இந்திய அணியின் அபார வெற்றியின் பின்னணி
ஹேமில்டன் டெஸ்டில் இன்று நியூஸீலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 33 ஆண்டுகளுக்கு பிறகு அந்த நாட்டு மண்ணில் முதல் வெற்றியை பெற்றுள்ளது இந்தியா. 1976ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற அந்த குறிப்பிட்ட டெஸ்ட் வெற்றிக்கு பிறகு இந்தியா, நியூஸீலாந்திற்கு சீரான முறையில் கிரிக்கெட் பயணம் மேற்கொண்ட போதிலும் வெற்றி என்பது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.
ஆனால் ஒன்றை நாம் ஒப்புக் கொள்ளவேண்டும், அப்போதிருந்த நியூஸீலாந்து அணியின் பலம் தற்போது வெட்டோரி தலைமை அணியினரிடத்தில் இல்லை. அப்போது மாரீசன், காங்டன், ரிச்சர்ட் ஹேட்லீ, கிளன் டர்னர், பார்க்கர், லான்ஸ் கேய்ன்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தனர். தற்போதைய நியூஸீலாந்து அணி மறுக்கட்டுமான நிலையில் உள்ள அணி.பூவா-தலையா வென்றால் முதலில் பேட் செய்வது சில அணிகளின் வழக்கம். அதுதான் தன்னம்பிக்கையான் முடிவு என்றும் பலரால் கருதப்பட்டது. மாறாக பூவா-தலையா வென்று எதிரணியினரை அவர்களது மண்ணில் களமிறங்கச் செய்வது பயணம் மேற்கொள்ளும் அணியின் தடுப்பு உத்தி, நம்பிக்கையற்ற தன்மை அல்லது தோல்வி தவிர்ப்பு உத்தி என்பது போல்தான் பார்க்கப்பட்டு வந்தது.இந்த கருத்துகளை இந்திய அணித் தலைவர் தோனி முறியடித்தார். நியூஸீலாந்தில் முதன் முதலாக கேப்டன் பொறுப்பு ஏற்று சென்றுள்ள அவர் ஆட்டக் களத்தை சரியாக கணித்ததோடு, ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மா, முனாஃப் படேல் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் மேல் நம்பிக்கை வைத்து முதலில் நியூஸீலாந்து அணியை பேட் செய்ய அழைத்தார்.
நெருக்கமான ஃபில்டிங் உத்தி, சரியான அளவு மற்றும் திசைகளில் அமைந்த பந்து வீச்சு, களத்தில் இருந்த காலை நேர ஈரப்பதம் ஆகியவற்றால் நியூஸீலாந்து அணி உணவு இடைவேளையின் போது 6 விக்கெட்டுகளை 60 ரன்களுக்கு இழந்தது.
கிரிக்கெட் நிபுணர்கள் கூறுவது போல் முதல் இரண்டு மணி நேர ஆட்டமே ஒரு குறிப்பிட்ட அணிக்கு அந்த டெஸ்ட் முழுவதற்குமான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பது. இந்த விதத்தில் இந்திய வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த், ஜாகீர், முனாஃப் ஆகியோர் சிறந்த வெற்றி அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
ஆட்டம் செல்லச்செல்ல களத்தின் ஈரப்பதம் காய்ந்து பேட்டிங்கிற்கு சாதகமாகும் தருணத்தில் நியூசீலாந்து அணி அதன் பேட்டிங் வரிசையை இழந்திருந்தது. மாறாக டேனியல் வெட்டோரி (இவர் மனோ பலத்திலும், சவாலான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்துவதிலும், கிரிக்கெட் ஆட்டத்தை அதன் உணர்வுடனும் நல்ல முறையில் ஆடுவதில் நம் அனில் கும்ளேயிற்கு நிகரானவரே), ஜெஸ்ஸி ரைடர் இணைந்து சற்றே ஆட்டத்தை நம்மிடமிருந்து எடுத்து சென்றனர். அபாரமான சதத்தை இருவரும் எடுத்து அந்த அணியின் உற்சாகத்தை தூண்டினாலும், பலமான இந்திய பேட்டிங்கிற்கு எதிராக இந்த ரன் எண்ணிக்கை போதாமல் போனது.
இந்தியா களமிறங்கும்போது நியூஸீலாந்து வீச்சாளர்களின் கவனம் முழுதும் ஒரு சில ஓவர்களில் உலகின் எந்த விதமான பந்து வீச்சையும் சிதற அடித்து கூறு போட்டு அச்சுறுத்தும் விரேந்திர சேவாக் பக்கமே இருந்தது.
