ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றி மூலம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.44
நாட்களில் 59 போட்டிகளை நடத்தி இரவு நேரத்தில் ரசிகர்களை மிகப்பெரிய பொழுது போக்கு வலைக்குள் சிக்க வைத்தது ஐ.பி.எல். கிரிக்கெட் என்றால் மிகையாகாது.இந்தியத் தொலைக்காட்சிகளில் பிரதானமாக ஹிட் ஆகி இருந்த மெகா தொடர், ரியால்டி ஷோக்கள் உள்ளிட்ட பல்வேறு தனித்த தொலைக்காட்சித் தொடர்களை பின்னுக்கு தள்ளிவிட்டது ஐ.பி.எல். என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னரே சுமார் 9.9 மில்லியன் ரசிகர்கள் மைதானத்தில் நேரடியாக சென்று போட்டிகளை கண்டுகளித்துள்ளதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.
முதல் நாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிரன்டன் மெக்குல்லம் அடித்த அதிரடி 158 ரன்கள் என்ற துவக்கம் இந்த கிரிக்கெட் தொடரை உலகம் முழுதும் பெரிய ஹிட் ஆக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, யு.ஏ.இ. ஆகிய நாடுகளில் ஐ.பி.எல். மெகா ஹிட்டாகியுள்ளது.
மிகவும் ஆச்சரியமான தகவல் என்னவெனில், அமெரிக்காவில் ஐ.பி.எல். கிரிக்கெட் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது என்பதே.
இந்த விதத்தில் பார்க்கும்போது தென் ஆப்பிரிக்க நீங்கலாக, ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, நியூஸீலாந்து ஆகிய நாடுகளில் இந்த ஐ.பி.எல். போட்டிகள் சரியான வரவேற்பைப் பெறவில்லை. ஆஸ்ட்ரேலியாவிலும் இங்கிலாந்திலும் ஊடகங்கள் ஐ.பி.எல். ஆட்டங்கள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அங்கு ஊடகங்களில் எழுதும் பத்தி எழுத்தாளர்களான முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் அல்லது கிரிக்கெட் நிருபர்கள் அனைவரும் 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் மரபான கிரிக்கெட்டை ஐ.பி.எல். கொன்றுவிட்டது என்ற தொனியில்தான் எழுதியுள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெற்றி குறித்த அவர்களது பார்வைகள் சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகங்களில் ஆசிய கிரிக்கெட் வாரியங்களின் ஆதிக்கம் குறித்த வயிற்றெரிச்சலால் விளைந்தவைகளே என்பதை ஒருவர் கணித்துவிட முடியும்.
பெரும்பாலும் ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள், வீரர்களுக்கு இன்னமும் ஐ.பி.எல். ஒப்பந்தத் தொகைகள் சரிவர வந்து சேரவில்லை என்ற செய்திகளையே பிரதானப்படுத்தியிருந்தன. ஆனால் ஒப்பந்தத் தொகை பட்டுவாடாவில் உள்ள வரி உள்ளிட்ட விவகாரங்களினால் தாமதம் ஏற்படுகிறது என்றும், இது வெறும் நடைமுறைச் சிக்கலே என்றும் ஐ.பி.எல். நிர்வாகிகள் தெரிவித்தும் அந்த ஊடகங்களின் வயிற்றெரிச்சல் கவரேஜ் அந்த ஒன்றையே பிராதனப்படுத்தி வந்துள்ளன.
1983 உலகக் கோப்பையை இந்தியா வென்றதும், 1992ல் பாகிஸ்தானும், 1996ல் இலங்கையும் வென்று ஆசிய நாடுகள் கிரிக்கெட் சூப்பர் பவர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்று நிரூபித்த போது, ஒரு நாள் போட்டிகள் முன்னெப்போதையும் விட அதிக அளவில் விளையாடப்பட்டபோது, மரபு கிரிக்கெட் ஆதரவாளர்கள், ஒரு நாள் போட்டிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை தவறாக விமர்சனம் செய்து வந்தனர்.
