400 விக்கெட்! - சாதனையாளர் ஹர்பஜன் சிங்
, வெள்ளி, 8 ஜூலை 2011 (14:43 IST)
பாரம்பரிய மிக்க இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் அனில் கும்ப்ளேவிற்குப் பிறகு 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஹர்பஜன் சிங் இந்திய சுழற்பந்து வீச்சு என்ற பாரம்பரியத்திற்கு மேலும் பெருமைகளைச் சேர்த்தவராகிறார்.434
விக்கெட்டுகளை வீழ்த்திய கபில்தேவ், 619 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ளே போன்று ஹர்பஜன் சிங்கும் மைதானத்தில் ஒரு போராளி என்றால் அது மிகையாகாது.பேடி, பிரசன்னா, சந்திரசேகர், வெங்கட்ராகவன், திலிப் தோஷி, சிவராம கிருஷ்ணன், மணீந்தர் சிங், அனில் கும்ளே வரிசையில் தற்போது ஹர்பஜன் சிங்கின் மைல்கல் ஒரு பெரிய இடத்தைப் பிடித்துள்ளது.மேலும் தற்போதைய உலக சுழற்பந்து வீச்சாளர்களில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் என்ற வகையில் முரளிதரனின் 800 விக்கெட்டுகள் சாதனைக்கு அடுத்த இடத்தில் ஹர்பஜன் சிங்கே உள்ளார்.கொல்கத்தா 2001!சௌரவ் கங்கூலியின் தலைமையில், ஜான் ரைட் பயிற்சியாளர் பொறுப்பேற்றவுடன் ஆஸ்ட்ரேலியா அணி ஸ்டீவ் வாஹ் தலைமையில் இங்கு வந்தபோது ஸ்டீவ் வாஹ் தலைமையில் 15 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று மும்பையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி 16 டெஸ்ட் போட்டிகள் தொடர் வெற்றி என்ற சாதனையை நிகழ்த்தியது. ஆனால் அப்போதுதான் உருவானார் இந்த ஹர்பஜன் சிங்.கொல்கத்தாவில் அந்த புகழ் பெற்ற டெஸ்ட் போட்டியில் லஷ்மண் 281 ரன்களும், திராவிடின் சதமும் ஃபாலோ ஆன் கொடுத்ததையஏ ஸ்டீவ் வாஹிற்கு மறக்கடிக்க பிற்பாடு ஹர்பஜன் வீசிய பந்து வீச்சு அந்த டெஸ்ட் போட்டியை நமக்கெல்லாம் மறக்க முடியாத ஒன்றாக்கியது. அந்த டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகளை 196 ரன்களுக்கு வீழ்த்தினார் ஹர்பஜன் சிங். ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹேட்ரிக் சாதனை புரிந்தார் ஹர்பஜன் சிங். இதுதான் இந்திய வீச்சாளர் டெஸ்ட் போட்டியில் சாதிக்கும் முதல் ஹேட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது.இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி நாளன்று தேநீர் இடைவேளை வரை ஆஸ்ட்ரேலியா 161/3 என்று இருந்தது. அப்போது ஆட்டம் டிரா என்றே பலரும் கருதினர். ஆனால் மீண்டும் ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர் சுழற்பந்து வீச்சு ஆஸ்ட்ரேலியாவுக்கு அதிர்ச்சி தரும் தோல்வியை பெற்றுத் தந்தது.சென்னை சேப்பாக்கம் 2001 அதற்கு அடுத்த சென்னைப் போட்டியில் ஹர்பஜன் சிங் 217 ரன்கள் கொடுத்து 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசியில் இந்தியா 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கிளென் மெக்ராவைக் கண்டு சற்றும் பயப்படாமல் ஹர்பஜன் சிங் அவரது பந்தை கவர் திசையில் அடித்து வெற்றிபெறச் செய்தார். அப்போதே ஆஸ்ட்ரேலியர்கள் கூறிவிட்டனர். இவர் இன்னும் சில காலங்களுக்கு உலகை ஆள்வார் என்று!
