இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளாரை தேர்வு செய்ய சென்னையில் இன்று கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இரண்டு அன்னிய பயிற்சியாளர்கள், இருவரில் ஒருவரே தேர்வு செய்யப்படுவர் என்று வரும் செய்திகள் வருத்தத்தை அளிக்கிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் சாதனை ஏதும் நிகழ்தாத, சற்றும் அறிமுகமற்ற தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரகாம் போர்டும், இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பந்து வீச்சாளர் ஜான் எம்புயுரியும் இறுதிப் போட்டியாளர்கள் என்று சொல்லப்படுகிறது.
இவர்கள் இருவரும் தங்களது நாடுகளில் மாநில அளவிலான கிரிக்கெட் அணிகளை நன்கு பயிற்றுவித்துள்ளார்கள் என்ற ஒரே காரணத்தை அடிப்படை தகுதியாக்கி அவர்களில் ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசிப்பது வேடிக்கையான வினோதமாகும்.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்திறனையும், அவர்களுடை சிறுசிறு குறைபாடுகளை கண்டறிந்து நீக்கி முறைபடுத்தக் கூடிய பல முன்னணி வீரர்கள் இந்தியாவிலேயே உள்ளனர்.
சுனில் கவாஸ்கரில் இருந்து கபில்தேவ், முகிந்தர் அமர்நாத், மதன்லால் போன்றவர்களுக்கு, இந்திய கிரிக்கெட் வீரர்களின் உளவியலை நன்கு புரிந்துள்ளவர்கள். நமது வீரர்களை முறைபடுத்தவும், பயிற்றுவிக்கவும் இவர்களின் திறனும், அனுபவமுமே போதுமானது. ஆனால், அன்னிய பயிற்சியாளர்களை நியமிப்பதிலேயே கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இருப்பது புரியாத புதிராக உள்ளது.
பெரிதாக பேசப்பட்டு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கிரேக் சேப்பல் இந்திய அணியை ஒரு வழியாக்கி உருத்தெரியாமல் சிதைத்தற்கு பின்னரும் அதில் இருந்து பாடம் பெறாமல், மீண்டும் அன்னிய பயிற்சியாளரை நாடுவது அர்த்தமற்ற செயலாகும். நமது நாட்டு முன்னாள் வீரர்களுக்கு அதற்கான திறன் இல்லையென்று கூறுவது போல கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கை உள்ளது.
கிரிக்கெட் மட்டுமல்ல அன்னிய பயிற்சியாளர்களை நியமித்து இந்திய அணி முகம் தெரியாமல் உருக்குலைந்த எதார்த்தங்களை ரசிகர்கள் கண்டனர். நமது திறன் என்பது நமது உள்ளப்பாங்கோடு பிணைந்த ஒன்றாகும். ஆட்டத்திறனையும், மனப்போக்கையும் பிரித்து கையாள முற்படும் போதுதான் பிரச்சனை எழுகிறது. அதனால் தான் அன்னிய பயிற்சியாளர்களால் நமது வீரர்களின் திறனை பன்படுத்தி உயர்த்த முடியவில்லை.
இதையெல்லாம் சீர்தூக்கி பார்த்து இந்திய பயிற்சியாளரை நியமிக்க வேண்டும். செய்யுமா கிரிக்கெட் வாரியம்...