ஆஸி. இயந்திரத்தை உடைத்த இந்தியா!
, செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (10:46 IST)
மெல்போர்ன் ஒரு நாள் போட்டியில் இதுவரை எந்த அணியும் ஆதிக்கம் செலுத்தாத அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணியினரை தங்களது கிரிக்கெட் ஆட்டம் பற்றி மறு பரிசீலனை செய்யத் தூண்டும் வெற்றியை இந்தியா பெற்றுள்ளது.1992
உலகக் கோப்பையில் அடைந்த படுதோல்விகளுக்கு பின் மார்க் டெய்லர் தலைமையில் ஆஸ்ட்ரேலிய அணி மீண்டும் பெரிய சக்தியாக உருவெடுத்தது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் வெகு குறைவான தோல்விகளையே சந்தித்தது. ஆனால் அந்த தோல்விகளிலும் எதிரணியினர் நேற்று இந்தியா செய்த அளவுக்கு ஆதிக்கத்தை செலுக்த முடியவில்லை என்பதை உறுதியாக நாம் கூறலாம்.
1996
உலகக் கோப்பை போட்டியின் இறுதியில் இலங்கை இது போன்ற ஒரு ஆதிக்கத்தை செலுத்தி, ஆஸ்ட்ரேலியாவின் மகுடத்தை வீழ்த்தியது. அதன் பிறகு ஜான் புக்கானன், ஸ்டீவ் வாஹ் போன்றவர்களின் தலைமையில் கிரிக்கெட் ஆட்டத்திற்கு வேறு விதமான விளக்கங்களை கொடுத்துக் கொண்டு ஆஸ்ட்ரேலியா ஆதிக்கம் செலுத்தி நேற்று வரையிலும் பாண்டிங் தலைமையில் அந்த ஆதிக்கம் நீடிக்க தூண்டுகோலானது.இந்த ஆதிக்க காலத்தில் எல்லாம் ஆஸ்ட்ரேலிய அணியில் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹெய்டன், ஷேன் வார்ன், கிளென் மெக்ரா, ரிக்கி பாண்டிங் ஆகியோர் பங்களிப்பு மிக அதிகமானது.அதன் பிறகு ஆஸ்ட்ரேலியா என்றாலே அதிரடி, அவர்கள் பேட்டிங் வரிசையை யாரும் ஆட்ட முடியாது... அவர்கள் பந்து வீசினால் எதிரணியினர் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு தோல்வியைத்தான் சந்திக்க வேண்டும் என்பது போன்ற கேள்விக்கு உட்படுத்தப்படாத ஒரு நிலை நீடித்து வந்தது. இதற்கு பெரும்பான்மையான காரணம் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் ஆஸ்ட்ரேலிய அணியின் மீது வைத்திருந்த அசைக்க முடியாத ரசிக மனோபாவமே. ஆஸ்ட்ரேலியா ஒரு ரன் எடுக்கும் இயந்திரம், பந்து வீச்சில் எதிரணியை திணறடிக்கும் இயந்திரம், ஃபீல்டிங்கில் பாகங்கள் பழுதடையா ஒரு இயந்திரம் என்று உலக அணிகள் நம்பின. உளவியல் ரீதியாக அவர்களுடன் நாம் போட்டியிட முடியாது என்று அணி நிர்வாகங்கள், கிரிக்கெட் வாரியங்கள் ஆஸ்ட்ரேலிய பயிற்சியாளர்களைத் தேடி அலைந்தன. இந்த மாயையில் இந்தியாவும் விழுந்தது. ஆனால் அந்த விவகாரமே இப்போது இந்திய அணியின் போர்க் குணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.கிளென் மெக்ரா, ஷேன் வார்ன், ஜஸ்டின் லேங்கர் ஆகியோர் ஓய்வு பெற்றவுடன், தங்களது பலவீனங்களையெல்லாம் ஊடகங்களை வைத்தும், எதிரணியினரை மைதானத்தில் மட்டம் தட்டியும் மறைத்துக் கோண்டு வந்தது.சிட்னி, பெர்த், அடிலெய்ட் டெஸ்டில் துவங்கியது ஆஸ்ட்ரேலிய சரிவு. அந்த அணியை வீழ்த்த முடியும் என்பதோடு கேவலமாக சுருட்ட முடியும் என்பதையும் மேல்போர்னில் இந்திய வெற்றி உறுதி செய்துள்ளது.
மெல்போர்ன் ஆட்டக்களம் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் தூண்டுதலால் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆட்டக்களமாக உருவாக்கப்பட்டது. பூவா தலையா வென்று உடனடியாக பேட்டிங் என்று தீர்மானித்த பாண்டிங், சாந்தகுமாரன் ஸ்ரீசாந்தும், இஷாந்த் ஷர்மாவும் இந்த அளவுக்கு சேதங்களை ஏற்படுத்தி விடுவார்கள் என்று நிச்சயம் நம்பியிருக்க மாட்டார்.