இந்த பேட்டிங் ஆட்டக் களத்தில் சேவாக் 24 ரன்களில் ரன் அவுட் ஆனது என்பது நியூஸீலாந்தின் அதிர்ஷ்டம்தான் என்று கூறவேண்டும். மேலும் கம்பீரும் சேவாகும் பள்ளி கிரிக்கெட் சிறுவர்கள் போல் ரன் ஓடுவதையும் நாம் சில ஆட்டங்களாக பார்த்து வருகிறோம். இது போன்ற திட்டமற்ற ஓட்டமே சேவாக்கின் வீழ்ச்சிக்குக் காரணமானது.ஆனால் இந்த விக்கெட்டினாலும் பெரிதான உற்சாகம் நியூசீலாந்து அணி வீச்சாளர்களிடத்தில் ஏற்படவில்லை. அவர்களின் அனுபவமின்மையாலும், சமீபமாக ஒரு நாள் தொடரில் இந்திய பேட்ஸ்மென்கள் வெளிப்படுத்திய அளவுக்கதிகமான அதிரடி ஆட்டமும், ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணியினரை இந்தியா வெற்றி கொண்ட விதமும், அவர்கள் மனதில் பெரும் சுமையாக அழுத்தியிருக்கலாம். திராவிட், கம்பீர், சச்சின், லக்ஷ்மண், தோனி, யுவ்ராஜ் கொண்ட பேட்டிங் வரிசையை நாம் வீழ்த்தி விட முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களிடத்தில் இல்லாமல் போயிருந்தது என்பதை அவர்களின் உடல் அசைவுகள் நிரூபித்தன.அதனால்தான் ஜாகீர் கான் விக்கெட்டை கூட அவர்களால் விரைவில் வீழ்த்த முடியவில்லை.முதல் இன்னிங்ஸில் ரன்களை மட்டுப்படுத்தும் வேலையை செய்த ஹர்பஜன், இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் தோனியால் எதிரணியினரை குலைக்கும் கருவியாக மாற்றப்பட்டார்.ஆட்டக்களத்தில் சுழற்பந்து வீச்சாளருக்கென்று தனியாக எந்த உதவியும் கிடைக்கவில்லை. இருப்பினும் தோனி தனது ஃபீலிடிங் வியூக முறையால் ஹர்பஜனிடத்தில் நம்பிக்கை ஏற்படுத்தி, பெரிய ஷாட்களுக்கான பாதுகாப்பாக எல்லைக்கோட்டிற்கு அருகே சில வீரர்களையும் அதே நேரத்தில் மட்டையை சுற்றியும் ஃபீல்டர்களை நிறுத்தி ஹர்பஜன் பந்துகளை நன்றாக தூக்கி வீச தைரியம் அளித்தார். அனுபவமற்ற நியூஸீலாந்து வீரர்கள் அடிக்க வேண்டிய பந்தை மட்டை வைத்தும் மட்டை வைக்க வேண்டிய பந்துகளை அடிக்க முயன்றும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
உலகின் தலை சிறந்த ஆஃப் ஸ்பின்னரான முத்தையா முரளிதரனுக்கு பிறகு நடப்பு உலக கிரிக்கெட் அணிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஃப் ஸ்பின்னர் தான்தான் என்பதை ஹர்பஜன் இன்று நிரூபித்துள்ளார். ஐ.பி.எல். தொடரின்போது நிகழ்ந்த சம்பவங்களால் வாய்ப்பை இழந்திருந்தும், மீண்டும் அணிக்குத் திரும்பியதுமே தனது திறனை நிரூபிப்பது என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல. மனதளவிலும் தான் வலிமையானவன் என்பதை ஹர்பஜன் நிரூபித்தார்.
2008ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவில் பெர்த் மைதானத்தில் பெற்ற டெஸ்ட் வெற்றிக்கு பிறகு இந்தியா இலங்கையில் தோல்வியைத் தழுவினாலும், அனைத்து ஒரு நாள் தொடர்களிலும், இங்கிலந்து அணியை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் வீழ்த்தியும் சீரான பாதையில் முன்னேற்றம் காண்கிறது என்றால் அதற்கு இந்தியா முன்னெப்போதையும் விட ஒரு அணியாக திரண்டு விளையாடுகின்றனர் என்பதே காரணம்.
இந்தியாவின் சிறந்த அணித் தலைவரான சௌரவ் கங்கூலி வெற்றி கொள்ள முடியாத ஒரு நாடாக நியூஸீலாந்து இருந்தது. அதோடு, அங்கு 2002ஆம் ஆண்டு இந்திய அணி நியூஸீலந்து சென்ற போது ஒரு நாள் தொடரை 2- 5 என்றும், டெஸ்ட் தொடரை 0 - 2 என்றும் தோல்வியைத் தழுவியது. ஆனால் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு டெஸ்டில் நெருக்கமாகவே தோற்றது. அப்போது டெஸ்ட் போட்டிகளுக்கு லாயக்கற்ற ஆட்டக்களத்தை நியூஸீலாந்து தயாரித்து வைத்திருந்தது (மாடு மேய்வதற்கு ஏற்றக் களம் என்றெல்லாம் கூறப்பட்டது).
