25 IST)
FILE
மேற்கிந்திய தீவிகளில் நடைபெற்றுவரும் இருபதுக்கு20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் சூப்பர் 8 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெற முடியாமல் படுதோல்வியுற்று வெளியேறியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

இருபதுக்கு20 கிரிக்கெட்டில் 2007ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியின் திறன், அதற்குப் பிறகு துவக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதையே இந்தத் தோல்வி உறுதியாக சுட்டிக்காட்டுகிறது.

இதற்கு இரண்டு காரணங்களை அடிப்படையாகக் கூறலாம்:

1. ஐபிஎல் போட்டிகளில் ஏலத்திற்கு எடுக்கப்பட்ட வீரர்கள் தங்கள் ‘மதிப்பை’ உயர்த்திக்கொண்டு, அதன் மூலம் தங்களின் ஆண்டு வருவாயைப் பெருக்கிக் கொள்ளவே அப்போட்டிகளில் அதீத திறமையை வெளிப்படுத்துகின்றனர்.

2. அந்த போட்டிகளில் சிறப்பாக ஆடினால் அளிக்கப்படும் ரொக்கப் பரிசுகளும், இறுதியில் வென்றால் கிடைக்கும் பரிசுத் தொகையில் கிடைக்கும் பங்கும், பல்வேறு விளம்பரங்கள் வாயிலாக கிட்டும் வருவாயும் அவர்கள் தங்கள் திறனை ஆட்ட உணர்வுடன் வெளிப்படுத்துவதற்கு பதிலாக, வருவாய் பெருக்கிக் கொள்வதில் கவனம் செலுத்த வைக்கிறது.

மேற்கூறப்பட்ட இரண்டு காரணங்களும் கிரிக்கெட் ஆட்டத்தின் நுணுக்கமான திறன் வளர்ச்சிக்கு எதிராக வினையாற்றின எனபது கண்கூடு. அதனால்தான், ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி தங்களது அணிகளின் வெற்றிக்கு வித்திட்ட ஆட்டக்காரர்கள், உலகக் கோப்பை போட்டிகளில் பெரிதாக சோபிக்காமல் தங்கள் அணிகளின் தோல்விக்கு காரணமாகியுள்ளனர்.இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட அணியாக இந்திய அணி ஆகியுள்ளது என்பதுதான் கவனத்தில்கொள்ள வேண்டிய விடயமாகும்.

webdunia
FILE
ஐபிஎல் போட்டிகளில் உலகின் தலைசிறந்த நட்சத்திர ஆட்ட்க்காரர்கள் பங்கேற்றார்கள். அபரிதமான திறமை கொண்ட அவர்களோடு இணைந்து ஆடியதால் இந்திய அணியின் ஆட்டக்காரர்கள் அதிகமாகப் பயன்பெற்றிருக்க வேண்டும். அவர்களின் ஆட்டத்திறன் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. இதற்கு மூல காரணம், ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் உணர்வுடன் நடத்தப்படவில்லை என்பதே.

ஐபிஎல் போட்டிகளை சுவராஸ்யமானதாக்க மைதானத்தின் சுற்றளவைக் குறைத்து கோடு போட்டது, ஆட்டத்தின் விதி முறைகளை தாறுமாறாக மாற்றியமைத்தது, ஆட்டத்திற்கு இடையே விளம்பரங்களைப் போட இடைவேளை கொடுத்தது, அதன் பிறகு தொடர்ந்த ஆட்டத்தின் போக்கில் நடைபெற்ற எதிர்பாராத மாற்றங்கள் என்று கிரிக்கெட் ஆட்டத்தின் நியாயமான போக்கை கட்டுப்படுத்தக்கூடிய, திசை திருப்பக் கூடிய பல சித்து வேலைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்று இவை யாவும் கிரிக்கெட் போட்டியின் மாண்பைக் குறைத்தது மட்டுமின்றி, அதில் பங்கேற்ற ஆட்டக்காரர்களின் மன நிலையையும் பாதித்துள்ளது. ஆட்ட உணர்வை விட, வருவாய் உணர்வு மேலோங்கியதை இவ்வாறு சுட்டிக் காட்டுகிறோம்.

உள்ளபடியே, கிரிக்கெட் ஆட்டத்தினை சுவராஸ்யமாக கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தால் மட்டைக்கும், பந்துக்கும் சமமான வாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் ஆட்டக்களங்களும் மைதானமும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால், ஐபிஎல் போட்டிகள் முடிந்த 4 நாட்களில் துவங்கிய உலகக் கோப்பை போட்டிகள் கிரிக்கெட் வீரர்களுக்கு, அதிலும் குறிப்பாக இந்திய அணி வீரர்களுக்கு ஒரு தயாரிப்பாகவே இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாமல், அவர்களை பிழிந்தெடுத்து சக்கையாக்கிவிட்ட போட்டித் தொடராகவே ஐபிஎல் இருந்தது என்று அணித் தலைவர் தோனியில் இருந்து முன்னாள் வீரர் மதன் லால் வரை குறை கூறுவதற்கு காரணமாகியிருக்காது.

இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இறுதி ஆட்டத்தில் 168 ரன்கள் அடித்து, அப்போட்டிகளின் பலமான அணியாக கருதப்பட்ட சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 146 ரன்களுக்கு சுருட்டி வெற்றி கண்டது.

webdunia
FILE
ஆனால், இலங்கைக்கு எதிரான போட்டியில அப்படிப்பட்ட தலைமைத் திறனை தோனியால் காட்ட முடியாமல் போனது ஏன்? அன்றைக்கு ஆடியது போல் இன்றைக்கும் ரெய்னா சிறப்பாகத்தான் ஆடினார். அது வேறு அணி, இது வேறு அணி என்று கூறலாம். ஆனால், அன்றைய ஆட்டத்தில் இருந்து துடிப்பும், போட்டியுணர்வும் நாட்டிற்காக ஆடும் போட்டியில் இல்லாமல் போனது ஏன்? ஏனென்றால் ஐபிஎல் போட்டிகளும், அப்போட்டிகள் முடிந்த பிறகு அரகேற்றப்பட்ட கொண்டாட்டங்களும் நமது ஆட்டக்காரர்களின் விளையாட்டுணர்வை மழுங்கடித்துவிட்டது என்பதே உண்மையாகும்.

இல்லையென்றால் ஒன்றரை மாதங்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவிட்டு, பிறகு உலகக் கோப்பையை (அதே விளையாட்டு முறையில்) எதிர்கொள்ளும் போது அது நமது ஆட்டக்காரர்களின் தயாரிப்பிற்கு உதவியிருக்க வேண்டுமல்லவா? உதவாமல் போனதில் இருந்தே ஐபிஎல் போட்டிகளின் நோக்கு கிரிக்கெட் இல்லையென்பது தெளிவாகிறதே?

பந்து நன்றாக எழும்பிவரும் ஆட்டக்களங்களில் இன்னமும் இந்திய ஆட்டக்காரர்கள் திணறிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட ஆட்டங்களை இந்தியாவில் போட்டு ஐபிஎல் போட்டிகளை நடத்தத் தவறியது ஏன்? ஏனென்றால் லலித் மோடியின் விரல் அசைவிற்கு ஏற்றதுபோல் கிரிக்கெட் ஆடியது, அதுதான் காரணம். அதுவே இந்திய அணியின் படுதோல்விக்கு வித்திட்டுள்ளது.

webdunia
PTI
உலகமெங்கும தொழில்முறை ரீதியில்தான் எல்லா விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. ஆனால், அவ்வாறு நடத்தப்படுவதன் காரணமாக எந்த ஒரு விளையாட்டும் அது வெளிப்படுத்தும் ஆட்ட உணர்விலோ அல்லது விளையாட்டு வீரர்களின் திறனையோ மேற்கொண்டு கூர்மைபடுத்துகின்றனவே தவிர, மழுங்கடிப்பதில்லை. ஆனால், ஐபிஎல் போட்டிகள், கிரிக்கெட் ஆட்டத்தின் மாண்புகளை, அதன் நேர்த்தியை, உன்னதத்தை சிதைத்துள்ளது. அதுவே நமது வீரர்களின் தோல்வியில் பிரதிபலித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளை அதீத ஆர்வப் பெருக்குடன் கண்டு ரசிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள், தங்களது ரசிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வணிகத்தால் கிரிக்கெட் அழிவதை இதற்குமேலும் அனுமதிக்கக் கூடாது.

ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் காலனிய சக்திகளால் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றைக்கு காமன்வெல்த் நாடுகள் என்று கூறப்படும் இந்தியா, ஆஸ்ட்ரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நியூ ஸீலாந்து, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் பரவிய கிரிக்கெட் விளையாட்டு, சராசரி மக்களின் விளையாட்டாக உருமாற்றம் பெற்று, மிகச் சிறந்த வீரர்களை உருவாக்கியது. 5 நாட்களுக்கு நடைபெறும் டெஸ்ட் போட்டிகளால் அதன் உன்னதம் உயர்ந்தது. அப்போட்டிகளில் இடம்பெற்ற பேட்ஸ்மென்களாலும், வேகப்பந்து., சுழற்பந்து வீச்சாளர்கள் வெளிப்படுத்திய திறன்களாலும் பல இலட்சக்கணக்கான ரசிகர்களை அது ஈர்த்தது. மேட்டுக்குடி, குடிசைப் பகுதி என்று வித்தியாசம் பாறாமல் ஆடப்படும் அளவிற்கு கிரிக்கெட் இள நெஞ்சங்களை ஈர்த்தது.

ஒரு நாள் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டதற்குப் பின்னர், வருவாய் நோக்கு கிரி்க்கெட்டை வளர்ப்பதற்கு பதில் அதனை தனது வணிக (இலாப) நோக்கிற்காக கபளீகரம் செய்யத் துவங்கியது. அதுவே இன்றகைக்கு கிரிக்கெட்டை மையப்படுத்தி சூதாட்டம் நடத்தும் அளவிற்கு ‘வளர்ந்துள்ளத’.

இந்த நிலையை தடுத்து நிறுத்தி கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது, ஏனென்றால், இன்றைக்கு கிரி்க்கெட் விளையாட்டு, அதனை வணிகமாக்கிய தொழில்-அதிகார விலங்குகளின் கைகளில் சிக்கியுள்ளது. எனவே ரசிகர்கள்தான் கிரிக்கெட்டை மீட்க வேண்டும்.

கிரிக்கெட் மீட்கப்பட்டால்தான், மீண்டும் நாம் பட்டோடி, வெங்கடராகவன், சந்திரசேகர், குண்டப்பா விஸ்வநாத், சுனில் கவாஸ்கர், கபில்தேவ், சச்சின், செளரவ் போன்ற உன்னத வீரர்களைக் காண முடியும், இல்லையெனில், அதனை சூதாட்டக்களமாக்கிடும் லலித் மோடிக்களும், சரத் பவார்களும்தான் கிரிக்கெட்டின் பெயரால் மின்னிக்கொண்டிருப்பார்கள். கிரிக்கெட் செத்துவிடும், உலகக் கோப்பையில் இந்திய அணியின் படுதோல்வி அந்த நிலையை நோக்கிய எச்சரிக்கையே.

Share this Story:

Follow Webdunia tamil