இங்கிலாந்தில் உருவாக்கப்ப்ட்ட இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளை ஐ.சி.சி. சுவீகரித்து உலகக் கோப்பையை நடத்தி அதில் 50 ஓவர்கள் உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்தியா வெற்றி பெற்றதும் ஆஸ்ட்ரேலிய, இங்கிலாந்து ஊடக ஜாம்பவான்களின் வயிற்றெரிச்சலைக் கிளப்பியது. இப்போது ஐ.பி.எல். பலத்த வரவேற்பை பெற்றுள்ளதை அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இந்த போட்டித் தொடர் நல்லதா, கெட்டதா? இதனால் பயனுண்டா, பயனில்லையா, டெஸ்ட் கிரிக்கெட் இருக்குமா அழியுமா? ஒரு நாள் போட்டிகள் தொடருமா, நிறுத்தப்படுமா என்ற கேள்விகளை வைத்துக் கொண்டே இவர்கள் ஓட்டி வருகின்றனர்.இவையெல்லாம் பற்றி நாம் ஒன்றும் இப்போதைக்கு முடிவுக்கு வர முடியாது. இந்தியாவில் பிரபலமான விளையாட்டு கிரிக்கெட், இதனால் அதில் ஒரு புதுமை நுழையும்போது நாடுகள் அல்லாது வெறும் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளை இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வி ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, யு.ஏ.இ., தென் ஆப்பிரிக்கா குறிப்பாக அமெரிக்காவில் ஐ.பி.எல். தற்போது பெற்றுள்ள வரவேற்பு கிரிக்கெட் இத்தனையாண்டுக் காலமாக ஆடப்பட்டு வரும் முறை, நடத்தப்பட்டு வரும் முறை ஆகியவற்றில் தீவிர மாற்றங்களை வேண்டியுள்ளது என்பது உண்மையே.இந்தியாவைப் பொறுத்தவரை, பெயர் தெரியாத உள்ளூர் இளம் கிரிக்கெட் வீரர்களை நமக்கு அறிமுகம் செய்தது ஐ.பி.எல். கிரிக்கெட்தான். முன்பெல்லாம் ரஞ்சி கோப்பைக்கு ஒருவர் தேர்வானால், அதில் அவர் சதங்களை தொடர்ந்து குவித்து, ஊடக கவனத்தை பெற்றால் மட்டுமே கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்திற்கு வருவார்கள். இன்று அது போன்ற இடை அமைப்புகள் தேவையில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக காண முடிவதால் இதுவரை அறியாத வீரர்கள் பலரை தெரிந்து கொள்ள முடிகிறது.
அஸ்னோட்கர் என்ற வீரரை தற்போது ரஞ்சி உள்ளிட்ட உள்நாட்டுப் போட்டிகளில் ரசிகர்கள் ஆர்வத்துடன் பின் தொடர்வார்கள். அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் ஏன் என்ற கேள்விக்கு அந்தந்த தேர்வுக் குழு பதில் கூறியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான விஷயமே.
மேலும் தற்போது அணியை ஏலம் எடுத்த உரிமையாளர்கள் தங்களது பிரான்ட் இமேஜை தக்கவைத்துக்கொள்ள ஆஸ்ட்ரேலிய, இங்கிலாந்து உள்நாட்டு அணி வாரியங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆஸ்ட்ரேலியாவின் விக்டோரியா அணியுடனோ, நியூ சவுத் வேல்ஸ் அணியுடனோ இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளை விளையாட பேச்சு வார்த்தைகள் நடைபெறவுள்ளன.
இதனால் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இதுவரை கிடைக்க வாய்ப்பில்லாத சர்வதேச கிரிக்கெட் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்திட்டம் நிறைவேறினால், கடும் சவாலை சந்திக்க துணிவுள்ள நிறைய வீரர்களை இந்தியா மட்டுமல்லாது பிற நாட்டு அணிகளிலும் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் ஐ.பி.எல்.லில் விளையாடப்படும் கிரிக்கெட் ஆட்டங்களின் எண்ணிக்கை அளவுக்கதிகமாக உள்ளது. ஆட்டங்களின் எண்ணிக்கையை குறைப்பது நல்லது. ஏனெனில் வீரர்கள் காயமடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஏற்கனவே, ஹெய்டன், ஸ்மித், டெண்டுல்கர் ஆகியோர் காயமடைந்து அடுத்த சர்வதேச தொடர்களை ஆட முடியாமல் போயுள்ளது.
ஐ.பி.எல். ஒரு பொன் முட்டையிடும் வாத்துதான், அதற்காக அதை உடனடியாக அறுத்து லாபம் சம்பாதிக்கும் போக்கை கடைபிடித்தால் முதலுக்கே மோசமாகிவிடும் நிலை ஏற்படும்.