கால்லே 2008: ஹர்பஜனின் பந்து வீச்சில் அதிகம் கண்டுகொள்ளப்படாத சிறந்த பந்து வீச்சு இந்த டெஸ்ட் போட்டித் தொடரில் நடந்தது. இலங்கையில் அஜந்தா மெண்டிஸை இந்திய வீரர்கள் ஆட முடியாமல் திணறி விக்கெட்டுகளை கொட்டிக் கொடுத்து முதல் டெஸ்டில் தோல்வி தழுவிய நிலையில் இரண்டாவது டெஸ்ட் கால்லேயில் தொடங்கியது. சேவாகின் புரியாத புதிர் இரட்டைச் சதத்துடன் அவரை கடைசி வரை வீழ்த்த முடியாததும் இந்த இன்னிங்ஸ்தான் என்பது குறிப்பிடத்த்க்கது. இந்த டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் 153 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தியா வெற்றி பெற்றது.2010
கொல்கத்தா!இந்தியாவின் நம்பர் 1 இடத்திற்கு நெருக்கடி வந்த டெஸ்ட் போட்டி இது. தென் ஆப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லாவை வீழ்த்தவே முடியவில்லை. இதில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 218/1 என்ற நிலையிலிருந்து ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சினால் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதலில் ஜாக் காலிஸ் பிறகு பிரின்ஸ், டுமினி என்று ஹர்பஜன் விக்கெட்டுகளை விறுவிறுவென்று கழற்றினார். இந்தியா சேவாக், லஷ்மண், தோனி, டெண்டுல்கர் என்று சதங்களைக் காண 347 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா ஆம்லா மூலம் ஆட்டத்தை டிரா செய்ய கடுமையாக போராடியது. 5ஆம் நாளில் கடைசியில் அந்த குறிப்பிட்ட ஓவரில் ஹர்பஜன் சிங், மோர்னி மோர்கெலை வீழ்த்தியிருக்காவிட்டால் அதற்கு அடுத்ட ஓவரை ஆம்லா தடுத்தாடி போட்டியை டிரா செய்திருப்பார், இந்த போட்டியில் ஹர்பஜன் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.கேப்டவுன் 2011இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறவில்லை ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் இன்னொரு முனையில் இவருக்கு ஆதரான பந்து வீச்சு இல்லை. இதனால் ஜாக் காலீஸ் அபாரமான சதம் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இதில் இரண்டாவது இன்னிங்சில் மட்டும் ஹர்பஜன் சிங் 7 விக்கெட்டுகளைச் சாய்த்தார். வெற்றி பெற்றிருந்தால் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வென்றிருக்கும். ஆனால் இந்தியா வெற்றி பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுகளை மளமளவென்று கைப்பற்றி முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவை 131 ரன்களுக்குச் சுருட்ட வித்திட்டார். இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இந்த 5 சிறந்த பந்து வீச்சுகள் தவிர நியூஸீலாந்து தொடரில் அபாரமாக வீசி தொடரைக் கைப்பற்ற கைகொடுத்தார். அதே போல் பேட்டிங்கில் அவர் சமீபமாகக் காட்டி வரும் ஃபார்ம் அவரை ஒரு ஆல் ரவுண்டராகவே உயர்த்தியுள்ளது. இரண்டு சதங்களை அடுத்தடுத்து நியூஸீலாந்துக்கு எதிராக எடுத்தார். தற்போது மேற்கிந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இவர் எடுத்த 70 ரன்கள் இந்திய வெற்றியை தீர்மானித்தது.இவர் மீது அவ்வப்போது சர்ச்சைகள் வருவது சகஜம் ஏனெனில் அவர் கிரிக்கெட்டை ஆடும் விதம் அவ்வாறானது. எப்படிப் பார்த்தாலும் ஹர்பஜன் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர் என்பதுடன் இவர் டீம் மேன் என்பதுதான் அனைத்தையும் விட முக்கியமானது.இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடம் பிடித்ததிலும், உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் ஆனதிலும் ஹர்பஜனின் பங்கு மிக மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.