நெருப்பின் உக்ரமும், ஆக்ரோஷமும் தங்களுக்கே உரிய சொத்து என்று இதுவரை நினைத்து வந்த ஆஸ்ட்ரேலிய அணியின் தற்பெருமை இந்திய நெருப்பில் நேற்று பொசுங்கிப்போய் விட்டது என்றே கூறலாம்.ஆஸ்ட்ரேலிய அணி, இது நேற்றோடு முடிந்துவிட்ட விவகாரம் என்று தோள்களை குலுக்கலாம். ஆனால் இது முடிவல்ல... சாம்ராஜ்யம் சீரழிவதின் துவக்கம் என்று போகப் போக அவர்களுக்கு புரியவரும்.இஷாந்த் ஷர்மா 2வது ஓவரில் நோ பால்களையும், வைடுகளையும் வீசி ஹெய்டனிடம் சில அடிகளையும் வாங்கினார். ஆனால் பலவீனமான இளம் வீரராயிருந்தால் துவண்டு போய் பிறகு வீசுகிறேன் என்று கூறியிருப்பார். அல்லது பலவீனமான அணித் தலைமையாயிருந்தால், அவருக்கு அடுத்த ஓவரை கொடுத்திருக்க மாட்டார்.
ஆனால் தோனி, உடனே இஷாந்த் ஷர்மாவை அழைத்து, "நீ என்ன திட்டத்தில் பந்து வீச அழைக்கப்பட்டாயோ அந்த வேலையை ஆக்ரோஷமாக செயல் படுத்து" என்று கூறினார். அதன் விளைவு ஆஸ்ட்ரேலியாவின் "அதிரடி" வீரர்கள் இந்திய ஃபீல்டர்களுக்கு கேட்ச் பயிற்சி கொடுத்து விட்டுச் சென்றனர்.
இது போன்ற அணுகுமுறையை இலங்கையும் செயல்படுத்த துணியவேண்டும். மாறாக இலங்கை அதிரடியைக் கண்டவுடன் பின்வாங்கி ஃபீல்டர்களை பின்னுக்கு நகர்த்தி, பவர் ப்ளேயை விட்டுக் கொடுத்து முரளிதரனை கொண்டு வரவேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறது.
பவர் ப்ளே இருக்கும் போதே முரளிதரனைக் கொண்டு சுழற்பந்து என்றாலே நடுங்கும் ஆஸ்ட்ரேலிய வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அணுகுமுறையை ஜெயவர்தனே கடைபிடிக்க வேண்டும்.
ஏனெனில் ஆஸ்ட்ரேலியா வேகப்பந்திற்கு சாதகமான ஆட்டக்களங்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. மெதுவான ஆட்டக்களங்களில் அவர்களது வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்தைக் குறைத்து ஏறத்தாழ ஒரு சுழற்பந்து வீச்சளர்கள் போல் வீசியே இலங்கையை சிட்னியில் சுருட்டினர்.
நாதன் பிராக்கன், ஸ்டூவர்ட் கிளார்க், ஏன் பிரட் லீயையே அவர்கள் ஆக்ரோஷமாக அடித்து ஆடவேண்டும். ஜெயசூரியா ஆட்டமிழந்தவுடன் சங்கக்காரா போன்ற முக்கிய வீரர்கள் அதிரடியாக ஆட நேரிடும்போது ஆட்டமிழக்கிறார்கள். அதிகம் தெரியாத வீரரை அடித்து ஆட வைக்கும் உத்தியை சிறிலங்கா கடைபிடிக்கலாம்.
நெருப்பை நெருப்பால் சந்தியுங்கள் என்ற இந்திய அணியின் புதிய தாரக மந்திரத்தை உலக அணிகள் கடைபிடித்தால் இந்தியா மட்டுமல்ல வங்கதேசமும், ஜிம்பாப்வேயும் கூட எதிர்காலங்களில் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்த முடியும்.
பயிற்சியாளர்களால் ஒன்றும் பயனில்லை. அணித் தலைமை பலமாக இருக்கவேண்டும். இந்தியாவில் அனில் கும்ளேயும், மகேந்திர சிங் தோனியும் ஆஸ்ட்ரேலிய மண்ணிலேயே அந்த இயந்திரத்தை உடைக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். இனி அந்த அணி தோல்விகளுக்கு, ஏன் தொடர் தோல்விகளுக்கும் தங்கள் மனதை தயார்படுத்திக் கொள்வது நல்லது.