Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலியா வழியில் இங்கிலாந்து!

Advertiesment
ஆஸ்திரேலியா இங்கிலாந்து கிரிக்கெட்

Webdunia

, செவ்வாய், 31 ஜூலை 2007 (20:42 IST)
கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன்ஸ் கேம் என்ற நிலை மாறி முரடர்களின் ஆட்டமாக மாறி வருகிறதோ என்று கருதும் அளவிற்கு கிரிக்கெட் வீரர்களின் நடத்தை தரம் தாழ்ந்து வருகிறது.

எந்த இரு அணிகள் மோதினாலும், கிரிக்கெட் மட்டைகளும் பந்தும் பேசுவது போய், வீரர்கள் ஒருவருடன் ஒருவர் மோதுவது, பேட்ஸ்மென்கள் மீது எதிரணியினர் வசை மாறிப் பொழிவது என்பதெல்லாம் மிகச் சாதாரணமாகிவிட்டது.

ஆஸ்திரேலிய அணியினரே இம்மாதிரியான முரண்பட்ட நடத்தைக்கு வித்திட்டனர் என்று சுனில் கவாஸ்கர், டோனி கிரேக் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும், வர்ணனையாளர்களும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டும் அளவிற்கு இந்த வசைபாடல் (ஸ்லெட்ஜிங்) வளர்ந்துவிட்டது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாஹ் இதுபோன்ற வசைமொழிகளை பயன்படுத்தி எதிரணி வீரர்களை நிலைகுலையச் செய்யும் உளவியல் வித்தையை கையாளத் துவங்கினார். இன்று வரை ஆஸ்ட்ரேலிய வீரர்கள் எவ்வித மாற்றமும் இன்றி அதனை நன்றாக கடைபிடித்து வருகின்றனர். பலமுறை இதுபற்றி புகார் தெரிவித்தும் ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் அதனை பொருட்படுத்தவில்லை. வென்றால் போதும்... அதற்கு வசைபாடல் உட்பட எல்லாமே வழிதான் என்பது ஆஸ்ட்ரேலிய அணியின் அறிவிக்கப்படாத நிலைப்பாடு.

இது போன்ற போக்கை தற்போது இங்கிலாந்து வீரர்கள் முழு மூச்சுடன் கடைபிடிக்கத் துவங்கியுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய இளம் வீரர் தினேஷ் கார்த்திக் மீது இங்கிலாந்து புதுமுக விக்கெட் கீப்பர் மாட்ஸ் பிரையர் உள்ளிட்ட சிலர் வசைபாடி அவருடைய கவனத்தை சிதறடிக்க முயன்றுள்ளனர்.

அதேபோல் இந்திய இன்னிங்சின் இறுதிக் கட்டத்தில் ஜாகீர் கான் களமிறங்கி விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர் மட்டையின் விளிம்பில் பட்டு ஒரு பந்து பவுண்டரிக்குப் பறந்தது. அந்த ஷாட்டை வர்ணித்து கெட்டவார்த்தையால் இங்கிலாந்து வீரர் ஒருவர் வசைபாடியது ஸ்டம்பில் பொருத்தப்பட்டுள்ள மைக்கின் வழியாக வர்ணனையாளர்களின் காதில் விழுந்துள்ளது.

ஜாஹீர் களமிறங்கியுடன் அவர் நிற்கும் இடத்தில் ஜெல்லி பீன் என்ற ஒரு தின்பண்டத்தை போட்டுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள். ஒரு முறை அதனை வெளியே தள்ளிவிட்டு மீண்டும் பார்க்கும்போது அந்த இடத்தில் மீண்டும் ஜெல்லி பீன் போடப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜாஹீ கான் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தான் அவ்வாறு செய்ததை அறிந்து அவரை அச்சுறுத்தும் விதமாக தனது மட்டையைக் காண்பித்தார். அதன்பிறகு, கேப்டன் மைக்கேல் வான் மற்றும் நடுவர்கள் தலையிட எல்லாம் ஒரு நகைச்சுவைக்காகத்தான் என்பது போல சித்தரிக்கப்பட்டது.

இன்னொரு மோசமான சம்பவம் என்னவெனில் தினேஷ் கார்த்திக் களமிறங்கியபோது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மாட்ஸ் பிரையர் தோனியை குறிப்பிட்டு அவர் இறங்கியிருக்கவேண்டும் என்பது போல் கூறி கார்த்திக்-தோனி இடையே நிலவி வரும் ஒரு ஆரோக்கியமான போட்டியை பொறாமை உணர்வாக மாற்ற முயலும் தேவையற்ற வேலையையும் செய்துள்ளார்.

எதிரணி வீரரைப் பார்த்து நகைச்சுவையாக கருத்து கூறுவது என்பது கிரிக்கெட் விளையாட்டில் சகஜமாக நிலவிவரும் ஒன்றுதான். கிரிக்கெட்டின் தந்தை போன்று கருதப்படும் டபிள்யூ.ஜி. கிரேஸ் ஒரு முறை இந்திய அணியுடன் விளையாடும்போது ஆட்டமிழந்தார், ஆனால் அவர் பெவிலியன் திரும்பிச்செல்ல மறுத்தார்... அதற்கு அவர் கூறிய காரணம் நான் பேட் செய்வதை மக்கள் பார்க்க வந்திருக்கிறார்க்ள்... நீங்கள் பந்து வீசுவதையல்ல என்றாராம்...

