நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில மாறுதல்களை செய்த போதும் பேட்டிங்கில் அது எந்த வகையிலும் பலனளிக்கவில்லை. இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்த சீசனில் சென்னை அணித் தங்கள் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் ஐந்து முறைத் தோற்றுள்ளது. இதுவரை எந்தவொரு சீசனிலும் இப்படி அதிகபட்சத் தோல்விகளை சந்தித்ததில்லை. இந்தத் தோல்விகள் காரணமாக சி எஸ் கே எப்போதும் நிபந்தனையில்லாத அன்பைக் கொடுத்து வரும் ரசிகர்களே சோர்ந்து போயுள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரானத் தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் தோனி “இன்றையப் போட்டியில் 20 ரன்கள் வரைக் குறைவாக எடுத்துவிட்டோம். தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தோம். எல்லாப் போட்டிகளிலும் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முடியாததை எங்களின் பலவீனமாகப் பார்க்கிறேன்.சில இடங்களில் ஓட்டைகள் இருந்தால் சரி செய்யலாம். ஆனால் எல்லா வீரர்களும் சரியாக விளையாடாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது” எனக் கூறியுள்ளார்.