இந்திய அணியில் வீரேந்திர சேவாக் இடம் பெறுவது மிகவும் முக்கியமானது. எதிர்வரும் ஆஸ்ட்ரேலிய தொடருக்கு சேவாகை விட்டுச் சென்றால் அது இந்திய அணித் தேர்வாளர்கள் செய்யும் பெரும் தவறாகவே போய் முடியும்.
சமீபமாக அவர் சரியாக விளையாடவில்லை, ஒருவரது சமீபத்திய ஆட்டம்தான் அணித் தேர்வுக்கு பரிசீலிக்கப்படும் என்றெல்லாம் கூறினாலும், டெஸ்ட் போட்டிகளில் சேவாகின் தன்னலமற்ற ஆட்டத்தால் இந்தியா குறிப்பாக வெளி நாடுகளில் வெற்றியை பெற்று வந்துள்ளது. கங்குலி தலைமையில் இங்கிலாந்தில் தொடரை சமன் செய்தது, மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் தொடரை வென்றது, ஆஸ்ட்ரேலியாவில் தொடரை சமன் செய்தது, பாகிஸ்தானில் தொடரை வென்றது என்று சேவாக் இந்திய அணிக்கு ஆடியபோதெல்லாம் வெற்றி அதிகரித்துள்ளது.
அவர் முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் நடுக்கள வீரராக களமிறங்கி முதல் டெஸ்டிலேயே தென் ஆப்பிரிக்க மண்ணில் சதம் எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதன் பிறகு இந்தியாவின் தைரியமான கேப்டனான சவ்ரவ் கங்குலி, சேவாகை துவக்க ஆட்டக்காரராக களமிறங்கச் செய்த அபாரமான முடிவால் மற்ற வீரர்களுக்கும், அணிக்கும் கிடைத்த பலன்கள் ஏராளம்.
சேவாக் துவக்க வீரராக களமிறங்கியது முதல்தான் அவரது அதிரடி ஆட்டத்தினால் எதிரணியினரின் பந்து வீச்சாளர்கள் தங்களது பந்து வீசும் அளவு மற்றும் திசை ஆகியவற்றை நிலைநிறுத்த முடியாமல் சிரமங்களை ஏற்படுத்தி வந்தார். இதனால் 1ம் நிலையில் களமிறங்கும் ராகுல் டிராவிட் மிகச் சுலபமாக தனது நிதான ஆட்டத்தை கடைபிடித்து சதங்களை குவிக்க முடிந்தது. சேவாக் துவக்க வீரராக களமிறங்கியது முதல்தான் ராகுல் டிராவிட் இங்கிலாந்தில் ஒரு இரட்டை சதம் உட்பட 4 டெஸ்ட்களில் 4 சதங்களை அடித்து அதன் பிறகு ஆஸ்ட்ரேலிய தொடரில் உலகின் தலை சிறந்த வீரராக மாறினார்.
சச்சின், கங்குலி, லக்ஷ்மண் மற்றும் இளம் வீரர் பார்த்திவ் படேல் உட்பட அனைவரும் சேவாக்கின் பயமற்ற பேட்டிங் அணுகுமுறையால் உத்வேகம் அடைந்தவர்களே.
கிரெக் சாப்பல் பயிற்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு சேவாக் சரியாக உற்சாகப்படுத்தப்படவில்லை. மாறாக ஏதோ கிரிக்கெட் பேராசிரியர் போல் நடந்து கொண்ட சாப்பலால் சேவாக் மட்டம் தட்டப்பட்டார் என்று கூட கூறப்படுகிறது. கங்கூலி, இர்ஃபான் பத்தான், ஹர்பஜன், யுவ்ராஜ் என்று சாப்பல் அனைவரையுமே ஒரு வழி செய்து விட்டார். இதில் பத்தான், ஹர்பஜன் முக்கியமாக கங்கூலி தங்களது இடத்தை மீண்டும் பிடித்து விட்டனர். சேவாக் மட்டும் இன்னமும் இடத்தை பிடிக்க முடியவில்லை.
இதற்கு காரணம், அவரது தன்னலமற்ற மனோ நிலைதான். ஆஸ்ட்ரேலிய பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 24 வீரர்கள் கொண்ட உத்தேச அணியில் சேவாக்கை தேர்வு செய்யாமல் போனதன் மூலம் ஆஸ்ட்ரேலிய தொடர் துவங்கும் முன்பே இந்தியா தவறுகளை துவங்கியுள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர் இயன் சாப்பல் கூறியுள்ளார்.
தற்போது மஹாராஷ்டிர அணியுடன் டெல்லி அணி விளையாடி வரும் ரஞ்சி கோப்பை போட்டியில் சேவாக் துவக்க வீரராக களமிறங்காமல் இந்திய உத்தேச அணியில் தேர்வு செய்யப்பட்ட ஆகாஷ் சோப்ராவை களமிறக்கியுள்ளார் என்பதே அவரது தன்னலமற்ற மனோ நிலைக்கு சான்று.
