ஆஸி.யை தோற்கடிக்க இலங்கை செய்ய வேண்டியது என்ன!
, செவ்வாய், 13 நவம்பர் 2007 (15:42 IST)
பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்ட்ரேலியாவிடம் இலங்கை இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. இதையும் சேர்த்து ஆஸ்ட்ரேலிய அணி பான்டிங் தலைமையில் 13 டெஸ்ட்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது!இன்னமும் 4 டெஸ்ட்களை தொடர்ந்து வென்றால் ஸ்டீவ் வாஹ் தலைமையில் ஆஸ்ட்ரேலியா தொடர்ச்சியாக 16 டெஸ்ட் வென்ற சாதனை முறியடிக்கப்படும். இதனை முறியடிக்க இலங்கை அணி கடுமையாக போராட வேண்டும்.ஒவ்வொரு ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மெனுக்கும் பந்து வீசும் உத்திகளையும் களத்தடுப்பு உத்திகளையும் திட்டமிடவேண்டும். பேட்டிங்கில் எப்படியாவது போராடி குறைந்தது 100 ஓவர்களையாவது விளையாட வேண்டும். 100 ஓவர்களை விளையாடினால் சவாலான எண்ணிக்கையை எட்டலாம்.150
ஓவர்களை ஆடினால் ஆஸி. அணிக்கு சோதனையை ஏற்படுத்தலாம்.பிரிஸ்பேன் டெஸ்டில் பூவா தலையா வென்ற மஹேலா ஜெயவர்தனே முதலில் ஆஸ்ட்ரேலியாவை பேட் செய்ய அழைத்தது பெரும் தவறு. ஏனெனில் ஆஸ்ட்ரேலியா வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்திருக்கும்.மெக்ரா, வார்ன் இல்லாத நிலையில் முதல் நாளில் திடீரென ஜெயசூரியாவிற்கு பந்து வீசவேன்டுமென்றால் நெருக்கடி அவர்கள் பக்கம் இருந்திருக்கும். இந்த வாய்ப்பை ஜெயவர்தனே கோட்டை விட்டார். இரண்டாவதாக ஜெயவர்தனே எதிர்பார்த்த அளவிற்கு பந்து வீச்சுக்கு சாதகமான ஆட்டக்களம் இல்லை அது.
ஆஸ்ட்ரேலிய அணிக்கு ஸ்டீவ் வாஹ் கேப்டன் பொறுப்பேற்றதிலிருந்தே ஆஸ்ட்ரேலியா பிற அணிகளின் பேட்டிங்கை எளிதாக எடைபோடும் வேலையை செய்யத் தொடங்கியது. அதாவது பேட்டிங்கிற்கு சாதகமான ஆட்டக்களத்தை போட்டு விடுவது. ஏனெனில் அந்த களங்களில் மெக்ரா மற்றும் வார்ன் ஆகியோர் விக்கெட்டுகளை சாய்க்கும் திறன் கொண்டவர்கள். ஆனால் எதிரணியினர் பந்து வீசும்போது ஆஸ்ட்ரேலிய அணிக்கு அது ஒரு பேட்டிங் சாதக ஆட்டக்களமே.
ரிக்கி பான்டிங்கும் அந்த திட்டத்தைத்தான் பிரிஸ்பேன் ஆட்டக்களத்தில் கடைபிடித்தார். மெக்ரா, வார்ன் இல்லாத முற்றிலும் புதிய வீச்சாளர்களான கிளார்க், மிட்செல் ஜான்சன், மேலும் நீண்ட நாட்களாக சர்வதேச கிரிக்கெட்டையே பார்க்காத மெக்கில் ஆகியோர் இருக்கும்போது முதலில் பேட் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் மெக்கிலை ஏன் அணியில் எடுத்தோம் என்று ஆஸ்ட்ரேலியா நினைத்திருக்கும்.
ஸ்டீவ் வாஹின் இந்த பேட்டிங் ஆட்டக்கள உத்தி கடந்த முறை (2003-2004) இந்தியாவிடம் பலிக்கவில்லை. நம் இந்திய ஆட்டக்களங்களில் கூட சேவாக், டிராவிட், லக்ஷ்மண் மற்றும் சச்சின் அவ்வளவு சிறப்பாக ஆடியிருக்க மாட்டார்கள். ஆஸ்ட்ரேலிய ஆட்டக்களங்களை அவ்வளவு எளிதாக இந்தியா தனதாக்கிக் கொண்டது(ஒரு இன்னிங்ஸில் இந்திய அணி 700 ரன்களுக்கும் அதிகமாக அடித்தது).
மேலும் முதலில் பேட்டிங் செய்து 2வதாக ஆஸ்ட்ரேலியா பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் சற்றே மென்மையடைந்து முரளிதரன் பந்து வீச்சும் சிறப்பாக அமைந்திருக்கும் வாய்ப்பு இருந்தது. இத்தனை வாய்ப்புகளையும், அவர்களை முதலில் பேட் செய்ய அழைத்ததன் மூலம் ஜெயவர்தனே கோட்டை விட்டார்.
