இந்திய பந்து வீச்சாளர்களிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ளே திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்திருப்பது, சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றாலும், இந்திய அணிக்கு அது ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பாகும்.18
ஆண்டுகால தனது போராட்ட கிரிக்கெட் வாழ்வில், அனில் கும்ளே தவறாக மதிப்பிடப்பட்டார். ஆனால் இதற்கும் காரணம் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் கடந்த 15-16 ஆண்டுகால வரலாற்றில் 3 தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை ஒருங்கே கொண்ட மற்றொரு காலக்கட்டம் என்று இதனைக் கூறலாம். ஒரு காலத்தில் இந்தியாவின் அந்த காலத்திய விலைமதிக்கமுடியாத 4 சுழற்பந்து வீச்சாளர்களான பேடி, பிரசன்னா, சந்திர சேகர், வெங்கட் ராகவன் ஆகியோர் விளையாடிய போது இங்கிலாந்தில் டெரிக் அன்டர்வுட், மேற்கிந்திய தீவுகள் அணியில் லான்ஸ் கிப்ஸ் ஆகியோர் இருந்தது போல், இந்த 15 ஆண்டுகளில் ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், அனில் கும்ளே ஆகியோர் அந்த இடத்தை சிறப்பித்துள்ளனர்.ஷேன் வார்னின் மாயப்பந்து வீச்சிற்கும், முரளிதரனின் புரியாத புதிருக்கும் இடையில் கும்ளேயின் புகழ் சற்று எடுபடாமல்தான் போனது. ஆனால் இதெல்லாம் ஊடகங்கள், ரசிகர்களை பொறுத்தவரையில்தான். எதிரணியினரைப் பொறுத்தவரை கும்ளே எப்போதும் ஒரு அபாயகரமான பந்து வீச்சாளர்தான். போராளிதான். எளிதில் விட்டுக் கொடுக்காத ஒரு உரம் வாய்ந்த வீரர்தான்.
ஷேன் வார்ன், முரளிதரன் அளவுக்கு எண்ணிக்கையில் இவர் அதிக வெற்றிகளை நமக்கு பெற்றுத்தரவில்லை என்றாலும், 1993 முதல் 2008 வரையிலான இவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் வெறும் 43 டெஸ்ட் போட்டிகளில் 288 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியாவை இந்த போட்டிகளில் வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஒரு டெஸ்டிற்கு 7 விக்கெட்டுகள் என்ற சராசரியில் அவர் இந்தியா வெற்றி பெற்ற போட்டிகளில் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்றால் வெற்றியில் இவரது பங்களிப்பு நாம் விலைமதிக்க முடியாதது என்றுதான் கூறவேண்டும்.
கும்ளே பந்து வீசிய காலகட்டம் மிகக் குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவில் கூட, அதற்கு முன்னர் சென்னை, கொல்கட்டா ஆகியன சுழற்பந்து வீச்சிற்கு உகந்த சிறப்பான களங்களாகத் திகழ்ந்தன. சந்திரசேகர், பிரசன்னா, பேடி ஆகியோர் எப்படிப்பட்ட அணியையும் புரட்டிப்போட்டு வறுத்தனர். ஆனால் கும்ளே, ஹர்பஜன் காலத்தில் இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் சுழற்பந்திற்கு உதவும் ஆட்டக்களங்கள் என்று எதுவும் இல்லை என்ற நிலையில், தங்களின் அதீத பந்து வீச்சால் எதிரணியினரை திணறடித்தனர். இதில் பெரிதும் சாதித்தால்தான் கும்ளே, வார்ன், முரளி புகழப்படுகின்றனர்.
1990ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 2-வது டெஸ்டில் இவர் ஹிர்வாணி இருக்கும்போதெ தேர்வு செய்யப்பட்டார். அப்போதும் இந்திய அணி பெரும் மாற்றங்களை சந்தித்து வந்தது. மஞ்சரேக்கர், சச்சின் டெண்டுல்கர் உள்ளே நுழைந்த சமயம். உலக கிரிக்கெட் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி பெரிதும் பேசிக்கொண்டிருந்த காலம். கும்ளே விளையாடிய இந்த முதல் டெஸ்டில், ஓல்ட் டிராஃபோடில்தான் சச்சின் டெண்டுல்கர் அந்த புகழ் பெற்ற தனது முதல் சதத்தை (119) எடுத்து ஆட்டத்தை டிரா செய்தார்.
அந்த முதல் டெஸ்டில் கும்ளே 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியதோடு, பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இவர் அடுத்த போட்டிக்கு இருக்க மாட்டார் என்றும் இந்திய அணியில் இவரது காலம் நீடிக்காது என்றும் பத்திரிக்கைகள் ஊகங்களை வெளியிட்டன.