கடந்த முறை கங்கூலி தலைமையில் இந்திய அணி ஆஸ்ட்ரேலியா சென்றபோது. 45, 47, 47 என்று முதல் 3 இன்னிங்ஸ்களில் ரன்களை எடுத்த சேவாக், மெல்பர்ன் டெஸ்ட் துவங்குவதற்கு முன்பு "நான் இன்னமும் ஏன் ஒரு சதத்தை எடுக்கவில்லை? மெல்பர்னில் அனேகமாக சதம் அடிப்பேன்" என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
டிசம்பர் மாதம் 26ம் தேதி அன்றைய தினம் அவர் எடுத்த அதிரடி 195 ரன்கள், நீண்ட நாளைக்கு பிறகு ஆஸ்ட்ரேலிய மண்ணில் முதல் நாள் ஆட்டத்தில் அயல் நாட்டு வீரர் எடுக்கும் ஒரு சதம். மேலும் ராய் பிரடெரிக்ஸ் 70களில் என்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் முரட்டு துவக்க ஆட்டக்காரர் பெர்த் மைதானத்தில் ஆடிய இன்னிங்சிற்கு பிறகு சேவாகின் 195தான் சிறந்த இன்னிங்ஸ் என்று ரிச்சி பெனோ, பில் லாரி உள்ளிட்ட வர்ணனையாளர்கள் புகழ்ந்து தள்ளினார்கள்.
ஆஸ்ட்ரேலிய அணியினர் இன்னமும் அந்த இன்னிங்சை கண்டு அஞ்சித்தான் போயுள்ளனர் என்று இயன் சாப்பல் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
எனவே சேவாகை வைத்து ஒரு சின்ன விளையாட்டை விளையாடி பார்க்கலாம். இங்கு சேவாக் தேர்வு என்றால் அங்கு ரிக்கி பான்டிங், பயிற்சியாளர் நீல்சன் ஆகியோர் அவருக்கென்றே உத்திகளை வகுக்க திட்டமிட தொடங்குவார்கள்.
தற்போது உள்ள துவக்க வீரர்களில் ஜாஃபர் திறமையுடன் ஆடி வந்தாலும், முதன் முதலாக ஆஸ்ட்ரேலியா செல்லும் அவர் அங்கு போடப்படும் வேகமான, பந்துகள் எழும்பும் ஆட்டக்களங்களில் அதிக சிரமத்திற்குள்ளாவார் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் வேகப்பந்து வீச்சிற்கு ஜாஃபர் கால்களை நகர்த்தும் விதமும், பந்துகளை சந்திக்கும் போது மட்டையின் நிலையும் முன்னால் வந்து அடித்து ஆட முடியக்கூடிய மெதுவான துணைக்கண்ட ஆட்டக்களங்களுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். பின்னால் சென்று அடித்து நொறுக்க வேண்டிய ஆஸ்ட்ரேலிய ஆட்டக்களங்களில் ஜாஃபரின் ஃபுட்வொர்க் மற்றும் உத்திகள் சந்தேகத்திற்குரியவையே.
தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் நன்றாக விளையாடினாலும் ஆஸ்ட்ரேலியாவின் வேகமான ஆட்டக்களங்களுக்கு பொருத்தமான பேட்டிங் உத்தி அவரிடமும் இல்லை என்றே தெரிகிறது.
இந்திய ஆட்டக்களங்களில் முன்னால் வந்து ஒரு பந்தை விளாசினால் அது கவர் அல்லது மிட் ஆஃப் திசைக்கு செல்லும். ஆனால் ஆஸ்ட்ரேலியா போன்ற எழும்பும் ஆட்டக்களங்களில் முன்னால் வந்து ஆடினால் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப் அல்லது கல்லி திசையில் கேட்சாக முடியும். இந்த நிலையில் அதிகம் முன்னால் வராமலும், அதிகம் பின்னால் போகாமலும் கால்களை சிக்கனமாக நகர்த்தி விளாசும் சேவாகின் பேட்டிங் உத்தி கைகொடுக்கும். கைகொடுத்துள்ளது என்பதை தேர்வாளர்கள் உணரவேண்டும். கிட்டத்தட்ட அதேபோன்ற பேட்டிங் உத்தி உள்ள கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆஸ்ட்ரேலிய களங்களில் நன்றாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் ஆஸ்ட்ரேலிய அணியுடன் 9 டெஸ்ட் போட்டிகளில் 846 ரன்களை எடுத்துள்ள சேவாக் 49.76 என்ற சராசரி வைத்துள்ளார். இதில் 2 அபாரமான சதங்கள், ஒன்று மெல்பர்ன் 195 மற்றொன்று சென்னையில் மெக்ரா, கில்லஸ்பி, ஷேன் வார்ன் பந்து வீச்சிற்கு எதிராக எடுத்த 155 ரன்கள். 3 அரை சதங்கள்.
உணவு இடைவேளைக்கு முன் சதம் எடுக்கும் திறமை உடைய ஒரே துவக்க ஆட்டக்காரர் நடப்பு கிரிக்கெட் உலகில் ஒருவர் உள்ளார் என்றால் அது சேவாக்தான் என்றால் அது மிகையாகாது.
எனவெ கும்ளே தனது சொந்த முடிவின் பேரில் சேவாகை தேர்வு செய்து ஆஸ்திரேலியா செல்வதே சிறந்தது.
அவரது மொத்த சராசரி 49.46. ஆனால் இதைவிட ஆஸ்ட்ரேலியாவுடன் அதிக சராசரி வைத்துள்ளார் சேவாக்.
துவக்க வீரர்களில் யார் தோல்வி அடைந்தாலும் ஆகாஷ் சோப்ரா அல்லது பார்த்திவ் படேலை நாம் பின்னணியில் வைத்துக் கொள்ளலாம்.
சேவாக்கை தேர்வு செய்து கடந்த முறை ஆடிய ஆட்டத்தை அவரிடம் நினைவு படுத்தி அவரை உற்சாகப்படுத்தினால் மெக்ரா, ஷேன் வார்ன் இல்லாத புதிய பந்து வீச்சாளர்களுக்கு சேவாக் நிச்சயமாக சிம்ம சொப்பனமாக இருப்பார் என்பது மட்டும் உறுதி.