பேட்டிங்கில் அட்டப்பட்டு முதல் இன்னிங்சில் நிதானமாக ஆடினாலும், அவர் தடுமாறியதைத்தான் அது எடுத்துக் காட்டியது. எதிர்முனையில் இருக்கும் வீரருடன் அவர் ஸ்ட்ரைக்கை பகிர்ந்து கொள்ளுமாறு ஆடினால் பந்து வீச்சாளர்களுக்கு கடினமாக இருந்திருக்கும். ஆனால் இவரே நிறைய ஓவர்களை ரன் எடுக்காமல் ஆடினார், இதனால் எதிர் முனை வீரரின் உத்திகளை ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளர் சரியாக கணித்து வீழ்த்தி விடுகின்றனர்.
ஆஸ்ட்ரேலிய ஆட்டக் களங்களில் மரபான ஆஃப்-ஸ்பின் பந்து வீச்சு அல்லது இடது கை சுழற்பந்து வீச்சு ஆகியவற்றிற்கு விக்கெட்டுகள் அதிகம் கிடைத்துள்ளதை நமக்கு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முரளிதரன் தனது திரும்பும் பந்துகளை வீசும் அதே அளவிற்கு ஒரு ஸ்பெல் முழுதும் மரபான ஆஃப்-ஸ்பின் பந்து வீச்சை முயற்சி செய்து பார்த்திருக்கலாம்.
முதல் நாளில் முரளிதரன் பந்து வீச நேரும்போதெல்லாம், அவரை அணித் தலைமை சரியாக பயன்படுத்துவது அவசியம். பேட்டிங் நன்றாக உள்ள ஆஸ்ட்ரேலியா போன்ற அணிகளுடன் அவரை நீண்ட ஸ்பெல்களை போடுமாறு நிர்பந்திக்கக் கூடாது. மாறாக திடீர் திடீரென 4 அல்லது 5 ஓவர்களை வீச வைக்க வேண்டும். இதையும் ஜெயவர்தனே முயற்சி செய்து பார்க்கலாம்.
அனைத்திற்கும் மேலாக பில் ஜாக் போன்ற வீரரை சதம் எடுக்க விடுவது தவறு. அவர் தன் முதல் ரன்னை எடுக்க 34 பந்துகள் எடுத்துக் கொண்டார். எப்போது ஒருவர் பதட்டமாக இருக்கிறாரோ அப்போதே முரளிதரனிடம் விடவேண்டும். இதை ஜெயவர்தனே செய்யவில்லை. மேலும் ரிக்கி பாண்டிங் களமிறங்கியபோது உடனடியாக முரளியை கொண்டு வருவதை விடுத்து, அவர் ஒரு 7- 8 பவுண்டர்களை அடித்த பிறகு கொண்டு வந்தார். இல்லையெனில் முதலிலேயே பாண்டிங்கை முரளி வீழ்த்தியிருப்பார்.
அட்டப்பட்டுவை நடுவரிசையில் களமிறக்கி ஓரளவிற்கு ஆக்ரோஷமாக அதிரடி ஆட்டமாடிய எல்.பி.சி. சில்வா போன்றவர்களை துவக்க வீரராக களமிறக்கிப்பார்க்கலாம்.
அடுத்த டெஸ்ட் ஹோபார்ட்டில் நடைபெறுகிறது. இந்த ஆட்டக் களம் மற்ற ஆஸ்ட்ரேலியா ஆட்டக்களங்கள் போல் அவ்வளவு வேகமான ஆட்டக் களம் இல்லை. இதில் இலங்கை அணி முதலில் பேட் செய்து 100 ஓவர்களுக்கும் மேல் விளையாடி விட்டால், வெற்றிக்கு முயற்சிக்கலாம்.
கடினமான கேட்ச்களையும் பிடித்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற சூழலில் எளிதான கேட்ச்களையும் கோட்டை விடும் போக்கை நிறுத்த வேண்டும். இது போன்ற தவறுகள்தான் ஆஸ்ட்ரேலிய அணியின் பலத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதை ஜெயவர்தனே மட்டுமல்ல ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக விளையாடும் எந்த அணியின் தலைவரும் உணரவேண்டும் என்பது முக்கியமானது.
நடுவர் செய்யும் மோசமான தவறுகள், ரசிகர்களின் கேலிப்பேச்சு, களத்தில் ஆஸ்ட்ரேலிய வீரர்களின் வசை என்று ஆஸ்ட்ரேலியாவில் சோதனைகள் அதிகம். இதனை எதிர்கொள்ளும் மனோ பலத்தை எதிரணியினர் வளர்த்துக் கொண்டால் மட்டுமே அங்கு வெற்றி சாத்தியமாகும்.