Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் பின்னும் மாய வலைகள்!

Advertiesment
ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் பின்னும் மாய வலைகள்!
, வெள்ளி, 28 டிசம்பர் 2007 (20:48 IST)
ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணியும் மற்ற நாடுகளுக்கு சென்று விளையாடுவது ஒரு சிறப்பான தருணம் என்றால் ஆஸ்ட்ரேலியாவிற்கு செல்லும் முன் அந்த தருணம் மேலும் சிறப்பனதாக ஆக்கப்பட்டு வருகிறது.

அதாவது, ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் தங்கள் நாட்டுக்கு வரும் பிற அணிகளைப் பற்றி எழுதுவதும் அதன் முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள், கிரிக்கெட் வல்லுனர்கள் எழுதுவதும், கூறும் கருத்துகளும் தொடருக்கு முன் ஒரு அதீத எதிர்பார்ப்பை (பில்ட்-அப்) உருவாக்குகிறது என்றாலும், பல சமயங்களில் அந்த கருத்துக்கள் எதிரணிக்கு எந்த விதத்திலும் நியாயம் சேர்ப்பதாக அமைந்திருக்கவில்லை என்பதே உண்மை.

சமீபத்தில் இலங்கை அணி சென்றபோது முரளிதரனை வைத்து மீண்டும் பழைய கதையே பின்னப்பட்டது. முரளிபற்றி மீண்டும் மீண்டும் அருவருப்பான கருத்துக்கள் ஊடகங்களில் வலம் வந்தன.

ஆனால் இந்த முறை அப்படிப்பட்ட பில்ட்-அப் எதிர்பார்த்த வேலையைச் செய்யவில்லை. அதாவது டெஸ்ட் போட்டி நடந்த மைதானங்கள் ஈ ஓட்டின. ஆங்காங்கே சில ரசிகர்களின் தலை மட்டுமே தெரிந்தது.

உடனே ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் காச் மூச் என்று கதறத் தொடங்கியது, என்ன இந்த டெஸ்ட் தொடரை ஏன் சரியாக விளம்பரப்படுத்தவில்லை... ஆஸ்ட்ரேலியாவிற்கு வரும் அணிகள் தங்கள் திறன்களை மேலும் வளர்த்துக் கொண்டு தங்கள் அணிக்கு நல்ல சவாலை ஏற்படுத்த தவறுகிறது.. இதனால் டெஸ்ட் போட்டிகள் அதன் ரசிகர்களை இழந்து வருகிறது... என்றெல்லாம் கதறி ஓய்ந்தன.

அது போன்ற நிலை இந்தியா-ஆஸ்ட்ரேலியத் தொடரிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்று கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா செய்ய வேண்டிய பில்ட்-அப் வேலையை ஆஸ்ட்ரேலிய ஊடகங்களே செய்யத் தொடங்கியுள்ளன.

ஆனால் எப்போதுமே ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் அங்கு வரும் அயல் நாட்டு வீரர்களை லாயக்கற்றவர்கள் என்றும், தைரியமற்றவர்கள் என்றும் எழும்பும் வேகப்பந்திற்கு பயந்து ஓடுபவர்கள் என்றும், உத்தி மற்றும் மனோபல அளவில் குறைந்தவர்கள் என்றும் மட்டம் தட்டும் போக்கு கொண்டவைதான் என்பதை மறுக்க முடியாது.

இந்த முறை மைதானம் ஈ ஓட்டாமல் இருப்பதற்காக பில்ட் அப் மார்க்கெட்டிங் சற்று கூடுதலாகவே உள்ளது.

கடந்த வாரம் ஒரு பத்திரிகையில் வந்த தலைப்பு "ஆஸ்ட்ரேலிய அணியை அச்சுறுத்தும் இந்திய பணம்". ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள இந்திய பிரிமியர் லீகிற்கு முக்கிய வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவதை சித்தரித்து இதுபோன்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் "பணத்தை நோக்கி ஓடும் ஆஸி. வீரர்கள்" என்றல்லவா தலைப்பு இருந்திருக்கவேண்டும்?

பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டில் சச்சின் காயமடைந்து அவருக்கு பதிலாக யுவ்ராஜ் சிங் ஆடினார். நம் நாட்டு தேர்வு முறைகள் அறிந்த எந்த ஒருவரும் இந்த "காயம்" என்ற விவகாரத்தை நன்கு அறிவர். ஆனால் ஆஸ்ட்ரேலிய ஊடகம் என்ன எழுதியது தெரியுமா? உடற்கோப்பு தகுதியில்லாத இந்திய அணி ஆஸ்ட்ரேலியா வருகிறது என்று மட்டம் தட்டியுள்ளது. இது ஏதோ பத்தி எழுத்து அல்ல. கொட்டை அச்சில் ஆன் லைனில் பார்த்த தலைப்பு. அதில் அனைத்து இந்திய வீரர்களும் உடற்கோப்பு இல்லாதவர்களாக கூறப்பட்டுள்ளது.

அதாவது "இந்திய அணி எப்போதுமே (2003-04 தொடரிலுமா?) ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணத்தின் கடுமையை எதிர்கொள்வதில் சிரமப்பட்டுள்ளது, காயங்களும் சோர்வுகளும்தான் அந்த வீரர்களுக்கு எஞ்சுகிறது". இப்படி நமக்கே தெரியாத ஒரு செய்தி(!)யை வெளியிட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் இந்திய அணியை தனது வேகத்தால் திணற அடிப்பேன் என்று கூறியுள்ளார், ஆனால் ஆஸ்ட்ரேலிய ஆன் -லைன் பத்திரிக்கை அதனை திரித்து "Flat track bullies" - ஷான் டெய்ட் எச்சரிக்கை என்றது.

முன்னாள் வீரர் ஸ்டீவ் வாஹ் ஒரே ஒரு பயிற்சி ஆட்டம் கொடுக்கும் நியாயமற்ற விஷயத்தை கண்டு கொள்ளாமல், மெல்பர்னில் முதல் டெஸ்ட் விளையாடப்படுவதன் மூலம் இந்தியா பிழைத்தது என்று அதனையே சாதகமான விஷயமாக மாற்றுகிறார். அதாவது வேகமான ஆட்டக்களமான பெர்த்தில் 3வது டெஸ்ட் நடக்கிறது, அதற்குள் இந்திய வீரர்கள் சுதாரிக்க வாய்ப்பு இருக்கிறது. என்ன அதிர்ஷ்டம் இந்தியாவிற்கு!!

முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ், ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தை கொண்டு எந்த அணியும் ஆஸ்ட்ரேலியாவில் சமாளிக்க முடியாது என்றும் மோசமான ஃபீல்டிங் உள்ள இந்திய அணி அடி வாங்குவது உறுதி என்று கூறியுள்ளார்.

இயன் சாப்பல் ஓரளவுக்கு நடு நிலையாக கருத்தை தெரிவிப்பது போல் தெரிந்தாலும் சற்று கூர்ந்து கவனித்தால், ஆஸ்ட்ரேலிய தேசப்பற்றை அதிலும் காண முடியும். அதாவது இந்திய அணியின் பேட்ஸ்மென்கள் பாதுகாப்பான ஆட்டத்தையும், அணியில் தங்கள் இடத்தை தக்கவைப்பதற்காகவும் ஆடினால், எதிரிகள் இந்திய அணியின் உள்ளேயே இருக்கின்றனர் என்று மிட் டே பத்திரிக்கையில் கூறியுள்ளார்.

அவர்களை போய் குறை கூறுவது ஏன்? நம்மூர் ஆசாமி ஹர்ஷா போக்ளே எழுதும்போது சேவாக்கை தேர்வு செய்தது நம்பிக்கை இழந்த நிலை, ஊக்கமான முடிவு அல்ல என்று கூறியுள்ளார்.