அதன் பிறகு ஆஸ்ட்ரேலிய பயணம் மேற்கொள்ளும்போதும், 1992 உலகக் கோப்பை அணியிலும் கும்ளே இடம்பெறவில்லை. உலகக் கோப்பை முடிந்தவுடன் இந்தியாவின் முதல் தென் ஆப்பிரிக்க பயணத்திற்கு கும்ளே தேர்வு செய்யப்பட்டார். அங்கு இவர் 4 டெஸ்ட்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, கடைசி டெஸ்டில் இவரும் ஸ்ரீநாத்தும் ஏறக்குறைய இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றிருப்பார்கள்.
அப்போதும் இவர் பற்றி வெளியில் ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்கா இவரை நாம் இப்போது அஜந்தா மென்டிஸை பார்ப்பது போல் பார்த்து அதிசயித்தது.
லெக்ஸ்பின்னர்களுக்கேயுரிய ஃபிளைட், ஆர்க், பந்தை இறக்கும் இடத்தில் மாற்றங்கள் என்று ஒரு அழகியல் இவரிடத்தில் இல்லை. காற்றில் வேகமாக வரும் ஃபீல்டிங்கை இறுக்கமாக நிறுத்தி துல்லியமான அளவு மற்றும் திசை ஆகியவற்றை கொண்டு பேட்ஸ்மென்களை ஒரு முனையில் கட்டிப்போடுவார், சற்று கவனம் சிதறினாலும் ஆட்டமிழக்கச் செய்து விடுவார். எப்போதும் எப்படி ஒரு பேட்ஸ்மென் கவனத்துடன் இருக்க முடியும். இதனால் இவரை விளையாடும் பேட்ஸ்மென்கள் பொறுமை இழப்பது அடிக்கடி நிகழும். வித்தியாசமாக ஆட நினைத்து விக்கெட்டை இழப்பார்கள்.
1993ஆம் ஆண்டிலிருந்து தீவிரமாக துவங்கிய கும்ளேயின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் வாழ்வில் 2008ஆம் ஆண்டு மட்டுமே இவரது விக்கெட் எடுக்கும் திறன் மங்கி வந்தது. அதுவும் ஆஸ்ட்ரேலிய தொடரில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கை தொடர் ஒன்று மட்டுமே இவர் விக்கெட்டுகளை அவ்வளவாக கைப்பற்றவில்லை.
மற்றபடி இந்த 15 ஆண்டுகால அயராத டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்ளே 127 போட்டிகளில் 614 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் இதுவரை விளையாடிய வீரர்களிலேயே அதிக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வெற்றிபெற வைத்தவர் அனில் கும்ளே என்றால் அது மிகையான கூற்றேயல்ல.
நாம் அணி வாரியாக எடுத்துக் கொண்டாலும் கும்ளேயின் சாதனை வேறு எந்த (கபில்தேவ் நீங்கலாக) இந்திய பந்து வீச்சாளரும் இவர் அளவுக்கு சாதனைகளை நிகழ்த்தியது இல்லை என்று கூறலாம்.
இவரது காலத்தில்தான் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் பலவீனமாகி, ஆஸ்ட்ரேலியாவின் வெற்றி ஆதிக்கம் தொடங்கியது. 20 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்ட்ரேலியாவை எதிர்த்து விளையாடிய கும்ளே 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரி 30.32; அதிகபட்சமாக ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராகத்தான் ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 10 முறை கைப்பற்றியுள்ளார்.
ஓரளவிற்கு பலமான இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 டெஸ்ட் போட்டிகளில் 92 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 21 டெஸ்ட் போட்டிகளில் 84 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக 15 டெஸ்ட்களில் 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த டெஸ்ட் போட்டிகளில் நாம் அதிகம் வேற்றி பெற்றிருக்கிறோம். இலங்கைக்கு எதிராக 18 டெஸ்ட்களில் 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இன்று இலங்கை அணிக்கு எதிராக அங்கு சென்று விக்கெட்டுகளைக் கைப்பற்றவில்லை என்று குற்றம் சாட்டுபவர்கள், இலங்கையில் அசாருதீன் தலைமையில் டெஸ்ட் தொடரை வென்றதில் அனில் கும்ளேயின் பங்களிப்பை மறத்துவிட முடியாது.
