சிட்னி மைதானத்தில் தனது 3 டெஸ்ட் போட்டிகளிலும் வி.வி.எஸ். லக்ஷ்மண் சதமெடுத்து சாதனை புரிந்துள்ளார். இன்றைய அவரது சதம் மெல்போர்ன் தோல்வியாலும், முதல் நாள் ஆட்டத்தில் நேர்ந்த நடுவர் மோசடிகளாலும், ஜாகீர்கான் காயமடைந்து தொடரிலிருந்து அவர் விலகியதாலும் துவண்டு போயிருந்த இந்திய அணிக்கு பெருத்த உற்சாகத்தை அளித்திருக்கும்.
ஸ்டீவ் வாஹ் தலைமையில் 16 டெஸ்ட்களை தொடர்ச்சியாக வென்ற ஆஸ்ட்ரேலிய அணியை 2001ம் ஆண்டு தனது 281 ரன்களால் நிலைகுலையச் செய்த லக்ஷ்மண், அதன் பிறகு 2003- 04 ஆஸ்ட்ரேல்லிய பயணத்தில் இரண்டு சதங்களை எடுத்து ஸ்டீவ் வாஹின் கடைசி டெஸ்ட் தொடரை ஆஸ்ட்ரேலிய அணியினருக்கு மகிழ்ச்சியற்றதாக்கினார்.
18 டெஸ்ட்களில் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக 5 சதங்களை எடுத்துள்ளார். சராசரி 50 ரன்களையும் தாண்டிவிட்டது!
இன்று வாசிம் ஜாஃபரும், ராகுல் திராவிடும் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் மெல்போர்னில் கடைபிடித்த போக்கையே கடைபிடித்தனர். அப்போதுதான் பிரட் லீ ஒரு “பெரிய தவறு” செய்தார், ஒரு படு பயங்கரமான யார்க்கரை வீசி வாசிம் ஜாஃபர் ஸ்டம்ப்களை பெயர்த்தார். இன்னும் சிறிது நேரம் வாசிம் ஜாஃபரை விளையாட விட்டிருந்தால், ரன்கள் என்றால் என்னவென்றே நமக்கு தெரியாமல் போயிருக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
லக்ஷ்மண் களமிறங்கியது முதல் ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர்களை தாக்குதல் ஆட்டத்தின் மூலம் எதிர்கொண்டார். அவர் இன்று ஆடிய சில ஷாட்கள் நம் கண்களையே நம்ப முடியாமல் செய்தது. ஃபீல்டிங்கை இறுக்கி ரன்களை கட்டுப்படுத்தும் ஆஸ்ட்ரேலிய உத்தியை தனது முற்றிலும் புதிய உத்தி மூலம் முறியடித்தார் லக்ஷ்மண். அதாவது லெக் சைடில் ஃபீல்டர்கள் நெருக்கமாக இல்லாத போது வேகப்பந்து வீச்சினை ஆஃப் திசையிலிருந்து வளைத்து ஆன் திசைக்கு அடித்தார். புல் ஷாட், ஹூக் ஷாட் பிறகு அவரது வழக்கமான ஃபிளிக், ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் இவையெல்லாம் சிட்னியின் புல்தரையை கிழித்துக் கொண்டு பவுண்டரிக்கு சென்றது.
மிட்ச்செல் ஜான்சனின் ஒரே ஓவரில் 4 அற்புதமான பவுண்டரிகளை விளாசினார் லக்ஷ்மண். 43 பந்துகளில் தன் அரை சதத்தை எட்டினார். மறு முனையில் திராவிட் கிரீசிற்குள் உறைந்து போயிருந்தார். ஒரு நேரத்தில் 40 பந்துகளை சந்தித்து ஒரு ரன்னைக் கூட எடுக்க முடியாமல் திராவிட் எதிர்மறை ஆட்டம் ஆடினார். இது போன்ற ஆட்டம் பல தருணங்களில் எதிரில் இருக்கும் வீரரின் ஆட்டத்தை பாதிக்கும், இதனால் அவர் ஆட்டமிழக்கவும் செய்வார். ஆனால் இன்று லக்ஷ்மண் எதைப்பற்றியும் கவலையில்லாமல் அடித்து ஆடியதால் 127 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார்.
அதாவது தான் நினைத்த இடத்திலெல்லாம் பந்துகளை விளாசினார் லக்ஷ்மண். அதனால் அபாரமான மற்றொரு கொல்கத்தா இன்னிங்சிற்கு அவர் தயாராகிக் கொண்டிருக்கும் பயம் ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங்கின் முகத்தில் தெரிந்தது. அப்போது பிராட் ஹாகின் ஆபத்து எதுவும் இல்லாத ஒரு பந்தை கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அபாரமான, திறமையான ஆட்டத்திற்கு நேர்ந்த சோகமான முடிவு இது.
இந்திய பேட்ஸ்மென்கள் நாளை முழுதும் விளையாடி 500 ரன்களுக்கு அருகில் இருக்கவேண்டும். அதிக விக்கெட்டுகளை இழக்கக் கூடாது. அப்படியென்றால் சச்சின் மற்றும் கங்கூலி ஆகியோர் சதம் எடுத்தேயாகவேண்டும். அவ்வாறு செய்தால் 4ம் நாள் இந்திய அணி 600 ரன்களை எட்டலாம். ஒரு குறிப்பிட்ட ரன்களை முன்னிலை பெற்று சுழற்பந்திற்கு சற்றே சாதகமாக விளங்கும் கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
நடுவர்களின் தவறான முடிவுகளால் கையை விட்டுப் போயிருந்த வெற்றி வாய்ப்பை லக்ஷ்மண் தன் அபார ஆட்டத்தால் மீட்டுக் கொடுத்திருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.