இன்னும் சுற்றுப்பயண தேதி நெருங்க நெருங்க மேத்யூ ஹெய்டன் இந்தியா ஒரு அணியாக திரண்டு ஆடாது என்பார், இந்திய அணியில் துவண்டு போன வீரர்கள் அதிகம் என்பார். தாக்கு பிடிக்க முடியாது என்பார்.

ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் தேர்வு குறித்து ஏதாவது கருத்தை உதிர்ப்பார். அதாவது நாங்கள் சேவாக்கை வீடியோவில் சுத்தமாக காலி செய்து விட்டோம் என்பார், சச்சினின் ஃபுட் வொர்க் சரியில்லை என்று ஜான் புக்கானன் கூறுவார். ஜாஃபருக்கு கண் தெரியாது என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நம் கேள்வி என்னவெனில் எதற்கு இவ்வளவு வசைகள், இவ்வளவு பில்ட்-அப்கள். நமது ஊடகங்களும், வீரர்களும் ஆஸ்ட்ரேலிய அணி பற்றி மரியாதையாக குறிப்பிடுகின்றனர். ஆனால் ஒவ்வொரு முறை ஏதாவது சாதனையை குறி வைத்து ஆஸ்ட்ரேலியா இந்தியாவுடன் விளையாடும்போதெல்லாம் அவர்கள் மண்ணைக்கவ்வியுள்ளார்கள் என்பதே 2001 முதல் வரலாறாக இருந்து வருகிறது.

நாம் என்ன கூறுகிறோம் என்றால், ஒரு அணியின் பலத்தையும், பலவீனத்தையும் நடு நிலையாக சீர்தூக்கி பகுத்தாய்ந்து எழுதுவதுதான் அறிவுடைமை.

ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் எழுதுவது அனைத்தும் குப்பை கருத்துகளாகவே உள்ளது. அதிலிருந்து எந்த ஒரு கருத்தையும் சீரியசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. மிகவும் சிறுபிள்ளைத் தனமான கருத்துக்களை அவர்கள் தொடர்ந்து பத்திகளாக எழுதி வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர் வேறொரு சந்தர்ப்பத்தில் கூறுவது போல் அவர்களுக்கு கிரிக்கெட் தெரியாது என்று கூறுவது உண்மைதானோ என்று நினைக்க தோன்றுகிறது.

வீரர்கள் தங்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்தி, ஊடகங்களின் அபத்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பை வேரொருவரிடம் ஒப்படைப்பதே இதற்கு சிறந்த வழி.

கிரிக்கெட் தொடர் துவங்கும் முன்பே சொற்போர் அளவில் கிரிக்கெட்டை சாகடித்து விடுகின்றனர் ஆஸ்ட்ரேலிய பத்திரிகையாளர்கள். அதாவது கிரிக்கெட்டை விட தங்களை பெரியவர்களாக நினைத்துக் கொள்ளும் மடமையை இவர்கள் பொக்கு நமக்கு உணர்த்துகிறது என்றால் மிகையாகாது.
2004 ஆம் ஆஸ்ட்ரேலிய பயணம் மேற்கொண்டபோதும் இப்படித்தான் ஊடகங்கள் இந்திய அணியை படு மோசமாக சித்தரித்தன. இது குறித்து அணித் தலைவர் கங்கூலியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதிர்ஷ்டவசமாக எனது அறையின் கதவிற்கு அருகில் கிடக்கும் பத்திரிக்கைகளைத் தான் படிப்பதில்லை என்றும், அதனால் தான் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவதில்லை என்றும் பதிலளித்தார்.
அதோடு நிற்கவில்லை, பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஒரு விக்கெட் வீழ்ந்தவுடன் கங்கூலி களமிறங்கியது மட்டுமின்றி, சிறப்பாக ஆடி சதமும் அடித்தார். அத்தோடு அடங்கிய ஆஸி. ஊடங்கள் தங்கள் நாட்டு வீரர்களை விமர்சனம் செய்ய ஆரம்பித்தன.

இந்த முறையும் அப்படித்தான் நடக்கப் போகிறது.

Share this Story:

Follow Webdunia tamil