இது போன்ற பல நகைச்சுவை உரையாடல்கள் கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் ஒரு வீரரை அவரது கவனத்தை திசை திருப்புவதற்காக சில சேட்டைகளை எதிரணி வீரர்கள் செய்வதுண்டு. ஒரு முறை சவுரவ் கங்குலி ஷேண் வார்ன் பந்து வீச்சை நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். கங்குலி நன்றாக ஆடத் துவங்கினால் எதிர்முனையில் இருக்கும் சச்சினின் ஆட்டமும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியை படுகுழிக்குள் தள்ளிவிடும் என்று உணர்ந்த ஷேன் வார்ன் கங்குலியை நோக்கி உன்னுடைய அறுவையை பார்க்க இங்குள்ள ரசிகர்கள் வரவில்லை... எதிர்முனையில் இருக்கும் சச்சினின் ஆட்டத்தை பார்க்க வந்திருக்கின்றனர்... என்று கூற ஆத்திரமடைந்த கங்குலி அடுத்த ஓவரிலேயே ஷேன் வார்னை இறங்கி வந்து அடிக்க முயன்று போல்ட் ஆனார்...

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்... ஆனால் இது போன்ற கவன சிதறடிப்புகளுக்கு பதில் கூறாமல் கவனத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டு ஆடி மீண்டு வந்தவர்கள் மிகப்பெரிய நட்சத்திர வீரர்களாகவும் ஆகியுள்ளனர். கேரி சோபர்ஸ், டான் பிராட்மேன் முதல் பிரைன்லாரா, சச்சின், டிராவிட் ரிச்ச்ர்ட்ச் அனைவரும் இப்பாதையை கடந்தே வந்துள்ளனர். ஆனால் இந்த வரம்பு மீறும்போது பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது என்பதும் உண்மை.

ஒரு முறை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டெனிஸ் லில்லி இந்த வரம்பை மீறி பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியாண்டடை நோக்கி வசைபாட, கோபமுற்ற மியான்தத் லில்லியை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்ததால் பதற்றமான நிலை ஏற்பட்டது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசீலாந்து அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெறும் போது இந்த வசைபாடல் எல்லை மீறுவது இல்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவின் கறுப்பரின வீரர்கள், ஆசிய வீரர்கள் மீது இந்த வசை பயன்படுத்தப்படும்போது அது நிற வெறி வசையாகவோ நாட்டையும், ஒருவரது பிறப்பையும் இழிவு செய்யும் விதமாக போகிறது என்பதுதான் நிஜம்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம், உதாரணமாக இலங்கை வீரர்களை கறுப்புப் பன்றிகள் என்று ஆஸ்திரேலிய வீரர் டேரன் லீ மேன் ஒரு முறை வர்ணித்தது. முரளிதரனின் பந்து வீச்சை எதிர்கொள்வதில் திணறும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் பயன்படுத்திய வசை மொழிகள் ஏராளம். பாகிஸ்தான் வீரர்களை பயங்கரவாதிகள் என்று மைதானத்திலேயே பேசியது போன்ற மோசமான முன் உதாரணங்கள் எல்லாம் உள்ளன. ஆனால், சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை ஒரு பெரும் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளவில்லை.

இது குறித்து வெள்ளைய கிரிக்கெட் வீரர்களிடம் கேட்டால் மிகச் சுலபமாக "நாங்கள் கிரிக்கெட்டை கடினமாக ஆடுகிறோம்... எங்கள் போராட்ட குணம் இது போன்று வெளிப்படுவது தவிர்க்கமுடியாதது... இதையெல்லாம் கட்டுப்படுத்தினால் ஆட்டம் சுவை இழந்துவிடும்..." என்றெல்லாம் விளக்கம் கொடுக்கிறார்கள்.

ஜாகீர் கான் விவகாரத்திலும் இதுதான் நடந்தது, ஜெல்லி பீன் என்ற வழுக்கும் தின் பண்டத்தை போடலாமா என்று இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட்டிடம் கேட்டதற்கு, எந்தவிதமான தார்மீக பொறுப்பும் இல்லாமல் அவர் கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது... காலிங்வுட் கூறியது இதுதான்: ஜாகீர் கானுக்கு ஊதா நிற ஜெல்லி பீன் பிடிக்காது போலும்... தெரிந்திருந்தால் நீல நிற பீன்களை போட்டிருப்போம் என்று நக்கலாக கூறியுள்ளார்...

கடைசியில் என்ன ஆனது?... இந்த ஜெல்லி பீன் விவகாரம் ஜாகீர் கானை உசுப்பிவிட்டது. இங்கிலாந்து வீரர்களை அவர் 2வது இன்னிங்சில் மண்ணைக்கவ்வ வைத்து இந்தியாவின் வெற்றிக்கே அது வித்திட்டுள்ளது.

வெற்றி பெறுவதற்காக செய்கிறோம், தமா¤க்கு செய்கிறோம்... கிரிக்கெட்டை கடினமாக ஆடுகிறோம்... என்றெல்லாம் சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வெள்ளைய கிரிக்கெட் உலகம் இதனால் தழுவும் தோல்வியையும் "தமாஷாக" எடுத்துக் கொள்ளுமா?

Share this Story:

Follow Webdunia tamil