அப்படி இல்லாவிட்டாலும் கூட அதற்கு முன்னர் ஒரு டெஸ்ட் போட்டியை கூட இந்தியா அங்கு வென்றதில்லை என்பது ஜீரணிக்க சற்று கடினமான விஷயம்தான். ஆனால் ஒரு முறை அசாருதீன் தலைமையில் சச்சின் டெண்டுல்கர் அபார சதத்தை எடுக்க நியூஸீலாந்திற்கு வெற்றி இலக்கு கிட்டத்தட்ட 300 ரன்கள் என்று இருந்தபோது 4ஆம் நாள் ஆட்ட முடிவில் நியூஸீலாந்து 78/5 என்ற நிலையில் தோல்விப் பிடியில் இருந்தது. ஆனால் 5-ம் நாள் மீதமுள்ள 5 விக்கெட்டுகளை வீழ்த்த ஜக்வல் ஸ்ரீநாத், அனில் கும்ளே உள்ளிட்ட சிறந்த பந்து வீச்சாளர்களால் கூட முடியவில்லை. இந்தியா வெற்றி நிலையிலிருந்து தோல்வி தழுவியது.
இப்படியாக நியூஸீலாந்து, இந்திய அணிக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. ஆனால் இன்றைய தோனி தலைமை இந்திய அணி கடந்த ஆண்டு முதல் செய்து வரும் கடுமையான உழைப்பினால் ஃபீல்டிங், பந்து வீச்சு, பேட்டிங் என்று அனைத்திலும் உத்தி ரீதியாக பல விதங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது.முதல் இன்னிங்ஸில் இந்தியா ஆடிய பேட்டிங்கை இதற்கு உதாரணமாக கூறலாம். நியூஸீலாந்து அணியின் 279 ரன்களை இந்தியா எட்டும் வரை ஒரு விதமான ஆட்டத்தையும், அந்த ரன் எண்ணிக்கையை கடந்தவுடன் துல்லியமான தாக்குதல் ஆட்டத்தையும் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்திய வீரர்கள் வெளிப்படுத்தினர்.தோனி தனது புதுமையான கள வியூகங்களினால் பந்து வீச்சாளர்களுக்கு அதிக நம்பிக்கையை வளர்த்தெடுத்து வருகிறார். இவரது இந்த உத்திக்கு சிறந்த உதாரணமாக யுவ்ராஜ் சிங்கை ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக அவர் உருவாக்கி வருவது வெளிப்படையாக தெரிகிறது. ஐ.சி.சி. ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் யுவ்ராஜ் திடீரென 3வது இடம் பிடித்துள்ளார் என்றால் அதற்கு யுவ்ராஜ் மீதான தோனியின் நம்பிக்கையே காரணம்.அதே போல் இரண்டாவது இன்னிங்ஸில் மெக்கல்லம் அதிரடியாக ஆடி வரும்போதும் தொடர்ந்து யுவ்ராஜ் சிங்கை பந்து வீச அழைத்து கடைசியில் மெக்கல்லம் யுவ்ராஜிடமே தன் விக்கெட்டை பறி கொடுத்தார்.அதேபோல்தான் உலக பந்து வீச்சாளர்கள் கண்டு அஞ்சும் கெவின் பீட்டர்சனை யுவ்ராஜை வைத்தே தோனி வீழ்த்திக் காட்டினார்.ஆனாலும் ஒரு அணியின் வெற்றி என்பது தனிப்பட்ட வீரரின் ஜாலமோ, அணித் தலைவர் என்ற ஒருவரின் தனிப்பட்ட திறமையோ அல்ல, ஒட்டு மொத்த அணியின் குறிக்கோளும் வெற்றி என்ற அடிப்படையில் ஒன்றிணைவது கடினம்தான். இந்த கடினமான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்ற முறையில், இன்று உலக அளவில் சிறந்த கேப்டன் என்று கிரிக்கெட் நிபுணர்களான இயன் சாப்பல், டோனி கிரேக், மன்சூர் அலி கான் பட்டௌடி ஆகியோரால் பாராட்டப்படுவதற்கு தகுதியானவர்தான் தோனி.
அயல் நாட்டு கிரிக்கெட் தொடர்களில் இந்தியா இதுவரை ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் இரண்டையும் கைப்பற்றியதில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சாதனையையும் இந்தியா படைக்க வேண்டுமென்றால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி பெறுவதற்கேன்றே ஆட வேண்டும்.
ஒரு டெஸ்டில் வெற்றி பெற்றாகி விட்டதே, அடுத்த 2 டெஸ்ட்களையும் டிரா செய்து விடுவோம் என்ற நினைப்பில் விளையாடினால் தென் ஆப்பிரிக்காவில் நடந்தது போல் அடுத்த 2 டெஸ்ட்களிலும் தோல்வி தழுவ நேரிடலாம்.
மேலும் ஆஸ்ட்ரேலியா போல் முதலிடத்தை நீண்ட நாட்களுக்கு தக்கவைக்க வேண்டுமென்றால், வெற்றி என்ற இலக்கிலிருந்து இந்திய அணி சற்றும் பின் வாங்காமல் விளையாடுவது அவசியம்.