சச்சின் டெண்டுல்கர் தலைமையில் ஆஸ்ட்ரேலியாவிற்கு 1998ஆம் ஆண்டு சென்ற போது கும்ளே பந்து வீச்சை கிழிகிழி என்று கிழித்தார்கள். ஆனால் அதன் பிறகான தொடர்களில் அவர் 8 டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகளை அங்கு சென்று வீழ்த்தியுள்ளார். இதில் நாம் இரண்டு டெஸ்ட்களை ஆஸ்ட்ரேலியாவில் வெற்றியும் பெற்றிருக்கிறோம் என்பதையும் நாம் எளிதில் மறந்து விட முடியாது.கும்ளேயை மட்டம் தட்டுபவர்கள் அவருக்கு எல்லா மைதானங்களிலும் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாது என்று கூறுவார்கள், ஷேன் வார்ன் போல் பந்தை திருப்புவதில்லை என்று கூறுவார்கள். இதற்கும் நாம் புள்ளி விவரங்களுடன் பதில் அளிக்க முடியும்.ஆசிய மைதானங்களில், அதாவது புழுதிக் கள சுழற்பந்து மன்னன் என்று ஒரு சில "அதிகம் தெரிந்தவர்கள்" வர்ணிக்கும் மைதானங்களில் 82 டெஸ்ட் போட்டிகளில் 419 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் கும்ளே. ஒரு டெஸ்டிற்குக் 5 விக்கெட்டுகள் என்ற சராசரியில்! புழுதியே அல்லாத பளிங்குக் கல் அயல்நாட்டு மைதானங்களில் விளையாடிய மீதி 40 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதே ஒரு டெஸ்டிற்கு 5 விக்கெட்டுகள் என்ற சராசரியில்.எங்கே கும்ளே சோடை போனார்? என்று அவரை விமர்சித்தவர்கள் கூறட்டும். இன்சமாம் ஒரு முறை குறிப்பிட்டது போல் எந்த களமாயிருந்தாலும், 5-ம் நாள் ஆட்டத்தில் கும்ளேயின் பந்து வீச்சை திறைமையுடன் ஆடும் வீரர்தான் சிறந்த பேட்ஸ்மென் என்றார். விளையாடுபவர்களுக்குத்தான் கும்ளேயின் பந்து வீச்சு என்னவென்று தெரியும். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் பெரிதாக விமர்சனம் வைக்க இயலாது.ஒரு டெஸ்ட் வீரர் என்றால் அவர் வெறும் விக்கெட்டுகள் வீழ்த்துவது, ரன்கள் எடுப்பது மட்டுமல்ல. ஓய்வறையிலும், களத்தில் விளையாடும்போதும் தனது அயராத போராட்டக் குணத்தால் மற்றவர்களை உற்சாகமூட்டி போராட வைக்க வேன்டும். அந்த விதத்தில் அனில் கும்ளேயின் பங்கை ஒருவரும் குறைவாக மதிப்பிட முடியாது.
தலையில் கட்டுடன் மேற்கிந்திய தீவுகளில் தைரியமாக பந்து வீசி பிரைன் லாராவை வீழ்த்தியது அவரது இந்த மன உறுதிக்கும், அயராத போராட்ட குணத்திற்கும் ஒரு எடுத்துக் காட்டு.
கும்ளே விளையாடிய கடைசி டெஸ்டிலும் அவர் தன் போராட்ட குணத்தை இளம் வீச்சாளரான அமித் மிஷ்ராவிற்கு விளக்கினார்.
மிட்செல் ஜான்சனுக்கு ஒரு கேட்சை சரியாக கவனிக்காமல் அமித் மிஷ்ரா கோட்டை விட்டார். ஆனால் அடுத்த கும்ளேயின் ஓவரில் கையில் காயத்துடன் இருந்த கும்ளே தானே ஓடிச்சென்று கேட்ச் பிடித்து விட்டு பந்தை ரன்னர் முனை ஸ்டம்ப்பை நோக்கி எறிந்து ஸ்டம்புகளை சாய்த்தார். இது அமித் மிஷ்ராவிற்கான ஒரு செய்தி.
ஆட்டத்தின் எந்த நிலையிலும் நாம் 100 சதவீதம் அர்ப்பணித்தால்தான் வெற்றி பெறுவது சாத்தியம் என்ற அந்த செய்தியை அவர் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வின் கடைசி நாளிலும் அமித் மிஷ்ரா போன்ற இளம் வீரர்களுக்கு கற்பிக்க முடிகிறது என்றால் அதுதான் கும்ளேயிடம் நாம் காணும் சிறப்புக் குணம்.
இதுபோன்ற இன்னொரு பந்து வீச்சாளரை... அல்ல... ஒரு அணிக்கான சிறந்த வீரரை, சிறந்த ஆட்டவுணர்வு உள்ள ஒரு வீரரை, கிரிக்கெட் உலகம் கண்டுபிடிக்குமா என்பது சந்தேகமே.